<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, March 13, 2004

நன்றி; வணக்கம் :-)

 
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அந்த விஷயத்தைத் தொடாமல் வேறு ஏதேனும் பேச முடியுமா என்ன? எல்லாம் கிரிக்கெட் பற்றிதான். ( எனக்கும் கிரிக்கெட்டுக்கும், பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் உள்ள தூரம் என்பது வேற விஷயம் :-) )

( இந்தப் பதிவை நான் பதியும் முன்பே பட்டாசு வெடிக்கும் சப்தம் உங்கள் காதைத் துளைத்திருக்குமே? மைதானத்தில் ஒரே நகக் குவியல்களாம் :-) ஒரு பந்து - 6 ரன் தேவை என்கிற காட்சியில் :-)

சரி நம்ம வலைப் பதிவாளர்கள் இந்த முக்கிய நாளில் என்ன பதிந்துள்ளார்கள் என்று மேய ஆரம்பித்தேன். அகர வரிசையில் ஆரம்பித்தபோது ஆரம்பத்திலேயே ஜாக் பாட் ! அருண் ஒவ்வொரு பந்தயம் முடிந்ததும் விமர்சனம் எழுதுவதாக இருக்கிறாராம். கவனிக்க வேண்டியதுதான். பாலா சுப்ரா, கிரிக்கெட், தேர்தல் என்று கருத்துக்கணிப்புகள் காலம் இது என்று சொல்லிவிட்டு தன்னுடைய சொந்த கருத்துக்கணிப்பு பெட்டி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். என்ன சமாசாரம் என்கிறீர்களா? வேறு என்ன? தற்சமயம் வலைப்பூவில் பொறி பறக்கும் விஷயம்தான். இவர் கருத்துக்கணிப்பு கேள்விகளைப் பாருங்கள் புரியும்.

கிரிக்கெட்ட் அல்லாத கருத்தைக் கவர்ந்த வேறு சில விஷயங்கள்: வெங்கட் பதிவில் இருந்த photonics பற்றி சுட்டி.

புதிய பூவான "பெண்" நல்ல முயற்சி. ஆனால் எழுத்துரு மற்றும் சில குழப்பங்கள் இதை ரசிக்க முடியாமல் செய்கிறதோ என்று தோன்றுகிறது. "யாவரும் கேளிர்" என்று தொடங்கிய கட்டுரை சுவாரசியமாக இருக்கும் போலிருக்கே என்று சுட்டியைத் தட்டினால் முதலில் வருவது கேள்விக்குறிகள்தாம். ஆனால் என் அதிர்ஷ்டம், எதை எங்கே திருகினேனோ தெரியவில்லை, கட்டுரை முழுவதும் வர ஆரம்பித்தது. திருச்சி கல்லூரியைப் பற்றியாயிற்றே..... ஆழ்ந்து படித்துக்கொண்டு போனால் பாதியிலேயே நின்று விட்டது. அப்புறம்? என்ன ஆச்சு ரஜனிக்கு என்று அறிய ஆவல். இந்தக் கட்டுரை என் கல்லூரி தோழிகள் பலரை நினைவூட்டியது. இலங்கை, மலேஷிய, மற்றும் தென்னாப்பிரிகா நாடுகளிலிருந்து படிக்க வந்திருந்த பழைய நண்பர்களை Batchmate / classmate போன்ற தளங்கள் மூலம் தேடலாமா என்று தோன்றுகிறது.

ஓரளவு கூட்டு பதிவு போல தொடங்கப்ப்ட்டுள்ள யாழ் . னெட், பிப்ரவரிக்கு அப்புறம் தொடரப்படவில்லை. பல சுவாரசியமான சுட்டிகள் இங்கே கிடைத்தன. பி.பி.சி ரேடியோ தமிழோசையின் மணிவண்ணன் பேட்டி இங்கேதான் படித்தேன். ஆனால் இங்கு "தேனீ", அம்பலத்தார் என்று வலைப்பூக்களுக்கு போட்டிருக்கும் சுட்டிகளை சொடுக்கினால் ஏன் அந்தந்த வலைப்பூக்களுக்கு போக முடியவில்லை?

இந்த கூட்டுப் பதிவை இன்னும் நன்கு பயன்படுத்தலாம். செல்வராஜ் சொல்லியிருக்கும் ஷார்ப் ரீடரை அது என்ன என்று நிதானமாக ( அதுதான் எப்போ என்று தெரியலையே !!) ஆராய வேண்டும். சுந்தரவடிவேலுக்கு பாரதியார் வேல்ஸ் பாடல் எப்போது எழுதினார் என்று தெரிய வேண்டுமாம். அறிந்தவர்கள் அவர் வலைப்பூ பக்கம் போய் பதிந்து வையுங்களேன். இலங்கை நிகழ்வுகள் பற்றியும் தன் கருத்துக்களைப் பதிந்துள்ளார்.அப்பாடா... என் ஆசிரியர் பொறுப்பு இன்றுடன் முடிகிறது. அத்தனை வலைப்பூக்களையும் படிக்க முடியாவிட்டாலும், படித்தவரையில் ஓரளவு திருப்தியாகவே இருந்தது. ஆனால் ஒரு விஷயம் கவனித்தேன். வலைப்பதிவுகளுக்கு தொழில் நுட்பமும் எழுத்தார்வமும் - இரண்டும் சேர்ந்தே இருப்பது அவசியம். பல பதிவுகளில் தொழில் நுட்ப தடங்கல்கள் ஏகமாக உள்ளன. சில பதிவுகள் தொழில் நுட்ப ரீதியில் பிரமாதமாக இருந்தாலும் content ல் அதிகம் ஆழம் இல்லாமல் இருக்கிறது. போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய. இப்படி சிறு சிறு இடறுகளைக் களைந்து வலைப்பூக்கள் தமிழ் இணையத்துக்கு மெருகூட்டும் என்று நம்புகிறேன்.

இந்த ஒரு வாரம் சற்று சூடாக இருந்தாலும் மிகவும் ரசித்தேன். நன்றியுடன் விடை பெறுகிறேன்.

