<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, March 06, 2004
 

New Co-moderator for Valaippoo

 


அடுத்து வருபவர் யார் என்று நீங்கள் எல்லோரும் ஆவலாகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள். (அல்லது நானாவது அப்படி நினைத்துக்கொள்கிறேன் )

இது நாள்வரை வலைப்பூவில் நான் மட்டுமே நண்பர்களைத் தொடர்பு கொண்டு, அவர்கள் வலைபதிவதற்கு உதவி வந்தேன். இனிமேல் என்னுடன் சேர்ந்து உங்களைப் 'படுத்த' இன்னுமொரு நண்பர் முன்வந்திருக்கிறார். அவரை இங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். அறிமுகமே தேவையில்லாதவர் அவர். இவருடைய வலைப்பதிவுகள் உலகமெங்கும் தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் (Read France, think wireless) தெரிவிக்கின்றன.

வலைப்பதிவுகளை ஆரம்பித்த போது யாரோ ஒருவராக உள்ளே வந்த இவர் 'யாரோ? இவர் யாரோ?' என்று மக்கள் விசாரிக்கும் அளவு பிரபலமாகியிருக்கிறார். வலைப்பதிவுகள் பற்றி இணைய இதழ்களில் எழுதுகிறார். தமிழ் வலைப்பதிவுகளுக்காக தொழில்நுட்பரீதியான சோதனைகளை மேற்கொள்ளுகிறார். தமிழ் வலைப்பதிவுகள் போகவேண்டிய தூரம் நிறைய இருந்தாலும், அதை முன்னெடுத்துச் செல்லும் ஆர்வலர்களுள் இவரும் முக்கியமானவர். ஆர்வம் ஒன்றே இவருடைய சொத்து. 'சந்திரமண்டலத்துக்குப்போனாலும் தனக்கு உதவி செய்யுறதுக்கு ரெண்டு பேரு இருப்பாங்க' என்று சொல்லும் இவர், புதிதாகத் தமிழ் வலைபதிய வருபவர்களுக்கு ஓடோடி வந்து உதவுபவர்.


என்ன? கேக்கலை! கொஞ்சம் சத்தமாப் பேசுங்க.

ஓஓஓஓஓ....

இல்ல்லை..... நீங்க எழுதித் தந்ததைத் தானே இங்க பேசிட்டு இருக்கேன்?

என்னது?

நீங்க எழுதித் தந்ததுன்னு பொதுவில சொல்லிக்கக்கூடாதா? மன்னிச்சுக்கோங்க. வருங்கால போக்குவரத்துத் துறை அமைச்சரின் புகழில் களங்கமேற்படுத்துவது என்னுடைய நோக்கமல்ல. மன்னிச்சுக்கோங்க அண்ணாச்சி.நண்பர்களே, இதோ காசி அவர்களே உங்களுடன் பேச வருகிறார்.

<கோஷம்>
அண்ணன் காசி வாழ்க! தலைவர் காசி வாழ்க! வருங்காலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாழ்க. வருங்காலப் பிரதமர் வாழ்க.aNNan Kasi
அண்ணன் காசி
 


Thanjai Big Temple(c)Mathy


 
நன்றி .. வணக்கம் ..

வேலையில் சில நாள் தாமதமாய்ச் சேர்ந்ததால் ஒரு வார பதவிக்காலம் இரு வாரங்களாய் ஆகிவிட்டது. இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த அனைவருக்கும் நன்றி :) வாய்ப்பளித்த மதிக்கு நன்றி ..அப்புறம் அப்பப்ப எல்லோரும் நம்ம வலைப்பூவுக்கும் ஒரு நடை வந்துட்டுப் போங்க.. உங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் முத்து.

வலைப்பூக்களின் ஊடாக ஒரு சிற்றுலா

 

வேகமாக வளர்ந்துவரும் மூன்று மொழிகள் தமிழ், பெங்காலி , மலாய் என்று டேவிட் கிரெடால் என்பவர் மிகப்பிரபலமான சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் எழுதியதை மேற்கோள் காட்டி எழுதி பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் மதி . வழக்கம்போலவே மீனாக்ஸ் அருமையாய்க் காதல் கவிதை தீட்டியிருக்கிறார். கோலம் மெகா சீரியல் பற்றி சிலாகித்து பவித்ரா சொல்லியிருப்பது பற்றி அந்த மெகாசீரியல் பார்த்தவர்கள் யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். இப்போதுதான் நான் அண்ணாமலை மெகாசீரியல் இண்டெர்நெட்டில் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்:). மேலும் பவித்ரா குடுமியான்மலை பற்றிச் சொல்லியிருப்பவை சுவாரசியமாய் இருக்கின்றன.

