<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, November 22, 2003
 உங்களுக்காக ·புஜைராவிலிருந்து...

 
ரமணிதரன் -Eelam Literature Art Archivesல் நிறைய பதிவுகள், திண்ணை வெளியிடுகளை உள்ளிட்டிருக்கிறார். அதில் சுபமங்களா ஆசிரியர் திரு. கோமல் சுவாமிநாதனின் இலங்கை-1, 2, 3 மற்றும் யாழ்- 1, 2 இது கோமலின் இலங்கை பயண அனுபவம். இதில் அவரிடம் ஈழ எழுத்தாளர்கள், "நாங்கள் உங்கள் பத்திரிக்கைகளை, படைப்புகளை படிக்கின்றோம். ஆனால் எங்கள் கதைகளை நீங்கள் பத்திரிக்கைகளில் போடுவதில்லை என்று கேட்டு இருக்கிறார்கள். அதற்கு பத்திரிக்கையாளரான கோமல் சொன்னது, வாசகர்கள், பத்திரிகையாளர்கள் சொல்வது உங்கள் தமிழ் புரியவில்லை என்று. உண்மைதான். சமீபத்தில் Mathy kandasamy-Musingsல் சூள் என்ற கட்டுரை எழுதியிருந்தார். முதலில் படிக்கும் போது புரிய மிக சிரமமாக இருந்தது. நிதானமாய், சில சொற்களின் பொருள் சொன்னப்பிறகுதான் புரிந்தது. ஆனால் கதைகளுக்கு இது சரிப்பட்டு வருமா? அறிந்தவர்கள் சொல்ல வேண்டும்.

முத்து-வலைப்பூ. இதில் வலைப்பூவில் அனிமேஷன் செய்வதை விளக்கமாய் சொல்லியிருக்கிறார். குருவிகள், இது யாருடையது? இதில் நிறைய விஞ்ஞான செய்திகள் படங்களுடன் உள்ளன. தமிழ்-லிட், தமிழ் இலக்கிய விருந்து என்று ஒரு விருந்தே படைத்திருக்கிறார். தன் கவிதைகளையும், பிற பிரபலமானவர்களின் கவிதை,கதை என்று தூள் கிளப்பியிருக்கிறார். ஆனால் பட்டியலில் தன் பேரை ஏன் குறிப்பிடவில்லை.

அடுத்தது சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்- காசி ஆறுமுகம். சுவாரசியமாய் எழுதுகிறார். தன் ரயில் காதலை மன்னிக்கவும் ரயில் மேல் உள்ளக் காதலையும், ரயில் ஜோக்குக்களையும் போட்டு கலக்குகிறார். ஆனால் கணக்கு எல்லாம் போட்டு விடை சொல்ல சொல்லி பயமுறுத்துகிறார்.

வினோபா கார்த்திக் - தமிழ் நதியில் ஒரு பயணம். காமிரா வாங்கு கலையை என்னமா சொல்லி தருகிறார். வலைக்குறிப்புக்கள்- பரிமேலழகர், விதவிதமான விஷயங்களை அலசியிருக்கிறார்.

வலைப்பூவில் நிறைய பழைய, இளம் வயது அனுபவங்களை எழுதலாம். அத்துடன் நம் தாத்தா பாட்டி சொன்ன உண்மை அனுபவங்களையும் பகிர்ந்துக்கொள்ளலாம். மதியின் சூள் படிக்கும் போது, அக்காலத்துக்கே போன உணர்வு ஏற்பட்டது. கட்டாயம் இதை இப்போது பார்க்க முடியாது, இப்படி இருந்தது என்று கேட்டாவது கொள்ளலாம் இல்லையா?

-உஷா

Friday, November 21, 2003
 
naanae

 

The Book Seller of Kabul

சமீபத்தில் நான் படித்த புத்தகம் The book seller of Kabul. Asne Seierstad என்ற பெண் எழுத்தாளர் எழுதியது. நார்வேஜியன் மொழியில் எழுதி ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பெஸ்ட்செல்லர் இது.

இவர் காபூலில் ஒரு புத்தக வியாபாரியின் வீட்டில் சில மாதங்கள் தங்கி ஆப்கானிஸ்தானின் வாழ்க்கை முறை, அரசியல், சமுக அமைப்பு முதலியவற்றை அந்த வீட்டு மனிதர்கள் முக்கியமாய் பெண்களையும் கேட்டு எழுதியிருக்கிறார். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால்., அவ்வீட்டில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் சரளமாய் ஆங்கிலம் பேசியதால் இவருக்கு வேலை சுலபமாய் போய் இருக்கிறது.

புத்தகத்தில் முக்கியமாய் ஆப்கானில் பெண்களின் இன்றைய நிலையை நன்றாக சொல்லியிருக்கிறார். வயதானவர் இளம் பெண்ணை மணப்பது- இதில் முதல் மனைவிக்கும், இளம் பெண்ணுக்கும் தங்கள் வாழ்க்கையை பற்றி முடிவெடுப்பதில் எந்த உரிமையும் கிடையாது. விரும்பும் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் நிலையும் பெண்ணுக்கு கிடையாது போன்ற விஷயங்கள்.

