<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Friday, January 16, 2004

சிறுகதை பற்றி சுஜாதா

 

689 நல்ல கதைகள் படித்து அலசிய ஹெல்மட் பான்ஹைம் என்பவர் நல்ல சிறுகதை என்பதற்குப் பன்னிரண்டு அடையாளங்கள் சொல்கிறார். அவை வருமாறு:-

1. என்ன சொல்லப்பட்டது என்பது எப்படி சொல்லப்பட்டதைவிட முக்கியமாக இருக்கும்.

2. ஒரு சிறுகதையின் ஆரம்ப வாக்கியத்திற்கு முன் கதையின் தொண்ணூறு சதவிகிதம் நடந்து முடிந்திருக்கும். அதாவது சிறுகதை முடிவுக்கு மிக அருகில் ஆரம்பிக்கும் பெரிய கதை.

3. எல்லோருக்கும் எழுத வரும். ஆனால் எந்தக் காலகட்டத்திலும் சுமார் பத்துப் பேர்தான் நல்ல சிறுகதை எழுத்தாளர்கள்.

4. சிறுகதைக்கான விஷயம் இருப்பதைக் கண்டுபிடிக்கும் திறமை பிறவியில் ஏற்படுவது. அதை எந்தக் கல்லூரியிலும் புத்தகத்திலும் கற்க முடியாது.

5. எந்த நல்ல கதையிலும் எழுதியவரின் நினைவாற்றலின் நுட்பம் இருந்தே தீரும்.

6. உலகத்தில் எழுதப்பட்ட மொத்த கதைகளில் 85 விழுக்காடு பார்த்த, கேட்ட, உணர்ந்த, படித்த அனுபவத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. இது ஒரு புள்ளிவிவரம்.

7. எனவே, நல்ல சிறுகதை எழுத்தாளனுக்கு கண், காது, மூக்கு சரியாக இருக்கும்.

8. சிறுகதைக்கான விஷயம் தேர்ந்தெடுப்பதில் இரக்கமோ நாசூக்கோ மரியாதையோ இருக்காது. அதற்கு காப்பியடிப்பதைத் தவிர, மற்ற எந்தவிதமான பாவச்செயலும் செல்லுபடியாகும்.

9. நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் நிறையப் படித்திருக்கிறார்கள்.

10. உலகில் ஒவ்வொருவரிடமும் தவறாமல் ஒரு நல்ல சிறுகதை இருக்கிறது.

11. கதைக் கருத்து என்று புதுசாக ஏதும் இல்லை. எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன. புதிய இடங்களில் புதிய காலங்களில் புதிய வடிவமைப்புகளில் பழைய கதைகளைத்தான் சொல்கிறோம்.

12. கதைக்காக ஒரு 'இன்ஸ்பிரேஷன்' - ஒரு கற்பனைக் கன்னி வந்து பால் புகட்ட வேண்டும் என்று ஒரு கதாசிரியர் காத்திருந்தால், பட்டினியால் செத்துப் போவார். எல்லாக் கதைகளும் கொஞ்சம் அவசரமும், கொஞ்சம் உணர்ச்சி ஊற்றும் கலந்து எழுதப்பட்டவை.


எனக்குப் பிடித்தமான சில பொன்மொழிகள் இவை:

பெரும்பாலான கதைகள் ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன.

வாழ்க்கையின் அபத்தத்தை சுட்டிக்காட்டி ஒரு கேள்விக்குறியில் முடிகின்றன.

·ப்ராங்க் ஓ கானர், 'சிறுகதை சமூகத்தின் விளிம்பில் இருக்கும் மனிதர்களின் தனிமையைப் பற்றியது' என்றார்.

சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தை பேசுகிறது.

அன்றாட அலுப்பு வாழ்க்கையில் உயிரின் புதிர் சட்டென்று புரியும் கணம் ஒன்றை அது சொல்லும். அந்தக் கணத்தை ரெவலேஷன் அல்லது வெளிப்பாடு அல்லது epiphany என்கிறார்கள். அவதாரம், அற்புதத் தோற்றம் என்று பலதும் சொல்கிறார்கள். இது zen தத்துவத்திலும் உண்டு. Satori என்பார்கள்.

''எப்போது கதை எழுதினாலும் சந்திரனை எட்டிப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். அப்போதுதான் தெரு விளக்காவது; அல்பம் ஒரு மெழுகுவர்த்தியாவது கிடைக்கிறது.''

ராபர்ட் பென் வாரன் சொன்னது:

'The Image that fiction presents is purged of the distractions confessions and accidents of ordinary life.'

''தின வாழ்வின் அலுப்பான விவரங்களை விலக்கிவிட்டு அதன் காலம் கடந்த சமாசாரங்களைக் கண்டுபிடிப்பதுதான் இதன் சூட்சுமம்.''


ஓரிரு எண்ணங்கள் என்கிற புத்தகத்தில் இந்தக் கட்டுரை உள்ளது. இதுவரை எழுதிய கதைகளில் இதையெல்லாம் மனதில் கொண்டதே இல்லை. இந்த முடிவுகளைக் (இவை விதிகள் அல்ல) காணும்போது இவையில்லாமல் சிறுகதை எழுதக்கூடாதா என்கிற கேள்வி எழுகிறது.

Thursday, January 15, 2004

வலைப்பூ நண்பர்களுக்கு,

 
தொடர்ந்து நான்கு நாள்களாக நான் உங்களைப் படுத்தி வரும்விஷயம் யாவரும் அறிந்ததே.
வலைப்பூக்களைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டிய நோக்கோடு தொடர்ங்கப்பட்ட இந்தப் பதிவு, அளவுக்கு அதிகமான விஷயத்தைச் சொல்லி அஜீரணம் ஏற்படுத்தி வருவதாயும் நண்பர் காசி அவரது வலைப்பதிவில் சொல்லியிருக்கிறார். அதை மறுமொழி பகுதியில் நண்பர் பாலாஜியும் வழிமொழிந்திருக்கிறார்.
நானும் வழிமொழிகிறேன்.

எல்லோரும் வலைப்பூக்களைத் தேடித் தேடிப் படிக்க முடியாத காரணத்தால் அந்த வார ஆசிரியர் தான் இரசித்த வலைப்பூவைப் பற்றிப் பேச, அதை வலைப்பூ வாசகர்கள் படிப்பார்கள் என்ற காரணத்தோடுதான் இது ஏற்படுத்தப்பட்டது என்பது நானறிந்ததே.
வலைப்பூக்களைப் பற்றி எழுத அதை தினமும் தொடர்ந்து படித்திருக்கவேண்டும். எழுத வேண்டும் என்பதற்காக மேம்போக்காக ஒரு நாள் மட்டும் பார்த்துவிட்டு என்னால் எழுத முடியாது. இதுவரையில் படிக்காத வலைப்பூக்களைப் பற்றி எழுதவேண்டுமானால் அந்த வலைப்பூவுக்குச் சென்று, சேமிப்புக்கிடங்கில் இருக்கும் எல்லா உள்ளிடுகையையும் படித்துவிட்டுத்தான் கருத்துச் சொல்ல முடியும்.

நான் எழுதத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே மதி என்னிடம் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப சொன்ன விஷயம், வலைப்பூக்கள் பற்றி எழுதுங்க என்பதுதான். இது முழுக்க முழுக்க என் தவறுதான். வருந்துகிறேன். இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் சில வலைப்பூக்களை முழுவதுமாகப் படித்து எழுதலாம் என நினைத்திருக்கிறேன். நேரமிருந்தால் செய்வேன்.
என்னுடைய கவிதையை தினமும் பகிர்ந்துகொண்டது கூட ஒரு அறிமுகத்துக்காகவும் சிலருடைய வற்புறுத்தலின் பேரிலும்தான். இன்னும் சொல்லப்போனால் இனி எழுதும் கதை/கவிதைகளை அதிகம் குழுமங்களில் கூட பயன்படுத்தக்கூடாது என்ற கருத்தைக் கொண்டிருந்தேன். புத்தகங்களிலோ வலைத்தளங்களிலோ உள்ளிட்டு அதனுடைய சுட்டியை மட்டும் குழுமங்களில் இட உத்தேசித்திருந்தேன். அதையும் மீறி வலைப்பூவில் தினம் ஒரு கவிதையாக உள்ளிட்டேன். அது தவறுதானோ என்று இப்போது தோன்றுகிறது. இனி ஜீரணம் நேராமல் பார்த்துக்கொள்கிறேன்.

இனி வரும் இரண்டு நாள்களில் வலைப்பூவைப் பற்றிய அறிமுகத்தை என்னால் இயன்றதைச் செய்வேன். நேற்றே எழுதி மதிக்கு அனுப்பி வைத்த வலைப்பூவைப் பற்றிய முதல் உள்ளிடுகை இன்று வரும் என நினைக்கிறேன்.நேரத்தில் சொன்ன எதிர்வினைகளுக்கு நண்பர்களுக்கு நன்றி பல.


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

 


வலைப்பதிவுகள்

 
பத்ரியின் வலைப்பதிவு.

என்னுடன் அரட்டையில் பேசுபவர்கள் சிலர் பத்ரியின் வலைப்பதிவைத் தொடர்ந்து படிப்பதாகவும் அதனால் தினசரிகளை வாசிப்பதில்லை என்றும் சொன்னார்கள். அந்தக் கருத்துக்கு ஏற்புடையதாகத்தான் இருக்கிறது பத்ரியின் வலைப்பதிவு. துக்ளக்கில் வெளியாகும் சில நல்ல கட்டுரைகளில் இருந்து முக்கியமான துளிகளைச் சொல்கிறார். கூடவே சோவிடம் சில சமயம் கருத்துப் பேதத்தையும் பதிவு செய்கிறார். பா. சிதம்பரம், குருமூர்த்தியின் கட்டுரைகளின் சாராம்சங்களையும் வலையேற்றியிருக்கிறார்.

இலக்கிய எழுத்தாளர்கள் மாநாட்டை அவர் தொகுத்தளிக்கும் விதம் பெரும் பாராட்டுதற்குரியது. நிறைய எழுத்தாளர்களின் திருமுகங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது பத்ரியால்தாம். அங்கங்கே சில கருத்துகளைச் சொல்லவும் மறக்கவில்லை.

அரசியல் பற்றி அடிக்கடி எழுதுகிறார். சில கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருந்தது. நிறையக் கருத்துகள் ஏற்றுக்கொள்ளும் படி இருந்தது. கொள்கையற்ற கூட்டணி என்று வாஜ்பாய் சொன்னதைச் சொல்லியிருந்தார். கூட்டணியே கொள்கைக்கு முரணானது என்று அரசியவாதிகளுக்குத் தனியே சொல்லவேண்டியதில்லை. அவர்களுடைய தேவை வாக்கும் அதற்குப்பின்னான நாற்காலியும்.

வெங்கடேஷின் புத்தக வெளியீட்டின்போது பத்ரி வாங்கிக்கொண்ட கணிப்படம் இல்லை. ஏனோ?

கிரிக்கெட் பற்றியும் பத்ரி நிறைய எழுதவேண்டும் என்று நான் வேண்டுகோள் வைத்தால் "அதென்ன இலக்கியமா" என்ற ரீதியில் தாக்குதல் வரலாம் என்பதால் அதை அவரிடம் தனியே சொல்லிக்கொள்கிறேன்.

பத்ரியின் வலைப்பதிவை தினமும் வாசிக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும்
நேரம்கிடைக்கும்போது எல்லாவற்றையும் வாசித்துவிடுகிறேன்.