இந்தியாவில் தேர்தல் ஜுரம் பற்றி பிரகாஷ் சொல்லியிருப்பதைப் படித்தால் கொஞ்சம் நகைச்சுவையாய் இருக்கும் அதே நேரத்தில் அந்த யதார்த்த உண்மைகள் கொஞ்சம் கவலைப்படவும் வைக்கிறது.ராகவன் சென்னையில் நடக்கும் திசைகள் இலக்கியச் சந்திப்பு பற்றிய தகவலை தெரிவித்திருக்கிறார். மகாமகம் பற்றிச் சில சிந்தனைகளை ரஜினி ராம்கி சொல்லியிருக்கிறார். ஆங்கிலத்தில் வலைப்பதிவு செய்துவந்த டுபுக்கு தமிழிலும் பதிய ஆரம்பித்திருக்கிறார். சுரதா, சாகித்யன் , சங்கரய்யா , சுகீந்திரன் ஆகியோர் புதிய வலைப்பூ ஆரம்பித்திருக்கிறார்கள்.. இவை தவிர பெண் என்ற கூட்டு வலைப்பதிவும் புதிதாய்ப் பூத்திருக்கிறது. இன்னும் நிறைய வலைப்பூக்களைப் பற்றி நிறையச் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.. ஆனால் பல காரனங்களால் முடியவில்லை.

உங்க வலைப்பூவுல இதெல்லாம் இருக்கா . ?

 

சில நாட்களாய் காசி. வெங்கட்,பத்ரி , செல்வராஜ் ஆகியோர் வலைப்பூவில் RSS , trackback ,feedback பற்றி எழுதிவருகிறார்கள்.... பத்ரி சொன்னதுபோல ஒரு வலைப்பூவில் என்னவெல்லாம் இருக்கலாம் (இருக்கவேண்டும்) என்பதை யோசித்தால் சட்டென நினைவுக்கு வருவது இவைதான்..

1.முதலில் தமிழ் வலைப்பூ யுனிக்கோடு எழுத்தில் இருந்தால் நல்லது. கூகிள் , யாகூ போன்ற தேடுபொறிகளில் யுனிக்கோடு தளங்களில் உள்ளதை மட்டும்தான் எளிதாய்த் தேடி எடுக்கமுடிகிறது.. இப்போது வலைப்பூக்களுக்கு வருபவர்கள் பலர் தேடுபோறி மூலமாகவே வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .

2.தமிழ் எழுத்துரு தானாகவே பக்கத்துடன் சேர்ந்து இறங்கும்படியாய் அவசியம் இருக்கவேண்டும் .. இதன் மூலம் தமிழ் எழுத்துரு இல்லாத கணினியில்கூட நமது பக்கத்தைத் தெளிவாய்ப் படிக்க இயலும். சுரதாவின் தானிறங்கி எழுத்துரு விளக்கம் தானிறங்கி எழுத்துரு அமைக்க விரும்புபவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். ஆனால் இந்தத் தானியங்கி எழுத்துருக்கள் எக்ஸ்ப்ளோரர் தவிர பிற உலாவிகளில் வேலை செய்வதில்லை என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம் ..

3. பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பதிவுக்கும் மறுமொழிப் படிவம் இருந்தால் மிக நன்றாய் இருக்கும்.இதன் மூலம் குறைந்த பட்சம் ஒரு பதிவைப் பற்றி அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். backblog, haloscane போன்ற தளங்கள் இந்த வசதியைத் தருகின்றன. backblog - இலவச வசதியில் 5 மறுமொழிக்கு மேல் பதிய இயலாது. ஆனால் இதில் டெம்ப்ளேட்டை நம்முடைய வசதிக்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்துக்கொள்ள இயலுகிறது. தமிழுக்கென விஷேசமாக வடிவமைக்கப்பட்ட பலவடிவங்கள் இதில் கிடைக்கின்றன. அவற்றில் சுரதாவின் பொங்கு தமிழ் மாற்றியின் தன்மையுடன் இயங்கும் டெம்ப்ளேட் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எவரும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழுக்கு மாற்றிக்கொள்ள முடிகிறது.