பி.கு: நான் மிகவும் ரசித்த / ரசிக்கும் ஒரு அம்சம் - வலைப்பதிவாளர்கள் லிஸ்டின் கடைசியில் பிரமாதமாக ஸ்டெப் நடனம் ஆடும் 'பெங்குவின்' பறவைகள். பார்க்கும்போதே மனசு ரொம்ப லேசாகி புன்முறுவல் வராமல் இருப்பதில்லை. எங்கேயிருந்து பிடித்தீர்கள் இந்த கிராபிக்ஸை மதி ? காசி ? :-)

Friday, March 12, 2004
 
என் சமீபத்திய திருச்சி பயணத்தில் நான் கவனித்த ஒரு விஷயம் நம்ம ஊர் பக்கம் எல்லாம் இன்னும் உபசரிப்பும் விருந்தோம்பலும் அபரிதமாகவே இருக்கிறது. நாவலாசிரியை லஷ்மியின் காவேரியைப் போல - சாஹித்ய அகாடமி விருது வாங்கிய இந்தக் கதையின் பெயரும் இதுவே - நாங்கள் பழைய தொடர்புகளைத் தேடிப் போயிருந்தோம். புலியூர் என்ற கிராமத்தில் இன்று யாரையுமே எங்களுக்குத் தெரியாது. ஒரு காலத்தில் - 50 வருஷங்கள் முன்னால் அந்த கிராமத்தில் பெரிய வீடாக இருந்த இடம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பது எங்கள் நோக்கங்களில் ஒன்று. ஏதோ உத்தேசமாக ஒரு வீட்டில் கதவைத் தட்டினோம் - மன்னிக்கவும் கதவு திறந்தே இருந்தது. வாசல் திண்ணையில் நிழலாடியதைப் பார்த்து அந்த வீட்டு பெண்மணி வெளியே வந்தார்.லெங்களைப் பார்த்தவுடனே அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. " வாங்க.. வாங்க....." என்று பரபரப்பாக வரவேற்றார். அவர் யாரையோ எதிர்பார்த்து எங்களைத் தவறாக இப்படி வரவேற்கிறாரோ என்று எங்களுக்கு ஒரு சந்தேகம். தயங்கி தயங்கி நாங்கள் யார் என்ன வேலையாக இங்கே வந்தோம் என்று சோல ஆரம்பிக்கும்போது தடுத்தார். "எல்லாம் அப்புறம் பேசிக்கலாம். முதலில் உள்ளே வாங்க. அதென்ன வாசலிலேயே நின்றுகொண்டு? வெயிலில் வந்துள்ளீர்கள். என்ன குடிக்கிறீர்கள்? இளநீர்? தண்ணீர்? உள்ளே வந்து உட்காருங்கள். அப்பா என்ன அதிர்ஷ்டம் இன்று எனக்கு. இத்தனை பேர் இன்று விருந்தாளியாக வந்துள்ளீர்கள்! இருந்து சாப்பிட்டுவிட்டுதான் போக வேண்டும்.....இதோ என் கணவரும் வந்துவிடுவார். இங்கே பக்கத்தில் போஸ்ட் ஆபீஸ்தான் போயிருக்கிறார். "

இந்த ரீதியில் ஒரே எமோஷனாலான வரவேற்பைப் பார்த்ததும் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சரி. இவர் சற்று வித்தியாசமானவர் போலும் என்று நினைத்தோம். ஆனால் அடுத்து சென்ற இரண்டு மூன்று வீடுகளிலும் கிட்டதட்ட இதே போல்தான் வரவேற்பு.

சுத்தமாக முன் பின் அறியாதவர்களை இப்படி ஒரு உள்ளன்போடு அழைத்து உபசரிப்பது என்பதை எல்லா இடங்களிலும் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. அவ்வப்போது கிராமங்களில்தான் ( வட இந்திய கிராமங்களிலும் இந்த பண்பைக் கண்டிருக்கிறேன்.) இதை பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.

சந்தோஷமான விஷயம்.

ஆனால் பெண்களுடன் சரி நிகர் சமமாக பேசுவது தங்கள் கௌரவத்துக்கு இழுக்கு என்று கருதும் சில கிராமத்து ஆண்கள் சுபாவம் உறுத்திற்று. வாங்கல் என்ற ஊரின் அக்கிரஹாரத்தில் இதேபோல் இன்னொரு பழைய இருப்பிடத்தைத் தேடி போயிருந்தோம். அங்கே இன்றைய வீட்டுப் பெரியவர் கூடத்து சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாங்கள் உள்ளே நுழைந்ததும் அவரது வீட்டுப் பெண்கள் சற்று கூடத்தில் எட்டிப் பார்த்து என்னையும் என்னுடன் வந்த மற்ற பெண் உறவினர்களையும் வரவேற்றனர். உள்ளே சமையல் கட்டு பக்கம் கூப்பிட்டனர். மரியாதைக்காக உள்ளே சென்றுவிட்டு பின்னர் நாங்கள் மறுபடி வெளியே கூடத்தில் வந்து பெரியவரும் அவரது மகன்களும் எங்கள் வீட்டு ஆண்களுடன் பேசிக்கொண்டிருந்த சம்பாஷணையில் கலந்து கொண்டோம். பேசிக்கொண்டிருந்த அந்த அரைமணி நேரத்தில் அந்த வீட்டு பெண்கள் அந்தப் பெரியவர் முன்னால் வந்து அமரவில்லை என்பது மட்டுமல்ல. அவரிடம் நேரடியாகப் பேசவுமில்லை என்பதைக் கவனித்தேன். நானுமே பேச்சு வாக்கில் இரண்டு மூன்று முறை அந்தப் பெரியவருடன் பேச முற்பட்டபோதெல்லாம் அவர் என் பேச்சை லட்சியம் செய்யவில்லை என்பது மட்டுமல்ல. அவர் பாட்டுக்கு என்னுடன் வந்த மற்ற ஆண் உறவினர்களிடமே பேசிக்கொண்டிருந்தார். நானோ என் மற்ற பெண் உறவினர்களோ அங்கு இருப்பதையே அவர் கண்டு கொள்ளாதது மாதிரி இருந்தது. அப்புறம்தான் புரிந்தது. பெண்கள் ஆண்களுக்கு சரியாக உட்கார்ந்து பேசுவதை அவர் விரும்புவது இல்லையென்று. அதுதான் அந்தப் புறக்கணிப்பு !!!

விருந்தோம்பலில் பங்கமில்லைதான். ஆனால் பெண்களுக்கு சம உரிமை / சம மரியாதை ???

நாம் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய என்று நினைத்துக்கொண்டேன்.

Thursday, March 11, 2004
 
வழக்கமாக படிக்கும் வலைப்பூக்களை விட்டுவிட்டு புதிதாக சில குடில்களுக்குள் விஜயம் செய்யலாம் என்று ஆரம்பித்தபோதுதான் வலைப்பூக்கள் போகும் திசை பற்றிய விவாதம் ஆரம்பித்தது.

மாலனின் முக்கிய குற்றச்சாட்டே வலைப்பூ ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்த / பிடிக்காத வலைப்பூக்களைப் பற்றி எழுதுவதை விட்டுவிட்டு தங்கள் பொதுவான பிற கருத்துக்களை எழுதுகிறார்கள் என்பது. அதனால் அவரது குற்றசாட்டுகளுக்கான என் பதில்களை அலைகளில் பதிவு செய்கிறேன். இப்போது இங்கே என் வலைப்பூ வலத்தைத் தொடருகிறேன்.