தலிபான் ஆட்சியில் புத்தக வியாபாரி தன் புத்தகங்களைக் காப்பாற்ற பாடுப்படுவது போன்று அவர் கதையையே பெயர்களை மட்டும் மாற்றி எழுதியது சரியா என்று கேள்வி எழுப்பப் படுகிறது.

எழுத்தாளர், அந்த புத்தக வியாபாரி வீட்டில் தங்கி, உண்டு அவர் வீட்டு பெண்களுடன் பேசி விஷயத்தைக் கறந்து புத்தகமாய் எழுதிவிட்டார். அப்பெண்களும் இதுவரை அடக்கி வைத்த மனதை திறந்து தங்கள் மனக்குறைகளை எழுத்தாளரிடம் பகிர்ந்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் ஆப்கானிஸ்தான் பற்றிதான் எழுதப்போகிறேன் என்று சொன்னவர் என் வீட்டு சொந்த விஷயங்களை எழுதி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று வழக்கு தொடர்ந்துள்ளார் ஆப்கானின் ஒரிஜினல் புத்தக வியாபாரி.

எழுத்தாளரோ அந்த பெண்களுக்கு நான் என்ன எழுதப்போகிறேன் என்று நன்றாகத் தெரிந்துதான் தங்கள் சொந்தக் கதையை, மனக்குமறலை என்னிடம் பகிர்ந்துக்கொண்டார்கள் என்கிறார்.

எப்படியோ புத்தக விற்பனையில் சில கோடிகளை சம்பாதித்துவிட்டார் எழுத்தாளர். இதில் பரிதாபத்துக்குரியவள் தன் சோகங்களை அவரிடம் சொன்ன புத்தக வியாபாரியின் தங்கை. புத்தகம் வெளியானதும் அவளின் ஏற்பட்டிருக்கும் கதியை நினைத்துப் பரிதாபப் படமுடியாமல் இருக்க முடியாது.

ஏழைநாட்டு மக்களின் பரிதாப நிலையை எழுதி காசாக்குவது முன்னேறிய நாட்டவர்களுக்கு கைவந்தக் கலையாய் போய்விட்டது என்றக் குற்றசாட்டும் எழுந்துள்ளது.

படிப்பதைப் பற்றி எழுதும்போது, சுவடுகள்-ஷங்கரின் வலைப்பூவை கட்டாயம் சொல்லவேண்டும். இவர் ஒரு புளியமரத்தின் கதையை பற்றி எழுதும்போது, நல்ல கதையை படித்துவிட்டு ஒரு மாதிரி மார்க்கமாய் அலைவதை சொல்லியிருந்தார். அந்த உணர்வு நல்ல கதைகளைப் படித்துவிட்டு இரண்டு நாட்கள் அதே நினைவாய் அலைவது எனக்கும் ஏற்படும். மேலே குறிப்பிட்ட புத்தகத்தை படித்துவிட்டு அந்த புத்தக வியாபாரியின் தங்கை கதாபாத்திரம் இரண்டு நாட்களுக்கு மனதில் சுற்றிக்கொண்டே இருந்தது.

எம்.கே.குமார்- நெஞ்சின் அலைகள் போய் பாருங்கள். குமாரின் கதைகள் அப்படி பட்டதுதான். நன்றாக வருவார் என்று தோன்றுகிறது.

கொள்ளிடம்- வாசன் பிள்ளையிடம் இன்னும் மண் வாசனைப்போகவில்லை. எங்கு போனாலும் நாம் நாமாய் இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. கொள்ளிடம் என்றவுடன், இந்த முறை மாயவரத்தில் கிணற்றில் நீர் இல்லாமல் கொள்ளிடத்தில் இருந்து காசுக்கு வண்டியில் தண்ணீர் வாங்கியதாய் என் மாமனார் சொன்னார். இது போன்று ஆனதே இல்லை என்றும் சொன்னார். தமிழ் நாடு பாலைவனமாகிறது என்று சொல்லப்படுவது உண்மைதானா?

-உஷா
Thursday, November 20, 2003
 
நேற்றுப் போட்ட படம், ஆஸ்லோவில் மிக பிரபலமான விஜிலேண்ட் பார்க்(Vigeland park) என்னும் சிற்பக் கூடம். படியில் ஏறுவது நான் தான். (ஒரு வார எடிட்டர் பதவியை சிம்பாலிக்கா சொல்லியிருக்கிறேன்) அப்புறம் இந்த மொழிகளை பற்றி உலகம் சுற்றும் கண்ணனும், சுபாவும்தான் சொல்லணும்!

Dutch Cemetery
Instructions: Click on the pic to see larger image. Opens onto another window

இந்த புகைப்படத்தைப் பாருங்கள். விசாகப்பட்டினத்தில் ஒரு டச்சு கல்லறை. அந்தக் காலத்தில் இப்படி ஆயிரக்கணகான மைல்கள் கடந்து, மொழி தெரியாமல்,எந்த வித விஞ்சான வசதிகளும் இல்லாமல் எப்படி இப்படி பயணப்பட முடிந்தது?