மதியின் வலைப்பதிவு

உங்க இலக்கியமே வேண்டாப்பா என்று அலுத்துக்கொள்ளும் ஒரு நாளில் பயன்படுத்த சிறந்தது மதியின் இந்த வலைப்பதிவு. வேம்படி மகளிர் கல்லூரி விடுதியில் கமல்-ஆ ரஜினியா விவாதத்தில் இறுதியில் கமல் வெல்வார் என்று மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார். கலெக்ஷனில் தோற்பவர் கல்லூரியிலாவது வெல்லட்டும். எந்த மகளிர் கல்லூரியிலாவது ராஜ்கிரண் பிடிக்குமா வடிவேலு பிடிக்குமா எனப்போட்டி வைத்து, முடிவு அறிவித்திருக்கிறார்களா என அறிய ஆவல். ஆனாலும் படிக்க ஜாலியாத்தானிருக்கு.

திரைப்பார்வைக்கென ஒரு தனி வலைப்பதிவு. என்னென்ன படங்களெல்லாமோ பார்த்திருக்கிறார்; எல்லாவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார் என்பதல்ல சிறப்பு. அதைப் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை நினைத்தபோதுதான் பெரிய மலைப்பு ஏற்பட்டது. புரிந்துகொள்ள இயலாத படத்தின் ஓட்டத்தை அடுத்தடுத்த காட்சிகளில் புரிந்துகொள்ளும் என்னை மாதிரி ஆள்களுக்கு இந்தத் திரைவிமர்சனங்கள் நாளை உதவலாம். நல்ல முயற்சி. என்னென்ன படங்கள் பற்றிய விமர்சனம் இருக்கிறதென்பதை வலைப்பூவின் முகப்பில் உள்ளிட்டால் தேவையானதை உடனே வாசிக்க முடியும்.

கொஞ்ச நேரமாவது நீதியின் பாதையில் போபோம்.

ஏனென்றால் பிரபு ராஜதுரை நீதியின் பாதையில்தானிருக்கிறார். இவரது கட்டுரைகளுக்கு நான்
விசிறி. (இதைத் தொடர்ந்து பெயரிலியின் வலைப்பூவில் விசிறிகளைப் பற்றிய வாறல் செய்யப்படலாம். ) சொல்ல வருகிற விஷயத்தைத் தெளிவாக சொல்வதில் பிரபு கெட்டிக்காரர். இவரது பெரிய பலம் இவரது நடை. ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதும்போது அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்திலும் எழுதுவது நல்லது என்கிற கருத்து எனக்கு இன்னும் இருக்கிறது. தமிழ் ஊடகத்தில் படித்ததால் பாஸ்பரஸை பாஸ்பரஸ் பாஸ்பரஸ் எனச் சொல்லி சொல்லி, அதன் ஸ்பெல்லிங் phosphorous எனத் தெரிந்து ·பாஸ்·பரஸ் என மாற்றிக்கொள்வதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. அடைப்புக்குறிக்குள் ஆங்கிலவார்த்தையையும் அப்படியே கொடுத்தால் இனிமேல் புதிதாகத் தெரிந்து கொள்ளும் வார்த்தைகளை தவறின்றித் தெரிந்துகொள்ள உதவும். இன்னும் நிறையக் கட்டுரைகள் பிரபு நன்றாக எழுதுவார் என எதிர்பார்க்கிறேன். பிரபு இதே திசையில் தொடர்ந்து வெற்றிகரமாகச் செல்வாரானால், அவர் புகழ்பெற்ற, நீதிசம்பந்தப்பட்ட கட்டுரைகள் எழுதும் எழுத்தாளராவார். அப்படியரு எண்ணம் அவர் மனதில் இல்லையென்றாலும் அதை வளர்த்துக்கொள்ளுதல் நல்லது.

"நீதியின் பாதையில்" விட்டு விலகி நினைவுத்தடங்களைப் பார்ப்போம்.

நினைவுத்தடங்களில் வே. சபாநாயகம் அவர்கள் தனது நினைவுத்தடங்களைப் பதித்துச் செல்கிறார். கணையாழி களஞ்சியத்தின் முதல் தொகுதியைத் தொகுத்தவர் இவர். அனுபவங்கள் இரசிக்கத்தக்க வகையில் இருக்கின்றன. முதல் கதை வந்த அன்று அதைத் தலைக்கு வைத்து தூங்கினாராம். பெரியாரின் ராம-சாமி பற்றிய விளக்கத்தைக் கேட்டு சந்தோஷப்பட்டவர், இன்னொரு ஊரிலும் அதையே பெரியார் சொல்ல, சலிப்பு வந்ததாகச் சொல்லியிருக்கிறார். நான் எட்டாம் வகுப்பில் சேர்ந்த முதல் ஒன்றிரண்டு மாதங்களில் ஒன்பதாம் வகுப்புக்கு பாஸ் ஆகிப்போன மாணவர்கள் கேட்பார்கள்: " என்ன சொல்றாரு செல்லையா? நம்பிக்கை வை, நம்பிக் கைவைன்னு சொல்லியிருப்பாரே..? அவர் போட்ட ட்ராமா ரேடியோவில வந்ததுன்னு சொல்லியிருப்பாரே..? பத்துவருஷமா இதைத்தான் சொல்றாராம்" என்பார்கள். அதுதான் நினைவுக்கு வந்தது. ஜெயகாந்தன் ஆனந்தபோதினியில் தொடங்கினார் என்று இருக்கிறது. இதை ஆரம்ப காலங்கில் எழுதினார் என எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால் ஜெயகாந்தன் முதல்கதையை சௌபாக்கியம் இதழில் எழுதியதாகச் சொல்கிறார்கள். திரு.சபாநாயகம் எந்த அர்த்தத்தில் ஆனந்தபோதினி எனச் சொன்னார் எனத் தெரியவில்லை.

தமிழ் ஹைகூ, யெம்கேகுமாரின் வலைப்பதிவு, வெங்கட்டின் வலைப்பதிவு போன்ற சில (இல்லை.. பல) கட்டம்கட்டி விட்டன. அதனால் பின்னொரு சமயம்தான் பேசமுடியும்.

ஒருவரையாவது வாயாரப் புகழ்ந்துவிட்டுப் போகவேண்டும். கேவியாரின் வலைப்பதிவு. முக்கியமான ஒரே ஒரு உள்ளிடுகை மட்டும். மற்ற உள்ளிடுகைகள் ஒன்றையும் காணோம். சப்-டெக்ஸ்ட்டின் சாராம்சத்தை "எழுதப்பட்ட வரிகளை விட எழுதப்படாத வரிகள் சொல்வதுதாம் இலக்கியம்" என மிக அதிகமாகப் புரிந்துகொண்டுவிட்டார் என நினைக்கிறேன். ஆனாலும் என் நேரமின்மைக்கு மத்தியில் கேவியாரின் வலைப்பதிவு ஒரு வரப்பிரசாதம்.Wednesday, January 14, 2004

இன்றைய என் கவிதை

 


பரிகசிப்பு
---ஹரன்பிரசன்னா


கேட்டுக்கேட்டு
பார்த்துப் பார்த்து
பழகிப் பழகி
ஒவ்வொன்றாகப் பதித்துக்கொண்டு
சுயம்பு உருவாகிறது
மனதுள், பிம்பமாய்.
சில நிகழ்ந்த கணங்களில்
அணிச்சையாக
தானே வரைந்துகொள்கிறது
ஓர் அருவ ஓவியம், உள்ளுக்குள்.

எதிர்பாராமல் இடறி
கையுதறும் நேரம்
பதறாமல், எதிராளி
சிரித்த நொடியில்,
பொருந்தாத ஓவியப் பிம்பத்தை
கேள்விகளில்லாமல் நெட்டித்தள்ளி
பெரிய பரிகசிப்போடு
உள்வந்தமரும்
இன்னொரு ஓவியம்
தன்னை நிஜமென அறிவித்து.

திரை-சுந்தரராமசாமி

 

(பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பல்வேறு பேட்டிகளிலிருந்து சில கேள்விகள்-பதில்கள்)

கேள்வி: திரைப்படங்கள் பார்ப்பது உண்டா? தமிழ்த்திரைப்படங்களைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம்?

சு.ரா.: உண்டு. சிறு வயதிலிருந்தே திரைப்படங்கள் பார்க்கிறேன். தமிழ்ச்சினிமா பற்றி எனக்கு உயர்வான எண்ணமில்லை. விதிவிலக்காகச் சில முயற்சிகள் நடந்துவருவது உண்மைதான். ஆனால் நாம் ரொம்பவும் பின் தங்கிவிட்டோம்.

கேள்வி: இந்தியப்படங்கள் பற்றி?

சத்யஜித்ரே எனக்கு ரொம்ப முக்கியமான டைரக்டர். அவருடைய படங்கள் அநேகமாக எல்லாம் பார்த்திருக்கிறேன். அவர்மீது விமர்சனமும் மதிப்பும் உண்டு.

கேள்வி: இன்றைய சினிமாக் கலாச்சாரத்தின் தாக்கம் பற்றியும் அதற்கு என்ன மாற்று என்றும் தெரிவியுங்கள்.

சு.ரா.: இன்றையத் தமிழ்சினிமா மோசமாக மக்களைப் பாதித்துக்கொண்டிருக்கிறது. பார்வைக்கலை என்பதால் சீரழிந்த பத்திரிகை எழுத்துகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பாமரர்களையும் ஊடுருவிச் சீரழிக்கிறது தமிழ் சினிமா. நம் அனுபவ உலகத்துக்கு அப்பாலும் நம்மை அழைத்துச் சென்று வாழ்வின் விரிவையும் வீச்சையும் நமக்கு உணர்த்தும் சக்தியே கலை ஆகும். தமிழ் சினிமாவே வாழ்க்கையைச் சித்தரிப்பது போன்ற பாவனையில் பார்வையாளரின் ரகசியக் கனவுகளுக்கும் பகல் கனவுகளுக்கும் காம உணர்வுகளுக்கும் தீனிபோடும் போதைப் பொருளாகத் திகழ்கிறது.

தமிழ்ச்சினிமாத்துறையில் பணம் முதலீடு செய்பவர்களிலிருந்து அதன் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் வரை எவரும் கலை உணர்வோ மேம்பட்ட சிந்தனையோ சமூக அக்கறையோ மக்களீல் நல்வாழ்வு பற்றிக் கவலையோ கொண்டவர்கள் அல்லர். "முதலீடு செய்பவர்களுக்கு அதிக இலாபம் ஈட்டித் தருவது எப்படி?" என்ற ஒரே சிந்தனைதான் இன்றையத் தமிழ் சினிமாவின் சகல குணங்களையும் தீர்மானிக்கிறது. மற்றொரு விதத்தில் சொன்னால் பார்வையாளர்களை ஏமாற்றுவதில் பெறும் வெற்றிதான் இந்தத் துறையைச் சார்ந்தவர்களின் செல்வாக்கை உருவாக்குகிறது.

வணிக சினிமாவின் தரங்கெட்டத்தனம் இந்திய மொழிப்படங்கள் அனைத்துக்கும் பொதுவான குணம் ஆகும். இருபினும் சீரழிந்த வணிக சினிமாவை சிறந்த சினிமாவாகவும் அதன் தயாரிப்பாளர்களைக் கலைஞர்களாகவும் அரசாங்கமும் கல்வி நிலையங்களும் பத்திரிகைகளும் தூக்கி வைத்துக்கொண்டாடும் அவலம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரித்தான தனி வியாதி ஆகும். இந்தியாவின் பிறமொழிகளில் வணிக சினிமாத் தயாரிப்பாளர்கள் அல்ல; சிறந்த சினிமாவை உருவாக்கியுள்ள அடூர் கோபாலகிருஷ்ணனும் அரவிந்தனும் மிருணாள் சென்னும் ஷியாம் பனகலும் சத்யஜித் ரேவும் பி.வி.கர்ந்துமே அரசாங்கத்தாலும் பத்திரிகைகளாலும் கல்வி நிலையங்களாலும் போற்றப்படுகிறார்கள்.

