<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Wednesday, March 10, 2004

தமிழ் வலைப்பதிவுகளின் பட்டியல் - தகவல் திரட்டும் திட்டம்

 
இடையில் குறுக்கிடுவதற்காக அருணா மன்னிக்கவும்.

பல நண்பர்கள் ஆலோசனை அளித்தபடி நம் தமிழ் வலைப்பதிவுகளுக்கான பட்டியலை மேம்படுத்த ஒரு முயற்சியாக, ஒரு தகவல் பெட்டகம் ('தரவுத்தளம்') ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்கள் தளம் குறித்த தகவல்களை உள்ளிட்டுவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்போதைக்கு இந்தப் பட்டியலே ஓரளவுக்கு தேவையைப் பூர்த்தி செய்வதாக இருப்பினும், இன்னும் சில நண்பர்கள் உதவியுடன், இந்தப் பட்டியலில் சேரும் விபரங்களை வைத்து சூட்டிகையான முகப்பு ஒன்று வடிவமைத்து அதன் வழியாக இந்தத் தகவல்களை, தேடுதல், வகைபிரித்தல் வசதிகளோடு மேம்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. எப்படியாயினும், இந்த விபரங்கள் ஒரு தரவுத்தளத்தில் சேமிக்கப்படுவதால், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் படப்போகின்றன.

அனைவரின் ஒத்துழைப்பையும் கோரி,
வலைப்பூ அசிரியர் குழு சார்பாக
-காசி

புதிய தகவலைச்சேர்க்க

இருக்கும் தகவலைப் பார்க்க

அங்கு உள்ள details சுட்டியின் மூலம் ஒரு தளத்தினைப் பற்றிய மேலதிக விபரங்களைக் காண இயலும்.

[இது புதுசு:
அங்கே இருக்கும் தகவலைப் பார்க்கும்போது, extended search மூலம், தேடுவதும் எளிது. உதாரணத்திற்கு சினிமா என்று தேடினால் மீனாக்ஸின் திரைவிமர்சனம் வருகிறது. (என்ன பாபா இல்லாத சினிமாவா?)]


Monday, March 08, 2004
 


கண்ணன் பார்த்தசாரதியின் கை(&கண்)வண்ணம்.
அவரிடம் கேட்காமல் சுட்டதற்கு மன்னிப்பார் என்ற நம்பிக்கையுடன் -காசி


Sunday, March 07, 2004
 





 
இவ்வாரம் வலைப்பூ ஆசிரியராக வருபவர் ஒரு பத்திரிகையாளர். ஏறக்குறைய 750 கட்டுரைகளை எழுதி இருக்கிறார். இன்னமும் எழுதிக்கொண்டே இருக்கிறார். மும்பை, டெல்லி, கொச்சின், பூட்டான், சிங்கப்பூர், டான்சானியா என்று காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்த இவர் இப்போது வசிப்பது சென்னையில். குட்டி சோகம் இரண்டு மகன்களும் அருகில் இல்லையே என்பது. கடந்த வருடம்தான் இவரின் இரண்டாவது மகன் ஸ்டான்·போர்டுக்குப் பறந்து சென்றார்.

இந்தியாவில் Economic Times, Times of India, Hindustan Times, Pioneer, Financial Express, Industrial Economist, U, குமுதம், குங்குமம், கல்கி சிங்கப்பூரில் Business Times, Peak Magazine, Property Review, Asia 21 மற்றும் தமிழ் முரசு ஆகிய இதழ்களில் எழுதியிருக்கும்/எழுதும் இவர் திசைகள் இணையப்பத்திரிகையிலும் எழுதுகிறார்.

இது மட்டுமல்லாது ஆல் இண்டியா ரேடியோவில் காலை நிகழ்ச்சிகளுக்கும் எழுதி இருக்கிறார்.

இத்தனை செய்திருந்தாலும் இவர் பெருமைப்படும் விஷயம் - 1992ல் NCERT 14-16 வயதுள்ள பள்ளி மாணவருக்காக ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதப் பணித்ததுதான். "Potreyal of Women in Tamil Fiction' இதுதான் இவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு. (இந்தப் புத்தகம் மற்றும் அதனையொட்டிய அனுபவங்களையும் இங்கே விலாவாரியாகப் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் அலையாக வந்து நம்மனதைக் கொள்ளை கொள்ளும் அருணா ஸ்ரீனிவாசனை இவ்வார வலைப்பூவிற்கு ஆசிரியராக இருக்குமாறு அன்புடன் வரவேற்கிறேன்.