எனக்கு விருப்பமான விஷயம் என்பது படிப்பது. படிப்பது என்றால் கையில் எது கிடைத்தாலும் படிப்பது. ஆறு வயதில் இருந்து படித்துக்கொண்டு இருப்பதால், என் வாழ்நாளில் படிக்காமல் இருந்த நாட்களை எண்ணிவிடலாம். பவித்ராவின் Shangri-la (என்ன பேரு இது!) படிக்கும்போது அவருக்கும் இந்த பழக்கம் இருக்கிறது என்று தோன்றும். சுபாவின் எண்ணங்களில் மன எண்ணங்களை பற்றி எழுதியிருந்தார். இதைப் படித்தப்போது, தி.ஜானகிராமனின் செம்பருத்தி ஞாபகம் வந்துவிட்டது. அதிலும் இந்த மனப்போராட்டங்கள், ஒருவரை ஒருவர் பேச்சில் காயப்படுத்திக்கொள்வதை வேதனையுடன் சொல்லியிருப்பார். ஏன் இந்த நகத்தால் பிறாண்டும் குணம்? அத்தனை டீவி சீரியலிலும் (நம் இந்திய சிரியல் அனைத்திலும்) ஒருவரை ஒருவர் பழி வாங்குவது, பேச்சால் காயப்படுத்திக்கொள்வத்து காண்பிக்கப்படுகிறது. இதை பார்க்கும் மனம் இப்படி மாறிவிடாதா? அதிலும் குழந்தைகள் மனம்?

படிப்பதில் ஆரம்பித்து எண்ணங்கள் எங்கேயோ போய்விட்டது. என் பாட்டி, சின்ன அத்தை படிப்பதில் வெறியர்கள். இலக்கியம் என்று எல்லாமல் தெரியாமல் இன்று புகழப்படும் சில கதைகளை அன்று சாதாரண வாசகர் (கி) களாய் அலசி இருக்கிறார்கள். என் அம்மாவும் நிறைய படிப்பாள். அடுத்த தலைமுறையில் நானும் என் தம்பியும். இந்த தலைமுறையில்
என் பெண்ணும், பிள்ளையும் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் ஹாரி பாட்டரை படிக்கும்போது பாடத்தை படி என்று கண்டிக்கும்போது மனசாட்சி திட்டுகிறது. நீ ஒழுங்காய் படித்தாயா என்று.

ஒரு சின்ன விளம்பரம்- இன்று அப்டேட் ஆன appusami.com ல் கட்டுரைகள் என்பதை கிளிக்குங்கள். அதில் என் கதையான கராமாவில் துளசிக் கல்யாணம் வந்துள்ளது. நன்றாக இருக்கிறது என்று திரு. பாக்கியம் ராமசாமி மடல் அனுப்பியிருந்தார். நான் மிகவும் அனுபவித்து எழுதிய நகைசுவை கதை இது.

சமீபத்தில் படித்த புத்தகத்தைப்பற்றி நாளை ஆரம்பிக்கிறேன்.

-உஷா

Wednesday, November 19, 2003
 
அந்த ஆள் கேட்டது இதுதான். "ஓஹோ! உங்க மொழிக்கு எழுத்து வடிவம்( Script) கிடையாதா?" உண்மையில் முகத்தில் அடித்ததுபோல ஆகிவிட்டது. அடப்பாவி என்று மனதில் திட்டிக்கொண்டே ஆயிரம், இரண்டாயிரம்காலத்துக்கு முன் தோன்றிய செம் மொழி ஐயா எங்களுடையது என்று ஆரம்பித்து, தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, கம்பன் என்று ஆரம்பித்து பாரதியில் வந்து நிறுத்தினேன். நாங்கள் இருக்கும் நாடு வேறு என்பதால், தமிழ் எழுத்துள்ள கீபோர்ட் கிடைக்கவில்லை என்று சமாளித்தார் என் கணவர்.

மனம் ஆறவே இல்லை, ஆனால் உண்மை கசப்பாய் இருந்தது, சென்னையில் யார் வீட்டிலையும் கீ போர்ட்டில் தமிழ் எழுத்தைப் பார்த்த ஞாபகம் இல்லையே! தமிழ் வார்த்தையை தட்டி நேராக திரையில் விழும் முறை உள்ளதா? இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? ஆயுதம்-சுரதாவும், என் எண்ணக்கிறுக்கல்கள் - செல்வராஜீம், தென்றல் - உமரும், சமீபத்தில் கேவிஆர் படைப்புகள் -கே.வி. ராஜாவும் நிறைய கம்ப்யூட்டர் விஷயங்களை தங்கள் பிளாக்ஸ்ஸில் சொல்லியிருக்கிறார்கள். இதைப் படிக்க நேரிட்டால் தயவுசெய்து இதைப் பற்றி எழுதுங்களேன்!

தமிழ் என்றதும் ஞாபகம் வருவது, வெங்கட்- ஒரு நாடோடியின் வடதுருவ வலைக் குறிப்புகளில், மதுரைத் திட்டம் துரிதமாக்கல் என்ற தலைப்பில் நம் பொக்கிஷங்களை வலையில் ஏற்ற ஆர்வலர்களை அழைத்திருக்கிறார்.

அரசியலையும், உபயோகமான தகவல்களையும் அள்ளி தருவதில் முதலில் இருப்பவர் எண்ணங்கள்- பத்ரி. இவருடையதை தினமும் எட்டிப் பார்த்துவிடுவேன். ஆனால் இப்படி தினமும் எட்டிப் பார்ப்பவர்களுக்கு, ஏமாற்றத்தை தருபவர் ராகவன்- சிந்தித்ததை சேமித்து வைக்கிறேன். மனுஷன் நல்லா எழுதுபவராயிற்றே என்று பார்த்து பார்த்து கண்கள் பூத்துப் போனதுதான் மிச்சம். மாதக்கணக்கு ஆகிறது இவர் வலைப்பூவை புதுப்பித்து!