தமிழில் சினிமா என்பது சீரழிந்த, கலை உணர்வு அற்ற, வணிக நோக்கங்கள் மட்டுமே கொண்டவர்கள் சுருக்கு வழியில் பணம் கொள்ளையடிப்பதற்கு கண்டுபித்த ஒரு உபாயமாகும். தமிழில்தான் சீரழிந்த சினிமாவும் சீரழிந்த அரசியலும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. நேற்றையச் சண்டை நடிகர், இன்றைய கோடிக்கணக்கான மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியல்தலைவர் ஆகியிருப்பது போலவே, பாலுணர்வைத்தூண்டும் இன்றைய இரட்டை அர்த்த வசனகர்த்தாவோ மேல்நாட்டுப் படங்களிலிருந்து திருடும் இன்றைய இயக்குநரோ நாளைய கல்வி அமைச்சராக வரும் சாத்தியக்கூறும் இருக்கிறது.

சினிமா இரசனையில் ஒரு மாற்றம் நிகழ, தமிழகத்தின் முக்கியமான எல்லா ஊர்களிலும் சிறந்த சினிமாவை மக்களுக்குக் காட்டும் சினிமாச் சங்கங்கள் தோன்ற வேண்டும். கல்வித்துறை, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் சிறந்த உலகத்திரைப்படங்களையும் சிறந்த இந்தியப்படங்களையும் தொடர்ந்து பார்ப்பதற்கான வசதியை உருவாக்கவேண்டும். மேலான சினிமாவிலிருந்து பெறும் பேரனுபவந்தான் கீழான சினிமாவை வெறுத்து ஒதுக்கவைக்கும் மிக சக்திவாய்ந்த வழியாக இருக்கும்.

கேள்வி: ஏற்கனவே வெளிவந்த கதையைப் படமாக எடுப்பது நல்லதா?

சு.ரா.: இது இயக்குநரின் தேர்வைப் பொறுத்தது. பிரபலப் புத்தகங்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி கண்டிருக்கின்றன; தோல்வியும் கண்டிருக்கின்றன. இரண்டாம் பட்சமான நூல்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. சில இயக்குநர்களுக்கு தங்கள் பார்வை அவர்களுக்கே தெளிவில்லாமல் இருக்கும். இவர்கள் ஏற்கனவே வெளிவந்த ஒரு நூலைச்சார்ந்து அதனைத் தங்கள் பார்வைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு திரைப்படமாக அமைக்கிறார்கள். இவைதாம் பெரும் வெற்றி அடைகின்றன. மிகச்சிறந்த ஆசிரியரின் நூல்கள் இயக்குநரின் பார்வைக்கு இடம்தருவதில்லை. மேலும் அந்நூல்கள் மிகுந்த வாசகர்கள் மத்தியில் பரவியிருக்கும் நிலையில் வாசகர்கள் பார்வையாளர்களாக வரும்போது தாங்கள் படித்த நூலின் அத்தனைப் பக்கங்களையும் திரைப்படத்தில் காட்சி ரூபமாக எதிர்பார்க்கிறார்கள். இயக்குநரால் அவர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படுவதில்லை. பிரபலப் புத்தகங்களைச் சார்ந்த திரைப்படங்கள் தோல்வி அடைய இதுவும் முக்கியமான காரணம்.


இப்படி, பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு பத்திரிகைகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் சுந்தரராமசாமி.

* நாவலைப் படமாக மாற்றும்போது சில மிக மோசமாகத் தோற்றிருக்கின்றன. (பொய்முகங்கள், ப்ரியா, இது எப்படி இருக்கு போன்ற திரைப்படங்கள் சுஜாதாவின் நாவலை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள். பொய்முகங்கள் பரவாயில்லை ரகம். மற்ற இரண்டும் மிக மிக மோசம்) சில படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. (முள்ளும் மலரும், கள்வனின் காதலி, மோக முள், சொல்ல மறந்த கதை போன்றவை). இயக்குநரின் திறமையில்தான் வெற்றியோ தோல்வியோ ஒளிந்திருக்கிறது.

* வணிகப் படங்களைப் பார்ப்பதோடு நிறுத்திவிடாமல் சில கலைப்படங்களை "ரொம்ப ஸ்லோ" என்ற கமெண்ட்டை ஒத்தி வைத்துவிட்டுப் பார்க்கப் பழகிக்கொள்ள தமிழ் இரசிகன் முன்வரவேண்டும். கி.ராஜநாராயணின் "கிடாய்" நாவல் அம்ஷன்குமார் இயக்கத்தில் ஒருத்தி என்ற திரைப்படமாக வந்திருக்கிறது. அதை அவசியம் பார்க்கவும்.கொஞ்சம் சுயபுராணம்

 

திடீரென்று உங்கள் வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு பத்து நல்ல புத்தகங்கள் கொட்டினால் எப்படி இருக்கும் உங்கள் மனநிலை. அப்படித்தானிருந்தது. சில புத்தங்கள் அடங்கிய ஒரு பொதி, அனுப்புநர்: லண்டன் பத்மநாப ஐயர் என்ற பெயர் தாங்கி எனக்கு வந்தபோது. அதுவரை ஐயர் பெயரை க்ளப்பில் இராமு புண்ணியத்தில் கேட்டிருக்கிறேன் என்பதைத் தவிர ஐயருக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இருந்திருக்கவில்லை.

ஓர் அரட்டையில் என்னிடம் "ஒரு புத்தகம் இருக்கிறது. எழுத்துப்பிழைகள் சரிபார்க்க வேண்டும். முடியுமா?" எனக் கேட்டார் மதி. எனக்குள்ள நேரமின்மையையும் ஒரு நாவல் அல்லது சிறுகதைத் தொகுதிகள் அடங்கிய புத்தகத்தைத் தொடங்கினால் அதை முடிக்காது அடுத்த புத்தகத்தைத் தொடுவதில்லை என்றபோது, அந்தப் புத்தகம் (இலங்கை) "தமிழில் இலக்கிய வரலாறு" பற்றியது" என்று சொன்னார். மதிக்காக இல்லாமல், புத்தகத்திற்காக ஒப்புக்கொண்டேன்.

இதை மறந்துபோன ஒரு கணத்தில் வந்தது புத்தகப் பொதி.

London Padmanabha Iyerஐயர் யார் என்று கூடத் தெரியாமல்தான் அந்தப் புத்தகப்பொதியைப் பிரித்தேன். ஐயரை அழைத்து "புத்தகம் அனுப்பியிருந்தீர்களா?" எனக்கேட்டேன். "ஓம்" என்றார். நன்றி கூடச் சொல்ல மறந்துபோனது தொலைபேசியை நிறுத்திய பின்பு நினைவுக்கு வந்தது. வந்திருந்த புத்தகங்களின் பட்டியலைத் தராமல் ஒவ்வொன்றையும் படித்துவிட்டு எழுத ஆசை. இப்போதைக்கு இதைச் சொல்லும் நோக்கம் ஐயருக்கு நன்றி சொல்லும் விதமாகத்தான்.

புத்தகம் கைக்கு வந்த இருநாளில் ஐயர் என்னை அழைத்தார். அண்ணா என்ற உறவுமுறைகள் சொல்லியழைக்க எனக்கு வராது. சார் பிடிக்காது. நண்பரை விளிப்பதுமாதிரி ஐயர் என்றுதான் அழைத்தேன். அவர் வயது 62. என் வயது 27. ஐயர் என்ன நினைத்தாரோ.

முதல் முறையாக பேசும்போதே நாற்பது நிமிடம் பேசியது ஐயரிடம்தாம் இருக்குமென நினைக்கிறேன். இலக்கிய விஷயம் தொடங்கி, இலங்கையில் தமிழர்கள் பற்றிப் பேசி, ஊரை இழந்து உங்களால் எப்படி இருக்க முடிகிறது என்று என் ஆதங்கத்தைச் சொல்லி (ஐயர் பன்னிரண்டு வருடமாக தன் ஊருக்குச் செல்லவில்லையாம்), இலங்கையில் நடந்த மதச்சண்டைகள் பற்றி அப்போது வாசித்திருந்ததால் அதைப் பற்றிக் கேட்டு, அவர் இந்தியா வந்திருந்த போது சந்தித்தவர்களைப் பற்றிச் சொல்லி மகிழ்ந்து, இராமு பற்றிக் குறிப்பிட்டு.. நாற்பது நிமிடங்கள் முடிந்திருந்தது.

நன்றி சொல்ல மீண்டுமொரு முறை மறந்துபோனேன்.

மறக்காமல் சொன்னது ஒன்றுண்டு. "புத்தகங்களைப் படித்துவிட்டு என் கவனத்தில் வரும் கருத்துகளை அப்படியே சொல்வேன். சில சமயம் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். என் அறிவு, என் பார்வை எல்லாம் நான் வளர்ந்த சூழ்நிலை மற்றும் நான் இயங்கும் தளம் சார்ந்ததாகத்தான் இருக்கும். இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்" என்றேன். "அதுதான் வேண்டும். நேர்மையான கருத்துப்பதிவுதான் முக்கியம்" என்றார். ஐயரின் பேச்சுத் தமிழைக் கேட்டு, பதில் சொல்லும்போது என் வாயில் மலையாளம்தான் வந்தது. என்னுடைய சாதாரணத் தமிழைப் பேசக் கஷ்டப்பட்டுவிட்டேன். தமிழ் பேசத்தெரியாதவர்கள் பட்டியலில் ஐயர் என்னைச் சேர்த்துவிட்டாரோ என்னவோ.

ஐயர் பேசும்போது மறக்காமல் சொன்ன இன்னொரு விஷயம் "வலைப்பூவில இலங்கைத் தமிழ் பத்தி நீங்க எழுதினது நான் பார்த்தன். இரமணீயும் பதில் எழுதியிருக்கார். சில வார்த்தைகள் விளங்கல்லே என்று சொல்லுவது சரிதான். ஆனா சில ஒட்டுமொத்தமா புரியல்லேங்கிறாங்க. அது சரியில்லே" என்றார். நானும் ஆமோதித்தேன். ஒரு கதையோ கட்டுரையோ எழுதிவிட்டு, கடினமான வார்த்தைகளுக்குப் பொருளைத் தரலாம் என்றேன். அதற்கு ஐயர் என்ன சொன்னார் என்ற பதிலைச் சரியாகக் கேட்க முடியாமல் அவரது தொலை பேசி சதி செய்துவிட்டது. மதி, விஜயாலயன், இரமணீ பற்றிச் சிலாகித்ததை இங்கே சொல்ல விரும்பவில்லை. (விஜயாலயன் எங்கே போனார்?)

ஐயர் இரண்டாம் முறையும் அழைத்து அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் கேட்ட முதல் கேள்வி. (தமிழோவியத்தில் வந்திருந்த என் கதையை நிறையப் பேர் விமர்சித்திருந்ததைப் படித்திருப்பார் போல). "இப்படி விமர்சிக்கிறாங்கள். நெஜம் சொல்லுறாங்களா இல்லை பகடி பண்ணுறாங்களா?" என்றார். "அதை கண்டுக்காதீங்க ஐயர். என்கிட்ட உரிமை எடுத்துக்குவாங்க" என்றேன். எனக்கு, தமிழ் அன்றைக்குக் கொஞ்சம் இயல்பாக வந்த மாதிரி இருந்தது.