4.இப்போது நிறைய ஆங்கில வலைப்பூக்களில் chat box (அரட்டைப் பெட்டி ? ) என்ற ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள் .. myshoutbox போன்ற தளங்கள் இந்த வசதியைத் தருகின்றன. தமிழ் வலைப்பூக்களில் என்னைத் தவிர யாராவது இதைப் பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை.. இது மிக அவசியமா என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். நம்முடைய வலைப்பூவுக்கு வந்த நண்பர்கள் ஏதோ ஒன்றைச் சொல்லவோ, அல்லது எந்தத் தலைப்புக்கும் சம்பந்தமில்லாமல் தங்களுக்குள் நலம் விசாரித்துக்கொள்ளவோ,தகவல் பரிமாறிக்கொள்ளவோ, சின்னதாய் அரட்டை அடிக்கவோ இது மிக உதவும் . இதை சேர்ப்பதும் அவ்வளவு கடினம் இல்லை.. இந்த வசதி தரும் தளத்தில் புதிதாய் ஒரு கணக்குத் தொடங்கி அவர்கள் தரும் ஸ்க்ரிப்டை நம்முடைய டெம்ப்ளேட்டில் சேர்த்துவிட்டால் போதும்..

5.நம்முடைய வலைப்பூவுக்கு வராமலேயே ஒருவர் நாம் ஏதும் புதிதாய் எழுதியிருக்கிறோமா என்று படிக்க ஏதுவாய் RSS , atom போன்ற வசதியை வலைப்பூவில் ஏற்படுத்திக்கொள்ளலாம்.பொதுவாய் blogger.com தரும் atom முகவரி வலைப்பூவின் முகவரியுடன் ..../atom.xml என்று சேர்த்ததாய் இருக்கும். உதாரணமாய், http://muthukmuthu.blogspot.com/atom.xml என்பது எனது atom முகவரி. blogger.com வசதியைப் பயன்படுத்திவரும் நண்பர்கள் அவர்களுக்கு இது வேலை செய்கிறதா என்று பார்த்துவிட்டு , வேலைசெய்யாவிட்டால் blogger.com நிறுவனத்துக்கு தெரிவிக்கவும், அவர்கள் சரி செய்துவிடுவார்கள். சில மென்பொருட்களில் atom வசதியைப் பயன்படுத்த இயலுவதில்லை.. இந்த atom முகவரியை RSS முகவரியாக மாற்றிக்கொள்ள இயலுகிறது என நண்பர் ஒருவர் வலைப்பூ யாகூ குழுவில் அருமையான தகவலைச் சொல்லியிருந்தார்.

6. சிலர் தங்களின் வலைப்பூவில் trackback வசதியைச் சேர்த்துள்ளனர்.. சமீபத்தில் நமது வலைப்பூ இதழிலும்கூட இவ்வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனைப் பல பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தமுடியும். எடுத்துக்காட்டாக . இங்கு வலைப்பூ இதழில் ஒரு கட்டுரை வெளிவந்து அதன் தொடர்ச்சியாய் நடைபெறும் விவாதத்தை வேறு இடத்தில் நடத்தினால், இவ்விரு விவாதங்களையும் தொடர்ந்து படிக்க ஏதுவாய் இவ்வசதி மூலம் பிணைக்க முடியும். முழுக்க முழுக்கத் தொடர்ச்சி மட்டும்தான் என்றில்லாது அத்துடன் மிக நெருங்கிய கருத்துள்ள கட்டுரையையோ , விவாதத்தையோ எளிதாய்ப் பிறர் படிக்கும்படி இவ்வாறு நாமாகவே நமக்குள் தடம் அமைத்துக்கொள்ள முடியும்.. எனவே இவற்றில் ஏதாவது ஒரு கட்டுரையைப் படிப்பவர் அது தொடர்புடைய மற்ற அனைத்துக் கட்டுரைகளையும் இத்தடம் வழியாய்க் கண்டறிந்து எளிதாய்ப் படிக்க இயலும். haloscan போன்ற தளங்கள் இந்த ட்ராக்பேக் வசதியை இலவசமாகவும் தருகின்றன.