அடுத்ததாய் விரும்பி படிக்கும் வலைப்பூ Suba's Musing. சமீபத்தில் கண்ணதாசன் பற்றி எழுதியிருந்தார். கண்ணதாசனின் எழுத்துக்களை மட்டும் படிக்கும் பொழுது ஒவ்வொரு வரியும் உண்மை என்று தோன்றும். அவருடைய வனவாசம், மன வாசம் படித்துப் பாருங்கள். நம் தலைவர்களின் சுயரூபம் தெரியும்.

மனத்தின் எண்ணங்கள், மனிதனின் உறவுகள் என்று தன் சிந்தனைகளை மிக நன்றாகப் வெளியிட்டிருக்கிறார். அப்போது என் மனத்தில் தோன்றியது எது தெரியுமா? சொல்கிறேன், எனக்கு தெரிந்த ஒரே சப்ஜெட். விலாவாரியாய் ஆரம்பிக்கிறேன் நாளைக்கு.( நேற்றைய சஸ்பென்சில் எல்லாரும் ஏமாந்தார்கள், இதைக் கண்டு பிடித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்)

-உஷா

 
Norway(c)Usha

Tuesday, November 18, 2003
 


அடடா! மதி சூப்பர் பில்டப் கொடுத்துட்டாங்களே! ஆனா பயப்படாதீங்க, இங்க கதையெல்லாம்
போட மாட்டேன். கதைவிடுவது மட்டும்தான். கதை என்றதும் ஞாபகம் வருவது 'என் மடல்' நா. கண்ணனின் வலைப்பூவில் வரும் வைகைக் கரை காற்றே....., காலைல முதல் வேலையா இதைப் படிச்சிடுவேன்.

நல்லா போகுது. நந்த குமாரிகள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
சின்ன வயசில் இருந்தே எனக்கு கதைக் கேட்பது ரொம்ப பிடிக்கும். அதில் என் பாட்டி பொறந்த கதைய சொல்லட்டுமா, வளர்ந்து சீர் அழிஞ்சகதைய சொல்லட்டுமான்னு ஆரம்பிச்சி, அந்தக் கால கதைகள்/அனுபவங்கள் நிறைய சொல்லியிருக்காங்க!

கிட்டதட்ட நூறு வருஷத்துக்கு முன்னே இருந்த பெண்களுக்கும் இப்போது இருக்கும் பெண் சமுதாயத்துக்கும் உள்ள வேறுபாட்டை நினைத்து சந்தோஷப்பட்ட போது, சந்திரவதனாவின் பெண்கள் வலைப்பூவில் இன்னும் பெண்கள் முன்னேறவில்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். அவர் எழுதியதில் தெரிந்தது, இன்றைய பெண்கள் முன்னேற தடை ஆண்கள் இல்லை, இவர்களே போட்டுக்கொண்ட விலங்குகள்தான். இந்த விலங்கை பெண்களே அவிழ்த்தால்தான் உண்டு. இதை தவிர மகளிர் என்ற இவருடைய வலைப்பூவில் நிறைய மருத்துவ சமாச்சாரங்கள். போய் பாருங்கள், மிக உபயோகமாய் இருக்கிறது.

சே! சே! காப்பர் சல்பேட் ப்ளூவில் விட்ட கதை எங்கையோ போயிடுச்சே?

நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்தப் போது, எங்கள் பக்கத்துவிட்டில் கல்யாண நிச்சயதார்த்தம். நாங்கள் அதாவது நான், என் அம்மா( என் அம்மா, அந்த வீட்டுமாமிக்கு பெஸ்ட் பிரண்ட்), என்னைவிட மூன்று வயது சிறிய என் தம்பியும் ஆஜர். என் அப்பா வரவில்லை. என்னைவிட மூன்று வயது பெரியவன் என் அண்ணா. அவனும் கிரிகெட் விளையாடப் போய் விட்டான்.( என்னமா, பேமிலி பிளான்! எங்க மூணு பேருக்கு சரியாய் மூன்று மூன்று வருடங்கள் இடைவெளி. அப்போது எல்லாம் நாம் மூவர்தான்)

நிச்சயதார்த்தம், பையன் வீட்டில். பெண் வீடு கொஞ்சம் அந்தஸ்தான இடம். பெண்ணை பெற்றவள், ஸ்டைலாய், கொஞ்சம் பந்தாவாய் என் பக்கத்து வீட்டு மாமியிடம், (பையனின் அம்மாவிடம்) கல்யாண புடைவை காப்பர் சல் பேட் ப்ளூவில் வாங்குங்கள் என்று சொன்னாள். அவள் அந்தப் பக்கம் நகர்ந்தது மாமி என் அம்மாவிடம் அது என்ன கலர் சொல்கிறாள் என்று கேட்க, என் அம்மாவும் முழிக்க, என்னிடம் அம்மா ஓடிபோய் அண்ணனிடம் கேட்டுவா என்று சொன்னாள்.

