<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, October 25, 2003
 

அருணா ஸ்ரீனிவாசனின் அலைகள் வலைப்பூவின் ஒவ்வொரு பதிவும் ஏதோ மேலோட்டமாய் எழுதப்பட்டவை அல்ல. நன்றாக சிந்தித்து படித்து மெருகேற்றி எழுதப்பட்டனவாகத் தோன்றுகிறது. இவர் கட்டாயம் ஏதாவது புத்தகம் அல்லது சஞ்சிகையில் வழமையாக எழுதுகிறவர் என்று நினைக்கிறேன். உலக வர்த்தக ஸ்தாபனத்தின்அவசியத்திலிருந்து, நவராத்திரி கொலுப் பொம்மைகளில் பெண்ணுரிமைகருத்துக்கள் என்று நிறைய ஆழமாக எழுதியிருக்கிறார். ஏன் இத்தனை நாள் இவர் வலைப்பூவை நான் படிக்காமல் விட்டேன் என்று சொல்லும்படியான தொகுப்பு. தீபாவளியின் நிகழ்வுகள், எண்ணங்கள் தலைமுறை இடைவெளியில் எப்படிமாறிக்கொண்டிருக்கின்றன என்று விளக்கமான பதிவை இட்டிருக்கிறார். வாழ்த்துக்கள்!அமலசிங் சிறு சிறு பதிவுகளாக நிறைய எழுதியிருக்கிறார். உலகளாவிய கருத்துக்குவியல்! அரசியல் மற்றும் சமூகவியலில் இவருக்கு ஆர்வம் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன். இலட்சியங்கள் நிறைய கொண்ட உனர்ச்சிகர இளைஞர் இவர் என்பது என் சோதிடம்! அமலாவின் முயற்சிதான் நம் தமிழ் வலைப்பதிவர்களுக்கான யாஹூகுழுமம். அதற்காக அமலா, நன்றி உங்களுக்கு.பத்ரி சேஷாத்ரியின்எண்ணங்கள் நான் தினமும் கட்டாயம் படிக்கும் வலைப்பூக்களில் ஒன்று. தமிழ் கூறும் நல்லிணைய உலகு நன்று அறிந்த சிந்தனையாளர் மட்டுமல்ல செயலாளரும் கூட. அன்றாட நிகழ்வுகளை பாரபட்சமின்றி இவர் அலசுவது சுருக்கமாக இருந்தாலும் சுருக்கென்று விமர்சிப்பது சுவையாக இருக்கிறது. பெரும்பாலும் இடைவெளியின்றி வலைப்பதிவு செய்பவர். இன்னும் செய்வார், செய்ய வேண்டும்.சந்திரவதனா வலைப்பூ சட்டசபையில் ஆறு தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் நிலையில் இருப்பவர். இந்த வலைப்பூ கருத்துக்கோவையில் முதல் ஆசிரியர்பொறுப்பை திறம்பட நிர்வகித்தவர். அவருக்கு பேரக்குழந்தை பிறந்திருப்பதை படத்துடன் வெளியிட்டுள்ளார். வலைப்பூவில் ஒரு புதுப்பூ சிரிக்கிறது. சிந்துவுக்கு நம் வரவேற்பையும், அன்னைக்கும், பாட்டிக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம். ஒற்றைத்தலைவலியைப்பற்றியும் அவர் தன் sammlung என்ற இன்னொரு வலைபூ தளத்தில் தந்துள்ளார். மைக்ரேன் கொடுமையான விஷயம், ஒருமுறை எனக்கும் வந்திருக்கிறது. அதைப்பற்றிய நீண்ட விவரமான பதிவு, படித்துப்பாருங்கள்.


ஹரன் ப்ரசன்னா திறமையான எழுத்தாளர். பதிவுகளுக்கு இப்போது விடுமுறை போல. கதையொன்று வெளியிட்டுருக்கிறார். இன்னும் படிக்கவில்லை. படிக்கவேண்டும்.


ஒருவாரம் ஆசிரியர் பொறுப்பிலிருந்துவிட்டு உங்களிடம் இருந்து விடைபெறும் முன்னர் ஒரு முக்கியமானவர் வலைப்பூக்களைப்பற்றி ஒரு சில வார்த்தைகள்:

முனைவர் நா. கண்ணன் தமிழ் இணையத்தில் நிறைய புது முயற்சிகளை முன்நின்று செய்து வருகிறார். அவர் என் மடல் என்ற தலைப்பிலும், பாசுரமடல் என்ற தலைப்பிலும் இரு சுவையான வலைப்பூக்களை கண்ணுக்கும், காதுக்கும், சிந்தனைக்கும் விருந்தாக அமைத்து தொடர்ந்து எழுதிவருகிறார். இத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் இவரால் எப்படி இவ்வளவு எழுத முடிகிறது என்று சில சமயம் ஆச்சரியப்படுவேன். தமிழ் வலைப்பதிவுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும் இவர் பதிவுகள் கட்டாயம் பார்க்க, படிக்க வேண்டிய ஒன்று. எனக்கும் வலைப்பூ எழுதவேண்டும் என்று தூண்டுதல் வரக் காரணம் கண்ணன் அவர்கள். என் ஆசான்!