தமிழ் பதிவாளர்கள் லிஸ்டில் ஆரம்பத்திலிருந்து விஜயம் செய்தேன்.
பெரும்பாலானவற்றில் அவரவர் தம் கருத்துக்களையோ அனுபவங்களையோதான் பகிர்ந்து கொண்டுள்ளார்கள் என்று தோன்றுகிறது - நாட்டு நடப்பு / வீடு நடப்பு என்ற ரீதியில். என்னைப் பொறுத்தவரை நீளமாக இருக்கும் பதிவுகளைப் படிக்க பொறுமை இருப்பது இல்லை. உதாரணம் - ஒரு தமிழ் சைவ பிள்ளையின் மின் குறிப்புகள் , Odai-Tamil E magazine

ஆனால் நீளமாக இருந்தாலும் படிக்க சுவாரசியமாக இருப்பவையும் உண்டு. பவித்ராவின் சில நேரங்களில் சில பயணங்கள். இயல்பான பதிவுகள்.

வலைப்பூக்கள் நூற்றை தாண்டிவிட்டாலும் ஒரு பெரிய குறை அவற்றில் பாதிக்குமேல் படிக்க முடிவதில்லை. பலருக்கு தொழில் நுட்ப சங்கடங்களைக் களைவதற்கு நேரம் இல்லை. அல்லது தெரியவில்லை/ புரியவில்லை. இந்த வட்டத்தில் என் வலைப்பூவும் உண்டோ என்று நினைக்கிறேன். முன்பு ஒரு முறை கண்ணன் ஆசிர்யராக இருந்தபோது என் வலைப்பூ அவர் கணினியில் தெரியவில்லைலென்று குறிப்பிட்டிருந்தார்.

வலைப்பூக்கள் வளர முக்கியமாக தொழில் நுட்ப தடங்கல்கள் நீங்க வேண்டும். இந்தியாவில் பெரும்பாலும் windows 98 தான். இவர்கள் ( என்னையும் சேர்த்துதான்) அடுத்த தலைமுறை கணினிகளுக்கு மாறும் வரை தொழில் நுட்ப சங்கடங்கள் தவிர்க்க முடியாதவை என்று நினைக்கிறேன்.

புதிய பதிவுகளில் என் கணினியில் படிக்க முடிந்தது சுரதாவின் புதிய வலைப்பூ மருத்துவம் மட்டுமே.

இதில் வேடிக்கை என்னவென்றால் இன்று பதிவு செய்தவர்கள் லிஸ்ட் என்று ஒரு எண்ணிக்கை எடுத்தால் மிகச் சில பதிவுகளே தேறின. சரி ஒரு வாரத்துக்குள் பதிவு செய்தவர்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டேன். கொஞ்சம் கணிசமாக வந்தது. இந்த லிஸ்டில் ரசித்தது, மீனாக்ஸின் கண்ணம்மாபேட்டை ரிக்ஷா தமிழில் Harry Potter.

ஒரேயொரு பதிவுடன் நிறுத்திக்கொண்டவர்களும் உண்டு. ஒரு பதிவு ஆங்கிலத்தில் இருப்பதைப் பார்த்தேன். இப்படி எல்லாவற்றையும் கழித்துவிட்டு தேடினால் ஒரு இருபது வலைப்பூக்களே குறிப்பிடும்படியாக இருந்தன.

பல பதிவுகள் ஆரம்பித்த சில நாட்களில் நின்று விடுகின்றன. யாரும் படிப்பதில்லையோ என்ற ஒரு எண்ணம் தொழில் நுட்ப சங்கடங்களும்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

 
அவியல் விவாதம் தொடர்கிறது. - 19 மறு மொழிகளுக்கு மாலனின் பதில்

( ஆசிரியர்: சரியாப் போச்சு. விவாதத்தில் இறங்கிவிட்டால் நான் எப்போதான் நகர்வலம் - சாரி - வலைப்பூ வலம் வருவது? )

சரி. மாலனோடு நீங்கள் தொடருங்கள் நான் இதோ வருகிறேன் :-)
சுதந்திரக் குரல் எழுப்பும் உஷாவிற்கும் ஸ்டீரியோடைப்புக்களை உடைக்க ஆசைப்படும் டைனோவிற்கும் சில கேள்விகள்:
பராசக்தி கணேசன் மாதிரி விவேக் நடித்தால் அது காமெடியாகிவிடாதா? மல்லிகைப் பூ வாசம் செம்பருத்தியில் வீசுமா? உரை நடையில் ஒரு பயணக்கட்டுரை எழுதிவிட்டு அதைப் (புதுக்) கவிதை என்று சாதிப்பீர்களா? பெர்முடாசும் பிகினியும் போட்டுக் கொண்டு மண மேடையில் அமர்வீர்களா? ஒவ்வொன்றுக்கும் ஒரு character இருக்கிறது. என்னுடைய கேள்வி இதுதான்: வலைப்பூவின் character என்ன? கவிஞர் புகாரி ஒருமுறை கேட்டார்: நான் ஏற்கனவே ஜியோசிட்டியில் ஒரு வலைத் தளம் வைத்திருக்கிறேன். அப்படி இருக்கும் போது ஏன் வலைப்பூ ஒன்று ஆரம்பிக்க வேண்டும்? வலைப்பூவிற்கும், வலைத் தளத்திற்கும், வலை இதழுக்கும், வலைக்குழுவிற்கும் வித்தியாசங்கள் உண்டா? உண்டெனில் அவை என்னென்ன? மரத்தடி குழுவில் எழுதுவது எல்லாவற்றையும் மரத்தடி இதழிலும் மதி போடுவாரா? இரண்டும் ஒன்றுதான் என்று சொல்வாரா? போடுவேன் என்றால் எதற்காக இரண்டு தளங்கள்? போட மாட்டேன் என்றால் ஏன்? ஏதோ ஒரு விதத்தில் அவை வேறுபடுகின்றன என்பதால்தான் என்றால் அந்த வித்தியாசம்தான் என்ன? எந்த அடிப்படையில் இரண்டும் வேறுபடுகின்றன? என்னைப் போல குறுகிய பார்வை இல்லாத விரிந்த நோக்கு கொண்ட அறிஞர் பெருமக்கள் எடுத்துரைக்க வேண்டுகிறேன்.