நானும் காப்பர் சல் பேட் ப்ளூ என்று சொல்லிக்கொண்டே ஓடினேன். எதிரில் என் அண்ணா பிரண்ட் வந்துக்கொண்டு இருந்தான். அவனைப் பார்த்து, ஏலே! ரவிய பார்த்தியா என்றுக் கேட்டேன். இது என்ன திருநெல்வேலி வாடை அடிகிறதே என்று பார்க்கிறீர்களா? அந்த பையன், என் அண்ணனின் கிளாஸ்மெட். சமீபத்தில் தூத்துக்குடியில் இருந்து மாற்றல் ஆகி எங்கள் தெருவிற்கு- சென்னைக்கு- வந்தார்கள். அவன் எல்லாரையும் ஏலே என்று விளித்ததால் அவன் பெயரே 'ஏலே' வாகிப் போனது.

அவன் என்னை முறைக்க, என்னலே மொறைக்கிறே என்றதும் அவன் என்னை அடிக்க கை ஓங்க நான் ஓட்டமாய் ஓடி என் அண்ணன் முன் நின்றேன்.

என் அண்ணன், அதுவா நீலக்கலர் என்றான். நான் அம்மாவிடம் வந்து, காப்பர் சல் பேட் ப்ளூனா நீலக் கலராம் மா! என்றேன். அம்மா முறைத்தவாறு, புத்திசாலி என்றாள்.

மறுநாள் இரண்டு தோழிகளும் காப்பர் சல் பேட் ப்ளூ என்று ஜபித்துக்கொண்டே, நல்லிக்குப் போய் பட்டு புடைவை எடுத்து வந்தார்கள். அதைப் பார்த்த நான் அட ராமர் கலர் என்றேன். எத்தனை என். டி. ஆர் படம் பார்த்து இருப்பேன்.

ஆக இப்படி சயின்ஸ் பத்தி ஒண்ணும் தெரியாது. கம்ப்யூட்டர் பத்தி தெரியாதுன்னு சொல்லும்போது, சமீபத்தில் ஒரு திடுக்கிடும் நிகழ்ச்சி நடந்தது. போன மாதம், நார்வே நாட்டுக்கு போயிருந்தேன்(அப்பா! எப்படியோ மேட்டர உள்ளே நுழைச்சியாச்சு- இது மனசாட்சி. அடிக்கடி வரும்)

அங்க ஒரு நார்வேஜியன் கம்யூட்டர் நிபுணர் எங்களுக்கு பார்ட்டி கொடுத்தார். என் கணவருக்கு என்னை வம்புக்கு இழுக்கவேண்டும் என்றே என் பெண்டாட்டி பெரிய எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்தினார்.

அவர் என்னை மரியாதையாய் பார்த்து, குட், குட் என்றார். என் எழுத்துக்களைப்பற்றி பேச ஆரம்பித்தார். நான் சங்கடமாய் வெப் சைட்டில் எழுதுகிறேன் என்றேன். ஆங்கிலமா என்ற கேள்வி வந்தவுடன், இல்லை என் மொழியில் என்று மட்டும் சொல்லிவிட்டு சும்மா இருந்திருக்கலாம், விதி யாரை விட்டது?

கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் டைப் அடித்தால் தமிழில் வரும்படி ·பாண்ட் போட்டு இருக்கேன் என்றேன். அடுத்து அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் என் இதயமே நின்றிவிட்டது. என் காலடியில் பூமி நழுவியது. இப்படி கேட்டுவிட்டானே பாவி என்று கண்ணும் கலங்கியது.(என்ன சஸ்பென்ஸ் என்று நீங்கள் அலுத்துக்கொள்வது புரிகிறது. என்ன செய்வது, அடிக்கடி உள்ளே உறங்கிக்கொண்டு இருக்கும் எழுத்தாளி வெளியே வந்து விடுகிறாள்)

-உஷா

 


Burg Al Arab Hotel, Dubai (c) PepSundar@Maraththadi
Burg Al Arab Hotel, Dubai (c) PepSundar@Maraththadi

Monday, November 17, 2003
 


மதி இரண்டு வாரத்துக்கு முன்பு இப்படி வலைப்பூல எடிட்டர் ஆக முடியுமான்னு மெயில் அனுப்பியிருந்தாங்க,

நல்ல வேளையாக என் கம்ப்யூட்டர் ரிப்பேர் அப்போது. இரண்டு நாள் கழித்து சரியானதும் மெயில் பார்த்தால், நாளைல இருந்து எடிட்டர் ஆக முடியுமான்னு இன்னொரு மெயில். இது ஏதடா வம்புன்னு பேசாம இருந்து விட்டேன். திடீரென்று ஒரு வாரத்துக்கு எழுத சரக்கு வேண்டாமா? லாண்டிரி கணக்கை கூட சுவைபட எழுதக்கூடிய அளவு நான் என்ன பெரிய ஆளா? அதற்குள் கிருபா மாட்டினவுடன் கம்ப்யூட்டர் சரியாகி விட்டதுன்னு மெதுவா மெயில் அனுப்பினேன்.

அதுக்கு அப்புறம் பார்த்தால் வினோபா. சரி நம்மை மறந்து விட்டாள் என்று நிம்மதி பெருமூச்சுவிடும்
போது, நேற்று திரும்ப ஒரு மெயில் மதியிடம் இருந்து. வேறு வழி இல்லை, வந்துவிட்டேன் உள்ளே!

