<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Friday, January 30, 2004

டாட்டா பை பை சீரியோ...

 
இப்பெல்லாம் குழந்தைகள் டாட்டா ன்னு சொன்னாதான் ஒத்துக் கொள்கிறார்கள். போய் வருகிறேன்ன்னு சொன்ன
கோச்சிகிதுங்க.குழந்தைகள் தானே சும்மா திட்டுகிறேன்.திருப்பி திட்டவா போதுகள். டாட்டா தமிழ் வார்த்தை ஆகி பல
வருஷங்கள் ஆயிட்டுது. சரி சங்கர் வடை வாங்கிகொண்டு கிளம்பினார். நான் பெரியவடை ச்சீ பிரியாவிடை பெற்று கொள்கிறேன்.
(யோவ் கிளம்புய்யா... எங்களுக்கு அது ப்ரியவிடை என்கிறீர்களா?)

சமீபத்தில் ஒரு ஆங்கில திரைப்படம் பார்த்தேன். "நீ நிரம்ப அழகு" என்ற பெயரில்(யூ ஆர் லவ்லி).
ஷான்ப் பென் நடித்தது. எனக்கு ஏன் ஷான்ப் பென்னை பிடிக்கிறது என்று இன்னும் தெரியவில்லை.
இந்த படத்தின் கதை, மிகவும் வித்தியாசமானது. முதல் காதலன், குடி வெறியில் ஒரு கொலை செய்து விடுகிறான்.
மூன்று மாதத்தில் சிறையிலிருந்து வெளியில் வந்துவிடுவாய் என்று நம்பிக்கையூட்டுகிறாள்/அழுது புலம்புகிறாள் காதலி. ஆனால் காதலன்
10 வருட சிறைக்கு ஆளாகிறான். இதற்கிடையில் இன்னொருவனுடன்(சான் ட்ராவால்டோ) மணம் செய்து கொள்கிறாள்.
இந்த இன்னொருவன் அவளை போதை பழக்கத்த்லிருந்தும் வருமையிலிருந்தும் மீட்கிறான்.
பழைய காதலனின் பெண் குழந்தை ஒன்று,புதிய கணவனின் பெண் குழந்தைகள் இரண்டாக, மொத்தம் மூன்று
குழந்தைகளுடன் வாழ்கிறாள் 9 வருடங்களாக. பழைய காதலனோ சிறையிருந்து திரும்புகிறான். இவள் அவனுடன் பேசுகிறாள்.
அவளால் அவனது காதலில் இருந்து வெளியில் வர முடியவில்லை. மீண்டும் பழைய காதலனோடு சென்றுவிடுகிறாள்.
புது கணவன் மூன்று குழந்தைகளுடன் தனித்து நிற்கிறான்.
இந்த கதை நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும். யாருக்கு சாதகமாக தீர்ப்பு சொல்வது? இந்த அளவு
பெண் சுதந்திரம்(?) எப்படி இருக்கும்? என்னால் சரியாக யோசிக்க முடியவில்லை.

செல்லக் குட்டு 1.
---------------
வலைப்பதிவாளர்களுக்கு, வலைப்பூ ஆசிரியர் அனேகமாக அகர வரிசையில்தான் வலைப்பூக்களை பறிப்பார்( நான் தான் கொஞசம்
கச்சா முச்சா வரிசையில் செய்தேன்). அவரது அகர வரிசையினை பார்த்து, தங்கள் பெயர் வருவத்ற்கு முன்னாவது எழுதுங்கள். இந்த வகையில் வாரத்திற்கு ஒரு நாள் என்ற கணக்கிலாவது வலை பதிவு நடக்கும். ஆசிரியருக்கும் சந்தோஷமாய் இருக்கும்.

நமது வலைப்பதிவாளர்கள் அனைவரும் நன்றாகத்தான் எழுத வேண்டும் என்றெல்லாம் தனக்கே கோடு போட்டுக்கொள்ள கூடாது.
சகலத்தையும் எழுத வேண்டும்.அடாவடியோ, பட்டினியோ,செருப்படியோ சகலத்தையும். எல்லாமே மொழி பயிற்சிதானே.
எல்லா சிறந்த எழுத்தாளர்களும் தொடக்கத்தில் மாணவர்கள்தான்/வாசகர்கள் தான் எந்தை 108 முறை சொல்லிக் கொள்ளுங்கள்.

யாரையாவது விட்டு விட்டிருந்தேன் எனில், தயவு பண்ணி மன்னியுங்கள். அதற்கு என் மடகணிணி (ஸ்டுப்பிட் பாக்ஸ்) காரணமாயிருக்கலாம்.இனிமேல் அப்படி செய்யாமலிருக்க முயல்வேன்.

செல்லக் குட்டு 2.
--------------
வலைப்பூ மேம்பாட்டு குழுவினருக்கு, ஒரு நல்ல தமிழ் டெம்பிளேட்டு அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் படி செய்யக்கூடாதா? (எனக்கு கூட வேண்டும்.)எல்லா தமிழ் கணிமுகவரிக்கும் அதை அனுப்பி தமிழில் எழுத அழைப்பு கூட விடுக்கலாம்.


நான் எழுதியதில் என்னென்ன இருந்திருக்கும் என எனக்கு நன்றாக தெரியும்.
நிறைய எழுத்தாளர்களிடம் இருந்து சுட்ட(திருடிய) நகைச்சுவை இருந்திருக்கும்,
அவர்களுக்கு எல்லாம் ஒரு ராயல்டி நன்றி. நிறைய ஒற்றெழுத்துப் பிழைகள் இருந்திருக்கும்.
இச்சு எனக்கு மிகவும் பிடித்த விஷயம்தான். ஆனாலும் 'ச்' களை நிறைய இடத்தில் மறந்திருப்பேன்.
ப்ச்.. என்ன செய்வது.

அபத்தம் எனது கூட பிறந்த சகோதரன், அபத்தம் நிறைய தென்பட்டிருந்தால் எனக்கு இரண்டு வரி எழுதிபோடுங்கள்,
திருத்தி கொள்கிறேன்.

யாரோ சொன்னாங்க என்று எழுதியது எல்லாம் யாரும் சொன்னது இல்லை , நான் சொன்னதுதான்.
நீங்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டதைப் பார்த்தால், நலலாத்தான் இருக்கு போல. இது சோகல்
பாணி இல்லை. சும்மா சோதனை பாணி ;-) எனவே அதையெல்லாம் என் வலைப்பதிவில் காணலாம்.
வேறு யாராவது சுட்டு உபயோகித்தீர்களெனில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பேன்.

இது வரை , என் வகுப்பில் பொறுமையோடு, இந்த (மண்டை)ஓடு ஏந்திய ஆசிரியரை சகித்துக் கொண்ட
குழந்தைகள் எல்லோருக்கும் மிக்க நன்றி. ஜெய் ஜெக்கம்மா , மலையாஆஆள பகவதீஈஈ, தாயீஈஈ
ஓம் க்ரீம் , ஐஸ் க்ரீம் , காளீ...
டிஸ்ஸ்... (எங்கப்பா டி ட்டி எஸ் எபெக்ட் ..ம்ம் )
டிஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ன்னு மாயமாய் மறையும்..

கறுப்பண்ணா அலையஸ் கார்த்திக்கு.
(karthikramas@yahoo.com)

இஞ்சி மரப்பா..

 
நிறைய குழந்தைகள் பக்தி இலக்கியம், ஆன்மிகம் அது இதுன்னு பேசினதாலே கொஞ்சம்
அஜீரணம் ஏற்படுத்துதே இந்த அசடுன்னு நினைக்க வாய்ப்புண்டு.
எனவேதான், அரசியலாகிய ஒரு தம்படி குடுத்து வாங்கிய இஞ்சி மரப்பா.. ஈராக் போர், அமெரிக்க அரசியலை குறித்து.

ஈராக் போரின் மீது எனக்கிருக்கும் பார்வையை இங்கு பதிவு செய்கிறேன்.. பிறரின் கருத்தை அறியும் ஆவலும் உள்ளது.
பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். ஈராக் நிலைமை கருத்தில் கொண்டு, சில வார்த்தைகளில் எழுத முயற்சி செய்துள்ளேன்.