Diversity அல்லது பன்முகத்தன்மை என்பதற்கும் character என்பதற்கும் வித்தியாசம் உண்டு. கவிதையை புதுக்கவிதையாக எழுதலாம். தேமா, புளிமா, கரு- கூவிளங்காய், எல்லாம் துருவிப் போட்டு வெண்பாவாக எழுதலாம், ஹைகூவாக எழுதலாம். இவையெல்லாம் கவிதையின் பன்முகங்கள். ஸ்டீரியோடைப்பை உடைக்கிறேன் என்று தினமணி நடுப்பக்கக் கட்டுரையை கவிதை என்று கொஞ்ச முடியாது. ரவிக்கையை ஜன்னல் வைத்து தைக்கலாம். பின்னால் பித்தான் வைத்து தைக்கலாம். போட்நெக்காக தைக்கலாம். ஆமைக் கழுத்தாக தைக்கலாம். கை இல்லாமல் தைக்கலாம். எப்படி தைத்தாலும் அது ரவிக்கைதான். அது சூடிதார் ஆகி விடாது. ரசத்தை தக்காளி ரசமாக, மிளகு ரசமாக, எலுமிச்சை ரசமாக, கொட்டு ரசமாக வைக்கலாம். ஆனால் மோர்குழம்பை கொண்டு வந்து வைத்து விட்டு அதை ரசம் என்று அடம் பிடிக்கக்கூடாது. அதற்குப் பெயர் ஸ்டீரியோடைப்பை உடைப்பதல்ல. அது அடிப்படைகளை விளங்கிக் கொள்ளாத அறியாமை.

வாய் வழியாக சாப்பிட வேண்டியவர் மூக்கு வழியாக சாப்பிடுகிறார் என்றால் அவரது ஆரோக்கியம் கெட்டு ஆஸ்பத்ரி படுக்கையில் இருக்கிறார் என்று அர்த்தம். அவருக்காக அனுதாபப்படலாம். ஆனால் அதை சரி என்று ஏற்றுக் கொண்டுவிட முடியாது.

மாலன்

 
மென்பொருட்களில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது,அந்தக் கலைச்சொற்களைக் கொண்டு ஒரு அகராதி உருவாக்குவது, பின்னர் அவற்றைக் கொண்டு விண்டோஸ். MS ஆபீஸ் ஆகியவற்றைத் தமிழ்ப்படுத்துவது என்ற ஒரு திட்டத்தை மைக்ரோசா·ப்ட் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. அது குரித்த அறிவிப்பை இந்த முகவரியில் நீங்கள் காணலாம்.

http://www.bhashaindia.com/CGW/TA/Tamil.aspx

தமிழ் வளர்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் நேரம் மற்றும் திறமையைக் கொடுத்துதவலாம். இந்தத் திட்டத்தில் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ள மே 2004 என்று ஒரு கால வரம்பும் உள்ளது.

Wednesday, March 10, 2004

தமிழ் இணையம் - ஒரு அவியல் ????

 
(ஆனால், அவியல் சாப்பிட நன்றாகவே இருக்குமே!!)

வலைப்பூக்கள், வலைப்பக்கங்கள், விவாதக்குழுக்கள் மற்றும் வலை இதழ்கள் என்று இவற்றுள் இருக்கும் வித்தியாசங்கள் புரியாமல் ஒரு அவியலாக நாம் இணையத்தை உபயோக்கிறோமோ என்று ஒரு கவலை மாலனுக்கு. அதை இங்கே நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஓவர் டு மாலன்.வலைப்பூக்களின் வளர்ச்சி குறித்து உங்களைப் போலவே நானும் மகிழ்ச்சி அடைகிறேன். வேறெந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவிற்கு விரைவாகவும் பன்முகம் கொண்டதாகவும் தமிழில் வலைப்பூக்கள் மலர்ந்திருக்கின்றன. ஆனால்-

இணையப் பக்கம் என்பதற்கும் வலைப்பூ என்பதற்கும் இடையில் இருக்கும் மிக மெல்லிய கற்பனைக் கோடு, வலைப்பூக்கள் தங்கள் எல்லைகளை விரித்துச் செல்லும் வேகத்தில் அழிந்து வருகிறதோ என்று ஒரு கவலை அண்மைக்காலமாக ஏற்பட்டு வருகிறது. திசைகளில் வலைப்பூக்களை அறிமுகப்படுத்திய போது, உங்களுக்கென்று ஒரு வலை தளம் ஓசியில் என்று நான் தலைப்பிட்டு எழுதியதும் இதற்குக் காரணமாக இருக்குமோ என்று குற்ற உணர்வு தோய்ந்த சந்தேகம் என்னை அவ்வப்போது வெறித்துப் பார்க்கிறது.

வலைப்பூ என்பது (personal) web log. ஒரு நபரின் நாட்குறிப்பின் பக்கங்களைப் போல. அதில் கவிதை இருக்கலாம். கவலை இருக்கலாம். ஒரு அனுபவம், வம்பளப்பு, கிசுகிசு, புலம்பல், ருத்ர தாண்டவம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். (நாம் எல்லா நாளும் ஒரே மனநிலையிலா இருக்கிறோம்?) ஆனால் எது இருந்தாலும் அதில் ஒரு அந்தரஙக் தொனி, personal touch, இருக்க வேண்டும்

வலைப்பக்கம் என்பது அப்படி அல்ல. அது ஒரு நோட்டீஸ் போர்ட். மற்றவர்களுக்குத் தகவல் தெரிவிப்பது, அழைப்பு விடுப்பது, குற்றம் சாட்டுவது, மன்னிப்புக் கேட்பது போன்ற விஷயங்களுக்கானது.

வலைஇதழ்கள் என்பது நாம் அச்சில் பார்க்கும் பத்திரிகைகளேதான். சில தொழில் நுட்ப சாத்தியங்களை/ சங்கடங்களைப் பொறுத்து சிற்சில மாறுதல்கள் இருக்கலாம்.

விவாதக்குழுக்கள் என்பது ஒரு தலைப்பில் பல கருத்துக்கள் உடனடியாகப் பகிர்ந்து கொள்ள கிட்டிய வாய்ப்பு. விவாதக் குழுவிற்கு வருகை தரும் ஒருவர் எல்லாக் கடிதங்களையும் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. படிக்கும் எல்லா விஷயத்திற்கும் கருத்துச் சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால் விவாதங்கள் ஆழமாக இருந்தால் பன் முகப்பட்டதாக இருந்தால், புதிய தகவல், கோணம், பார்வை தருவதாக இருந்தால் அந்தக் குழுவிற்கு சென்றதற்கு பலன் கிட்டும்.