முதலில் ஒரு எச்சரிக்கை. எந்த கவிதை பற்றிய வலைப் பூவையும் விமர்சிக்க போவதில்லை, ஏன் என்றால் எனக்கு கவிதை பற்றிய அறிவு பூஜ்ஜியம். சரிதான் எதைப் பற்றி தெரியும் என்று கேட்டீர்களானால் தெரியாது என்று சொல்லும் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.

சமீபத்தில் கே.வி.ஆர், சுரதா, உமர் போன்றோர் கம்ப்யூட்டர், லினிக்ஸ், யூனிகோட் என்று எல்லாம் எழுதியிருக்கிறார்கள். ஏதோ கம்யூட்டரை பற்றி பேசுகிறார்கள் என்று சத்தமில்லாமல் வெளியே வந்துவிடுவேன். அதனால் அவர்களின் கமெண்ட்டில் என் பெயர் இருக்காது.

வெங்கட் விதவிதமாய் சயின்ஸ் பத்தி எழுதுகிறார். சுமாராய் புரியும். எனக்கு சயின்ஸ் அதிலும்
இயற்பியல் என்றால் ஆர்கிமிடிஸ் யூரேகா என்று பப்பி ஷேமாய் ஓடியதையும், வேதியலில்
காப்பர் சல்பேட் ப்ளுவும் மட்டும்தான் தெரியும்.

இந்த காப்பர் சல்பேட் ப்ளு பற்றி ஒரு கதை சொல்லட்டா?

- உஷா

 


middle-east (c)Tinka


 


இவ்வார வலைப்பூ ஆசிரியர் ராமச்சந்திரன் உஷா. எல்லோராலும் 'உஷா மாமி' என்றோ 'மாமி' என்றோ அழைக்கப்படும் இவர் பல சிறுகதைகளை எழுதி வருபவர். மிகச்சமீபத்தில் எழுதவந்தாலும், தன் விடாமுயற்சியால் இவ்வார ஆனந்தவிகடனில் கதை வரும் அளவு வளர்ந்துவிட்டவர்.

இவர் எழுதி இணைய இதழ்களில் வந்த மற்ற சிறுகதைகள் - ஞானோபதேசம், சிவராமனின் சோகக்கதை, என் தாய் பண்டரிபாய், ஆத்மசாந்தி, சாதி இரண்டொழிய, மனிதர்கள், துபாயில் எழுத்தாளினி மீனா நவநீதகிருஷ்ணன்.

இதுதவிர, அம்பலம்.காமில் இவருடைய கதை ஒன்று பிரசுரமாகி இருக்கிறது. மரத்தடி, இராயர்காப்பிகிளப், புத்தகப்புழு இணையக்குழுக்களிலும், மரத்தடி இணையப்பக்கத்திலும் இவருடைய படைப்புகளை நீங்கள் காணலாம்.

தன் கருத்தை அஞ்சாமல் சொல்லும் இவருக்கு ஏராளமான விசிறிகள் இருக்கிறார்கள். (ரசிகர் மன்றமோ, நற்பணிமன்றமோ ஆரம்பிக்கலாமா என்று அவர்கள் எல்லாரும் பேசிக்கொண்டிருப்பதாகக்கேள்வி. :D ;) )

வாருங்கள் உஷா!

 வயிறுமுட்ட சாப்பாடு போட்டதற்கு மிகவும் நன்றி வினோபா. நான் மிகவும் ஆர்வத்தோடு படிக்கும் வலைக்குறிப்புகளில் உங்களுடையதும் ஒன்று. அசத்துவீர்கள் என்று நான் நம்பியது வீண்போகவில்லை. கலக்கிவிட்டீர்கள். ஆரம்பித்தில் 'தம்பி கார்த்திக்கு..... எப்டீபா இருக்கே!' என்ற காசி அவர்களே 'வினோபா'ஜி' என்று சொல்லுகிறார் என்றால்... இதைவிட வேறு ஏதாவது சொல்லமுடியுமா?

நன்றி வினோபா!

 


(c)Dona Mulla, Brazil


விடை பெறும் நாள்

 

உங்களிடமிருந்து விடை பெறும் நேரம் வந்தாச்சு. ஆசிரியர் வேலை என்பது சிரமமானது என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தச் சுமையை எனக்களித்த மதிக்கு எனது நன்றிகள். நிறையப்பேரின் பதிவுகளைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆனால் எல்லார் பற்றியும் எழுத ஆசையிருந்தாலும் நேரம் அதற்கு இடமளிக்கவில்லை. கண்கள் பூத்துக்கிடக்கு. இன்றைக்கு நன்றாய் (வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு) குளிருக்கு இதமாய் இழுத்துப் போர்த்தி தூங்கவேணும். பரிசலுக்கு வாங்க. தமிழ் நதியில் மிதப்போம்.

ஒரு வாரமா பலவகைச் சாப்பாடுகளை நல்லா சாப்பிட்டுப் பித்தம் வைத்திருக்கும். ஆகவே இன்றைக்கு விரதம். ;)

அன்புடன் விடைபெறும் வினோபா.