முழு திருப்தியை கொடுக்கும் நேர்மையான அரசியல் நடந்தது/நடப்பது மிக மிக குறைவு என நினைப்பவன் நான். இருப்பினும் மக்களின் குறைந்த பட்ச வாழ்வை தடைசெய்யாத அரசியலை, அதற்காக மதிப்பவன். சில சிந்தனைகள்,அமெரிக்க அரசியலை குறித்து. சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்தவர் சதாம்.சட்டத்திற்குள் நின்று கொண்டு சட்டத்தின் உதவியோடு கொலை செய்பவர் புஷ். ஆக இருவருமே
கொலைகாரர்கள் தான்.சட்டத்தின் நேர்மை இவர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஓட்டைகளின் அளவும் தெரிகிறது.புஷ்சின் பித்தலாட்டம் ஒழியத்தான் வேண்டும் என ஆசைப்படுகிறேன்.இந்த அறிவே அற்ற டோனி பிளேயரும், பிரதமராக இருக்க தகுதி அற்றவர். இவர்கள் ஆடும் நாடகங்களில் ஏமாற்றப்படுவது படித்த முட்டாள்களாகிய நாம் தான். ஏமாற்றப்பட்டு கொலையுண்ட,வீடிழந்த மக்களுக்காக வருந்துகிறேன்.ஈராக் போரை நியாயப்படுத்தவே முடியாது எந்த காரணத்தைக்கொண்டும். 9-11-2001 சம்பவத்தின் உந்துதலால் ஏற்பட்ட மன நிலை ஒன்றைத்தான் காரணம் காட்ட முடியும்.ஆனால் இது போன்ற ஒரு உந்துதல் தனி மனிதனுக்கு ஏற்படுவது நியாயமானது. ஒரு அரசுக்கு ஏற்படுவது எப்படி சரியாகும்? இந்த போரை நியாப்படுத்தி, நடித்து மீண்டும் புஷ் ஆட்சிக்கு வந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. எனக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், ஒரு வாரம் வீடற்று இருந்துவிட்டு வந்து கருத்து தெரிவிக்கட்டும்.

சரி கொஞ்சம் வலைப்பூ பறித்து குழந்தைகளின் கொண்டைகளில் சூடலாம்.
கொலை கொலையாம், வலைப்பூவாம்..

பதிரியின் வலைப்பதிவு, வழக்கம் போலவே தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது,
காந்தி பிரியர்கள் படிக்கவும்(சனவரி 28).

காசி அண்ணாத்தே டமாஸ் பண்ணியிருக்கார்(சன 28), ஜோரு அண்ணே, கோயமுத்தூர்.. நாலாணா..எட்டு ரூபா நோட்டு , அந்த விவகாரத்தை யோசிக்காம இருக்க முடியலே.

பவித்ரா தமிழ்ல்ல பெரிய ஆளுன்னு அவர்து விடுகதையிலேயே காட்டுகிறார், விடுகதை ரசிகர்கள்
அவரது ஜாங்கிரி? லாவை பார்க்கவும்.

நம்ம பெயரிலி .. அவர் யாருன்னு கேட்காதீங்க, அதான் பெயரலின்னு சொல்லிட்டேன் இல்ல.
கணவனுக்கு ஒரு வியாக்கியானம் கொடுத்துருக்கார் பாருங்க. வீட்டுக்கு போனவுடன் அவருக்கு
டின்னு கட்டியிருப்பார்கள் அவரது மனைவி, இதை படித்து விட்டு

ரமணிதரனின் இந்த வலைப்பதிவில், சில சிறந்த செய்தி தளங்களில் ஒன்றை காண்பித்துள்ளார் நமக்கு.

செல்வராஜின் ஆத்தா (னவம்பர் 30) எல்லோரைப்போலவும்
என்னையும் கவர்ந்தது. நிறைய எழுதுங்கள் சார்.

சுந்தர வடிவேலின் வலைப்பதிவு தரம் நிறைந்த ஒன்று,அவரின் சில வரிகள்,

நாலு பேர் சேந்து அடிச்சுப் போட்டது மாதிரி கிடந்தேனாம், மனைவி சொன்னார்.
பிணியும் காதலும் பீடிக்கும் வரை எல்லோரும் தம்மைக் கல் என்றுதான் நினைத்துக் கொள்கிறார்கள்!

அவரின் சில கவிதை வரிகள்,
கவிதைகளைப் பற்றி... என்ன செய்யலாம்
----------------------------------
பூவாய்க் கொய்யலாம்
தறியில் நெய்யலாம்
கதிராய் அறுக்கலாம்
தூண்டிலிட்டும் பிடிக்கலாம்...

அல்லது
பருவுடம்பின்றித் திரியும் இவற்றை
உள்ளின் அகண்ட பெருவெளியில்
வார்த்தை வடிவேதும் தராமல்
அப்படியே பறக்கவிட்டு விடலாம்.

நிலை
------
நேற்றுப் பணியிடத்திலிருந்தேன்
எட்டிப் பார்த்துப்
புன்னகைத்துப் போக வந்தவனை
புரத மூலக்கூறுகளிரண்டு,
முதலாளியின் செல்லப் பிள்ளைகளாம்,
ஏதோ பேசி விரட்ட
வெளியே தேம்பி நின்றவனை
மாலையில் வரும்போது
வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

அங்கு
உடைகள்தாம் கூர்ந்து கவனிக்கப்படும்

நாளைக்கு
விஞ்ஞானியின் உடையில் வா.

நமது வெங்குட்டு அண்ணா
சுஜாதாவை துரத்தும் குதிரை போட்டியில் உள்ளார ். இவர் சொன்ன விஷயங்களை பார்த்தால் எனக்கு கூட சுஜாதாமேல் கோபம் தான் வருகிறது. இதுக்கு என்னதான் அண்ணா செய்வது? கஷ்ட்டப்பட்டு வேலை செய்வது இவரைபோன்ற கண்ணி வல்லுநர்கள், நோவாமல் நோம்பு கும்பிடும் அவசியம் என்ன வந்தது
சுஜாதாவுக்கு. இவரது எதிர்ப்புக்கு என் முழு ஒத்துழைப்பு.


பின்னூட்ட கண்னோட்டம்.
----------------------
கண்ணன்- நான் முன்னமே சொன்ன "மலையளவு விஷயங்கள்" உண்மைதான் என தெரிந்து கொண்டீர்களா?
நமக்கு இந்த வலைப்பூ தோட்டத்தில் இடம் பத்தாது, பேசாமல் வலைத்தோப்பு ஒன்னு வாங்கவேண்டியது தான்.
ஜெமோ வையும் சண்டைக்கு இழுத்துக்கலாம் அடிக்கடி.. :) உங்களுக்கு எல்லாம் பதில் எழுதனும்னா நாலு நாள் லீவு
போடனும். எனது பதிலை/பகிர்தலை கணிக்கடிதமாய் மெதுவாய் அனுப்புகிறேன்..

பத்ரி -தகவலுக்கு நன்றி, நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான்.

பிரபு - நல்ல தகவல், யோசிக்க வேண்டிய ஒன்று.


Thursday, January 29, 2004

பாராக்கு பார்க்க வைத்தல்.

 
கொஞ்சம் அதிகமாக எழுதி, குழந்தைகளின் படிக்கும் சுமையை அதிகரித்து விட்டதாக வலைப்பூ ஆசிரியருக்கு பட்டது.
உண்மையில்,ஆசிரியர் வாழும் பகுதியில் குழந்தைகள் நின்றால் அவர்களது முழங்கால் வரையளவு பனி. சூரியன் வர தாமதமாகிவிட்டது.
எனவேதான் தாமதமான பூ. அதனால் லேசான பராக்கு பார்க்க வைக்கும் பூ.

அ.முத்துலிங்கம், இந்த பெயரை எழுதும் போது என்னால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. இப்படி
ஊரே சிரிக்குமளவிற்கு என்ன செய்துவிட்டார் அவர் என்று தெரிய வேண்டுமெனில் அவரது கதைகளை படிப்பது சரியானதாகும். இவருக்கு நியாயமாக ஈஈஈ.முத்துலிங்கம் அல்லது ஹிஹி.முத்துலிங்கம் என்று பெயரிட்டால் மிக பொருந்தும். ஹாஸ்யத்தினாலேயே ஹிம்சை செய்பவர் என்று கூட சொல்லலாம், அவரது கதைகளின் வழியாக.அவரது இந்த கதை,வெளி நாட்டில் வாழும் இந்தியர்களின் வாழ்வு தளத்துக்கு மிக பொருந்துவது அல்லது ரசிக்ககூடியது

நாம் தமிழ் பாடல்களில் சீனமொழியை கேட்டுகொண்டுள்ளோம்.ஆனால்
மதி அக்கா, சீனத் தமிழ் வானொலியை நமக்கு அறிமுகபடுத்தியுள்ளார்கள்.
ஒகமே ஷீயோ ஓகி மாகோ...ஓகி மாகோ..ஷீய மெகபூபா..??