ஆனால் தமிழில் எல்லாம் அவியலாகக் கிடக்கிறது. பெரும்பாலான வலைப்பூக்கள் வலை இதழ்கள் போல, குறைந்த பட்சம் ஒரு வலைத் தளம் போல இருக்கின்றன. தன்னுடைய படைப்பு, மற்றவர் படைப்பு, மனிதர்படம், பூக்கள், வாத்து, கோழி போன்ற 'காலண்டர்' படங்கள், என்று தூள் பறக்கிறது. அந்தரங்க தொனியைத்தான் காணோம்.
இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் 'வலைப்பூ' என்கிற வலைப்பூ ஒரு மினி விவாதக்குழுவாக இருக்கிறது. அதன் ஆசிரியராக இருப்பவர் என்ன செய்யலாம். ஒவ்வொருநாளும் எல்லா வலைப்பூக்களுக்கும் ஒரு உலா போய்வந்து, இன்னின்ன விஷயங்கள் என் கண்களில் பட்டன, அவற்றில் இவையிவை சூப்பர், இதெல்லாம் பேத்தல், இதைப் படித்து சிரித்தேன் என்று தன்னுடைய வியப்பு, வியர்ப்பு, அலுப்பு, சிரிப்பு எல்லாவற்றையும் கொட்ட்லாம். அந்தந்த வலைப்பூக்களின் சுட்டியை மட்டும் கொடுக்கலாம். அங்கே போய் பார்ப்பவர்கள் வேறு சில விஷயங்களைப் படிக்க நேரலாம்.

காலையில் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தால் 70 80 மின்னஞ்சல்கள். எல்லாம் மடலாடற்குழுவிலிருந்து வருபவை. (நான் ஒரு நான்கைந்து குழுக்களில் இருக்கிறேன்.) பாதிக்கு மேல் வெட்டி அரட்டை. சிலர் சில கீ.மீ நீளத்திற்கு கதைகளைப் போட்டு விடுகிறார்கள். 28bps அல்லது 56bps வசதி உள்ள சென்னை வீடாக இருந்தால் அது வந்து இறங்குவதற்குள் மாமாங்கத்திற்குப் போய் அந்த அழுக்குத் தண்ணீரில் ஒரு முழுக்குப் போட்டு வந்து விடலாம். அந்த நண்பர்கள் ஏன் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து அதில் தங்கள் கதையை பிரசுரித்து அதன் சுட்டியை மட்டும் அனுப்பக் கூடாது?

விவாதக் குழுக்களுக்குள் போனால் ஒருவர் தான் பன்னிரெண்டு வயதில் காக்காய்கடி கடித்துக் கொடுத்த தேங்காய் பர்பி பற்றி சுவாரஸ்யமாக எழுதுகிறார். இன்னொருவர் நேற்று தான் போன இலக்கியக் கூட்டத்தில் பக்கத்தில் இருந்த ஒருவர் ரகசியமாய் தன் தொடையைக் கிள்ளியதை எழுதுகிறார். இன்னொருவர் கல்யாணவீட்டில் காணாமல் போன செருப்புப் பற்றி எழுதுகிறார். இவையெல்லாம் வலைப்பூக்களுக்கு உரிய விஷயங்கள் அல்லவோ?

கிரேசி மோகன் நாடகத்தில் ஒரு காட்சி. ஒருவர் மாடிப்படியில் நின்று கொண்டு குளித்துக் கொண்டிருப்பார். நடுக்கூடத்தில் சமையல் நடந்து கொண்டிருக்கும். வீட்டில் உள்ள நூலகத்தில் ஒருவர் கட்டிலைப் போட்டுத் தூங்கிக் கொண்டிருப்பார். சமையல்கட்டில் பூஜைப்படங்கள் தொங்கும். விஷயம் என்னவென்றால், எல்லோரும் வாஸ்துப்படி செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அதாவது மாடிப்படி இருக்க வேண்டிய இடத்தில்தான் பாத்ரூம் இருந்திருக்க வேண்டுமாம். கூடம் இருக்கும் இடம் சமையலறையாக இருந்திருக்க வேண்டுமாம்.

அந்தக் கதையாக இருக்கிறது நம்மவர்கள் கணினியில் அடிக்கும் கூத்து!

*******************************************************************

இதென்னங்க நம்மை இப்படி ஒரேயடியா வாருறாரு? அதெப்படி, நம்ம கருத்துக்களையும் அவர் காதுல கொஞ்சம் போடாம விடமுடியுமா? போட்டு வைக்கணுமுங்கோ...... ஆசிரியர் கருத்து கடைசியில். உங்கள் கருத்துக்களை முதலில் பதிந்து வையுங்களேன். எங்கே! ஒரு பிடி பிடிக்கலாமுங்கோ !

ஓவர் டு யூ வாசகர்களே....
தமிழ் வலைப்பதிவுகளின் பட்டியல் - தகவல் திரட்டும் திட்டம்

 
இடையில் குறுக்கிடுவதற்காக அருணா மன்னிக்கவும்.

பல நண்பர்கள் ஆலோசனை அளித்தபடி நம் தமிழ் வலைப்பதிவுகளுக்கான பட்டியலை மேம்படுத்த ஒரு முயற்சியாக, ஒரு தகவல் பெட்டகம் ('தரவுத்தளம்') ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்கள் தளம் குறித்த தகவல்களை உள்ளிட்டுவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்போதைக்கு இந்தப் பட்டியலே ஓரளவுக்கு தேவையைப் பூர்த்தி செய்வதாக இருப்பினும், இன்னும் சில நண்பர்கள் உதவியுடன், இந்தப் பட்டியலில் சேரும் விபரங்களை வைத்து சூட்டிகையான முகப்பு ஒன்று வடிவமைத்து அதன் வழியாக இந்தத் தகவல்களை, தேடுதல், வகைபிரித்தல் வசதிகளோடு மேம்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. எப்படியாயினும், இந்த விபரங்கள் ஒரு தரவுத்தளத்தில் சேமிக்கப்படுவதால், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் படப்போகின்றன.

அனைவரின் ஒத்துழைப்பையும் கோரி,
வலைப்பூ அசிரியர் குழு சார்பாக
-காசி

புதிய தகவலைச்சேர்க்க

இருக்கும் தகவலைப் பார்க்க

அங்கு உள்ள details சுட்டியின் மூலம் ஒரு தளத்தினைப் பற்றிய மேலதிக விபரங்களைக் காண இயலும்.

[இது புதுசு:
அங்கே இருக்கும் தகவலைப் பார்க்கும்போது, extended search மூலம், தேடுவதும் எளிது. உதாரணத்திற்கு சினிமா என்று தேடினால் மீனாக்ஸின் திரைவிமர்சனம் வருகிறது. (என்ன பாபா இல்லாத சினிமாவா?)]


Tuesday, March 09, 2004

மகளிர் தினம் "கொண்டாட்டம்" ???