 





அனைவருக்கும் வணக்கம்

 
தமிழ் வலைப்பதிவுகள் போக வேண்டிய தூரம் அதிகம்தான். முன்னெடுத்துச் செல்ல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். என்னைப்போல வலைப்பதிவு ரசிகர்களும் இருக்கிறார்கள். 'இதை எப்படிச் செய்வது. என்னாலும் முடியுமா பார்க்கிறேன்' என்று முயன்று கொண்டிருக்கும் ஆர்வம் மிக்க புதியவர்கள் (வலைப்பதிவுக்குப் புதியவர்கள், மற்றபடி எதிலும் யாரும் குறைந்தவர்களில்லை) இருக்கிறார்கள். நம் அனைவரின் கூட்டுறவுடன் ஒருவருடன் ஒருவர் அறிமுகம் பெறும் மேடையாக, மதி அமைத்துக் கொடுத்த இந்த 'வலைப்பூ' இருக்கிறது. தூரம் அதிகமென்றாலும் பாதை தெளிவாக இருக்கிறது. கடந்துவந்த தூரமும் நீண்டதே. இதையெல்லாம் பார்க்கும்போது மனதுக்கு மிக மகிழ்வாக இருக்கிறது.

ஆறுமாதங்களுக்கு முன் நானும் வலைப்பதிவு ஆரம்பிக்க எண்ணியபோது எழுந்த கேள்விகளான 'யுனிகோடா, திஸ்கியா?', 'எங்கே கிடைக்கும் தமிழ் எழுதும் வசதி?', 'எப்படிப் படிப்பவர் திரையில் தமிழ் தெரியச் செய்வது?' போன்ற கேள்விகள் இன்று பரிணாமம் அடைந்திருக்கின்றன. 'செய்தி ஓடைத் திரட்டிகள், பின் தொடர்பு வசதிகள்' பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறோம். ஆனாலும் இன்னும் பழைய கேள்விகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. இன்று புதிதாய் ஒருவர் வலைப்பதிக்க வந்தால், அவருக்கும் அதே கேள்விகள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. முன்பு அந்த இடர்களைக் கடந்தவர்கள் இந்த 'வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விக'ளுக்கு ஓரிடத்தில் பதில்களை திரட்டிவைப்பதன் மூலம் உதவப்போகிறோம்.

எந்தப் பிரதிபலனும் பாராமல் மதி கந்தசாமி ஏற்படுத்தி நிர்வகித்து வரும் 'வலைப்பதிவுகள் பட்டியல்' மற்றும் இந்த 'வலைப்பூ' சஞ்சிகை இரண்டின் பங்களிப்பு சாதாரணமான ஒன்றல்ல. மேலதிகமாய் தமிழ்க் கருவிகள், சிறுவிளக்கங்கள் என்று அவர் ஏற்படுத்தி வைத்திருந்தவை என்னைப்போலப் பலருக்கும் ஊன்றுகோலாக இருந்தன. இதற்கெல்லாம் தேவைப்படும் உழைப்பும் கொஞ்சமல்ல. அதிலும், இன்னும் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை, அவர்களின் தொழில்நுட்ப அறிவின் வீச்சு, பதிக்கப்படும் பொருட்களின் பரவல் அனைத்தும் வளரும்போது இந்தப் பணி இன்னும் நிறைய உழைப்பை எதிர்பார்க்கிறது. இந்த உழைப்பில் என்னாலும் ஏதாவது பகிர்ந்துகொள்ளமுடிவதில் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. மதி அளவுக்கு பரவலாக அறியப்படாவிட்டாலும், 'என் ராசிப்படி' :) நான் கேட்டு யாரும் மறுக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையில் இந்த சஞ்சிகையில் பின்னணிப் பணிகளை இனி நானும் பங்குபோட்டுக்கொள்ளப்போகிறேன்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'தமிழ் வலைப்பதிவு விக்கி' என்ற தகவல் களஞ்சியம் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறது. தமிழ் வலைப்பதிவுகள் பட்டியல் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது. அதை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்றும் நிறைய ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. இந்த 'வலைப்பூ' சஞ்சிகையும் தொடர்ந்து நம் அனைவரின் கூட்டுறவுக்குப் பாலமாய், அறிவுக்கும் அறிதலுக்கும் ஊடகமாய் தன் பணியை இன்னும் சிறப்பாகச் செய்யப் போகிறது. இவற்றையெல்லாம் பற்றி நம் அனைவருக்கும் என்னைப் போலவே கனவுகளும் இருக்கின்றன. வரும் நாட்களில் அனைவரின் பங்களிப்புடன் இவையெல்லாம் கட்டாயம் நடக்கும், இன்றைக்கு நூற்றுப்பதிநான்கு பதிவுகள் நம் பட்டியலில் உள்ளன. அவை ஆயிரத்தை, பத்தாயிரத்தைத் தாண்டி மின்னம்பலத்தில் நம் தமிழ் பொங்கிப்பெருக, நம் தமிழ் மக்கள் வாழ்வை ஆவணப்படுத்தும் கருவிகளாக வலம் வர நம் அனைவரும் நம்மாலானதைச் செய்வோம் என்ற நம்பிக்கையுடன் நானும் வலைப்பூ சஞ்சிகையில் பொறுப்பேற்கிறேன்.

அனைவருக்கும் நன்றி.

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com