வெ.சபாநாயகம் ஐயா அவர்களது வாழ்வனுபவத்துக்கும்,எழுத்தனுபவத்துக்கும் நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இவரது நினைவாற்றல் வியக்க வைக்கிறது. 50 வருடங்களுக்கு முன் நடந்த அரிய சம்பவங்களை பற்றி எல்லாம் எழுதியுள்ளார் இவரது வலைப்பதிவில். மூத்தோர்களை கொண்டாடுவதில் எனக்கு மாற்று கருத்து இருந்தது இல்லை எந்நாளும்.

கண்ணன் - உண்மைதான். இந்த கோணத்தில் நான் யோசித்ததில்லை. ஜெமோவுக்கு தமிழ் பக்தி இலக்கிய மரபின் ஆழம் எந்த அளவுக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதற்கு அவர் எதிரியல்ல என நம்புகிறேன். ஏனெனினில் 'உலகெலாம் ஓதற்கரியவன்' என்ற சேக்கிழார் பாடலை லியோனி கிண்டல் செய்ததை குறித்து, திண்ணையில் காட்டமாக விட்டு விளாசி எதிர்த்திருந்தார். மேலும் தேவாரம் போன்றவற்றை சிறுவயதில் படித்தவராக எங்கோ குறிப்பிட்டிருந்தார்.

கண்ணன் ஆழ்வார் வலைப்பதிவு. மிகவும் விரும்பதக்க ஒன்று, நாத்திகர்களால் அல்ல. இது எப்படி மற்ற விளக்கங்களோடு வேறு படுகிறது என்று தெரிந்து கொள்ள ஆசை.

நம்மாழ்வார் கிருஷ்ண பரமாத்மாவிற்கு பிறகு 42 ஆண்டுகள் கழித்து பிறந்து,வாழ்ந்தவர். அவருக்கு சடகோபர் என்ற பெயரும் உண்டு.
ஆயிரத்து பத்து பாடல்களுக்கு மேல் எழுதியவர். ஆனாலும், கருமத்தில் ஈடுபட்டேன் ,காலத்தை வெல்ல முடியவில்லை என்று
புலம்புகிறார். காலத்தை வெல்லும் கணக்கை அறிந்தவர்களே ஞானிகள்(ஜிட்டு கிருஷ்ணமுர்த்தி எங்கேயோ நின்றுவிடுகிறார் என்று குறிபிட்டீர்களே,அது இங்குதான்). திருமூலர் காலத்தை வெல்லும் கருத்தையும் பாடுகிறார், திருமந்திரத்தில். விஷ்ணுவை கண்களால் அல்லாமல்,தன்னுள் தரிசித்தவர்களே வைஷ்ணவர் என்கிறது கீதை. நார - ஜலம் , அயனன் - யோக நித்திரையில் இருப்பவன். பாற்கடலாகிய ஜலத்தில் நித்திரையில் வீற்றிருப்பவனே நாரயணன் என்பது சமீபத்தில் சமஸ்கிருத வகுப்பில் கற்று கொண்டது.

எனக்கு மிகவும் வேண்டியவர் ஒருவர்,நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் நாலாயிரம் பாடல்களையும் மனனமாக தெரிந்து கொண்டு பொருள் சொல்பவர். இப்போது லேசாக மறந்திருப்பார் என ஊகிக்கிறேன்.என்ன பொறாமை படுகிறீர்களா? படுங்கள் படுங்கள். உங்களுக்காக இது.

சக்க ரத்தண் ணலேயென்று
தாழ்ந்து கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று
அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்,
மிக்க ஞான மூர்த்தி
யாய வேத விளக்கினை,என்
தக்க ஞானக் கண்க
ளாலே கண்டு தழுவுவனே 4.7.10.

ரவி- தத்துவ நூல்களின் தகவலுக்கு நன்றி. தமிழ் இலக்கிய சூழலில் எது குறைகிறது,அல்லது எதுவெல்லாம் தேவைப்படுகிறது என்று
உங்களிடம் ஒரு பட்டியல் கேட்பது சரி எனப் படுகிறது எனக்கு. இது தமிழ் செய்தித் துறைக்கும் பொருந்தும்.

உஷா - எந்த 700 பக்க புத்தகத்தை படித்தாலும் சோர்வு வரத்தான் செய்யும். நடை என்பது மிக விரிவான பார்வையில்,
வார்த்தைகளை கோர்க்கும் விதம் அல்லது கோர்க்கும் திறன் என சொல்லாம்.எளிய நடை அதிக எண்ணிக்கையான வார்த்தைகளைக் கோரும். மொழியில் இல்லாத ஏதும் வி பு வில் இல்லை. மெய்கண்டாரின் சிவஞான போதத்தை படித்து புரிந்து கொள்பவர்களுக்கு விபு த்தை
படித்து புரிந்து கொள்ள, அல்லது கடினம் என்று சொல்ல ஏதுமிருக்காது. எனவே நடை என்பது ஒரு ரிலேட்டிவ் வார்த்தை. நீங்கள் இது
வரை படித்த நாவல்களினால் ஏற்பட்ட,உங்கள் மன எதிர்ப்பார்ப்பு எனவும் சொல்லலாம். எழுத்தாளர் பட்டம் பெற்றதுக்கு வாழ்த்துக்கள்,
ஏதாவது நான் உளறினால் பொறுத்தி திருத்தி அருளுங்கள்.

வி பு த்தில் நான் கடினம் எனக் கருதியது,அதன் கதையின் தொடர்தன்மைதான், அத்தனை பாத்திரங்களையும், சம்பவங்களயும் கோர்த்து
விழுங்க ஒரு வாசகனுக்கு நிச்சயம் கடினம் இருக்கத்தான் செய்யும். இதில் நீங்கள் சொலவதை ஆமோதிக்கிறேன்.
ஹாரி பாட்டரை பற்றி எனக்கு தெரியாது. உங்கள் கருத்தை கேட்க ஆவல்.

Tuesday, January 27, 2004

பாபா ப்ளாக்ஷீப், ரிங்கா ரிங்கா ரோசா...

 
இன்று பாட்டு (rhymes)கிளாஸ் அதாவது கவிதை நாள்.

பிஸ்கோத்து கொடுக்க விடுபட்டவர்கள், சுரதா. சுரதாவின் செயலி இல்லையேல் இன்று நிறைய வலைப்பதிவுகள் இல்லை.எனவே அவருக்கு ஒரு பெரிய பிஸ்கோத்து , மிகுந்த நன்றி சுரதா. இது போலவே இந்த,துக்கணூண்டு வலையாசிரியராகிய எனக்கு தெரியாத அனைத்து தமிழ் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் நன்றி.

இன்னொருவர் இரா.முருகன்,இவர் ராயர்காப்பிகிளப்பில் அடிக்கும் லூட்டி, ஒரு தமிழ் துள்ளல்தான். இதுபோன்றே மரத்தடியும் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எனவே கடைசி பிஸ்கோத்தை இரண்டாக்கி ஆளுக்கு கொஞ்சம். மத்தவங்கெல்லாம் பிஸ்கோத்து
தீர்ந்துபோச்சேன்னு கவலைப்பட வேண்டாம். கைவசம் நிறைய இருக்கு அல்வா.

பொதுவாகவே இன்றைய கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு தேசப்பற்று, மொழிப்பற்று, மண்ணின் மீது பிடிப்பு, சமூக அக்கறை இல்லை... இன்றைய இளைஞர்கள் சினிமா, வன்முறை, பார்ட்டி, டிஸ்கோ என்கிற ரீதியில்தான் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற எண்ணம் உங்களிடம் இருந்தால், இப்போழுதே, இந்த கணத்திலேயே அந்த எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள்...
பாலாஜி ஒரு ஆல் ரவுண்டர், நிறைய விஷ்யங்களை தொட்டு எழுதுகிறார். பா.ராகவனின் சிறுகதை எழுத சொல்லித்தரும் தொடர் இவரது வலைப்பதிவில் உள்ளது,உபயோகமானது.

சந்திரவதனாவின் பெண்ணிய எழுத்துகளை வரவேற்பவர்களில் நானும் ஒருவன். வீடு மாறுவதின் சோகத்தை சொல்வதோடு மீண்டும் வலைப்பதிய ஆரம்பித்துள்ளார்.