ஐயர் தந்த புத்தகத்தில் நான் முதலில் படித்திருக்கவேண்டியது கார்த்திகேசு சிவத்தம்பியின் தமிழில் இலக்கிய வரலாறு. அந்தப் புத்தகத்திலுள்ள எழுத்துப்பிழைகள் மற்றும் தட்டச்சுப்பிழைகளைத்தான் நான் சரி பார்க்கவேண்டியது. மற்றும் இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியதும். ஆனால் சிறுகதை/கவிதை மோகத்தில் கிடப்பதால் முதலில் எடுத்தது வாசல் ஒவ்வொன்றும் என்ற கதைத் தொகுப்பு.

பத்தொன்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. பத்தொன்பது வெவ்வேறு படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட எல்லாக் கதைகளும் இனப்போரைப் பற்றியோ, அதில் அவர்கள் பட்ட இன்னலையோ அவர்கள் இழந்த வாழ்க்கையையோ பேசுகின்றன. காதலோ, அம்மாவின் பாசமோ, நட்போ - எதுவானாலும் போரை அல்லது அதனால் ஏற்பட்ட இன்னல்களை மையமாக வைத்துச் சொல்லப்படுகின்றது. எல்லாப் படைப்பாளிகளின் கதைகளிலும் போரும் அதனால் எழுந்த உணர்வுகளும் கலந்துவிட்டிருப்பதைக் காணமுடிகிறது.

இலங்கையின் வட்டாரத் தமிழ் கேட்க, படிக்க இனிமையானதாகத் தோன்றும் எனக்கு. சில சமயம் கொச்சையான மலையாளம் கலந்த வாடை அடிப்பதாகவும் தோன்றியிருக்கிறது. (இப்போது விஜயாலயன் வருவார்) அந்த வழக்குத் தமிழில் எழுதப்படும் கட்டுரைகள், கதைகள் மீது தீராத ஆர்வமுண்டு. முதன்முதலில் வாசிக்கத் தொடங்கியபோது இந்தியாருடே, றோட், ரீச்சர், ரீ, பொலிஸ் போன்ற வார்த்தைகள் வித்தியாசமாகத் தோன்றின. தொடர்ந்து வாசிக்கும்போது இந்த வித்தியாசம் அகல்வதை உணர முடிகிறது.

பத்தொன்பது கதைகளும் ஒரே களத்தைக் கொண்டு இயங்குவதால், எத்தனை வேகத்தில் படித்தோமோ அத்தனை வேகத்தில் மறக்கவோ அல்லது குழப்பிக்கொள்ளவோ சாத்தியம் இருக்கிறதை உணரமுடிகிறது. ஆனாலும் போருள் மனிதர் என்ற கதை மனதுள்ளில் சென்றுவிட்டது. போரில் காயம்பட்டு கால் செயல்பாடற்றுப் போகும் சாத்தியத்தில் நோயாளியாகக் கிடக்கும் ஒரு மனிதனின் நினைவுகளும், அவனது நிகழ்கால நிகழ்வுகளும்தான் கதை. எப்படியோ தகவல் அறிந்துவிட்டிருந்த அம்மா அவனைக் காண வந்து, அவனிடம் புலம்பும் காட்சிகளில் வலியுண்டு. நல்ல கதை.

சில கதைகளில் எனக்கு மாற்றுக்கருத்துகளும் இருக்கின்றன. அதன் ஒரே ஒரு காரணம் நான் இலங்கையில் பிறக்காமல் இந்தியாவில் பிறந்ததாய்த்தானிருக்க முடியும். கண்முன் காணும் போர்களுக்கும் செவி வழிப்போர்களுக்குமான வித்தியாசங்கள், ஒவ்வொரின் நோக்கிலும் சிந்தனையிலும் நிச்சயம் பிரதிபலிக்கும். அதுதான் எனக்கும் நேர்ந்திருக்கிறது. இந்தப் பலவீனத்தில் நானும் சிக்குண்டிருக்கிறேன்.

அடுத்து யேசுராசாவின் கட்டுரைத் தொகுதியைப் படிக்க வேண்டும். நான் எதிர்பார்க்காத வகையில் கணையாழி களஞ்சியம் இரண்டு பாகம், புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதி, மகாராஜாவின் இரயில்வண்டி போன்ற புத்தகங்கள் என் கைக்கு வந்தன. (கணையாழி உஷா தந்தார்) கணையாழி களஞ்சியம் என்னை அதனுள்ளே இழுத்துக்கொண்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும். என்னால் அதைப் படிக்காமல் வேறெதையும் யோசிக்கமுடியவில்லை. அதிலிருக்கும் சுவாரஸ்யமான கட்டுரைகள், நேர்காணல்களைப் படித்து முடித்துவிட்டு, சிறுகதைகளைத் தொடங்கலாம் என நினைத்த போது, ஆசி·ப்மீரான் அடுத்த சதியைச் செய்தார். ஜெயமோகனின் "காடு"வையும் அசோகமித்திரனின் தண்ணீர் புத்தகத்தையும் சு.வில்வரெத்தினத்தின் கவிதைத் தொகுதியையும் தந்தார். நான் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்முன்னே பரவிக் கிடக்கின்றன. நாவல் அல்லது சிறுகதைத் தொகுதியை ஆரம்பித்தால் அதை முடிக்காது அடுத்த புத்தகங்களைப் படிப்பதில்லை. காடு வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஜெயமோகன் என் ஆதர்ஷ எழுத்தாளர்களில் ஒருவர் என்பதால் மற்ற எல்லாப் புத்தகங்களையும் மீறி "காடு"வுக்கு முன்னுரிமை தந்துவிட்டேன். வலைப்பூவில் ஒருவாரம் எழுத ஒப்புக்கொண்டதால் காட்டிலிருந்து வெளியேறி வீட்டிலிருக்கிறேன்.

மீண்டும் ஐயருக்கு வருவோம். இரண்டாம் முறை பேசும்போது ஐயர் சொன்னார்.."நீங்கள் இந்தியா போகும்போது சொல்லுங்கள். நான் "கண்ணில் தெரியுது வானம்" உங்கள் கையில் கிடைக்க ஏற்பாடு செய்கின்றேன்" என்றார்.

இருக்கும் புத்தகத்தை முதலில் படித்துவிட்டு வருகிறேன் ஐயர்.

அட.. இப்போதும் ஐயருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன்.

Tuesday, January 13, 2004

இன்றைய என் கவிதை

 


பெயர் சூட்டிக்கொள்ளும் பறவை
---ஹரன்பிரசன்னா


வானத்தில் சுழன்றடிக்கிறது
பெயர் தெரியாத பறவையொன்று

மற்றவையோடு
அதிக வித்தியாசங்களில்லை
அமர்ந்திருத்தலில்
தலைசாய்த்தலில்
இமைத்தலில்
ஓயாமல் இறக்கைகள் அடித்தலில்
வானம் அளத்தலில்
பெண்துணைத்தேடலில்

புதுச்சட்டைச் சகிதம்
தேர் காணப் போகும்போது
"சொத்"தெனப் பொதுப்பதிவு செய்து
பெயர் சூட்டிக்கொள்கிறது
"எச்சமிட்ட பறவை".

இன்றைய கவிதை

 


கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா தனக்குப் பிடித்ததாகச் சொல்லியிருந்த கவிதை இது. அதற்கு முன்னர் வந்த வாரங்களில் சொல்லியிருந்த சில கவிதைகள், குறிப்பாய் மூன்று காதல்கவிதைகள் என்னை அத்தனை ஈர்க்கவில்லை. அந்தக் காதல்கவிதைகளில் என்ன இருக்கிறது என்று அன்று முழுவதும் யோசித்து யோசித்து தூக்கம் அற்றுப்போனதுதான் மிச்சம். அப்படி மனதுள்ளிருந்த சலிப்பை ஒட்டுமொத்தமாக துடைத்துப்போட்டது இந்தக் கவிதை.

நல்ல கவிதையைப் படிக்கும்போது மனதுள் வரும் சுகமே அலாதிதான்.

இந்தக் கவிதையை எழுதியது சிஜி.இராமதாஸ். இனி கவிதை...

கல் சிலைகள்
கல் விளக்குகள்
கல் சங்கிலிகள்
கல் சிற்பங்கள்
மற்றும்
கல்தூண்கள் எப்போதும்
பேசிக்கொண்டிருக்கின்றன
கோயில்களில்
உறைந்து கிடக்கும்
கனத்த அமைதியின்
ரகசியத்தை.திரை-ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.

 

(கணையாழி களஞ்சியத்தில் இருந்த சில கட்டுரைகளில் இருந்து சில பகுதிகள்)

டில்லித் தமிழர்கள் தமிழ்ப்படத்துக்காக ஏங்கியிருப்பவர்கள். அதனால் எந்த ஓட்டைப் படம் வந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் போய்த் தரிசிப்பார்கள். படங்களின் தரத்தைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. "மாடப்புறாவைப் பார்த்தாயா" என்று கதாநாயகன் கேட்கும்போது நாற்காலியில் நன்றாகச் சாய்ந்துகொண்டு "சரி.. பாடப்போகிறாயா? பாடு பாடு" என்று சமாளிக்கும் பிலாசபி அவர்களது. கொச்சையும், இலக்கணத் தமிழும் கலந்த வசனங்கள். "ப"னாவில் ஆரம்பிக்கும் ஒன்பது எழுத்து, ஏழு எழுத்து பீம்சிங் படங்கள். விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் தபேலா, கிழக்கத்தி மேற்கத்தி வாத்தியங்களில் விநோதமான கலவையான சங்கீதம், கண்ணதாசனின் ஆழ்வார், கம்பர் இவர்களிலிருந்து முழுதாக எடுத்து தமிழ்த்தேசிய உருவம் கொடுத்து, மெட்டுக்கள் திணிக்கப்பட்ட பாடல்கள். வாலி! கேட்கவே வேண்டாம். காப்பி அடிப்பவரைக் காப்பி அடித்தி அரைகுறை யாப்பிலக்கணப்படி அசிங்கமான எதுகை மோனைகள் அமைந்த பாடல்கள். 7, 8 பிளேடுகளை விழுங்கிவிட்டுப் பேசும் பிறமொழி நடிகர்கள், யாரைக்கண்டாலும் பளேர் என கன்னத்தில் அறையும் அம்மாக்கள். சிவாஜிகணேசனின் கன்னங்கள் - சினிமா ஸ்கோப் ஆகிருதி. ஜெமினி கணேசனின் மேற்படி மேற்படி. "எங்கள் எம்.ஜி.ஆர்." மேற்படி. மேற்படி கன்னடத்து நடிகைகள் ("யன்னை யதற்காகக் கூப்பிட்டீர்கள்?"), டைரக்டர்கள் - பிறமொழிப் படங்களிலிருந்து ஒட்டவைத்து திடீரென்று மனசில் மத்தாப்பு வெடிக்கும், மனசாட்சி பெரிய உருவமெடுத்து நிற்கும். பறவைகள் சிறகடிக்கும்.

தமிழ் சினிமாவுக்குக் கதியில்லை என்றேன். ஸ்ரீதரின் "நெஞ்சில் ஓர் ஆலயம்" சிறந்த படங்களில் ஒன்று என்றால் தமிழ் சினிமாவுக்கு கதியில்லை என்று மறுபடி சொல்வேன்.

சில படித்தவர்கள், அருமையானப் படங்களைப் பார்த்தவர்கள் செட்டியார்களிடமும் டிஸ்ட்ரிப்யூட்டர்களிடமும் கடன் வாங்கும் நிர்பந்தத்தில் இல்லாதவர்கள் இரண்டு வருஷத்திற்கு ஒரு தடவை எப்பொழுதாவது ஒரு நல்ல படம் எடுக்க முயற்சி செய்கிறார்கள். எஸ். பாலசந்திரின் பழைய இது நிஜமா-அந்தநாள், அப்புறம் இளைஞர்கள் முயன்றெடுத்த "பாதை தெரியுது பார்" , ஜானகிராமனின் நாலு வேலி நிலம், சந்திரபாபுவின் "குமார ராஜா"வில் சில காட்சிகள், ஜெயகாந்தனின் "உன்னைப் போல் ஒருவன்" இவை உதாரணங்கள்.