இந்த ஏழு நாட்களும் ஏழு நிமிடம் போல் மறைந்து விட்டன. வாய்ப்புக்கொடுத்த மதிக்கும் வாசித்து வந்த அனைவருக்கும் நன்றி.

என்றும் அன்புடன்,

-காசி


(அப்பாடா, இந்தாங்க மதி, கொடியெல்லாம் பிடிங்க, நான் கொஞ்சம் இந்த ஸ்டேஷன்லே இறங்கி இளைப்பாறி விட்டு வந்து விடுகிறேன்)Wednesday, October 22, 2003
 


அனைத்து வலைப்பதிவர்களுக்கும் பதிவைப் படிக்க வருபவர்களுக்கும் வலைப்பூ ஆசிரியர் குழுவின் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
 

இந்த வலைப்பூ (இடைக்கால) ஆசிரியராய் பதவிப் பிரமாணம் எடுத்தவுடனே இன்னும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் எல்லார் பதிவுகளையும் ஒரு கண் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன். அதுலேயே பட்டியலில் பாதிக்கும் மேல் விக்கெட் டவுன். சரி இந்த வாரம் எழுதாட்டியும் பரவாயில்லை, போன வாரம் வரைக்கும் எழுதினாப்போதும் என்று ஒரு வலைப்பூ சட்டத் திருத்தம் கொண்டுவந்து நானே நிறைவேற்றினேன். அதற்கப்புறம் தேறுபவர்களை அகர அவரிசைப்படி கவர் பண்ணுவதாய்த் திட்டம். அதிலும் ஒரு வித்தியாசமாய் கீழேஇருந்து மேலே போய்கொண்டிருக்கிறேன். (கடைசிப்பெட்டியில் ஏறினா S12 S11 S10 கம்பார்ட்மென்ட்டுன்னு போறது சகஜம் தானே:-) எனவே தான் முதலில் வினோபா வந்தார். பிறகு வெங்கட், உமர்...

நவனின் வலைப்பூ கொஞ்சம் வித்தியாசமாய்ப் பட்டது. நான் பார்த்தவரையில் அவர் 2003 பிப்ரவரியிலேயே ஆரம்பித்துவிட்டார். ஆனால் இப்போது நிறையப்பதியவில்லை. இன்று Spam பற்றி இங்லீஷில் எழுதியுள்ளார். நவன் வாருங்கள், எதாவது சுவையாக எழுதுங்கள்!

எம் கே குமார் மிக நீண்ட பதிவு ஒன்றைக் கொடுத்திருக்கிறார். kadavu கடவு- எனது வாசிப்பும் ரசிப்புகளும் என்று தலைப்பிட்டு சிறுகதை தொகுப்பைப் பற்றிய விமர்சனமாய் அமைந்திருக்கிறது. அந்தக் கதைகள் எனக்கு அதிகம் பரிச்சயமில்லாதால் என்னால் கருத்துக்கூற முடியவில்லை அதில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நிறைய விஷயம் இருக்கிறது இங்கே.

மெய்யப்பன் காலச்சுவடு பற்றிய தன் கருத்துக்கள் எப்படி காலப்போக்கில் மாறிக்கொண்டிருக்கின்றன என்பதை நினைவு கூர்ந்திருக்கிறார். நான் காலச்சுவடு படித்ததில்லை எனவே நோ கமென்ட்ஸ்!

ரெண்டு வாரத்துக்கு முன் வலைப்பூவில் வாத்தியார் வேலை பார்த்த மீனாக்ஸ் நிறைய எழுதுபவர். நம் வலைநாட்டு சட்டசபையில் இரு தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளார். அவரும் இப்போது தொடர்ந்து எழுதுவதில்லை:( இன்று தன் பேச்சிலர் வாழ்க்கையின் தினசரி நிகழ்வுகளைக் கவிதையாக்கிப் படைத்திருக்கிறார். இனிமையான மலரும் நினைவுகள். ஆனால் மீனாக்ஸ், நீங்கள் மடக்கி மடக்கி எழுதியிருப்பதை நான் நேராக்கி தந்திருக்கிறேன் பாருங்கள், கவித்துவம் மிளிரும் உரைநடையல்லவா?