7. இதுதவிர தங்கள் வலைப்பூவில் வெளியான முக்கிய அல்லது பிடித்த சில தலைப்புக்களையாவது தனியாக வரிசைப்படுத்தி வைக்கலாம். புதிதாய் வருபவர்கள் பழைய தொகுப்பில் நுழைந்து சிரமப்படுத் தேடாமல் படிக்க இது உதவியாய் இருக்கும்.

8. தன் வலைப்பூவை மட்டும் தேடும்படியாக கூகிள் போன்ற தேடுபொறிகளின் மூலம் இவ்வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

9.நமது வலைப்பூக்களுக்கு வருபவர்கள் எத்தனை பேர் , எதன் வழியாய் வலைப்பூவுக்கு வருகிறார்கள் ..? கூகிளில் எதையோ தேடி அதன் வழியாகவா , யாகூ வழியாகவா அல்லது பிற வலைப்பூக்களின் அவர்கள் கொடுத்திருக்கும் இணைப்பின் வழியாகவா போன்ற தகவல்களை அறிய ஒரு வசதியை ஏற்படுத்திக்கொள்ள இயலும். blogger.com இது போன்ற வசதியை இலவசமாய்த் தருகிறது. (வலைப்பூவை வைத்திருப்பவர் மட்டும்தான் இந்தத் தகவலைப் பார்க்க இயலும்.) எத்தனை நண்பர்கள் blogger.com அளிக்கும் இந்த வசதியைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இது தவிர http://extreme-dm.com/ போன்ற சில தளங்களும் இதுபோன்ற வசதியைத் தருகின்றன.

Friday, March 05, 2004

டச்சுக்காரர்கள் ... சில ஞாபகங்கள் ..

 
சில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து போயிருந்தபோது பார்த்தவை கீழே உள்ளவை .. நெதர்லாந்தின் முக்கியச் சுற்றுலாத்தலமான ஆம்ஸ்டர்டாம் நகரில் பழைய கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல்களைப் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள் .. மேலும் அக்காலத்தில் டச்சுப் போர்வீரர்கள் பயன்படுத்திய கவசங்கள், ஆயுதங்கள் ஆகியற்றையும் காட்சிப் பொருளாய் வைத்திருக்கிறார்கள் ...


கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல்


கவசங்கள் , ஆயுதங்கள்

Thursday, March 04, 2004

ஜீன் மாற்றம் - விளையாட்டுக்காக .. ?

 

சமீபத்தில் படித்த செய்தி இது . ஜீன் தெரபி மூலம் தசைகளை வலுவாக்க முடியும் என்று கண்டறிந்திருக்கிறார்கள் .. எலிகளை வைத்து இச்சோதனை செய்து பார்த்ததில் தசைகளை உடற்பயிற்சி செய்யாமலே வலுவாக்க முடியும் என்பது தெரிய வந்திருக்கிறது .. அவர்கள் செய்தது இதுதான் மாற்றம் செய்யப்பட்ட வைரஸ் ஒன்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட ஜீனை எலியின் உடலில் செலுத்திப் பார்த்திருக்கிறார்கள் .. அப்போதுதான் இது தெரிய வந்திருக்கிறது .. ஆனால் இது மனிதனை அடைய இன்னும் சில காலம் ஆகலாம் ..

இதனைü பற்றி ஆராய்ந்துவரும் விஞ்ஞானியிடம் தசை தொடர்பாய் நோய் உள்ளவர்களைத் தவிர விளையாட்டுவீரர்கள், பயிற்சியாளர்கள் எனப் பலரும் இதுபற்றி தீவிரமாய் விசாரிக்கிறார்களாம்.. இது விளையாட்டில் ஊக்க மருந்து பயன்படுத்துதல் போன்ற முறைகேடான செய்ல்பாடுகளைத் தடுக்கும் குழுவினரை விழிப்படையச் செய்திருக்கிறது ... ஏற்கனவே " ஜீன் தெரபி " போன்றவற்றை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தாலும் , ஊக்க மருந்து எடுத்துக்கொண்டவர்களை அவர்களின் இரத்தம் , சிறுநீர் ஆகியற்றைச் சோதனை செய்து கண்டுபிடிப்பதுபோல, ஜீன் தெரபி செய்துகொண்டவர்களை அவ்வளவு எளிதாய்க் கண்டுபிடிப்பது முடியாத காரியம்.. ஏனென்றால் ஜீன் தெரபி செய்துகொண்டவர்களின் இரத்தம் , சிறுநீர் போன்றவற்றில் சாதாரண சோதனைகளில் கண்டுபிடிக்கக்கூடிய தடயம் எதுவும் இராது ..