ஜானகிராமனின் "நாலுவேலி நிலம்" - பாட்டைப் போட்டுக் கெடுத்தார்கள். ஒன்று நம் டைரக்டர்களிடம் திறமை கிடையாது - ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன் உட்பட - ஏன்?

ஒரு வேலையில்லாத இளைஞனைப் புரிய வைக்க நம் டைரக்டர்கள் "No Vacancy Board"ஐக் காண்பிப்பார்கள். பின்னணி பெரிதாகும். TMS ஆரம்பிப்பார். "எனக்கு இல்லை ஏது வேலை" என்று... இதே காட்சியை ஸத்யஜித் ரே 20 செகண்ட்டில் முடித்து விடுகிறார். எப்படி?

முதலில் டைப் அடிக்கப்பட்ட ஒரு கடிதம் நற்சாட்சிப் பத்திரம். "இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ஸ்ரீ.....(கதாநாயகன்) எனக்குக் கடந்த 3 வருடங்களாகத் தெரியும். அவன் மிகுந்த பண்புள்ள பணிவுள்ள இளைஞன்..." இத்யாதி. கதாநாயகனின் ஆசிரியர் அவனுக்குக் கொடுத்த நற்சாட்சிப் பத்திரத்தை மட்டும் காட்ட எல்லாம் புரிந்துவிடுகிறது.

ஜெயகாந்தனின் படத்தைப் பார்த்ததும் ஓரளவு நம்பிக்கை ஏற்படுகிறது. சில புத்திசாலிகள் போரடிக்கிறது என்றார்கள். அவர்கள் லெவல் அப்படி.

சமீபத்தில் நான் பார்த்த சில தமிழ்ப்படங்களில் "துலாபாரம்" என்கிற படத்தில் பொதுவாக Brevityக்கு ஒரு முயற்சி இருப்பதாகப் பட்டது.

தன் குழந்தைகளுக்கு விஷ உணவு தருகிறாள் தாய். அடுத்த காட்சி கோர்ட்! நடுவில் எவ்வளவு அழுகையைத் தவிர்த்திருக்கிறார்கள்! மேலும் வசனத்தில் உயிர் தெரிந்தது.

"இரு கோடுகள் படத்தை ஜனம் ஆஹா ஓஹோ என்கிறதே என்று அதில் போய் உட்கார்ந்தேன். படத்தில் வருகிற ஒவ்வொருவருமா ஸ்லேட்டை வைத்துக்கொண்டு கோடு போட்டுக் காண்பிக்கவேண்டும்? ஒருத்தன் குறுக்கே கோடு போடுகிறான், மற்றொருத்தன் X கோடு. அப்புறம் ஏன் எல்லாரும் அப்படிப் பிழிய பிழிய அழுகிறார்கள்? டைரக்டர் காட்ட விரும்புவது ரியலிஸமா அல்லது caricatureஆ? ரியலிஸம் என்றால் இந்தக் கதையே அர்த்தமற்றது. இந்த conflict ஒரு ஆபிஸில் நிகழவே நிகழாது. முதன்முதல் அந்த கலெக்டருக்கு ஒரு கெடிகாரத்துக்கு உள்ள மூளை இருந்தால்கூட அவள் கேட்பது Transferஆக இருக்கும்.இப்படியாகப் பல கட்டுரைகளில் பல நிஜங்களைப் புட்டுப் புட்டு வைத்த ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். யார்? இதே ஸ்ரீரங்கம் எஸ். ஆர். ஐ ஆடி (லென்ஸ்) வைத்துத்தேடினாலும் பிடிக்க முடியாது. ஒரு வேளை பெயர் மாற்றம் (முகமூடி, பெயரிலி என்பதற்கான டீஸண்ட்டான மாற்றுப்பெயர்) இந்தச் சுதந்திரத்தை ஸ்ரீரங்கம் எஸ். ஆர்.க்குத் தந்ததோ என்னவோ. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். யார் என்பதற்காக மூன்று க்ளூ தருகிறேன்.


* முதல் க்ளூ இந்தக் கட்டுரைகளில் பரவிக்கிடக்கும் நகைச்சுவை உணர்வு.

* இரண்டாவது க்ளூ இவரே இன்னொரு கட்டுரையில் எழுதிய இன்னொரு பகுதி.

கணையாழியின் இந்த இதழின் மற்றொரு பக்கதில் சுஜாதாவின் 6961 என்கிற கதை ஆரம்பிக்கிறதாம். இதற்கு என்ன இத்தனை அல்லோலம்? வருகிறது வருகிறது என்று இரண்டு மாதமாகப் பயங்காட்டி புதுமை, புரட்சி அது இது என்று புரளி பண்ணி.. எனக்கு என்னவோ இந்த எழுத்தாளரை சற்றி அதிகமாகத் தூக்கி வைக்கிறார்கள் என்று படுகிறது. இதில் ஒரு ஆபத்து. அதிகமாக உயர உயர கீழே விழும்போது வலியும் அதிகமாக இருக்கும்.

இந்த எழுத்தாளரை சமீபத்தில் நான் சந்தித்தபோது நடந்த சம்பாஷணையில் I had the last word.

அறிமுகப்படுத்தியவர்: இவர்தான் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.

சுஜாதா: அப்படியா சந்தோஷம் இவர்...

அறிமுகப்படுத்தியவர்: (மறுபடி) இவர்தான் கணையாழியில் நீர்க்குமிழிகள், கடைசிப்பக்கம், பெட்டி எல்லாம் எழுதுகிறவர்.

சுஜாதா: அப்படியா..? நான் படித்ததில்லை.

நான்: நானும் உங்களுடைய கதைகளைப் படித்ததில்லை.

சுஜாதா: You haven't missed much.

நான்: But you have.* மூன்றாவது க்ளூ ஸ்ரீரங்கம் எஸ். ஆர். எழுதும் ஒரு சிறுகதை.

"ரேணுகா என் கடிதத்தைப் படித்தாயா?"

"படித்தேன்"

" என்ன பதில் அதற்கு?"

"கொஞ்சம் இருங்கள்" என்று உள்ளே சென்றாள். காத்திருந்தேன். காலண்டரில் காற்றில் ஆடிய ஆஷா பரேக்கைப் பார்த்துக்கொண்டே, ரேணுகாவின் அப்பா வந்தார். என்னை அணுகிணார்.

என் முதுகை அணைத்துக்கொண்டு "சேகர்!" என்றார்.

சந்தோஷத்துடன் "என்ன (மாமா)" என்றேன்.

"திரும்பு"

திரும்பினேன். அவர் கை மெதுவாக என் முதுகிலிருந்து கழுத்து வளைவுக்கு வந்தது.

ஒரே தள்ளு,

வெளியே வந்து விழுந்தேன்.


இந்த மூன்று க்ளூக்களையும் வைத்து ஸ்ரீரங்கம் எஸ். ஆர். யாரெனக் கண்டுபிடிக்கத் தெரியாதவர்களுக்கு இராணி காமிக்ஸ் புத்தகம் அன்பளிப்பாக அனுப்பப்படும்.

சரி.. சில கேள்விகள்.

* தமிழில் வந்த கலைப்படங்களில் உங்களுக்குப் பிடித்த கலைப்படங்கள் வரிசை என்ன?

* கலைப்படங்கள் வராததற்கு நடிகர்கள் எந்த வகையிலாவது காரணமா?

* கலைப்படங்கள் எல்லாமே மெதுவாகச் செல்கின்றன என்பது சரியான குற்றச்சாட்டுதானா? சந்தியாராகமும் வீடும் மெதுவாகச் செல்கிறதென்று எத்தனை பேர் தவிர்த்தீர்கள்?

* சாசனம் திரைப்படம் சீக்கிரத்தில் வரும் என்று க்ளப்பில் சொல்லப்பட்டைப் படித்து எத்தனை பேர் சந்தோஷப்பட்டீர்கள்?

* தமிழ் இயக்குநர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் மகேந்திரன். இவை யார் யாருக்குத் தெரியாது?

கொசுறு கேள்வி 1: இது மாதிரியான சின்னச் சின்ன கதைகள் - கதையா? வதையா?

கொசுறு கேள்வி 2: "அவர்" அப்போதிருந்தே அப்படித்தானா? :)

Sujatha and his brother


Monday, January 12, 2004

இன்றைய என் கவிதை

 
இரண்டாம் கவனம்
---ஹரன்பிரசன்னா

கவனம் ஈர்க்கிறது
முன்னெப்போதோ ஒரு கணத்தில்
மலர்ந்துவிட்ட பூ,
நிறமிழந்து
மணமிழந்து
தேனீக்களின் கவனமிழந்து
காம்பறுத்து
சிதறிய சருகுகளாய்
மென்காற்றிலாடி
கீழே விழும்போதும்.


வலைப்பூ- ஒரு பார்வை

 

திறந்தவுடன் கட்டம் கட்டிக் கலக்காது, கண்ணில் பூச்சி பறக்காது, படிக்க முடியக்கூடிய வலைப்பூக்களை பற்றி மட்டும்தான் பேசப்போகிறேன். நான் பேசாத வலைப்பூக்காரர்கள் வருந்தவேண்டாம். இன்னும் சொல்லப்போனால், நான் பேசப்போகிற வலைப்பூக்காரர்கள்தாம் வருந்தவேண்டும்.

முதலில் தங்கமணியின் வலைப்பதிவு.

தங்கமணியின் வலைப்பதிவை ஒருநாள் எதேச்சையாக மேய்ந்தபோது தடுத்து நிறுத்தியது ஒரு கவிதை. அந்தக் கவிதையில் சில வரிகள் என்னைக் கவர்ந்தது. தொடர்ந்து அவரது வலைப்பதிவை வாசிக்க ஆரம்பித்தேன். அடுத்ததாக என்னைக் கவர்ந்த இன்னொரு கவிதை பூனையை வரைபவன் கவிதை. தங்கமணி எப்போதாவது நல்ல கவிதையும் அடிக்கடி சுமாரான கவிதையும் தருகின்ற கூட்டத்தில் இல்லாமல், குறைவாகக் கவிதை எழுதினாலும் நல்ல கவிதையாகத் தருகிறார் என்பதால் பாராட்டுகளுக்குரியவராகிறார். வாழ்த்துகள்.

தங்கமணியின் பூனையை வரைபவன் கவிதையைப் பற்றிப் பேசிவிட்டு நாயை வரைபவன் அ-கவிதையைப் பற்றி பேசாவிட்டால் வீடுபேறு கிட்டாது. நல்ல கவிதையை நகலெடுத்த நொள்ள கவிதை. பெயரிலியின் நகைச்சுவை உணர்வு வியப்பிற்குரியதாக இருக்கிறது. நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பதால் யாரையும் எளிதில் வாரமுடிகிறது. யாரையாவது புகழ்வாரா என்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் தங்கமணியை இலக்கியவாதியென்றிருக்கிறார். தங்கமணிக்காகச் சந்தோஷப்படவா வருத்தப்படவா?

தற்போதைக்கு கமெண்ட்ஸ் பகுதியில் எழுதிவரும் யாரோ தானல்ல என்ற விளக்கத்தையும் முன் வைத்திருக்கிறார் பெயரிலி. பெயரிலியையே புலம்பவைத்த யாரோ யாரோ? ஆனாலும் பெயரிலியைத் தவிர வேறெந்த முகமூடிக்கும் நான் பதில் சொல்லப்போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதால் அவரது கருத்தைப் புறக்கணிக்றேன்.