பிடித்த பாடல் ஒலி அலாரமாய் அடித்து எழுப்பி விடும் செல்போன் சிணுங்கல் கவிதை..

தினம் காலை எழுந்தவுடன் நண்பன் MP3 ப்ளேயரில் ஒலிக்க விடும் "ஜனனி ஜனனி"பாடலில் ராஜாவின் குரலைக் கேட்டபடி படுத்திருக்கும் ஐந்து நிமிட அனுபவம் கவிதை..

பால்கனி திறந்து செய்தித்தாள் பொறுக்கி அரசியல், விளையாட்டு, பொருளாதாரம் என்று அவரவர் விருப்பப்படி அவசரமாய்ப் பிரித்தெடுத்து தலைப்புகள் வாசித்தபடி பல்துலக்கும் நேரங்கள் கவிதை..

"இன்னிக்கு காலையில முக்கியமான மீட்டிங்" என்று சொல்லியபடி பொறுமையாய் முகம் மழித்து வரும் நண்பனிடம், "மீசை ஒரு பக்கம் குறைஞ்சிடுச்சே..!!"என்று பொய் சொல்லிப் பயமுறுத்திக் கலவர முகத்துடன் அவனைக் கண்ணாடி தேடி ஓட விடும் நகைச்சுவை கவிதை..

நண்பர்கள் குளிக்கப் போயிருக்கும் நேரத்தில் பால் கவர் பிரித்துக் காய்ச்சிப் போட்டு வைக்கும் காப்பியை அவசரமாய்க் குளித்து முடித்து வந்து அவர்கள் எடுத்துக் குடித்து "காப்பி சூப்பர்" என்று சொல்லிப் போகும் பாராட்டு கவிதை..


அவர்களையும் இவர்களையும் சொல்லி என்ன செய்ய, நம் பிரின்சிபால் மதியே அக்டோ பர் 15க்கு அப்புறம் ஒன்றும் எழுதவில்லை. இன்னொன்று, இன்று தான் எனக்கு மதி ஒரு பெண்ணென்று தெரிந்தது. நான் ரயிலுக்கும் லேட், எல்லாத்திலேயும் லேட்...


Tuesday, October 21, 2003
 

சுபாவின் வலைப்பூ (Musings என்பதை எப்படித் தமிழில் அழைக்கலாம்?) ஒரு வேறு உலகம். சென்ற வாரம் தான் படித்த JKயின் Letters to Schools - vol. 2 என்ற புத்தகத்திலிருந்து சில சிந்தனைகளை தமிழில் வெளியிட்டிருந்தார். நிறையப்பேர் JKவின் பெயரை நிறைய முறை சொல்லக் கேட்டும் படித்தும் இருக்கிறேன், ஆனால் நானாகப் படித்தது கிடையாது. என் உலகம் இரும்பும் இயந்திரமுமே. அந்தக் குறை தீர அருமையாகக் கொடுத்திருக்கிறார். இது அவராக மொழியாக்கம் செய்தது என்று தான் தெரிகிறது, ஆனால் இயற்கையாகத் தமிழில் எழுதப்பட்டது போல ஒரு நடை. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

என்னை யாரும் குறை சொல்லி விடக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன். உலகமே என்னைத்தான் பாரட்ட வேண்டும் என்று விரும்புகின்றேன். என்னை நான் மிகவும் தூய்மையானவராக, உயர்ந்த சிந்தனை உடையவராக, அன்புள்ளம் படைத்தவராக, அதோடு 'எல்லாம்' தெரிந்தவராக காட்டிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த மாயத்திரையை பிறர் கிழித்தெரியும் போது திகைத்து நிற்கிறேன்.

சுபாவின் Germany in Focus வலைப்பூவும் அழகாக நிறைய விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறது. எனக்கு ஜெர்மனியுடன் பணிநிமித்தமாய் ஒரு தொடர்பு இருந்தது, அறிமுக நிலை ஜெர்மன் மொழியெல்லாம் படித்திருந்தேன்...ம்ம்..இப்போது எல்லாம் மறந்துவிட்டது. (அப்படியே இந்த வலைப்பூவுக்கும் ஒரு தமிழ் தலைப்புக் கொடுங்களேன், சுபா!)