 
"மகளிர் தினம் "கொண்டாட்டம்" என்று சொல்லுவதே சரியில்லை என்று நினைக்கிறேன்". சொன்னது கவிஞர் வத்சலா.

திசைகள் இயக்கமும் அரும்பு இயக்கமும் சேர்ந்து சென்னையில் நடத்திய கவியரங்கு ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் அங்கு படிக்கப்பட்ட கவிதைகளைப் பற்றியும் பொதுவாக மகளிர் மேம்பாட்டு விஷயங்களைப் பற்றியும் எங்கள் சம்பாஷணை இருந்தது. ( எங்கள் = கல்கி ஆசிரியர் சீதா ரவி, மற்றும் கவிஞர் வத்சலா.) மகளிர் தினமாச்சே!

வத்சலா சொன்னார். "என்ன மாதிரியான கஷ்டங்களை பெண்கள் அனுபவித்து இருக்கிறார்கள்? கிரைண்டரில் இருக்கும் உரலால் தன் வீட்டு பெண்களுக்கு ஆபத்து வரலாம் என்று கிரைண்டரயே உபயோகிக்காமல் பரணில் போட்ட பெண்.... அப்பப்பா நினைத்தாலே உடல் கூசுகிறது. இந்த நிலையில் "கொண்டாடுகிறோம்" என்று சொல்ல மனம் வரவில்லையே?" என்றார்.

" எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம். உண்மைதான். ஆனாலும் இன்றும் பல இடங்களில் பெண்கள் ஒடுக்கப்படுவது இருக்கதான் செய்கிறது." இது கல்கி ஆசிரியர்.

"கொண்டாட்டம் என்று சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். ஒடுக்கப்பட்ட காலத்தைக் கடந்து இன்று எத்தனையோ பெண்கள் தன்னம்பிகையோடு பிரமாதமாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார்களே... இதைக் கொண்டாட வேண்டாமா?" இது நான்.

பேசிக் கொண்டே வந்ததில் எங்கள் கார் டிரைவர் நாங்கள் போக வேண்டிய இடத்துக்குப் போகாமல் அவர் போகும் வழக்கமான பாதையில் சென்றதை கவனிக்கவில்லை. சற்று பொறுத்து கவனித்து சொன்னவுடன் அவர், 'சற்று இருங்கம்மா.. இங்கே ஒரு சின்ன சந்தில் நுழைந்து மெயின் ரோடில் போய் விடலாம் என்று நுழைந்தார். அது குடிசைகள் நிறைந்த பகுதி. இரவு 9 மணி. பாதையில் வழி இல்லாமல் ஒரே கூட்டம். எட்டிப் பார்த்தால், தண்ணீர் லாரி தெரிந்தது. வரிசையாக குடங்கள், பாத்திரங்கள். சட்டென்று கூட்டத்தை ஒரு நோட்டமிட்டேன். அங்கிருந்த அனைவரும் பெண்கள் - பெரிய பெரிய அண்டாக்களையும், குடங்களையும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு.
தெரிந்த ஓரிரு ஆண்களும் வயதானவர்கள் !!

'நிதர்சனம் இதோ இங்கே' என்று எங்களுக்குள் சொல்லிக் கொண்டோம். அதன் பின் சற்று நேரம் பேச முடியாமல் ஒரு சங்கடமான மௌனம்.


 
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்காக சென்ற ஏப்ரலில் blogs பற்றி எழுதும்போதுதான் வலைப்பூக்கள் ( பாரி, இப்ப சரிதானா? தண்ணியில்லா காட்டுக்கு அனுப்பிடாதீங்க !!) பதியும் ஜுரம் என்னைப் பற்றி கொண்டது. அதற்கு முன்னால் ஆங்காங்கே கேள்விபட்டுள்ளேனே தவிர, வலைப்பூக்கள் முழுமையாக என் கவனத்தைக் கவர்ந்தது, அண்ணா யுனிவர்ஸிடியில் நடந்த ஒரு வலைப்பூ பதிவாளர்கள் கூட்டத்தில்தான். அந்த கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்து முதல் காரியமாக நானும் ஒரு blog ஐ பதிவு செய்துவிட்டேன். அடுத்த நாள் இதைப் பற்றி மாலனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஏன் என் பதிவை தமிழில் ஆரம்பிக்கக் கூடாது என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டுவிட்டு பத்ரியின் வலைப்பூ லிங்கைக் கொடுத்தார். பத்ரியும் ஆரம்பித்து சில நாட்களே ஆகியிருந்தன. சரி. தமிழில் எவ்வளவு blogs ( பாரி, அப்போது வலைப்பூக்கள் என்ற பெயர் பிறக்கவில்லை.) உள்ளன என்று ஒரு Google தேடல் போட்டு பார்த்தேன். அதில் நவன் blog மட்டும்தான் கிடைத்தது. அதிலும் அவர் சில வரிகள் தமிழில் முயன்று கைவிட்ட மாதிரி இருந்தது. ஆரம்ப கால வலைப்பூ அவஸ்தைகள் தெரிய வேண்டுமானால் இவரது பழைய பதிவு ஒன்றையும் அதில் மற்ற பதிந்துள்ள பின்னூட்டங்களையும் பாருங்கள்.

தமிழில் இணைய தளம் ( blog = இணையதளம் ????!!!!) அமைக்கும் அளவு எனக்கு தொழில் நுட்ப திறமை இல்லாவிட்டாலும் முயன்று பார்க்கலாமே என்று பத்ரி உதவியுடன் மறுபடி தீவிரமாக ஆரம்பித்தேன். ம்ஹ ம். தாறுமாறாக வந்தன. ஆனாலும் விட்டுவிடலாமா என்று தோன்றவில்லை. இது ஒரு சவாலாக அல்லவா அமைந்துவிட்டது? ஏதோ திக்கி திணறி ஒரு மாதிரியாக "அலைகளை" ஏற்றிவிட்ட சில நாட்களில் மதி என் ஆங்கில பதிவில் பின்னூட்டம் விட்டிருந்தார். அலைகளை சீர் செய்ய அவர் இன்னும் சில யோசனைகள் சொன்னதோடல்லமால் உதவியும் செய்தார். அவ்வளவுதான். அலைகள் வேகமாக வீசத்தொடங்கிவிட்டது.