ஒரு தன்னிலைவிளக்கம்

வலைப்பூவில் என்னுடைய முதல் உள்ளிடுகை வில்லுப்பாட்டு மாதிரி நான் பாடிய வலைப்பாட்டு. அதில் யாரோ என்ற பெயரில் நான்தான் எழுதியிருந்தேன். என்னைப் பற்றி புகழ்வது மாதிரி வருவதால், நகைச்சுவைக்காக யாரோ என்று எழுதி அனுப்பினேன். அது எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடியதுதான் என்பதால்தான் அனுப்பினேன். உஷா உள்ளிட்டோர் அதை புரிந்துகொண்டார்கள். மற்றபடி முகமூடி அணிந்து என்றும் நான் கருத்துச் சொன்னதில்லை. சுஜாதா வெவ்வேறு பெயர்களில் நகைச்சுவையாகத் தன்னைத் தானே திட்டிக்கொண்டு, புகழ்ந்துகொண்ட மாதிரி (இது பற்றிய உள்ளிடுகை நாளை வரலாம்) இருக்கட்டும் என்று யாரோ என்ற பெயரில் நானே எழுதினேன். கமெண்ட்ஸ் பகுதியில் பார்த்தால் யாரோ என்ற பெயரில் ஒரு கமெண்ட் இருக்கிறது. அதில் ஹபி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேண்டுமென்றே யாரோ விளையாடியிருக்கிறார்கள். அந்த யாரோவும் ஹபியும் நானல்ல என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.

இன்றைய கவிதை

 
காதல் கவிதைகளுக்குத் தடை விதிக்கவேண்டுமென்று சுஜாதா உள்ளிட்ட பலர் எப்போதும் சொல்லி வந்திருக்கிறார்கள். எப்போதோ ஒன்றிரண்டு காதல் கவிதைகள் அத்திப் பூத்த மாதிரி நல்லதாக வருகின்றன. மற்றதெல்லாம் ஒன்றிரண்டு அழகான வார்த்தைகளைக் கொண்டு (சகி, வசீகரி, வசீகரா, மந்தகாசி, மந்தகாசன் இத்யாதி) மற்ற வரிகளை காதலியை வர்ணிக்கும் வார்த்தைகளால் நிரப்பி, காதலியின் சரும மென்மையைப் புகழ்ந்து - ஒருமுறை / என் கைக்குட்டையால் /உன் முகத்தை அழுத்தித் துடைத்ததால்/காயம் வந்தது உன் கன்னங்களுக்கு/கைக்குட்டையின் நுனிகீறி/ஆனாலும் வசீகரி/சொர்க்கம் தொட்ட கைக்குட்டைகளை/பையில் வைத்திருக்கிறேன்/சொர்க்கமென நினைத்து - என்பதுமாதிரி வார்த்தைகளை பிடித்துப்போட்டு, கோ-கோ ஆடும் ஆட்டக்காரர்கள் மாதிரி வரிசையில் நிறுத்திக் கவிதை பண்ணிவிடுகிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துப் பார்த்து நொந்துபோனவர்கள் ஆரம்பித்த கோரிக்கைதான், காதல்கவிதைகளுக்குத் தடா. இது ஒருவகையில் வேண்டியதுதான். ஆனால் இதே மாதிரியான காதல் கவிதைகளை திரையில் கேட்கும்போது என்னால் ஒன்றி இரசிக்க முடிகிறது. அச்சில் பார்த்தால் "பற்றிக்கொண்டு" வருகிறது.

நான் கவிதைகள் எழுத ஆரம்பித்த காலத்தில் (ரொம்ப அதிகமில்லை ஜென்டில்மேன்/வுமேன்.ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்புதான்.) இப்படியாகப்பட்ட காதல்கவிதைகளைத்தான் எழுதித் திளைத்திருந்தேன். இப்போது என்னால் அப்படி எழுத முடியாது என்பதை மட்டும் உணர முடிகிறது.

ஒட்டுமொத்தமாய் காதல் கவிதைகளுக்குத் தடை விதித்துவிட்டால், என்னை மாதிரி காதல்கவிதைகளில் ஆரம்பிக்கப் போகும் எதிர்கால இளைஞர்களின் கதி என்ன? அவர்களுக்காகச் சில யோசனைகள்.

* முதல் இருபது கவிதைகள் காதல் கவிதைகள் எழுதிக்கொள்ளலாம். அதற்குப் பின்னர் எப்பாடுபட்டாவது திருந்திவிடவேண்டும். (அதற்குப் பின்னரும் காதல் கவிதைகள் எழுதலாம். பொதுவில் வைக்காமல் காதலியிடம் மட்டும் காண்பித்துக்கொள்ளவும். படித்த மாத்திரத்தில் காதலியே கிழித்துப்போட்டுவிட்டால் நீங்கள் ஒட்டுமொத்தமாய் கவிதை எழுதுவதையே நிறுத்திவிடலாம் எனப் பரிந்துரைக்கிறேன்)

* இருபது கவிதைகளுக்குப் பின்னரும் காதல் கவிதை எழுதியே தீருவேன் என்று அடம்பிடிப்பவர்கள் வழக்கமான - காதலி பெருமை, காதலியின் உடற்கூறு புராணம், காதலி காலடி பட்ட மண் இனித்தல் - சங்கதிகளை மறந்தும் கவிதைகளில் பயன்படுத்துவதில்லை என்று சங்கற்பம் எடுத்துக்கொள்ளுதல் நலம்.

* "முதல் வரியில கண்மணி போட்டியா.. அடுத்த வரியில பொன்மணி போட்டுக்கணும்" என்ற கப்ஸாக்களை திரைப்படப்பாடல்களோடு விட்டுவிட்டு, அதை அப்போதே மறந்துவிட்டுக் கவிதை எழுதத் தொடங்க வேண்டும்.

Cheran_2இத்தனையும் சொல்லிவிட்டுச் சும்மா போனால் எப்படி?

எனக்குப் பிடித்த காதல் கவிதை ஒன்று.

சித்தார்த்தனுடைய இரவுகள்-1
--சேரன்


கடற்கரையில்
ஒரு புல்வெளியின் மடியில்
மொழியின் வெளியில் இரவின் திரியில்
விரகக்கனலில் கண்விழித்தெழுகிறோம்
வைகாசி விசாகத்துத் தலைகீழ் நிலவில்
ஆயிரம் நதிகள் கூடும்
ஒரு சாகரத்தின் அடர்ந்த கனவு
எங்களைப் போர்த்தியிருக்கிறது
இயற்கையின் திரைகள் இறக்கி
எங்கள் வெற்றுடலின் வண்ணங்களை
மூடுகிறது பூமி
இலைகளற்றுக் காற்றில் அலையெறியும்
நூறாயிரம் மரக்கிளைகளோடு எழுகிற உன் விரல்கள்
என்னில் படிகின்றன
தாமிரம் இழைத்து
குறுகத்தறித்த உன் ஈரக்கூந்தலில் ஓர்
வெள்ளலரிப் பூ
சூடச் சூட வீழ்கிறது
வீழும் கணத்தில் ஒளிர்கிறது

ஆண்டுகள் முன்பு
ஊரில்
ஒரு மார்கழிக்காலையில்
இன்னும் உலராத பின்னல் நெளியாத
மழைக்கூந்தலின் கொத்து மல்லிகையிலிருந்து
எடுத்த அடியிலும்
தொடர்ந்த நடையிலும்
உதிரும் நீர்த்துளி
உணர்வுச் சுழிப்பை உலுக்கிய காலங்கள்
போயிற்றோ எம்பாவாய்?


"காமம் செப்பிக் கண்டதும் கேட்டதும்
உண்டதும் மீட்டதும் கலவியின் ஒரு வழி;
காதலில் கிளர்ந்தும் கடமையைப் புணர்ந்து
கடலில் கரைவது இன்னொரு வழி
என்று
சந்தி பிரித்துக் குழம்பித் துடிப்பதை நிறுத்து
கைப்பிடிக்குள் சுருக்காதே காலத்தை
நேசிப்பு ஒன்றே நிறைவின் குறி"
என அறிவுச்சுடர் கொளுத்தி
என் இதயத்தைச் சுருக்கினாய்
உருகினேன்; எரிந்தாய்; உறங்கினோம்.
விடிகிறது
கனவுகளும் கண்ணீரும் மிதக்காத விழிகளுடன்
பிரிந்து செல்கிறாய்
உலகத் தெருக்களின் இடைவெட்டுகளில்
இன்னொரு முறை சந்திப்போமா என்பது
நிச்சயமற்றது
ஆசையும் அறிவும் ஒன்றாய் மினுங்கும்
உன் கண்களையும் இன்னொரு முறை
காணுதல் அரிது
நிச்சயமற்ற எண்ணற்ற விசயங்களைப் போல
மையம் சிதைந்த முகில் கூட்டங்களைப் போல
கோடையில் உலர்ந்த பெரும் தெருவில்
வெப்பக் காற்றில்
உலையும் கடதாசியின் வாழ்க்கையைப் போல
இதுவும் நிச்சயமற்றுப் போயிற்றுதிரை-ஜெயகாந்தன்

 

jkfullsizeகணையாழி களஞ்சியத்தில் ஜெயகாந்தனின் பேட்டியை வாசிக்க நேர்ந்தது. தமிழ்த்திரைப்படத்தின் அவல நிலையைப் பற்றிப் பேசியிருந்தார். மசாலா படங்களே கதி என்றாகிவிட்ட இன்றைய நிலையிலும் அந்தப் பேட்டி அப்படியே பொருந்திவருகிறது. வரும் ஒன்றிரண்டு கலை முயற்சிகள் கூடக் கண்டுகொள்ளப்படுவதில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னதான இந்தியாடுடேயில் பொன்வண்ணன் "நதிக்கரையினிலே படம் பற்றி விமர்சனங்களே இல்லையே" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இனியாவது விமர்சனம் வரும் என நினைக்கிறேன்" என்று சொல்லியிருந்தார்.

என்.எ·ப்.டி.சி தயாரித்த நதிக்கரையினிலே ஒரு கன்னட நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம். படத்தைப் பற்றிய பேச்சு அதிகம் வராததற்குக் காரணமாக பல விஷயங்களைச் சொல்லலாம். நடிகர்கள் தேர்வு மிகப்பெரிய பலவீனம். எப்போதும் அம்மாஞ்சியாகப் பார்த்துப் பழக்கப்பட்ட ராம்ஜியை இஸ்லாமியராகக் கற்பனை செய்ய முடியவில்லை. அந்தப் பாத்திரத்தைக் கண்முன் கொண்டு வர ராம்ஜிக்கும் தெரியவில்லை. தரமான இசையில்லை. நாவலை அப்படியே படமாக்கிவிட்டார்களோ என்னவோ. கதை முன்னுக்கும் பின்னுக்கும் மாறி மாறிச் செல்கிறது. கதாநாயகி தான் சந்தோஷமாக இருந்த காலங்களை நினைத்துப் பார்ப்பதை ·ப்ளாஷ்பேக் உத்தியில் காண்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சலிப்பு வந்துவிடுகிறது. நன்றாக வந்திருக்கவேண்டிய திரைப்படம்.


ஜெயகாந்தனின் பேட்டியைப் பார்ப்போம். பெரிய பேட்டியிலிருந்து இப்போதைக்குத் தேவையானதை மட்டும் பார்ப்போம்.


கணையாழி: சினிமா துறைக்கு வந்ததைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள்.

ஜெயகாந்தன்: ஆமாம். நானாக வலியவரவில்லை. நண்பர்களோடு ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணனுடன் படத்தின் தரம்பற்றி விவாதம் செய்ததுண்டு. இவ்வளவு பேசறியே, நீதான் ஒரு படம் நீ சொல்ற மாதிரி எடுத்துக்காட்டு என்றார்கள். 'சரி' என்று இறங்கிவிட்டேன்.