Sunday, November 16, 2003

நடந்து வந்த பாதை

 


இணையத்தில் தமிழ் படிக்கும் எல்லோரையும் உற்சாகப் படுத்தி வலைக்குறிப்பு எழுதவைத்ததில் முதற்பங்கு திசைகளுக்கே சென்று சேரும். அதுவரையில் கணினியில் தமிழைக் கண்டாலே புல்லரித்துப் போன என் போன்றோருக்கு தமிழ் வலைக்குறிப்பு ஒரு வரப் பிரசாதம். திசைகளில் வந்த அந்த ஒரு கட்டுரை என் கணினிப் பொழுதுகளை முற்றிலும் மாற்றிவிட்டது. உங்களில் பலருக்கும் இதுவே தான் நிகழ்ந்திருக்கும். கிடைக்கும் சொச்சப் பொழுதுகளில் அவரவரின் பக்கங்களுக்குப் போய் - யார் யார் நம் எழுத்துக்களைப் படித்துள்ளனர்? அவர்கள் இட்ட பின்னூட்டங்கள் யாவை? தமிழ்க் குறிப்புலகச் சஞ்சிகைக்கு இன்று யார் ஆசிரியர்? - என்று பார்ப்பதில் இருக்கும் மகிழ்வு தினசரிகளில் ஒன்றாய் ஆகிப்போயிருக்கும். வலைப்பூ ஆரம்பித்து, இரண்டொரு பதிப்புகள் செய்து பலரும் உங்களின் எழுத்துக்களை நித்தம் நுகர்ந்து மகிழ்ந்த பின் நீங்களே எண்ணினாலும் உங்களால் எழுதுவதை நிறுத்தமுடியாது. இது ஒரு மீளாச்சுழல். ஒரு இன்பமான போதை. இனிமை விலகாத கனவு. மாலனுக்கும், அந்தக் கட்டுரை எழுதத்தூண்டிய எல்லாக் காரணிகளுக்கும் நம் நன்றிகள்.

நடக்கவேண்டும். ஆனால் ஊன்றுதலில்லை. ஆதாரமில்லை. நடப்பதற்கு கால்கள் கூட இல்லை. எப்படி நடப்பது? எங்கு நடப்பது? ஒருவரல்ல பலர் எங்களுக்கு நடை பயிற்றுவித்திருக்கிறார்கள். யாரைச் சொல்லுவது? யாரை விடுவது? ஒலி விவரணத்தோடு பாடம் சொல்லித் தந்த சுரதாவைச் சொல்லுவதா? மிகுந்த தகுதரச் சிக்கல்களுக்கு இடையிலும் பாடுபட்டு தமிழ் எழுத்துருக்களை வளர்த்த உருவாக்கிய முத்து நெடுமாறன் போன்று இன்னும் எத்தனையோ நானறியா தமிழ் கணினித்துறை வல்லுனர்களை சுட்டுவதா? இன்று பெரும்பாலும் எல்லாக் குறிப்புகளிலும் பயன்படும் 'தேனீ' இயங்கு எழுத்துருவைத் தந்து உதவிக் கொண்டிருக்கும் உமரைக் குறிப்பதா? எங்களுக்கு வழிகாட்டியாய் அமைந்து குறிப்புலகில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் வெங்கட், பத்ரி, கண்ணன், சுபா, மதி போன்ற விடிவெள்ளிகளைச் சொல்லுவதா?

அரேபியர்களுக்கு அறிவியலில் மகாப் பங்கொன்று உண்டு. ஆவணப்படுத்தல். அவர்களில்லையேல் வானவியல் சாத்திரங்கள் மண்ணாகிப் போயிருக்கும். மருத்துவத்தின் சிலபகுதிகள் மலர்ந்திருக்கா. இந்திய மரபினர் கண்டுபிடித்த பூச்சியம் நவீன உலகில் அடியெடுத்து வைத்திருக்காது. அதைவிடுங்கள் 'ஆவணப் படுத்துதல்' என்பதின் ஆரம்ப வேர்கள் அங்கிருந்து கிளம்பியவையே. மதி துவக்கிய தமிழ் வலைக்குறிப்பு அகராதி இல்லையென்றால் நாமெல்லாம் இங்கு கூடிப் பேசிக்கொண்டிருக்க மாட்டோம். இணையமென்ற மாக்கடலின் அலைகளில் சிக்கிச் சிதறிப்போயிருப்போம்.

இன்றைய சுவை - வட ஆப்பிரிக்கா

காசாபிளாங்கா(Casablanca)
என் கல்லூரி நண்பன் வசீகர் என்னைப்போலவே வெவ்வேறு உணவுவகைகளைச் சுவைப்பதில் ஆர்வம் கொண்டவன். எங்களுக்கு தர வேண்டிய(!?) விருந்தளிப்பு ஒன்று பாக்கியிருந்தது. புதியாய் ஏதாவது முயற்சிக்கலாமென்று வலையில் தேடிக்கொண்டிருந்த போது சிக்கியது இந்த மொராக்கிய கடை. அங்கே 'belly-dance' நிகழ்த்தப்படும் என்பது சிறிது தயக்கத்தை ஊட்டியது!! மனைவிமார்களும் நண்பிகளும் உடன் இருந்ததால் அவர்களை வெளியே நிற்கச் செய்துவிட்டு ஆண்பிள்ளைகள் திரைவிலக்கி உள்ளே எட்டிப்பார்த்தோம். ஏடாகூடமாக இருந்தால் திரும்பிவிடலாமென்று. நாங்கள் கற்பனை செய்து கொண்டாற்போல் எதுவுமில்லை. நிறையப் பேர் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