சரி. இப்ப என்ன பழைய கதையை அலசுகிறீர்கள் என்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை. அன்று - ஏப்ரல் -2003 ல் என்னுடைதையும் சேர்த்து மூன்றோ அல்லது நான்கோவாகயிருந்த வலைப்பூ எண்ணிக்கை இன்று நூற்றி பதினான்காக உயர்ந்திருக்கும் நிலையில், வலைப்பூக்கள் அத்தனைக்குள்ளும் நான் நுழைந்துவிட்டு வெளியே வருவதே பெரிய காரியமாக இருக்கும் போலிருக்கே என்று ஒரு மலைப்புதான். ஆனாலும் ஆரம்ப கால பதிவாளர் என்ற முறையில் எனக்கு இது ஒரு சந்தோஷமான அனுபவம் என்பதில் சந்தேகமில்லை. அடுத்த முறை நான் ஆசிரியராக இருக்கும்போது ( மதி, காசி... நிம்மதியா? அடுத்த ரவுண்டுக்கு ஆள் ரெடி !!!) ஆயிரம் வலைப்பூக்களை வலம் வரும் வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன்.

ஒரு வலைப்பூ எப்படி இருக்க வேண்டும், அதன் நியதிகள் நியமங்கள் என்ன அல்லது வலைப்பூக்களின் குணாதிசியங்கள் என்ன என்ற ஆராய்ச்சி அவசியமில்லை என்பது என் அபிப்பிராயம். வலைப்பூக்களின் சிறப்பே அவற்றின் சுதந்திரமும், Spontaneityயும் தான் என்பது என் கருத்து. இலக்கியம் போல இன்று வலைப்பூக்கள் ஒரு தனி மனிதரின் மன வெளிப்பாடாக உருவாகியிருக்கிறது.

வலைப்பூக்களின் திரேதாயுக காலத்தில் - அதாவது 1997 ல் - Dave Winer - போன்றோர் பதிய ஆரம்பித்த காலத்தில் இப்படி தன்னிச்சையாக அவரவர் தானே ஒரு பதிப்பாளராக மாறுவது கேலிக்குரியதாக இருந்தது. ஆனால் இன்று இங்கிலாந்து பார்லிமெண்டில் விவாதிக்கக்கப்படும் அளவு blogs முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

சில நாட்கள் முன்பு Google புகழ் பாடி சுவாரசியமான கட்டுரை இணையத்தில் இருந்தது. ஆனால் கூடவே Google ஒழிக கோஷம் போட்டவ்ர்கள் கருத்தும் இருந்தது. ஒழிக கோஷம் போட்டவர்கள் - வேறு யார்? நூலகர்கள்தாம். நூலகத்திற்கு வேலை இல்லாமல் செய்துவிட்டது Google என்று இவர்கள் பொறுமினார்கள். "இவர்கள் பொறுமலில் அர்த்தம் இல்லை. என்ன இருந்தாலும் பழைய நூல்கள் தேடி நூலகம் சென்றுதானே ஆக வேண்டும்?" என்று ஒரு நூலகர் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார். " அவர்கள் கவலை நியாயமானதுதான். இது ஒரு இயற்கையான பரிணாம வளர்ச்சிதானே! நூலகத்திற்கு தேவையில்லாமல் போகும் காலம் வரலாம் - பழைய நூல்கள் அனைத்துமே எலக்டிரானிக் வடிவில் மாறும்போது. ஓலைச் சுவடியிலிருந்து பிரிண்டிங் பிரஸ்ஸ க்கு மாறவில்லையா? " என்றார்.

எனவே பொது மக்களே!! வருங்காலத்தில் உங்கள் கொள்ளுப்பேரன் படிக்க வசதியாக எதற்கும் ஒரு வலைப்பூவை இன்றே ஆரம்பித்து வையுங்கள் !!! :-)

Monday, March 08, 2004
 


கண்ணன் பார்த்தசாரதியின் கை(&கண்)வண்ணம்.
அவரிடம் கேட்காமல் சுட்டதற்கு மன்னிப்பார் என்ற நம்பிக்கையுடன் -காசி


 
ஒரே அரண்டு போயிருக்கிறேன். பின்னே என்னங்க.. மதி ஏதேதோ எழுதி என்னை ஆசிரியராக தண்டோரா போட்டு அறிவிச்சிட்டாங்க. இதுக்கு முன்னாடி ஆசிரியராக இருந்தவங்க எல்லாம் பிரமாதமாக ஜமாய்த்திருக்காங்க.... ரொம்ப ரசித்து படிச்சிருக்கேன். நம்ப எப்படி செய்யப்போறோம் ன்னு ஒரே உதறல். அதுல பாருங்க.. என்னோட "அலைகள்" ரொம்ப உக்கிரமோ அல்லது ரொம்ப சாதுவோ தெரியலை.. யாரும் அதிகமா இந்த அலைகள் பக்கம் வருகை தருவது இல்லையே..... நம்ப ஆசிரியராக இருக்கும் ஒரு வாரமும் வலைப்பூ பின்னூட்டம் பகுதி சஹாரா பாலைவனம் மாதிரி ஆயிடுமோ என்று பயம் கிடந்து வாட்டுது.

இதுலே வேற, நான் இன்று காலைதான் ஊர் பக்கமெல்லாம் போய்விட்டு ( சொந்த ஊர் திருச்சி பக்கம் - தொட்டியம் பக்கம் - அரசலூருங்க) மலைக்கோட்டையில் ( அதாங்க, rockfort express) வந்து இறங்கியிருக்கிறேன். இப்பதான் நம்ப கணினியிலே இருக்கிற தூசி, ஒட்டடையெல்லாம் சுத்தம் பண்ணிட்டு இருக்கேன். தோ... வந்திடுறேன்.... கொஞ்சம் பொறுங்க.....

இருங்க இருங்க.. ஒரு மினிட்.. ( அப்பாடா..... 'நிமிஷம்' என்பதற்கு "கரெக்டான" வார்த்தை வந்து விழுந்துவிட்டது) முதல்ல, வலைப்பூ பதிக்கும் பெண் பதிவாளர்களுக்கும், பதியாவிட்டாலும் "பூக்கள்" படிக்கும் வாசகிகளுக்கும் என் மனமார்ந்த "பெண்கள் தின வாழ்த்துக்கள்".

Sunday, March 07, 2004
 

 
இவ்வாரம் வலைப்பூ ஆசிரியராக வருபவர் ஒரு பத்திரிகையாளர். ஏறக்குறைய 750 கட்டுரைகளை எழுதி இருக்கிறார். இன்னமும் எழுதிக்கொண்டே இருக்கிறார். மும்பை, டெல்லி, கொச்சின், பூட்டான், சிங்கப்பூர், டான்சானியா என்று காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்த இவர் இப்போது வசிப்பது சென்னையில். குட்டி சோகம் இரண்டு மகன்களும் அருகில் இல்லையே என்பது. கடந்த வருடம்தான் இவரின் இரண்டாவது மகன் ஸ்டான்·போர்டுக்குப் பறந்து சென்றார்.