கணையாழி: உங்களுக்கு-உங்கள் கருத்துகளுக்குப் படவுலகில் வரவேற்பு இருந்ததா?

ஜெயகாந்தன்:என்னை யாரும் எதிர்க்கவில்லை. ஒரு பெரிய மனிதர் என்னை நம்பி முதல் போடவும் முன்வந்தார். ஆனால் நான் எழுதின ஸ்கிரிப்ட்டைப் பார்த்ததும் பின் வாங்கிவிட்டார்.

கணையாழி: ஏன் அப்படி?

ஜெயகாந்தன்: அவர் பயந்துவிட்டார். "சோறா திங்கிறதையும் பீடி குடிக்கிறதையும் காமிச்சுக்கிட்டிருந்தா படம் ஓடுமா?" எனக்கேட்டார்.

கணையாழி: அதையெல்லாம் ஸ்கிரிப்ட்டில் எழுதியிருதீங்களா?

ஜெயகாந்தன்: ஆமாம். தமிழ்த்திரையில் நான் சொல்லுகின்ற ஸ்கிரிப்ட் என்றால் என்னவென்று பலருக்குத் தெரியாது. அது அவசியம்னு நினைக்கும் ஒரு டைரக்டரை நான் இன்னும் பார்க்கவில்லை.

கணையாழி: அது அவ்வளவு அவசியமா?

ஜெயகாந்தன்: மிக அவசியம்னு நான் சொல்லுவேன். காட்சி காட்சியா விவரமா இந்த இடத்தில் இது வரணும், செட் எப்படி இருக்கணும், காமிரா எங்க இருக்கணும்னு முன்கூட்டியே எழுதி வெச்சிடறது "ஸ்கிரிப்ட்". அது இல்லாம படம் எடுப்பதால்தான் எட்டு லட்சம் பத்து லட்சம்னு பணம் விரயமாகிறது.

கணையாழி: பண விரயத்திற்கு "ஸ்கிரிப்ட்" இல்லாதது மட்டுமா காரணம்? நட்சத்திர நடிகர்களுக்கே நிறையப் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறதே...

ஜெயகாந்தன்: ஏன் கொடுக்கணும்னு கேக்கறேன்? அவங்களா டிமாண்ட் பண்றாங்க? இவங்களாப் போயில்ல பணத்தைத் திணிக்கிறாங்க...

கணையாழி: திணிக்கிறார்களா........?

ஜெயகாந்தன்: ஆமாம். சாதாரணமா இப்பப் படம் எடுப்பவங்களில் பல பேருக்கு குதிரைப் பந்தயத்துக்கும் சினிமாவுக்கும் வித்தியாசம் கிடையாது. எல்லாம் ஒரே "காம்ப்ளிங்"தான். அவங்களுக்கு இப்ப என்ன குதிரை நல்லா ஓடிக்கிட்டிருக்கு? சிவாஜி குதிரையா? கட்டு அதுமேல மூணு லட்சம், எட்டு லட்சம் லாபம் வந்திடலாம்னு போடறவங்கதான் அதிகம்.

கணையாழி: எல்லாரும் சூதாட்டம் என்றா சினிமாவில் இறங்குகிறார்கள்?

ஜெயகாந்தன்: ஆமா.. அவங்க வெளியே சம்பாதிச்ச பணத்தை இதில் போட்டு வியாபாரம்ன்ற முறையில படம் எடுக்கிறாங்க. அதில் ஒரு ஒழுங்கு இருக்கணும். ரொம்ப பேரு அது மாதிரி படம் எடுக்கிறதில்லை.

கணையாழி: எப்படி எடுக்கிறாங்க?

ஜெயகாந்தன்: பொதுவா சொல்றேன். உதாரணமா தம்பி வீரமணின்னு பேர் வச்சுக்குங்க. அவர்
சினிமா எடுக்கணும்னு திடீர்னு தீர்மானிச்சுக்குவார். முதல்போட அவரிடம் ஒரு நயா பைசா கிடையாது. வாயிலே பேச்சு இருக்கு. அதுபோதும். அவரா ஒரு கதைப் ப்ளாட் யோசிச்சுக்குவார். ஒரு தகப்பன், ஒரு பெண், ஒரு பணக்காரன், அவன் முதலாளி, ஒரு பிள்ளை, ஒரு வில்லன், இப்படி கேரக்டர்கள்.... கதாநயாகன் குதிரை மேலேவரான்... பெண் கிணத்தண்டை பாடுது. காதல் சீன்... அப்புறம் குழந்தை ஒண்ணு வரும். அது ரயில்லே ஆப்டுக்கப் பாக்கும். வில்லன் வருவான், ஹீரோ வருவான்.... சண்டை சீன். வெள்ளம் வர சீன்.... இப்படிக் கதம்பமா ஒரு கதை யோசிச்சுக்குவார். அப்புறம் நேரே அண்ணன் கிட்டப் போவார்.

கணையாழி: அது யார் "அண்ணன்"?

ஜெயகாந்தன்: முன்னணி நடிகர் எல்லாரும் அவருக்கு அண்ணன்தான். அவங்க யாராவது ஒருத்தரிடம் போய் கதையை காது மூக்கு வச்சுச் சொல்லி, இம்ப்ரஸ் பண்ணிடுவார். நடிகரும் நமக்கு இந்த ரோல் கிடைச்சா இப்படிப் பேசி, அப்படி நடிச்சுப் பேர் வாங்கிடலாம்னு யோசிப்பார். 'சரி தம்பி, நம்ம பேரைப் போட்டுக்கோ பார்க்கலாம்' அப்படின்னு வாக்குத் தருவார். அடுத்த நாள் பத்திரிகையெல்லாம் முழுப் பக்கத்துக்கு விளம்பரம் வந்திடும். சினிமா வேந்தன் நடிக்கும் 'சிங்காரப்பூங்கா'ன்னு..

கணையாழி: இப்படி எடுக்கிற படம் வெற்றியாகுமா?

ஜெயகாந்தன்: காம்ப்ளிங்க்தானே.. சில சமயம் பெரிய வெற்றியாக்கூட கிடைக்கும். பாட்டுக்காரர், காமிராக்காரர் சாமர்த்தியத்திலே படம் ஓடலாம். வீரமணிக்கு அப்புறம் தலை நிக்காது. மறுபடியும் இதே மாதிரி பணத்தையும் போட்டு இதே மாதிரி இன்னொரு படம் எடுக்க முனைவார்.

கணையாழி: படம் தோல்வியானால்...?

ஜெயகாந்தன்: கிளாஸ் படம்னு சொல்லிடுவார். தனது எதிரிகள் எல்லாம் சூழ்ச்சி செஞ்சிட்டாங்கன்னு அறிக்கை விடுவார். பத்திரிகைக்காரங்க கிட்டே அழுவார். இத்தனை மாசமா ஸ்டார்ஸ¤ங்க மத்தியிலே சில்க் சட்டை, சரிகை வேட்டி, பியட் கார் வெச்சிக்கிட்டுத் தர்பார் நடத்தினாரே அதுவரைக்கும் லாபம்னு உள்ளூர நெனைச்சுக்குவாரோ என்னமோ?

கணையாழி: உங்கள் படத்துக்கு 80000 ரூபாய்தான் செலவாயிற்று என்று கேள்விப்பட்டோம்.

ஜெயகாந்தன்: ஆமா சிக்கனமா எடுத்தேன். நான் பெரிய பெரிய ஸ்டாருங்களைத் தேடிப்போகலை. டிராமாவிலே நடிச்சுக்கிட்டு இருந்தவங்களை இழுத்துப்போட்டேன். பையனா நடிக்கிறானே, உதயன், அவன் ஸ்கூல்ல படிச்சுக்கிட்டு இருந்தான். "ஒரு மாசம் லீவு போடுடா, அப்புறம் ட்யூசன் வெச்சுப் படிச்சுக்கலாம்னு கூட்டி வந்தேன். ராப்பகலா உழைச்சு 27 நாளுல முடிச்சோம்"

கணையாழி: நடிகர் நடிகைகள் எல்லாம் நன்றாக ஒத்துழைத்திருப்பார்கள்.

ஜெயகாந்தன்: சந்தேகமில்லாமல். நானும் வேலைன்னு வரும்போது கண்டிப்புத்தான். பையனுக்குக்கூட குறை. சிவாஜி பேசும்போது ஒரு புருவத்தைத் தூக்கி இறக்கிப் பேசுவாரே. அதுமாதிரி நான் பேசினா விடமாட்டேங்கிறாரேன்னு. "பூரா படத்திலேயும் ஒரே பழைய புடைவையைக் கட்ட வெச்சிட்டு எடுத்துட்டாரேன்னு" ஹீரோயினுக்குக் குறை. இதெல்லாம் படம் வந்தவுடனே சரியாய்ப் போச்சு.

கணையாழி: இப்போ படத்தின் பெருமையில் அவங்களுக்கும் பங்கு உண்டல்லாவா?

ஜெயகாந்தன்: பூராப் பங்கும் அவங்களுக்குத்தான். படத்தைப் பாத்தவங்க அவங்க நடிப்பை நல்லா பாராட்டுறாங்க.

கணையாழி: வசூல் விஷயத்தில் எப்படி?

ஜெயகாந்தன்: அதை எதிர்பார்த்து நான் படம் எடுக்கவில்லை. இது மாதிரியான படம் ஓடுவது கொஞ்சம் கஷ்டம்னு தெரிஞ்சுதான் எடுத்தேன். அதனாலே ரிலீஸ் பண்றதுக்கு முன்னாலே ஊர் ஊரா ரஸிக்கக்கூடியவங்களுக்கு மட்டும் போட்டுக் காண்பிச்சேன். இப்ப வியாபார ரீதியிலே கூட ரிலீஸ் பண்ணலாம்கிற நம்பிக்கையை ஜனங்கள் குடுத்திருக்காங்க.... என்ன இருந்தாலும் இது மற்றத் தமிழ்ப்படங்கள் மாதிரி ஓடமுடியாது.

கணையாழி: சினிமா பொழுது போக்குக்காகத்தான் இருக்கிறது என்று ஒரு சாரார் சொல்கிறார்களே.

ஜெயகாந்தன்: எப்படிப்பட்ட பொழுதுபோக்கு? அதன் மூலம் ஒரு ஆத்ம வளர்ச்சி ஏற்பட்டால் என்ன கஷ்டம்? அது அபின் மாதிரி மயங்கிடக்கூடாது இல்லையா?

கணையாழி: பாட்டு, நடனம் இருக்கக்கூடாதா?

ஜெயகாந்தன்: இருக்கலாம். அதன்பேராலே அபத்தங்கள் இருக்கக்கூடாது. ஆனா எனக்கு அவை தேவையில்லை. நான் யதார்த்தமா இருக்கணும்னு விரும்பறவன்.

கணையாழி: மேலும் இதுபோல சினிமா எடுக்க உத்தேசம் உண்டா?

ஜெயகாந்தன்: கண்டிப்பாய்.


இப்படியாகத் தொடர்கிறது பேட்டி.
இதை வாசித்தபிறகு எனக்குள் தோன்றிய சில விஷயங்கள்.

* 80,000 ரூபாயில் ஒரு எடுக்க முடிந்திருக்கிறது. இப்போது இருபது லட்சத்துக்குள் நல்லதொரு கலைப்படம் எடுக்க முடியும். ஆனால் யாரும் எடுப்பதில்லை. ஒரு மசாலா படத்தில் அதீத லாபம் சம்பாதிப்பவர்கள் ஒரு சிறு பங்கை ஒரு கலைப்பட முயற்சிக்கு ஒதுக்கலாம். தங்களுக்குப் கலைப்படம் எடுக்க வராது என்ற பட்சத்தில் கலைப்படம் எடுக்கும் இயக்குநர்களை வைத்துத் திரைப்படம் தயாரிக்கலாம்.