ரமணிதரன் மூன்று வலைப்பூக்களை நம் தமிழ் வலைப்பூக்கள் பட்டியலில் கொடுத்துள்ளார். ஆனால் ஒன்றும் சரியாக விளங்கமாட்டேனென்கிறது. ஒன்று மட்டும் கன்னா பின்னாவென்று திட்டுகிறது, இவருக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை, எனக்கு முந்தின வலைப்பூ வாத்தியார்கள் ஏன் ஒன்றும் சொல்லாமல் விட்டார்கள், சொல்லியிருந்தால் நான் அந்தப்பக்கம் போகாமல் திட்டு வாங்காமல் தப்பித்திருப்பேனே:-( இதோ ஒரு சாம்பிள்:அவராக இது என்ன ஏது என்று சொல்லாதவரை நான் அங்கே போக மாட்டேன், ட்டேன், டேன், ன்.

பவித்ரா ஸ்ரீனிவாசன் சாங்ரிலா என்ற தலைப்பில் வலைப்பதிகிறார். இன்றைய தி. நகர் ஷாப்பிங் அனுபவம் அப்படியே உஸ்மான் ரோடு, ரங்கனாதன் தெரு ஏரியாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டது. நல்ல வர்ணனையாளர். இந்த வரலாற்றுக்கதையெல்லாம் நிறையப்படித்து இவருக்கு இந்த வர்ணனைத் திறன் வந்துவிட்டதோ? மின்னஞ்சல் முகவரி வேறு குந்தவை இளவரசி என்கிறது. வணக்கம் இளவரசி! (சும்மா சலாம் போட்டு வைப்போம், என்றாவது உபயோகப்படும்)

பரிமேலழகர் (அழகான பெயர், ஆனால் கூடவே என்னவோ தமிழ்ப் பேராசிரியர் போல ஒரு பிம்பம் மனதிலே தோன்றிப் பயமுறுத்துகிறது..) நல்லாத்தான் வலைப்பதிந்து கொண்டிருந்தார் முந்தாநாள் வரைக்கும். மதி என்னைப்போய் வாத்தியார் வேலை பார்க்கச்சொல்லவும் அப்போ பார்த்து லீவு விட்டுவிட்டார். நண்பரே, நான் இந்தியாவில் இணையத்தொடர்புக்கு சிரமப்படும், குடும்பஸ்தரையெல்லாம் வலைப்பூவைப் படிக்கச்சொல்லி வம்புக்கிழுத்து வருகிறேன், நீர் என்னவென்றால், இங்கு அமெரிக்காவில், அதிவேக இணையத்தொடர்பெல்லாம் வைத்துக்கொண்டு, பிரம்மச்சாரி வேறு, வேலைப்பளு அழுத்துவதால் கிறுக்கல்கள் இருக்காதென்று அறிவிக்கிறீர்! அதெல்லாம் கிடையாது, லீவு கேன்சல், வாரும், வந்து கிறுக்கும்!

மேலும் தொடரும்...
(இந்த கடைசிப்பெட்டி ரொம்ப போரடிக்கிறது, ஒரு டீ காப்பிக்குக் கூட வழியில்லை, ஏ கே மூர்த்தியிடம் சொல்லி அடுத்த முறை ரயில் செய்யும்போது கடைசிப்பெட்டி இல்லாமல் ரயில் செய்யச்சொல்லவேணும். அப்படி முடியாதென்றால், அட் லீஸ்ட் கடைசிப்பெட்டியை நடுவிலாவது வைக்கச்சொல்ல வேண்டும்...)

அன்புடன்,
-காசி


Monday, October 20, 2003
 
வினோபா கார்த்திக் சென்ற வாரத்தில் 'மாபெரும் சண்டியர்' அமெரிக்காவின் உலகளாவிய திமிர்த்தனங்களை பட்டியலிட்டிருந்தார். இன்று, உலகப்படம் நம் பள்ளிகளில் கண்ட வடிவத்தில் இல்லாமல் வேறு விதமாய் இருந்ததைக் கண்டு அதன் பின்னணிகளை அலசியிருக்கிறார். மத்திய தரைக்கடல் என்று தமிழில் சொல்லப்படும் Mediterranean Sea என்ற பெயர்,
        medi - மத்தி அல்லது நடு
        terra - தரை, மண், பூமி
என்ற வார்த்தைகளில் இருந்து வந்ததாகவும் அதன் உள்ளர்த்தம் பூமியின் நடுவில் உள்ள கடல் என்பதாகவும், எங்கோ படித்ததாக ஞாபகம். ஐரோப்பியர்கள் உலகம் முழுமைக்கும் தங்களை நடுநாயமாக்கிக் காட்டிக்கொண்டதற்கு இதுவும் உதாரணம். (தமிழ்ப்பெயர் அந்த தொனியில் இல்லாமல் வெறுமனே ஒரு பெயர் என்ற அளவில் நிறுத்திக்கொண்டது நல்லதுதான்). வினோபா பலவகைப்பட்ட தலைப்புக்களில் வலைப்பதிகிறார். சுவாரஸ்யமான தொகுப்பு. கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.