அந்த உணவகத்தில் கண்களுக்கு இல்லாப்போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டது. அதன் சுவரெங்கும் அரேபிய அலங்கரிப்புகள், வலைவுகள், திரைச்சீலைகள், மிகக்குறைந்த ஒளியாக்கம் என்று படப்பிடிப்பு அமைவைப் போலிருந்தது. ஒன்றாகச் சேர்ந்த மெத்தை நாற்காலிகளில் திண்டுகளிடப்பட்டிருந்தது. சாப்பிடும் மேசை மிகத் தாழ்வாக இருந்தது. எல்லாத் திண்பண்டங்களும் பெரிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பித்தளைத் தாம்பாலத்தில் வைக்கப்பட்டது. கைகழுவ ரோஜாத் தண்ணீர் கொணர்ந்தார்கள். எல்லா பணியாட்களும் கலாச்சார உடையிலிருந்தார்கள்.

பெர்சியக் கடையில் தந்தது போலவே 'பிட்டா' ரொட்டியும் 'பாபா கனுஷ¤ம்' (சரிதானே வாசன்?) கிடைத்தது முதலில். அடுத்து முழு கோழியையும் இட்டு வேகவைத்த சுவையான குழம்புச்சாற்றில் ஏகத்திற்கு கொட்டைகளும் பருப்புகளும் கிடந்தன. இன்னொரு கும்பல் முயல்கறிக் குழம்பை வாங்கிக் கொண்டார்கள். திடீரென்று சில்சில்லென்ற ஒரு இசை. உணவகத்தில் இருந்த எல்லோரும் 'ஹோ'வென்று கூவினார்கள். பாரம்பரிய உடையணிந்த ஒருவர் கை கால்களில் சலங்கைகள் கட்டிக்கொண்டு ஆடியபடியே ஒவ்வொரு மேசைக்கருகிலும் வந்து சிறிது நேரம் ஆடிப்போனார். பிறகொரு பெண் சேர்ந்துகொண்டார். சிறிது நேர கலாட்டாவிற்குப்பின் எங்களின் கவனம் சாப்பாட்டில் திரும்பியது. 'கசரோல்' என்னும் ஒரு பதார்த்தம் வித்தியாசமாக இருந்தது. மெல்லிய, மொறுமொறுவென்ற, சக்கரைப்பொடியும் பட்டை(cinnamon)த்தூளும் விரவப்பட்ட மேற்படலத்தினுள் மிதமான இனிப்பில் புட்டு போன்ற முட்டைச் சமாச்சாரம் வெகு ருசியாக இருந்தது. அதை முடித்ததும் காய்கறிகளும் பழங்களும் நிரம்பிய கூடை வந்தது நிறைவாயிருந்தது.

மறுமலர்ச்சி

 


பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் நம் உலகம் வெகுவாக மாறிப்போனது. உற்பத்தியில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றம் பல புதிய கருத்தாக்கங்களையும், தத்துவ அரசியலையும் உருவாக்கி நாம் நினைத்தாலும் மீண்டும் அந்த காலகட்டத்திற்குப் போக இயலாதபடி ஒரு மீளாச்சுழலுக்கு நம்மை இட்டுப்போனது.

கலைத்துறைக்காரர்கள் கொஞ்சம் முந்திக்கொண்டார்கள். 14,15-ம் நூற்றாண்டில் தோன்றிய கலையின் 'மறுமலர்ச்சி' நுண்கலைகளின் புதிய சரித்திரத்தை தோற்றுவித்தது. நிஜ வாழ்வைப் தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் ஓவியங்களும் சிற்பங்களும் தோன்றின. லியனார்டோ போன்ற ஓவியர்கள் அறிவியல் பயின்றார்கள். அவற்றைக் கொண்டு கலைகளுக்கு வலுச்சேர்த்தனர். அறிவியலும் கலையும் பேசிக்கொண்டன. ஒன்றையொன்று ஊட்டி வளர்த்தன.

இதையெல்லாம் நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்கிறீர்களா? தமிழ் வலைக்குறிப்பு வரலாற்றைப் பார்த்தாலும் இப்படிப் பிரிக்கத் தோன்றுகிறது - மறுமலர்ச்சிக் காலத்திற்கு முன், மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பின் என்று. இந்த மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அந்த ஒற்றை நிகழ்வு எது?வருக!!

 
வாங்க! KVR அண்ணச்சி, வாங்க! KVR புதிதாக 'KVR பக்கங்கள்' என்ற பெயரில் வலைக்குறிப்பு ஆரம்பித்துள்ளார் - சரியாகச் சொல்லவேண்டுமானால், அக்டோபர் மாதமே தொடங்கி விட்டாலும் மதியின் தமிழ்க் குறிப்புலக அகராதியில் தன் பக்கத்தை புதிதாகச் சேர்த்துள்ளார். 'இயங்கு எழுத்துருக்களை எப்படிப் பயன்படுத்துவது?' என்பது குறித்து அவர் எழுதியிருக்கும் கட்டுரை புதிதாய் வலைப்பதிவு தொடங்குவோருக்கு மிகவும் பயனுள்ள ஒன்று.

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com