புதுக் குழந்தைகள் வரிசையில் பவித்ராவின் நார்த்தாமலை பயணகுறிப்பும்,ஞானி நந்தனின் கவிதைகளும் உள்ளன.உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் மட்டும் சென்னையில் இருந்து, இந்த ஜோதிர்ராமலிங்கம் அம்மாவும்/அய்யாவும் சென்னையில் இருந்தா நேரே ஒரு ஆட்டோ புடிச்சு போய் ஏன் இப்ப எல்லாம் உங்க வலைப்பதிவில் கவிதை எழுதமாட்டேங்குறீங்கன்னு கேட்டுட்டு வந்துடுவேன்.
சும்மா இன்னா ஜோரா எழுதாறங்கபா..எனக்கு பிடித்த ஒன்று.

நாம்.
====
ஒளிமீது துளித்துளியாய் இருள்வந்து கவியும்
ஒளித்துகள்கள் இருள்புணர்ந்து தானுமிருளாகும்.
இருள்மீது துளித்துளியாய் ஒளிவந்து கவியும்
இருட்துகள்கள் ஒளிபுணர்ந்து தானுமொளியாகும்.
இருநிகழ்வு தொடராகி நாட்களென மாறும்
இருளென்ன ஒளியென்ன இரண்டுமொன்றாகும்.
இருட்டென்று ஏதுமில்லை அதுகுறைந்த ஒளி
ஒளியென்று ஏதுமில்லை அதுகுறைந்த இருள்.

இருள்மயங்க ஒளிவிழுங்கும் அதிகாலை அழகு
ஒளிமயங்கி இருள்கவிழும் புதுமாலை அழகு.
இருளுக்கு இரவே விடியலென ஆகும்
இருள் உறங்கப் போக ஒளி விழித்துத் திரியும்.
இருள்தப்ப முடியாது ஒளியே அதைத் தின்னும்
ஒளிஒளிய முடியாது இருளே அதைத் தின்னும்.
தான் உண்ணும் உணவே தன்னை உண்ணும்
ஒன்றுக் கொன்று உணவாக உலகம் வாழும்

-------------------------------------
இன்னொரு ஆளு இந்த ஹிட்லிஸ்டில் ம்ஹ¥ம் குட் லிஸ்டில் இருப்பவர் மீனாக்ஸ், இவருக்கு காதல்கவின்னு
டெம்போரரியா ஒரு பட்டத்தை கொடுக்கிறேன்.

"இவனைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்காம
ஏமாந்துட்டீங்க சிஸ்டர்.."என்பார்கள் என் எதிரிகள்..

அதற்கும் சிரித்து விட்டு,
என் தவிப்பைப் பார்த்துப் பரிதாபப்பட்டு,
"பரவாயில்லை..
மனசுக்குப் பிடிச்சுத் தான் ஏமாந்தேன்.."என்பாள்..
மறைக்க முயன்று தோற்று,
லேசாய் வெட்கப்படுவாள்..

மேலும் சில கவிதைகள்
------------------

கவிகளே கேளுங்கள்
கவிதைகள் செதுக்கி
மழுங்கிய உளிகளை
காதல் கொண்டு கூர் செய்யுங்கள்..
காதல் கொண்டு
மழுங்கிய மனங்களை?
வேறென்ன
கற்பனை கொண்டுதான்..
--யாரோ சொன்னாங்க (2)

காற்றலைகளின் படிகளில்
ஏறி வேகமாய் ஓடுகிறேன்
ஆடையற்ற குழந்தையாய்,
திடீரென என்னை
அவள் கைகளில் ஏந்தி
ஒரு மலருக்குள்
இறக்கிவிட்டாள்
மகரந்த போதையில்
மதி மயங்கி கண்களை
மூடிக்கொண்டேன்,
மடிமீது கண்விழித்தேன்
அவள் உற்று பார்த்ததனால்
உறைந்துவிட்டன பனித்துளிகள்
பல கோடி பனித்துளிகள்
அவைகளுக்கு நட்சத்திரங்கள் என்றும் பெயராமே?!
--யாரோ சொன்னாங்க (3)சமீபத்தில் இணையத்தினால் மட்டுமே நான் என் பார்வையை விரித்து கொண்ட விஷயங்கள்
1. பெண்ணியம் குறித்த விரிவான சிந்தனைகள்.
----------------------------------------

தாயன்பு கூட சரியாக தெரிவதில்லை
சமயங்களில்
கடவுள் இருப்பது உண்மைதானோ?
-- யாரோ சொன்னாங்க (4)

----
கவிதைகள் தேவைதான்
கணங்களில் வாழும்போதும் (கணம்=துக்கம்)
வாழும் கணங்களிலும்
வாழ்வதை சுட்டிக்காட்ட
கவிதைகள் தேவைதான்
வாழ்வதை சுட்டிக்காட்டத்தான்
கவிதைகள் தேவை...
கூடவே பெண்களும்
--யாரோ சொன்னாங்க (5)

2. ஈழத்தமிழர்களும் தமிழர்களே எனும் பார்வை.
--------------------------------------
குண்டு சத்தங்களுக்கிடையே
சத்தமின்றி
வாழ்வை தொலைத்தவர்கள்..
இடம் மாறிப்போனதால் மட்டுமே
வாழ்க்கை தடம் மாறிபோனவர்கள்.. ஈழத்து தமிழர்கள்.
இவ்வரிகளை இலக்கியமாக
பார்க்காதவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
--யாரோ சொன்னாங்க (6)

காதுகளுக்கு நீரிழிவு நோய் வந்தால் காது வைத்தியரிடம் போவதா? அல்லது நீரிழிவு நோய் வைத்தியரிடம் போவதா? ன்னு எனக்கும்தான் தெரியவில்லை. பா.ராகவன் பத்தி நிறைய பேருக்கு தெரியும். அவருக்கும் விருது வாங்கியமைக்கு ,நமது ஸ்பெசல் லாலி பாப்பு. வாழ்த்துக்கள் ராகவன். ராகவன், என்ன இருந்தாலும் நம்மள்ள ஒருத்தர்தானே ..அதாவது வலைப்பதிபவர்களில் ஒருவர்னு சொல்லவந்தேன். இவருடைய வலைப்பதிவில் நிறைய எழுதியிருக்கார்.

ரவி ஸ்ரீனிவாஸ், எனக்கு இவரது எழுத்து முகம் மிக பரிச்சயம். மனிதர் ஒரு தகவல் குறுந்தொழிற்சாலை,பெண்ணிய சிந்தனைபோக்குள்ளவர். நிறைய படிப்பார்,திண்ணையில் பல புதிய விஷயங்களைப்பற்றி எழுதினார். சில சுவாரஸ்யமான எதிர்வினைகளையும் வைத்தார். இவரையும் நீங்கள் பதிவுகளில் அடிக்கடி காணலாம். இவ்வளோ சொல்லிட்டேன்,ரவி அவர்களே உங்கள் வலைப்பதிவு வேகம் குறைந்தால் எப்படி?

சரி! பின்னூட்டத்தை பற்றி ஒரு கண்ணோட்டம் விடுவோம்.
------------------------------------------------------------------
நான் பின்னூட்ட பகுதியில் எழுதாதது உடனே உடனே எழுத நேரம் கிடைப்பதில்லை. மொத்தமாய் கடைசியில் வாசித்து எழுதுவது நேர வசதியை கூட்டுகிறது. இடைஞ்சலுக்கு வருந்துகிறேன். மன்னிக்க மாட்டீர்களா மனமிறங்...கீஈஈஈஈ :)

பாலாஜி, நீங்கள்தான் பாஸ்டன் பாலாஜியா?
நீங்கள் சொல்வது போல்,விஷ்ணுபுரத்தில் பிடித்ததை எழுதுவது, வாசிப்பவருக்கு பயத்தை உண்டாக்கலாம் என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. எனவேதான், பெஞ்சு மேல நில்லுங்க என்ற தலைப்போடு எழுதினேன். ஆனாலும் விஷ்ணுபுரம் நீங்கள் சொல்லும் இந்த கட்டத்தை தாண்டிவிட்டதாக எனக்கு தோன்றுகிறது.தவறாகவும் இருக்கலாம்.

உஷா அவர்களுக்கு, சபையில் பெண்களுக்கு தகுந்த மரியாதை அளிப்பது தமிழ் மரபல்லாவா?
வி பு பற்றி நிறைய நேரங்களில் நிறைய தோன்றும். இப்போதைக்கு மசாலாவில் இருப்பதை எழுதுகிறேன்.