* நல்ல நடிகர்களைத் தேர்வு செய்யும் போது அதிக பணம் சம்பளமாகக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் நாடக நடிகர்களைத் தேர்வு செய்யலாம். அவர்கள் இயல்பாக நடிக்கவும் செய்வார்கள். சம்பள எதிர்பார்ப்பும் அத்தனை இருக்காது. பொன்வண்ணன் நதிக்கரையினிலேவில் இப்படிச் செய்திருக்கலாம்..

* உன்னைப் போல் ஒருவன் படத்தில் ஒரு காட்சியில், கண்ணாடி அணிந்த முதியவரொருவர் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டே, புகைத்துக்கொண்டிருப்பார். புகை அலை அலையாகப் பரவும். அந்தக் காட்சி இன்னும் மனதுள் இருக்கிறது. எண்ணெய் தேய்த்துக்குளிக்கும்போது தொப்புள்ள விரலை விட்டு எண்ணெய் தேய்த்துக்கொள்வதை சில நேரங்களில் சில மனிதர்களில் காண்பிப்பார்கள். சிகெரெட் குடிக்கிறதையும் தொப்புள்ள எண்ணெய் தேச்சிக்கிறதையும் பார்க்கப் பொறுமையில்லை என்பதுதான் கமெண்ட்டாகக் கேட்டேன். இது மாதிரியான படங்களை இரசிக்க, தன் மனதைத் தயார்படுத்திக்கொள்வது படத்தைப் பார்ப்பவர்களின் கடமையும்கூட. வெறுமனே மசாலாவில் மட்டும் வீழ்ந்துவிடாமல், ஒருத்தி மாதிரியான படங்களைப் பார்த்து அது பற்றிப் பேசுவது, கலைப்பட முயற்சிகளுக்கு நம் செய்யும் நல்ல காரியம்.

நன்றி:
ஜெயகாந்தனின் புகைப்படம் http://jayakanthan.com பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. திரு. சினேகிதனுக்கும், திரு. பி.கே.சிவகுமாருக்கும் நன்றி.


Sunday, January 11, 2004

இன்றைய என் கவிதை

 


யுகமென
--ஹரன்பிரசன்னா

அறையெங்கும் பரவும்
வெளிச்சத்தில்
தன் வீரிய அணுக்களை
விட்டுவிட்டுத் தொலைகிறது
இருள்

விளக்கணைக்கும்
கதவடைக்கும்
ஒவ்வொரு நிகழ்விலும்
சடாரென
முகம்தூக்கும் அணுக்கள்
நீர்த்துப்போகின்றன
மெலிதான வெளிச்ச உட்கசிவில்

முழுதும் இருள்
சாத்தியமே இல்லையென்ற
முடிவை
அசைத்துப் பார்க்கும்
இடியும், அதைத் தொடர்ந்த
மின்வெட்டும்

முற்றாகச் சூழ்ந்த இருளை
துரத்தி
பேய் மழையில் நனையும்
இராட்சத மரத்தைக்
கண்ணுக்குக் காண்பித்து
பயமுறுத்தி
மறையும் நொடி மின்னல்

இவ்வாறாகவும்
வேறாகவும்
தொலைத்துக்கொண்டிருக்கின்றன
இருளும் வெளிச்சமும்
ஒன்றையொன்று


இன்றைய கவிதை

 

வண்ணதாசன் கவிதைகள் மீதான என்னார்வத்தை ஏற்கனவே வலைப்பூவின் பின்னூட்டப் பகுதியில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். மிக எளிமையான வார்த்தைகளில், அழகான கவிதைகள் வண்ணதாசனின் பலம். எந்த இடத்திலும் வார்த்தைகள் மிகுந்து ஒலிக்காமல், தானாக வந்து விழுந்த வார்த்தைகளைக் காணும்போது தோன்றும், "நல்ல கவிதைகள் கூடத் தன்னைத்தானே எழுதிக்கொள்கின்றன".

KALYANJIகல்யாண்ஜி கவிதைத் தொகுப்பைப் படித்தபோது அதிலுள்ள எல்லாக் கவிதைகளுமே நன்றாக இருப்பது போலத்தான் தோன்றியது. எந்தக் கவிதை சிறந்தது என்று தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய சிரமம் இருந்தது. நிறைய கவிதைகளை ஒப்பிட்டு ஒரு கவிதை சிறந்தது என்று தேர்ந்தெடுப்பது ஒரு வகையில் சரியில்லாததும்கூட. ஒரு கவிதை பிடித்துப்போவதற்குக் கவிதை மட்டும் காரணமாக இல்லாமல், வாசகனின் அனுபவம், சூழல், தனிப்பட்ட இரசனை, கவிதை வாசிக்கும்போதிருந்த மனநிலை எல்லாம் கலந்த ஒன்று காரணமாக அமைகிறது. (ஒரு புத்தகத்த்¢ல் விவேகானந்தர் ஒரே மாமரத்தின் இரண்டு வெவ்வேறு கிளைகளிலுள்ள இரண்டு மாம்பழங்களின் சுவையை ஒப்பிடுதல் கூடத் தவறானது என்று சொல்லியிருந்தார்). அதனால் ஒரு படைப்பை நிகழும் அனுபவமாகத்தான் கொள்ள முடியும். அதனால்தான் நமக்குப் பிடித்துப்போன ஒரு கவிஞரை, மற்றவர் - பெயர் இருப்பவரோ, பெயர் இல்லாதவரோ - இவனெல்லாம் ஒரு கவிஞனா என்று கேட்க முடிகிறது. இரசனை வெவ்வேறாக இருப்பினும் ஒரு குறைந்தபட்ச பொதுக்கருத்து உருவாகிவிடுகிறதென்பதை மனதில் நிறுத்திப் பார்த்தால் சொல்லும் வார்த்தைகளிலுள்ள நேர்மை தெரியும். அந்த வகையில் கல்யாண்ஜி நல்ல கவிஞர்களின் பட்டியலில் இடம்பிடிப்பவர். என் தேர்வுப் பட்டியலில் முதலில் இருப்பவரும் கூட.

நீ வருவதற்காகக்
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்குபோல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்துகொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக்கொண்டது முற்றிலும்.;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது. 


"ஓ ஓ ஓஓஒ.. மாங்கா மூஞ்சிக்கு மஞ்சப் பூசி மயக்குற பொண்ணே.."

"திரை எடுத்தாச்சு... உங்கப் பாட்டை நிறுத்திட்டு வில்லுப் பாட்ட ஆரம்பிங்க"


சொல்லாம கொள்ளாம யாருடா திரையைத் தூக்கினதுன்னு முணுமுணுத்தபடி...
"அதாகப்பட்டது.."

"நல்லா சொன்னீங்க.."

"நான் இன்னும் ஒண்ணும் சொல்லலியேடா.."

"ஆமாம்"

"நீ தேற மாட்ட.."

"ஆமாம்"

"தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட.."

"ஆமா"

"வில்லினில் பாட"

"ஆமா வில்லினில் பாட"

"வந்தருள்வாய் கலைமகளேஏஏஏஏஏஏ.."

"வில்லில பாடப்போறீங்களா?"

"மாத்திப் பாடிட்டேன்..."

"தந்தனத்தோம் என்று சொல்லியே வலையில் பாட..."


"ஆமா வலையில் பாட"

"வந்தருள்வாய் கலைமகளே"

"அதாகப்பட்டது மக்களே"


"மக்களே..."

"ஆகாச வீரர்.. அசகாய சூரர் வில்லாதி வில்லர் வீரமணிகண்டர்.."

"வீரமணிகண்டர்..."

"ஹரன்பிரசன்னாவை வரவேற்கிறோம்."

"கிறோஓஓஓஓஒம்!!!!"

"வா மச்சான் வா
வண்ணாரப்பேட்டை"


"பாட்டு சரியில்லை... சட்டுபுட்டுன்னு முடிச்சுட்டுப் போங்க.. அவர் வரட்டும்"


"அவர் வருவார்...
வந்தனம் வந்தனம்
வந்த சனம் குந்தனம்
பூசுறது சந்தனம்""இதுவும் சரியில்லை.. அவரை விட்டாத் தேவல.."


"சரி அவரே வரட்டும். நல்ல கட்டுரைகளைத் தட்டிபோடுவார், நல்ல கவிதைகளைப் போடுவார் என்று ஊராரார் எல்லாம் பேசிக்கொள்கிறார்கள்"

"ஆமா"

"அவரை வரச் சொல்லி நான் வழி விடுறேன்.."

"ஜென்ம சாபல்யம்"

"மாங்கா மூஞ்சிக்கு மஞ்சப் பூசி மயக்குற பொண்ணே
என் விழி இரண்டும் மயங்குதடி கண்ணான கண்ணே
ஓ ஓ ஓ ஓ"--யாரோ


 


Phonix - entry Beligium, Mosaiculture Festival 2003, Montreal (c)Mathy


 

நன்றாக எழுதுபவர் என்றும், மரத்தடிக் குழுவில் இருந்து எழுத்துலகில் முதன்முதலில் அழுத்தமாகக் காலடி பதிக்கப்போகிறவர் என்றும் பலர் பேசிக்கொள்ளும், சிலாகித்துக்கொள்ளும் ஒருவர்தான் இந்த வாரம் வலைப்பூவினை உங்களுக்கு வழங்கப்போகிறார். நிறைய எழுதும் இவர், பத்திரிகைகளுக்கும் இணைய இதழ்களுக்கும் கதைகளை அவ்வளவாக அனுப்புவது இல்லை. அவருக்கு திருப்தி ஏற்படாத வரையில் அவருடைய படைப்புகள் பிறர் கண்களுக்கு தெரிவதுமில்லை. இவருடைய கதை ஒன்று அம்பலம்.காமில் வெளி வந்திருக்கிறது. கவிதை ஒன்று திசைகள் இதழில் வெளிவந்திருக்கிறது. கதை ஒன்று தமிழோவியம் மின்னிதழில் வெளிவந்திருக்கிறது. இதைத்தவிர்த்து வேறெங்கும் வந்திருப்பதாக எனக்கு ஞாபகம் இல்லை. வேறெங்கும் இவர் அனுப்பவில்லை என்பதே உண்மை. :) இவர் இதுவரை எழுதியதை நீங்கள், மரத்தடி இணையப்பக்கத்திலும், அவருடைய வலைப்பதிவிலும் படிக்கலாம். மனதில் தோன்றுவதை ஒளிவு மறைவில்லாமல் கூறுவது எனக்கு இவரில் மிகவும் பிடித்த விஷயம். இங்கும் அவ்வாறே செய்வார் என்று நம்புகிறேன்.

பிரச்சினை, ப்ரச்சனை, தாசீல்தார், மாமு, மச்சி, செல்வம், கேள்வியின் நாயகன் என்றெல்லாம் *செல்லமாக* விளிக்கப்படும் ஹரன் பிரசன்னா உங்களுடன்.

 

Legend of Mother Earth - entry from Quebec, Canada @ mosaiculture Festival 2003, Montreal (c)Mathy

 

தனக்குப் பிடித்த கவிதைகள், படைப்பாளிகள், விஷயங்கள் என்று நம்மோடு பகிர்ந்துகொண்ட சித்தார்த் இன்னமும் கொஞ்சம் எழுதியிருக்கக்கூடாதா என்று நானும் யோசிக்கிறேன். நான்கு நாட்கள் இரவும் பகலுமாக அலுவலகத்திலேயே தங்க வேண்டிய பிரச்சினையான சூழலிலும், இவ்வளவு எழுதியதற்கு நன்றி இளவரசரே! :)


 

Buddha - entry NewDelhi, Mosaiculture Festival 2003 @ Montreal (c)MathyThis page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com