மேலும் இதில் இன்னொரு ஆபத்தான விஷயமும் உள்ளது .. இதுபோல் முழுமையாகச் சோதனை செய்யப்படாதவற்றை பயன்படுத்துவது நல்லதல்ல .. தசைகளை உறுதியாக்கும் ஜீன் தெரபி அதே சமயத்தில் எலும்புகளை பலவீனப்படுத்தும் சாத்தியமும் உள்ளது என விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள் ... ம்ம் .. உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. என்னதான் நடக்கப் போகிறதென்று பார்க்கலாம்.

Wednesday, March 03, 2004

பேரைச் சொல்லவா.. ? அது நியாயம் ஆகுமா.. ?

 

குடும்பப் பெயர்க் குழப்பம் போலவே இந்தியக் கண்டத்தில் இருந்து வரும் மக்களுக்கு , அதுவும் குறிப்பாய் இளையவர்களுக்கு வரும் குழப்பம் மற்றவரை எப்படிக் கூப்பிடுவது என்பது. நம்ம ஊரில் 1 வருஷம் மூத்தவரைக்கூட அண்ணன் அல்லது சார் என்று அழைப்பதுதானே வழக்கம் .. இங்கே வந்தவுடன் திடீரென 60 வயது முதியவரைப் பெயரைச் சொல்லிக் கூப்பிடக் கொஞ்சம் சங்கோஜமாக இருக்கிறது. "..சார் " என்பது இந்தியக் கண்டத்தைவிட்டு வெளியே வந்தால் ரொம்பப் பெரிய வார்த்தையாகிவிடுகிறது. காந்தி கூட சத்திய சோதனையில் இது பற்றி எழுதியிருக்கிறார் . ஜெர்மனியில் பொதுவாய் வயதில் கொஞ்சம் முதியவரை மரியாதையாய் அழைக்கவிரும்பினால் அவரின் குடும்பப் பெயரைச் சொல்லி அழைப்பது வழக்கம். மற்ற நாடுகளிலும் இதுபோல்தான்(?) என்று நினைக்கிறேன்.. வயதில் கொஞ்சம் பெரியவராயிருந்தாலும் பழகியபின் குடுப்பப் பெயரைச் சொல்லாமல் தன் பெயரைச் சொல்லி அழைப்பதையே பலர் இங்கு விரும்புகிறார்கள்..

ஆங்கிலத்தில் "நீ" , "நீங்கள் " என்பதற்கு தனித்தனியான வார்த்தைகள் இல்லையாதலால் இப்பிரச்சனை ஆங்கிலத்தைப் பயன்படுத்தும்போது கொஞ்சம் குறைவு. ஜெர்மனில் தமிழ்போலவே நீ , நீங்கள் என்பதற்குத் தனியான வார்த்தைகள் உண்டு. "நீ" என்பதற்கிணையாக "du" எனவும் , "நீங்கள்" என்பதற்கிணையாக " Sie" என்றும் கூறுகிறார்கள் .. பொதுவாய் நிறைய இடங்களில் "Sie" ஐ யாரும் பயன்படுத்துவதே இல்லை .. 5 வயதுப் பையன் 30 வயது ஆளைக்கூப்பிடக் கூட "Du" என்பதைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறான் ..