விஷ்ணுபுரம் தருக்கத்தை தனது முதலும் கடைசியுமான ஆயுதமாக பயன்படுத்தியுள்ளது. எனவேதான் தருக்கத்திற்கு அப்பாற்பட்ட ,உணர்வு(பக்தி உணர்வை குறிப்பிடுகிறேன் இங்கு) சம்பந்தபட்ட விஷயங்களை அது தொடவில்லை. இந்த இடத்தில் தான் அது ஒரு பக்தி இலக்கியத்திலிருந்து வேறுபடுகிறது. பக்தி இலக்கியம் அர்ப்பணிப்பு என்பதன் தொடக்கத்திலிருந்து(ஒரு பொருளை போற்றுதல் என்பதிலிருந்து) ஆரம்பித்து இடையிடையே தத்துவத்தை கைகொள்வது. தருக்கம், புரிதலை இலக்காக கொண்டு, தேவையற்றதை ஒதுக்கி வார்த்தைகளின் வழியே,மிஞ்சுவதை உண்மை என காட்டுவது.ஆனால் உண்மையில் உண்மை உணர்வு சம்பந்தமுடையது. இதை முக்கியபடுத்துபவையே பக்தி இலக்கியம்.

எனினும் வி பு நமது மரபுகளில் உள்ள தரிசனங்களை, அப்படியே இரவல் வாங்கி, வாசகனுக்கு தருகிறது.இந்த தருக்கத்தில் வேறு எதுவும் கலக்கப்படவில்லை. இந்த மரபு தரிசனங்களும் தருக்கத்தின் மீது அமைந்தவையே. அதாவது இப்படி புரிந்து கொள்வது
சரியா என ஊகித்து முடிவு செய்வன இவை. தருக்கத்தினால் உண்மையை காண்பது இயலாது. எனினும் அதுவே தொடங்கும் புள்ளி.

நீங்கள் சொன்ன உதாரணம் சரிதான், இது போல் நிறைய இடங்களில், எதிரெதிர் பாத்திரங்கள் நேர்மாறன வாதங்களை நமது பழக்கவழக்கங்களின் மீது,அல்லது மூட நம்பிக்கைகள்மீது வைக்கின்றன. படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது, நீண்டு விவாதிக்க வேண்டுமெனில், ஒரு குறிப்பிட்டதை எடுத்து கொண்டு செய்யலாம், ஆனால் இங்கு முடியாது.

முத்து - இந்த வயது விளையாட்டை எதிர்பார்த்து நான் எனது வயதை சொல்லவில்லை,எனினும் இந்த விளையாட்டு சுவையானதுதான்.

காசி,மதி - நானும் ஒரு மகிழ்ச்சி மன நிலையில்தான் எழுதினேனே தவிர,காயப்படவோ,கறுப்பு கடைதம் எழுதவோ இல்லை.
மதி - எத்தனைக்காலம் தான் கஷ்டப்படுவோம் இந்த நாட்டிலே...வெல்கம் டு தி அன்மேர்ரிட் க்ளப்.


Monday, January 26, 2004

பெஞ்சு மேல நில்லுங்க எல்லோரும்...

 
நேத்து நான் ஆசிரியர் வேலைக்கு அனுப்பிய விண்ணப்ப சுயவிபரங்கள பார்த்த குழந்தைங்கள்ல்லாம் பயப்படதேவையில்லை..
அது சும்மா ளுலுஉள்ளால்ல்ளாயீயீ.. அமலா அக்கா வேற அண்ணா ஆயிட்டங்க்ளேன்னு தொண்டையை அடைக்கிற துக்கத்தோட ஆன் தி ராக்ஸில் ஒரு ஸ்லிம்பாஸ்டு குடித்துவிட்டு(ஐஸ் கட்டிகளுடன் உடல் நல பானம்) எழுதுகிறேன்.

எல்லோருக்கும் குடியரசுதின வாழ்த்துக்கள் (கொஞ்ச லேட்டாக)..

இணையத்தில் இணைந்தவர்களுக்கு இதைத்தான் சொல்ல நினைக்கிறேன். நமது இணைய நட்பு நமது கருத்தை சொல்வதற்கு தடையாக இருக்க கூடாது. அதாவது, நாம் ஒருவருக்கு நட்பாகிவிட்டோமே என்று அவருக்கு எதிராக எப்படி எழுதுவது என்று எல்லாம் நினைக்க கூடாது. சொந்த வாழ்வில் நிறைய இடங்களில் அப்படி ஆளாவோம். இங்காவது, நமக்கு தெரிந்ததை தைர்யமாக சண்டை போட்டு , ஒன்று நாம் கத்தணும் ச்சீ கத்துக்கணும் அல்லது நமது கருத்தை எதிராளி கத்துக்கணும். ஏனெனில்
இணையத்தின் முழு சுதந்திரத்தை பயன்படுத்திகொள்ளவேண்டும். அசிங்கம் பார்ப்பதை விட்டுவிட்டு எதையாவது உருப்படியாய் கத்து கொள்ளவேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கணும். இன்றைய தமிழ் இணைய உலகில் அதற்கு நிறைய வாய்ப்புள்ளது.

மதி அக்கா நல்லாத்தான் எழுதாறங்க(இதை சாலமன் பாப்பையா ஸ்டைலில் சொல்லவில்லை). ஆனா பாருங்க இப்படி சொல்லிட்டாங்களே என்னிய பத்தி, "கணினியைக் ""கட்டிக்கொண்டு"" அழும் இவர்"னு அதுதான் தம்மாத்தூண்டு குத்தி, வலிக்குது.

சுபாக்காவின் பின்னூட்டத்திற்கு நண்றி. எனக்கு இன்னொன்னும் தோனுச்சு. இந்த பய(நான்) தனது வயச சொல்லிட்டு, அக்கான்னு
கூப்பிட்டு நம்ம வயச வேறே ஞாபகப்படுத்திட்டானேன்னு , நினைக்கிறீங்களா? அதெல்லாம் யாரும் யோசிக்கமாட்டாங்கக்கோவ்.

காசி அண்ணே இப்படி எல்லாம் பயமுறுத்தினால், வாத்தியார் வேலைக்கு கட் அடிச்சுட்டு சினிமா பாக்க கிளம்பிடுவேன்.அம்புட்டுத்தான் சொல்லிபுட்டேன்.உங்கள் சுய வரலாற்றை படித்தவுடன் உங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என்று மெய்யாலுங் காட்டிக்குமே நினைத்தேன்.வாழ்த்துக்கள்.உங்கள் எழுத்தின் முதிர்ச்சி குறிப்பிடத்தக்கது( நான் சொல்லிதான் தெரியனும்னு இல்லை இருந்தாலும் சொல்லிப்புட்டேன்).
சங்கர் நன்றிகள்.
ரவியா - "கிழடு கட்டைகளுக்குத்தான்" என்று சொல்வதில் கூட ஒரு தத்துவம் இல்லாமல் இல்லை. கிழடு ஆயிட்டா கட்டைகளுக்கு போக வேண்டியதுதான்.. எனவே கிழடு கொஞ்ச நாளில் கட்டைகளுக்குத்தான்.

சில நாட்களுக்கு முன், நான் என் நண்பனுக்கு அனுப்பிய கணிக்கடிதத்தில், (கேன்னாட் அக்ரீ மோர் ),முழுமையாக ஒப்புக்கொண்டேன் என்று தலைப்பிட்டு எழுதினேன், அவனோ அதற்கு எழுதிய பதிலில், (அக்ரீ மோர் ), இன்னும் கொஞ்சம் ஒத்துக்கொள் என்று தலைப்பிட்டு எழுதியிருந்தது சுவையாக பட்டது எனக்கு.
பத்ரி உங்களுக்கும் அதே பதில் தான். முழுமையாக ஒப்புகொள்கிறேன்.

கண்ணன், நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். நிறைய பேர் பக்தி இலக்கியம், ஏன் பக்தியும்கூட 50 அல்லது 60 வயதுக்கு மேல் தேவைப்படும் விஷயம்னு நினைக்கிறார்கள். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. பிழைப்பே பெரிய சவாலாய் அமைந்துவிடுகிறது பெரும்பாலோருக்கு.எனவேதான் பணிஓய்விற்கு பிறகு என்று ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள். மேலும் பக்தி இலக்கியங்கள் கைதொடும் தூரத்தில் இது நாள் வரை இருந்தது இல்லை. அதாவது பள்ளிகளில்,கல்லூரிகளில். இன்னொன்றும் முக்கியமானதும், இது தமிழ் சுவைபற்றிய விஷயமாய் அமைந்துவிடுகிறது, ஆனால் எங்கோ சிலவரிகளில் உள்ள உண்மைவிஷயங்களை தேடி படிக்க பொறுமையும் காலமும் இல்லை. இந்த பட்டியலில் நானும் உண்டு.