வெங்கட் எவ்வளவு கடினமான விஷயமானாலும் தெள்ளிய தமிழில் விளக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். சென்ற வாரம் எண்ணங்களால் இயந்திரங்களை இயக்குதல் பற்றிய ஆராய்ச்சி விவரங்களை மூன்று பாகங்களாக விளக்கியிருந்தார். (இந்த 'இயந்திரன்' என்ற பெயர் ரோபோட்டுக்கு எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது! லிட்டில் சூப்பர் ஸ்டார் பெரிய ஆளாகும்போது 'எந்திரன், எந்திரன்...' என்று கவிப்பேரரசுவின் புதல்வன் பாட்டெழுதிக்கொடுப்பாரோ?) இன்று வெங்கட் அண்டகோள விலாசம் என்ற வானியல் நூலை உள்ளிடும் பணியை க் குறிப்பிட்டிருந்தார். சில செய்யுள்களையும் தந்திருக்கிறார். படித்தால் பயமாயிருக்கிறது. நான் வரல்லே இந்த விளையாட்டுக்கு..

உமர் புதிதாய் வலைப்பதிவை ஆரம்பித்தாரா அல்லது வேறு சேவையிலிருந்து இங்கு மாறினாரா தெரியவில்லை. ஆனால் பழைய பக்கங்கள் இல்லை. இன்று உமர் பதிவு செய்த விஷயம் லாசிக் எனும் கண் பார்வைகுறையை திருத்தும் சிகிச்சை பற்றி. என் 5 வயது மகள் கண்ணாடி அணிந்து சிரமப்படுவதைக் காணும்போது இந்த முறையின் முக்கியத்துவம் புரிந்தது. உமர் யூனிகோட் எழுத்துரு பற்றியும் தன் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார். கருத்துச்செறிவுள்ள பதிவுகள்.

மேலும் பயணம் தொடரும்...
(அடுத்த ஸ்டேஷன் எப்ப வரும்?)

அன்புடன்,
-காசி


Sunday, October 19, 2003

இன்னுமொரு வேடம்

 
பார்க்கிறவர்களெல்லாம் என்னை ரொம்ப சீரியஸ் ஆசாமி யென்று நினைத்திருக்கையில் எப்படி எனக்கு இந்த 'நகைச்சுவை உணர்வு மிக்கவர்' என்ற அடைமொழி வந்ததென்று எனக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது. பெரிய பெரிய பதிவர்கள் (இது சரியான சொல்லா என்று அப்புறம் ஆராயலாம்) எல்லாம் நிறைய எழுதுகிறார்கள். நீண்ட இந்த தமிழ் 'வலைப்பூ எக்ஸ்பிரஸ்' ரயிலில் தாமதமாய் ஓடிவந்து கடைசிப்பெட்டியில் எப்படியோ ஏறிவிட்ட என்னை, கொஞ்ச நேரம் கார்ட் வேலை பார்க்கச்சொன்ன மாதிரி உணர்கிறேன். அப்படி இப்படி கொடிகளை மாற்றி மாற்றி ஆட்டினால் அடுத்த ஸ்டேஷன் வந்திடாதா என்று நப்பாசையுடன் ஆரம்பிக்கிறேன். குற்றம் குறை இருப்பின் பொறுத்துக்கொண்டு என்னையும் எக்ஸ்பிரஸ்ஸில் கூட்டிப் போங்கள்!

நன்றி, மதி.
-காசி

தீபாவளி ஸ்பெஷல் வலைப்பூ

 
ஆசிரியர் - காசி ஆறுமுகம்

அருமையான நகைச்சுவை உணர்வு மிக்கவர் திரு.காசி ஆறுமுகம். இவ்வார தீபாவளி சிறப்பிதழை பொறுப்பேற்றிருக்கிறார். என்ன அறுசுவை விருந்து படைக்கப்போகிறார்? உங்களைப்போலவே நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.நன்றி சுபா.

அழகு தமிழில் அருமையாக வாத்தியாரம்மா வேலை பார்த்தீர்கள். சந்திரவதனா, மீனாக்ஸ், பரி, நீங்கள் என்று ஆரம்பித்த வலைப்பூ சூடுபிடிக்கத்தொடங்கி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அடுத்த வாரம் யார் வாத்தியார் வேலை பார்க்கப்போகிறார்கள்???


This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com