இந்தியாவில் Economic Times, Times of India, Hindustan Times, Pioneer, Financial Express, Industrial Economist, U, குமுதம், குங்குமம், கல்கி சிங்கப்பூரில் Business Times, Peak Magazine, Property Review, Asia 21 மற்றும் தமிழ் முரசு ஆகிய இதழ்களில் எழுதியிருக்கும்/எழுதும் இவர் திசைகள் இணையப்பத்திரிகையிலும் எழுதுகிறார்.

இது மட்டுமல்லாது ஆல் இண்டியா ரேடியோவில் காலை நிகழ்ச்சிகளுக்கும் எழுதி இருக்கிறார்.

இத்தனை செய்திருந்தாலும் இவர் பெருமைப்படும் விஷயம் - 1992ல் NCERT 14-16 வயதுள்ள பள்ளி மாணவருக்காக ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதப் பணித்ததுதான். "Potreyal of Women in Tamil Fiction' இதுதான் இவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு. (இந்தப் புத்தகம் மற்றும் அதனையொட்டிய அனுபவங்களையும் இங்கே விலாவாரியாகப் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் அலையாக வந்து நம்மனதைக் கொள்ளை கொள்ளும் அருணா ஸ்ரீனிவாசனை இவ்வார வலைப்பூவிற்கு ஆசிரியராக இருக்குமாறு அன்புடன் வரவேற்கிறேன்.


 

அனைவருக்கும் வணக்கம்

 
தமிழ் வலைப்பதிவுகள் போக வேண்டிய தூரம் அதிகம்தான். முன்னெடுத்துச் செல்ல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். என்னைப்போல வலைப்பதிவு ரசிகர்களும் இருக்கிறார்கள். 'இதை எப்படிச் செய்வது. என்னாலும் முடியுமா பார்க்கிறேன்' என்று முயன்று கொண்டிருக்கும் ஆர்வம் மிக்க புதியவர்கள் (வலைப்பதிவுக்குப் புதியவர்கள், மற்றபடி எதிலும் யாரும் குறைந்தவர்களில்லை) இருக்கிறார்கள். நம் அனைவரின் கூட்டுறவுடன் ஒருவருடன் ஒருவர் அறிமுகம் பெறும் மேடையாக, மதி அமைத்துக் கொடுத்த இந்த 'வலைப்பூ' இருக்கிறது. தூரம் அதிகமென்றாலும் பாதை தெளிவாக இருக்கிறது. கடந்துவந்த தூரமும் நீண்டதே. இதையெல்லாம் பார்க்கும்போது மனதுக்கு மிக மகிழ்வாக இருக்கிறது.

ஆறுமாதங்களுக்கு முன் நானும் வலைப்பதிவு ஆரம்பிக்க எண்ணியபோது எழுந்த கேள்விகளான 'யுனிகோடா, திஸ்கியா?', 'எங்கே கிடைக்கும் தமிழ் எழுதும் வசதி?', 'எப்படிப் படிப்பவர் திரையில் தமிழ் தெரியச் செய்வது?' போன்ற கேள்விகள் இன்று பரிணாமம் அடைந்திருக்கின்றன. 'செய்தி ஓடைத் திரட்டிகள், பின் தொடர்பு வசதிகள்' பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறோம். ஆனாலும் இன்னும் பழைய கேள்விகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. இன்று புதிதாய் ஒருவர் வலைப்பதிக்க வந்தால், அவருக்கும் அதே கேள்விகள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. முன்பு அந்த இடர்களைக் கடந்தவர்கள் இந்த 'வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விக'ளுக்கு ஓரிடத்தில் பதில்களை திரட்டிவைப்பதன் மூலம் உதவப்போகிறோம்.

எந்தப் பிரதிபலனும் பாராமல் மதி கந்தசாமி ஏற்படுத்தி நிர்வகித்து வரும் 'வலைப்பதிவுகள் பட்டியல்' மற்றும் இந்த 'வலைப்பூ' சஞ்சிகை இரண்டின் பங்களிப்பு சாதாரணமான ஒன்றல்ல. மேலதிகமாய் தமிழ்க் கருவிகள், சிறுவிளக்கங்கள் என்று அவர் ஏற்படுத்தி வைத்திருந்தவை என்னைப்போலப் பலருக்கும் ஊன்றுகோலாக இருந்தன. இதற்கெல்லாம் தேவைப்படும் உழைப்பும் கொஞ்சமல்ல. அதிலும், இன்னும் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை, அவர்களின் தொழில்நுட்ப அறிவின் வீச்சு, பதிக்கப்படும் பொருட்களின் பரவல் அனைத்தும் வளரும்போது இந்தப் பணி இன்னும் நிறைய உழைப்பை எதிர்பார்க்கிறது. இந்த உழைப்பில் என்னாலும் ஏதாவது பகிர்ந்துகொள்ளமுடிவதில் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. மதி அளவுக்கு பரவலாக அறியப்படாவிட்டாலும், 'என் ராசிப்படி' :) நான் கேட்டு யாரும் மறுக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையில் இந்த சஞ்சிகையில் பின்னணிப் பணிகளை இனி நானும் பங்குபோட்டுக்கொள்ளப்போகிறேன்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'தமிழ் வலைப்பதிவு விக்கி' என்ற தகவல் களஞ்சியம் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறது. தமிழ் வலைப்பதிவுகள் பட்டியல் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது. அதை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்றும் நிறைய ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. இந்த 'வலைப்பூ' சஞ்சிகையும் தொடர்ந்து நம் அனைவரின் கூட்டுறவுக்குப் பாலமாய், அறிவுக்கும் அறிதலுக்கும் ஊடகமாய் தன் பணியை இன்னும் சிறப்பாகச் செய்யப் போகிறது. இவற்றையெல்லாம் பற்றி நம் அனைவருக்கும் என்னைப் போலவே கனவுகளும் இருக்கின்றன. வரும் நாட்களில் அனைவரின் பங்களிப்புடன் இவையெல்லாம் கட்டாயம் நடக்கும், இன்றைக்கு நூற்றுப்பதிநான்கு பதிவுகள் நம் பட்டியலில் உள்ளன. அவை ஆயிரத்தை, பத்தாயிரத்தைத் தாண்டி மின்னம்பலத்தில் நம் தமிழ் பொங்கிப்பெருக, நம் தமிழ் மக்கள் வாழ்வை ஆவணப்படுத்தும் கருவிகளாக வலம் வர நம் அனைவரும் நம்மாலானதைச் செய்வோம் என்ற நம்பிக்கையுடன் நானும் வலைப்பூ சஞ்சிகையில் பொறுப்பேற்கிறேன்.

அனைவருக்கும் நன்றி.

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com