உஷா அவர்களுக்கு, நெறைய பெரிய ஆளுங்களுக்கு முன் எழுதுவது கொஞ்சம் பீசல்(உதறல்) எடுக்குது. நீங்க வேற என்ன போய் பெரியாளு அது இதுன்னுக்கிட்டு.முதலில் விஷ்ணுபுரத்திற்கு விளம்பர வேலை எதற்கு என்று நினைத்திருந்தேன். உங்களை போல் சிலருக்கு ஆர்வம் இருப்பது தெரிகிறது. மேலும் நீங்க கேட்டுட்டீங்கள் இல்ல அப்புறம் என்ன..
விஷ்ணுபுர விவாத சபை விவாதத்தை விவரமாக விவாதிக்க (ம்ம்.. மூச்சு விட்டுக்குறேன்) எனக்கும் கூட ஆசைதான், நான் ரெடி...டொட்டடாய்ங்..நீங்க ரெடியா??

அவையினரே மனிதகுலம் தோன்றிய முதல் நாள்,முதல் கணம் மனித மனத்தில் எழுந்த கேள்வி என்ன?அதுவே இன்று இக்கணம் வரை எல்லா ஞானத்தேடலுக்கும் ஆதாரமான கேள்வி.
இதெல்லாம் என்ன?
இது ஏன்? இவ்வளவுதான்.
இந்த ஞானசபை அக்கேள்விக்கு விடையாக ஒரு மகாதரிசனத்தை நிறுவி, பலசதம் ஆண்டுகளாக இங்கு நிலை நிறுத்தி
வந்துள்ளது.அத்தரிசனத்தின் ஸ்தூலமே இந்த பேராலயம். --விஷ்ணுபுரம் பக்கம் 497.


இது பல வருடங்களுக்கு முன்(அனேகமாக 12ஆம் வகுப்பின்போது) நான் யோசித்தது.என் வார்த்தைகளில்,இந்த பூமியில் உள்ளதும்,பூமியும் எப்படி உண்டானது? இதன் மூலாதிபதி யார்?
அப்படி இருப்பவன், எந்த வார்த்தையில் அழைக்கப்பட்டாலும், அவனும் நானும் கலந்துவிடவேண்டும்.அவனை முழுதாக நான் விழுங்கிவிடவேண்டும், அவனை நான் கணமும் பிரியாதிருக்க வேண்டும். அவன் நானாகிவிடவேண்டும்.

இப்படி ஒரு ஒற்றுமையான எழுத்துகளை படித்தால், யாருக்குத்தான் ஈர்ப்பு வராது.
சரி மேலும் சில வரிகள்.
எனது முதல் பிதாமகர் அக்னிதத்தர் கேட்டார். தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு,அறிந்ததிலிருந்து அறியாததற்கு, அதுதானே ஞானத்தின் பாதை என்று. நம் புலன்களுக்கு சிக்குவதே உண்மையான முதல் உலகம்.இதை நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.இது பஞ்சபூதங்களினால் ஆனது.ஆனால் அவை மட்டுமல்ல.அவற்றை சுமந்து இயங்கும் சக்தியாக பிராணன் இங்கு துடிக்கிறது.
...
பஞ்ச புலன்கள் இல்லையேல் பஞ்சபூதங்களும் இருக்காது. கண்வழியாக எது பார்க்கிறது?காது வழியாக கேட்பது எது?வாய்வழியாக ருசிப்பதும், நாசிவழியாக நுகர்வதும்,மெய்வழியாக தொட்டறிவதும் எது?எல்லா தொடு உணர்வுகளையும் நீக்கிவிட்டு,எல்லா மணங்களையும்
மறைத்துவிட்டு,எந்த ஒலியுமில்லாத இடத்தில்,தனித்திருப்பின் நாம் இல்லாமல்லாகிவிடுவோமா? இல்லை நாம் இருந்துகொண்டிருக்கிறோம்.
...
ஞானிகளே காரணமின்றி காரியம் இல்லை.வெண்ணெய் காரியமெனில் மோர் அதன் காரணம்.மோருக்கு காரணம் பால்.
பாலுக்கு காரணம் பசு. நாம் காணும் உலகம் ஒரு காரியம்.அதன் காரியம் என்ன?இப்பிரபஞ்ச இயக்கத்தின் மூலம் என்ன?
பிரபஞ்சமென்பது நம் உடலும் கூட என்பார்கள்.
...
எங்கள் ஆதிகுரு மகாகபிலர் அதற்கு சத்காரியவாதம் என்று பெயர் சூட்டினார். பால் தயிரின் காரணம்.பாலே தயிராகிறது.
பாலின்றி தயிரில்லை.தயிர் ஆனபின் பாலில்லை. ஆகவே காரணமும் காரியமும் ஒன்றின் இரு முகங்களே ஆகும்.
எதுவுமில்லாமல் ஏதும் புதிதாக தோன்றுவதில்லை.பூரணமாக அழிவதுமில்லை. --விஷ்ணுபுரம் பக்கம் 500,502.****இகாரசு பிரகாசு அவர்களுக்கு நமது வலைப்பூ சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.*****

பிஸ்கோத்து வழங்குதல்

 
இன்றைய முக்கீமான சமாச்சாரம், சமத்து குழந்தைகளுக்கெல்லாம்
பிஸ்கோத்து வழங்குதல். எல்லாருக்கும் பிஸ்கோத்து உண்டு. வரிசையாய்
எல்லோருக்கும் தருவேன், பக்கத்திருப்பவர்கள் பிஸ்கோத்தையெல்லாம்
பிடிங்கி சாப்பிடக்கூடாது சரியா?

புனைவு காடுகளில்
நிஜத்தை காணத்தவறிய
மனிதர்களுள் கவிஞர்களும் அடக்கமா? --யாரோ சொன்னாங்க


யாரையாவது அக்கான்னு கூப்பிட்டா உடனே சரின்னு அக்கா ஆயிடுறாங்க,
யாரையாவது காதலியேன்னு கூப்பிட்டா உடனே சரின்னு சொல்ல மாட்டேங்குறாங்க..
பொல்லாத உலகமுடா இது!!!

தென்றல் வீசவே மாட்டேங்குது,
பரிசல் ஓடவே மாட்டேங்குது,
தடங்களில் சுவடுகள் இல்லை,
கதிர்கள் விளையமாட்டேங்குது
பூக்கள் மலரவே மாட்டேங்குது..

இப்படித்தான் எல்லாம் பிரச்சினை பன்னுதுன்னா, இவருக்கு
காதலியே தொலைஞ்சு போயிட்டா... அதுவும்
இத்தனை நிலவில்
நான் சில நாட்களாய் இவர்களைப்பற்றி தெரிந்து கொண்டு கொஞ்சம் லேசாக (உண்மையில் லேசாகத்தான்..ஹி ஹி ) மிரண்டு போனேன்.
முதலாமாவர் அய்யா கண்ணன் அவர்கள். ஒரு முகம் விஞ்ஞானி முகம்.இன்னொரு முகம் சொல்லிகொள்ளும் அளவு எழுதிவிட்ட எழுத்தாளர் முகம். என்னை பொறுத்தவரை இவர் இந்த இரண்டு முகங்கள் இருந்தாலும், தனது சொந்த முகத்தை தேடுபவர் இடைவிடாது என நினைக்கிறேன்.எனவேதான் இவருக்கும் எனக்கும் பேச மலையளவு விஷயங்கள் உள்ளது.
இரண்டாவது சுபாக்கா, இவரும் குறிப்பிடும் அளவுக்கு தமிழில் குதித்து நீந்திகொண்டு உள்ளார்(ஊர் சுத்துற வேலை இல்லாத போது).
மூன்றாவது பத்ரி, எனது நண்பர்கள் கிரிக்கெட் போட்டிகளின் போது மிகவும் ரசிக்கும்,க்ரிக்இன்போ தளத்தினை உண்டாக்கியவர்களில் ஒருவர். இவர் இன்னும் தமிழினை தழுவிகொள்வது மிகவும் சந்தோசமான விஷயம். விஷய சமாச்சாரம் நிறைய எழுதுபவர்.


சமீபத்தில் பாரட்டனும்னு நினைச்ச ஆட்கள்ள ஒருவர் மாலன், அவருடைய திசைகளுக்காக. இன்னொருவர் ரோசாவசந்த்,அவருடைய அறிவியல் விமரிசன கட்டுரை பதிவுகளில் வெளியாகியிருக்கு.. குவாண்ட புளுகுகள்
என்ற பேரில்.இங்கு அவரது எதிர்ப்பை விட தமிழில் அறிவியல் ஆழமாய் அலசப்படுவதையே வரவேற்கிறேன். இது போன்ற இன்னொருவர், திண்ணையில் நிறைய அறிவியல் கட்டுரைகள் எழுதும் திரு.ஜெயபாரதன். தமிழில் இதுபோன்றவை மேலும் மேலும் வரவேண்டும் என்று எல்லோரைப்போலவும் எனக்கும் ஆசை.