இங்கு இன்னொன்றைச் சொல்லியே ஆகவேண்டும் .. நம்ம ஊரில் வாத்தியாருக்கு என நிறைய மதிப்பு உண்டு.. மற்ற நாடுகளில் இந்த அளவுக்கு இல்லையென்றே தோன்றுகிறது .. இங்கெல்லாம் சாதாரணமாக ஆசிரியரை .. நீ , வா , போ .. என்று ஒருமையில்தான் அழைக்கிறார்கள் .. ஒரு ஜெர்மன் நண்பரிடம் இந்தியாவில் ஆசிரியர்களை பெயர் சொல்லி அழைத்ததில்லை என்று நான் சொன்னவுடன் ஆச்சரியப்பட்டு, "...நீ பெயரைச் அவர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடக்கூடாது என்றால் அவர்களுக்கு அந்தப் பெயர் வைத்திருப்பதன் நோக்கம்தான் என்ன..? " என்று கேட்டார்.

நான் இங்கு வந்தவுடன் எனது பேராசிரியரை ஒரு முறை "சார்..." என்று கூப்பிட்டவுடன் ஒரு கணம் திகைத்துத் "திரு..திரு " வென முழித்துவிட்டு சுற்று முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துவிட்டு அவரைத்தான் நான் ".. சார்.. " என்று கூப்பிட்டிருக்கிறேன் என்று உறுதிசெய்துகொண்டார் ... :))

Monday, March 01, 2004

குடும்பப்பெயர் - குழப்பங்கள் ..

 

தமிழர்களுக்குக் குடும்பப் பெயரால் வரும் குழப்பங்கள் பற்றி காசி எழுதியிருந்தார் .. அநேகமாய் வெளிநாட்டில் இருக்கும் அத்தனை தமிழர்களுக்கும் இப்பிரச்சினை வந்திருக்கும்.. இவ்வளவு ஏன் .. இந்தியாவில் அடுத்த மாநிலத்துக்குப் போனாலே இப்பிரச்சனை ஆரம்பித்துவிடுகிறது .. இதோ உதாரணத்துக்கு நான் கேள்விப்பட்ட சம்பவம்.. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் வட மாநிலத்தில் ஒரு வேலைக்காக நேர்முகத் தேர்வுக்குப் போயிருக்கிறார் .. நேர்முகத் தேர்வு நடத்துபவர்கள் சர் நேம் என்ன.. ? என்று கேட்டிருக்கிறார்கள்.. தமிழ் நாட்டில் அப்படி எதுவும் இல்லை அவர்களிடம் விளக்கம் கொடுத்து நேரத்தை ஏன் வீணாக்க வேண்டுமென்று அவர் ஊரின் பெயரைச் சொல்லி இதுதான் என்னோட சர் நேம் என்று சொல்லியிருக்கிறார் .. கொஞ்ச நேரம் கழித்து ஒவ்வொருவராகப் பேர் சொல்லி நேர்முகத் தேர்வுக்குக்காக கூப்பிட்டிருக்கிறார்கள்.. ஒரு தடவை பியூன் வந்து "...கொஞ்சி ராம் .." என்று சொல்லிக் கூப்பிட்டிருக்கிறார் ... யாரும் போகவில்லை ... அதனால் அதற்கடுத்த ஆளை கூப்பிட்டிருக்கிறார்கள்.. கடைசிவரை நம் நண்பரைக் கூப்பிடவேயில்லை .. அவர் போய் விசாரித்தபோதுதான் தெரிந்திருக்கிறது .. காஞ்சிபுரத்தைக் "..கொஞ்சி ராம் .." ஆக்கியிருக்கிறார்கள்... :)

இதுபோல் நான் ஒரு(பல) தடவை ஒரு அம்மையாரை , அய்யாவாக்கியிருக்கிறேன்... இங்கே எனது பேராசிரியரின் காரியதரிசி பெயர் திருமதி . ஸ்டீகர் . ஜெர்மனில் " ஃப்ரோ ஸ்டீகர் " என்றால் திருமதி ஸ்டீகர் என்று அர்த்தம் . நான் தமிழ் நாட்டில் இருந்தபோது இந்த விஷயம் அவ்வளவாய்த் தெரியாது . பேரசிரியர் ஆங்கிலத்தில் எழுதும்போதும் ஃப்ரோ ஸ்டீகர் என்றுதான் எழுதுவார் .. இதில் பெயருக்கு முன்னால் முற்றுப்புள்ளி கூட வைக்கமாட்டார்கள் .. நான் "..ஃப்ரோ ஸ்டீகர்.." என்பது ஒரு ஆணின் பெயர் என்று நினைத்துவிட்டேன் .. நான் தமிழ்நாட்டில் இருந்தபோது ஸ்டீகருக்கு எழுதிய அத்தனை மின்னஞ்சலையும் இப்படித்தான் ஆரம்பித்திருத்தேன், ..... ".. டியர் மிஸ்டர். ஃப்ரோ ஸ்டீகர் .... " . ஜெர்மனிக்கு வந்து இறங்கியவுடன் பேராசிரியர் முதல் ஆளாய் அவரைத்தான் இப்படி அறிமுகப்படுத்தினார். " ..... ஷி இஸ் ஃப்ரோ ஸ்டீகர் ... " . என் நிலை எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் ... :))