நமது வெங்குட்டு அண்ணா போட்டாரே ஒரு போடு திண்ணையில், அல்லாரும் நிச்சயமாய் படிக்கணும். இவருக்கு எல்லாம் நன்றின்னு சொன்னா நமக்குத்தான் பெருமை.

சரி ஜூட்...

நம்ம அமலா அக்கா இப்பதான் ஜல்லிகட்டு பற்றி எழுதி, அதை தடைசெய்ய வேண்டும்னு சொல்றாங்க.என்ன அக்கா நீங்க, வீட்டுக்குள்ளேயே கணவன்மார்கள் நிறையபேர் குடல் வெளியில வரமாறி முட்டபடுறாங்க..அவங்களுக்கும் சேர்த்து கொஞ்சம் யோசியுங்களேன்.

ஒரு பொது வேண்டுகோள், புதிதாக அன்று எழுதப்பட்ட வலைப்பதிவுகளுக்கு பக்கத்தில ஒரு 'புது சரக்கு இருக்கு' ன்னு ஏதாவது சிக்னல் குடுத்தா எல்லோருக்கும் புண்ணியமா போகும். அமலா அக்கா கூட தன் இரண்டாவது வலைப்பதிவை கண்டுக்கிறதே இல்ல போல.
அப்படியே பட்டியல் பக்கத்தில 'யூனிகோட்','முரசு' ன்னு அவங்க அவங்க பேருபக்கத்தில குடுத்தாலும் நல்லது.

அப்பறம் இன்னொரு சமாச்சாரம், பத்ரி மாதிரியானவர்கள் முக்கியமா எதாவது இருந்தாதான் எழுதுவேன்னு, ரொம்ப டீசன்சி பாக்கறாங்களோன்னு தோனுது. என்னை மாதிரி, கலாட்டா பேர்விழிகளுக்கு எல்லாம் முக்கியமா எழுதனும்னா,எதுவுமே எழுத இருக்காது.
எனவே கொஞசம் கிறுக்கலாயும் எழுதுமாறு கேட்டுகொள்கிறேன். இவங்கள்ளெல்லாம் கிறுக்கினா கூட நல்லாதான் வரும், நம்மதான் நல்லா எழுதினா கூட கிறுக்கல் மாதிரி இருக்கும். ம்ம்..
பத்ரியின் இலக்கிய விழா விஷயங்கள் ரொம்ப உபயோகமானது, பத்ரியின் அறிவியல் சேவை நமக்கு தேவை.

பாரி ஏதோ ரொம்ப சுதந்திரமா இருக்குறத பார்த்தா என்க்கென்னமோ சந்தேகமா இருக்கு, அவர் மனைவி அருகில் இல்லையோன்னு....பாரி எதுக்கும் ஜாக்கிரதை..
மெய்யப்பன் தூசி தட்ட ஆரம்பித்து விட்டார்.. தினமும் தூசி தட்ட அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
"நீண்ட நாட்களாக ஏதாவது எழுத வேண்டும் என்றுநினைத்து, ஊக்கமும் சிரத்தையுமில்லாமல் சென்றுவிட்டது.. இன்று தூசிதட்டும் முயற்சியாக சில வரிகள்.."
விஞ்ஞானிகள் என்றால் கண்டுபிடிப்பாளர்கள் என்று நமக்கு தெரியும். ஆனால் விஞ்ஞானிகளை பற்றிய செய்திகளைகண்டுபிடிக்கும் முத்துவை என்ன சொல்வது.. விஞ்ஞானிகளின் வாழ்வின் சில சுவையான சம்பவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
முத்து சில கண்டுபிடிப்புகளையும் தனது கணிணியில் செய்து நமக்கு காட்டியுள்ளார்.. வளர்க அவர்து ஆர்வமும் அறிவியல் களஞ்சியமும்.


Sunday, January 25, 2004

கார்த்திகேயன் இராமசுவாமி

 
அனைவருக்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
(இதை படிக்கும் போது தமிழின கலைஞரையோ, அல்லது திருவிளையாடல் சிவாஜி கணேசனையோ அவரவர் செளகரியம் போல நினைத்து கொள்ளலாம்..)
அன்பார்ந்த தமிழ்குடி மக்களே! மற்றும் குடி மக்களே! மற்றும் மக்களே! என்னை இங்கு அழைத்து வலைப்பதிவு ஆசிரியர் வேலை பார்க்கும்
வாய்ப்பு அளித்த மதி அக்கா அவர்களேஏஏஏஏ,
வலைப்பூ பெயர் பட்டியலில் முக்கால் பாகம் தனக்கே சொந்தம் என்று மார்தட்டிகொள்ளும் அய்யா கண்ணன் அவர்களேஏஏஏஏ,
சமீபத்தில் எல்லோரையும் நன்றாக அழவைத்து , அவர்களது கண்ணீரில் கப்பலோட்டிக் கொண்டிருக்கும் (மேலும் அதே கப்பலில் ரேடியோ பாட்டும் கூட..) அய்யா காசி அவர்களே,
ஊரெல்லாம் சுத்தி , உலகம் சுத்தும் வாலிபி என்ற பட்டத்தை வென்று, இன்னும் சுத்தி மட்டும் வாங்காமல் , சுத்திக் கொண்டே இருக்கும் சுபா அக்கா அவர்களேஏஏஏஏ,
என்னைபோன்றே படிப்பவர்களுக்கு தலைவலி ச்சீ தலைவர் வேலை செய்த மற்ற வலைப்பூ ஆசிரியர்களேஏஏஏஏ...இன்னும் இந்த வலைப்பூ களத்தில் உழுது கொண்டிருக்கும் மற்ற தாய்மார்களேஏஏஏஏ..,தகப்பன்மார்களேஏஏஏஏ...,தங்காச்சிங்களேஏஏஏஏ..., (அல்லாருக்கும் அசலான சல்யூட்டு..) அதாவது என் முதற்கண் மற்றும் கடைசிக்கண் வணக்கத்தையும் தெரிவித்து கொண்டு குந்திக்கிறேன்.

என்னைப்பற்றி கொஞ்சம் சொன்னாதான் கொஞ்சம் சந்தோசமா ஆசிரியர் வேலைசெய்ய முடியும்னு ஸ்ட்ரைக் பண்ணுது மனசு..அதனாலதான்..ஹி ஹி..
ஒரு புத்திசாலியான, இன்னும் கல்யாணம் ஆகாத, நல்லா மா நிறமான (வெள்ளைன்னு சொன்னா.. அடிக்க வந்துடுவானுக பக்கத்தில இருக்குறவனுக) 28 வயசே ஆன(வாலிபிகள் தயவு பண்ணி கவனிக்க) , குடிக்காத ஒரு தமிழ் குடிமகன்...
தமிழ்ல புடிச்சதுன்னு சொன்னா கொஞசம் பழைய இலக்கியங்களான தேவாரம்,திருவாசகம்,திருப்பாவை என ஒரு பெரிய பட்டியல் இருக்கு. சமிபத்திய இலக்கியம்னு சொன்னா, ஜெயமோகனோட விஷ்ணுபுரம், ஜெ.கா.,சுரா வின் சில பல எழுத்துக்கள்,கா.தாமோ. மத்தவங்களையும் புடிக்கும், நான்தான் இன்னும் நிறைய படிக்கலை.
தமிழ்.னெட் ஐ ஒரு இரண்டு அல்லது மூன்று வருடமா உபயோகப்படுத்திகொண்டுள்ளேன்.
எல்லாரையும் மாதிரியேதான் பாரதி,தாசன்,திருவள்ளுவர், விவேகானந்தர் என்னோட கல்லூரி நாட்களில் என் பையில் கூடவே பயணம் செய்வார்கள். கணிணியில் ஹாபின்னு சொன்னா, வலைப்பதிவு செய்வது, ஜெயமோகனோட சண்டை போடுவது, திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்களை சும்மானாச்சுக்கும் வம்புக்கு இழுப்பது போன்றவை. மொத்தமா ஒரு 62 கிலோ தமிழ் குட்டிசாத்தான்னு நினைச்சுக்கோங்களேன்... (போதும் உன் புராணம் ..இனி ஸ்டிரிக்ட்லி வலைபதிப்பாளர்களைபற்றி எழுது..)


 

இவ்வார வலைப்பூ ஆசிரியராக இருக்கும்படி நான் கேட்டுக்கொண்டவர் அடிக்கடி வலைபதிபவரல்லர். ஆகையால் அவரைப்பற்றி அதிகம் தெரியாது என்றுசொல்லிக் கொஞ்சம் உங்களைப்பற்றிச் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்துகொண்ட மாதிரியும் இருக்கும். வலைப்பூவிலும் அறிமுகம் கொடுக்க வசதியாக இருக்கும் என்று கேட்டேன். அவர் அனுப்பி வைத்ததை, இதோ உங்களுடன் பகிர்ந்துகொ'ல்'கிறேன்.


அன்புள்ள மதி அவர்களுக்கு ,
நன்றி , கடிதம் கிடைத்தது. என்னை பற்றி சொல்ல வேண்டும்னா சொல்லிகிட்டே இருக்கலாம். இருந்தாலும்
நீங்கள் சுருக்கமா கேட்டுட்டீங்கெளேன்னு.. இதோ

பேரு - கறுப்பண்ணா முனி ,
ஊரு - கொலகாரன்பேட்டை , பூர்வீகம் - காளீபுரம்
அப்பா பேரு - பெரிய கறுப்பு
தொழில் - மலையாஆஆள மாந்திரீகம், பில்லி, சூனியம், தகடு வைக்கிறது , தகடு எடுக்கிறது, பொம்மை சூனியம்,
மை போடுறது,முட்டை மந்திரம், etc., etc.,

விலை விவரம்
------------

கர்ப்பிணிகளுக்கு இலவசமா தகடு எடுக்கபடும். மற்றபடி,

1. பில்லி - 1500$
2. தகடு வைக்க - ஆணுக்கு 500$ பெண்ணுக்கும் 500 $
3. தகடு எடுக்க - எடுக்கபட்ட தகடு சைசு, கட்டம் கணக்கு பொறுத்தது.
(2 தகடுன்னா 100$ தள்ளுபடி)
(ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு குறைந்த விலையில் அலுமினிய தகடும் உண்டு)
4. மை போட்டு மயக்க - 30 வயதுக்கு மேல - 250$
- 18 - 30 வயது வரை - 350$
- ஓடிப்போன கணவன் திரும்பி வர மட்டும் 5 நாள் தங்கும் செலவு + சாப்பாடு + 450$
- ஆவிகளோடு பேச 10 நிமிடம் பேச 50 $,பாட்டு பாட 75$

பொழுதுபோக்கு - தலச்சம் பிள்ளை முடி பொறுக்குவது, மண்டையோடு தேடி பொறுக்குவது, 12 மணி க்கு பிசாசுகளோடு பேசுவது,
கால் இரண்டையும் அடுப்பில் எரிப்பது.
விலாசம் - அவ்வப்போது தொழில் செய்யும் ஏரியாவுக்கு அருகில் இருக்கும் சுடுகாடு.

வேற எதாச்சும் வேணும்னா கேளுங்க எழுதி அனுப்புறன்.
அன்போடு,
கறுப்பண்ணா அலையஸ் கார்த்திக்கு


:)

இப்படி பயமுறுத்தியவர், சென்னை - செயிண்ட் தாமஸ் மவுண்டைச் சேர்ந்த கார்த்திகேயன். கணினியைக் கட்டிக்கொண்டு அழும் இவர் இப்போது வாழ்வது மேரிலாண்ட், அமெரிக்காவில். பதிவுகள் தளத்தில் காரசாரமாக விவாதங்களை உருவாக்குபவர், நடத்துபவர். ஜெயமோகனுடன் பெரிய வாக்குவாதங்கள் நடத்தி, அவரின் நண்பருமாகி (?) இருப்பவர். இதற்கெல்லாம் நடுவில் அவ்வப்போது வலைபதிந்துகொண்டும், வலைபதிவுகளைப் படித்துக்கொண்டுமிருப்பவர்.

உங்களுடன் கார்த்திக்ராமாஸ் என்ற கார்த்திகேயன்.

 

Photos by Bala Subra


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

 

ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்றும் சில புகைப்படங்களை நான் இங்கிடுவதை கவனித்து இருப்பீர்கள். அவ்வப்போது நான் எடுத்த புகைப்படங்களையும், என்னுடைய நண்பர்கள் எ¦த்த புகைப்படங்களையும், இணையத்தில் பார்த்த, பிடித்த புகைப்படங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நமது வலைப்பதிவாளர்களில் பலரும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வமுடையவர்கள் என்பதால், நீங்கள் எடுத்த புகைப்படங்களை இங்கிடலாம் என்று இருக்கிறேன். உலகின் பல பாகங்களிலும் இருந்து வலைபதிகிறீர்கள். ஆஸ்திரேலியா, கொரியா, மலேசியா, சிங்கை, இந்தியா, மத்தியகிழக்கு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா என்று பல இடங்களில் இருக்கும் நீங்கள் சுவாரசியமான புகைப்படங்களை அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நண்பர்கள் நீங்கள் எடுத்த புகைப்படங்களை, அது எங்கே எடுக்கப்பட்டது, யார் எடுத்தது என்ற விவரங்களோடு, http://groups.yahoo.com/group/tamilblogs/ குழுவில் புகைப்படங்கள் பிரிவில் வலையேற்றுகிறீர்களா? என்னுடைய மின்னஞ்சல் பெட்டிக்கு அனுப்ப சொல்லிக்கேட்கலாம்தான். ஆனால் குறைந்த அளவு இடமே இருப்பதால்தான் இந்த வழி.

இந்த வாரம் பாஸ்டன் பாலாஜியின் புகைப்படங்களை இங்கு காண்கிறீர்கள்.

 

Photos by Bala Subra

 

சென்னையிலிருந்து வந்து கவி பாடி, அலுக்காமல் சுவாரசியமாக பிடித்த வலைப்பதிவுகளைப் பகிர்ந்து கொண்ட 'சுவடுகள்' சங்கரைய்யா நன்றி ஐயா.


 

Mylapore Chennai, Photos by Bala Subraவடைபெறுகிறேன் அன்பர்களே!

 
ராதாகிருஷ்ணன்! நீங்கள் கொஞ்ச நாளாக எழுதவில்லையே! வேலை அதிகமா?! தொடர்ந்து எழுதுங்கள். நினைவோடையில் எங்களை இன்னும் கொஞ்ச நேரம் குளிக்கவிடுங்கள்.
நான இந்த வாரம் வலைப்பூவில் எழுதப்போகிறேன் என்று என் திட்டப்பணி மேலாளரிடம் யாரோ போட்டுக்கொடுத்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு மீசைக்கு மேற்பகுதியில் அடிக்கடி வேர்க்கும் வியாதி இருக்கவேண்டும். இந்த வாரம் முழுவதும் என்னைப் பிழிந்தெடுத்து காயப்போட்டுவிட்டார்கள். என்னால் முடிந்தவரை பேய் மாதிரி அர்த்தராத்திரியில் வலையுலவிப் பதித்திருக்கிறேன். சுந்தர்! தங்கமணியின் பதிவைப் பற்றி நான் பேசப்போவதில்லை என்றதற்கு இதுதான் காரணம் என்று நினைத்துவிடாதீர்கள்:-) அவருடைய பதிவுகள் தானே பேசுகின்றன. சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிடுகின்றன. நான் சொல்வதற்கு எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை. சுட்டி கொடுப்பதோடு என் பணி நிறைவடைந்துவிடுகிறது. உங்கள் நட்பு உங்கள் எழுத்துக்களைப் போலவே அர்த்தமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
பல வலைப்பூக்களைப் பற்றி நிறைய பேசவேண்டுமென்று நினைத்தது முடியாமற்போய்விட்டது. அதுதான் வருத்தமாய் இருக்கிறது. எனக்கு அடுத்து வருபவர் இந்தக் குறையைத் தீர்ப்பார் என்று நம்புகிறேன்.
இத்தனை பூக்கள் நம்மைச் சுற்றி மலர்ந்து சிறப்பதைப் பார்த்து நம்பிக்கை துளிர்க்கிறது. வலைப்பூக்கள் ஒரு இயக்கமாய் வளர்வதற்கான அடித்தளம் வலுவாக இருக்கின்றது. தன்னையறியாமலே மதி ஒரு முக்கியமான பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இந்த முயற்சியில் நானும் என் துளிகளைச் சேர்த்திருப்பது நிறைவளிக்கிறது.
சரி! வலைப்பூ பிழைத்துப் போகட்டும்:-) வரட்டுமா! சுவடுகளிலும் மரத்தடியிலும் சந்திப்போம்!

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com