Sunday, February 29, 2004

வலைப்பூக்களின் ஊடாக ஒரு சிற்றுலா ... !

 

தமிழில் வலைப்பூவில் இன்னும் நிறையப் பேர் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது பலரின் ஆதங்கம். ஆனால் இப்போது இருக்கும் நூற்றிச் சொச்சம் தமிழ் வலைப்பூவில் ஏற்கனவே எழுதிக்கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து எழுதினால்கூடப் பரவாயில்லை என்று தோன்றுகிறது .. தமிழ் வலைப்பூக்கள் பலவற்றில் ரொம்ப நாளாய் எதுவுமே எழுதக் காணோம் . ஆனால் பெரும்பாலான வலைப்பூக்கள் யுனிக்கோடு முறையில் இருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம் .. எது எப்படியோ தமிழில் இன்னும் நிறைய வலைப்பூக்கள் குறுகிய காலத்தில் வந்துவிடும் என்று பலர் நம்புகிறார்கள் .. அது விரைவில் நடக்குமென்றே மனதில் பட்சியும் சொல்கிறது :) . ஆயிரம் பூக்கள் விரைவில் மலரட்டும் !!

தினத்தந்தி எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தமிழில் வணிகச் செய்திகள் கொடுக்க ஆரம்பித்துள்ளதாய் அருணா சீனிவாசன் சொல்லியிருக்கிறார் .. பாலாஜி கடந்த சில நாட்களில் வெளியான பல செய்திகளை, விவாதங்களைக் கொடுத்திருக்கிறார் .. பெரிய புராணத்தில் பெண்கள் பற்றி சந்திரலேகா இம்மாதம் எழுதியிருக்கும் கட்டுரை நன்றாக இருக்கிறது... மருத்துவச் செய்திகளைத் தொகுத்துக் கொடுக்கும் சந்திரவதனா, பல வலைப்பூக்கள் வைத்திருப்பதலோ என்னவோ இங்கு அடிக்கடி எழுதுவதில்லை. கூகிள் தேடுபொறியில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டிச் சேரலாதன் எழுதியிருக்கும் கட்டுரை சுவாரசியமாக இருக்கிறது .. தங்களுடைய வலைப்பக்கம் , வலைப்பூ கூகிள் தேடலில் முதலாவதாய் வரவேண்டும் விரும்புபவர்கள் இதைப் படித்துத் தாங்களும் அதுபோல் செய்ய முயற்சிக்கலாமே ... ;)

ஓடையில் படித்த கடிதம் மனதைக் கவர்ந்தது .. இன்னும் இதுபோல் படைப்புக்கள் நிறைய வந்தால் நன்றாக இருக்கும் .. ஹரி இம்மாதம் புதிதாய்ப் புலம்ப ஆரம்பித்திருக்கிறார் .. : ) . இட்லி(?) ரதவடிவில் எழுதப்பட்ட ஆழ்வாரின் பாடலொன்றைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் .. யாராவது மரபுக்கவிதை எழுதிப்பயிற்சி செய்யவேண்டுமானால் இதைப் பயிற்சி செய்துபார்க்கலாம் என்றும் யோசனை சொல்லியிருக்கிறார் .. கிட்டத்தட்ட இரு வாரத்துக்குப்பின் கண்ணன் வைகைக்கரைக்காற்றே தொடரைத் தொடர்கிறார் .. கார்த்திகேயன் புதிதாய்த் தெர்மாமீட்டருடன் வந்திருக்கிறார் .. அவருக்கு வாழ்த்துக்கள் . குருவிகள் கொடுத்திருக்கும் விஞ்ஞானச் செய்திகள் சுவாரசியமாய் இருக்கின்றன.

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com