<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, February 21, 2004

வெங்கட்டின் மூன்றாம் வலை

 
பல அரிய நூல்களையும் ஆவணங்களையும் சேமித்து வைக்கும் தன்னலமற்ற தொண்டிற்கும் , வலைப்பதிவுகளுக்கும்இருக்கும் தொழில்நுட்ப ரீதியான வேறுபாட்டினை, வெங்கட் விளக்கி இருக்கும் விதம் அருமையானது. இதை தமிழில் பயிற்சியும், அதே சமயம் தொழில் நுட்பத் திறனும் ஒருங்கே பெற்ற வெங்கட் அன்றி இதை வேறு ஒருத்தர் சிறப்பாக செய்ய முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் என் எதிர்வினை அதைப் பற்றியதல்ல. வலைப்பதிவுகளின் நோக்கம், மற்றும் சாத்தியக் கூறுகள் பற்றி வெங்கட் சொன்ன கருத்துக்களில் எனக்கு சில அபிப்ராயபேதங்களுண்டு.

மனதில் தோன்றிய எண்ணங்களை உடனடியாக உடனடியாக வலையில் ஏற்றும் ஒரு செய்கை ". இதில் "உடனடியாக" என்பது முக்கியம். என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். வலைப்பூக்களின் தொழில்நுட்ப சாத்தியங்களின் படி இந்த " உடனடியாக" என்கிற அம்சம் நமக்கு ஏதுவாகிறது. அந்த சாத்தியங்களைக் கொண்டு, வலையில், public domain இல் இன்னதுதான் எழுதப்படவேண்டும் என்கிற ஒரு நெறிமுறை அவசியம் இல்லையா?

சிற்சில வலைப்பூக்களில், மனதில் தோன்றிய எண்ணம் என்கிற பெயரில் சுயபிரலாபங்கள் அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ( என்னுடைய வலைப்பதிவு உட்பட). வெங்கட் எழுதியிருப்பதை வைத்து, எழுதுபவனின் சொந்த விருப்பு வெறுப்புகள், சார்பு நிலைகள், எழுதும் நேரத்தில் ஒருத்தருடைய மனோநிலை இவற்றை gauge செய்வதற்கு உபயோகப் படும் என்று நான் அர்த்தம் செய்து கொள்கிறேன்.

this is true. but is it correct ?

இந்த வலைப்பதிவுகள் உள்ளடக்கிய தமிழ் தொழில் நுட்பத்தின் இரண்டு பக்கமும் இரண்டு வகையான ஆசாமிகளைப் பார்க்கலாம். எல்லாம் தெரிந்தவர்கள் ஒருபுறம். ஒண்ணும் தெரியாத வெறும் பயனாளிகள் மற்றொருபுறம். கொஞ்சம் லென்ஸ் வைத்து உற்றுப் பார்த்தால், அந்த பிரிக்கும் கோட்டின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் என் போன்ற இரண்டும் கெட்டான்கள் கொஞ்சம் பேரை பார்க்கலாம். அப்படிப்பட்டவன் என்கிற வகையில், நான் வலைப்பூக்கள், என் வரையில் எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்று சிந்தித்துப் பார்க்கிறேன்.

1. வலைப்பதிவு செய்ய அடிப்படை கணிப்பொறி அறிவு மட்டும் போதும். முழு இணையத் தளத்தை நிர்மாணிக்கும், மேற்பாவை செய்யும் தொழில்நுட்பம் தெரியத்தேவையில்லை.
2. கூடுதலான கட்டணம் ஏதும் தேவையில்லை.
3. வலைப்பதிவு செய்பவன், தன்னளவில், உலக முழுமைக்குமான ஒரு பதிப்பாசிரியன் ஆகிறான்

இது போன்ற ஒரு சக்தி மிகுந்த ஊடகத்தை, " எண்ணங்களைப் பதிவு " செய்வது என்ற ஒரு குறுகிய நோக்கத்தில் கட்டிப் போடுதல் தகுமா? எண்ணங்களைப் பதிவு செய்தல் என்பது தவறான ஒன்றல்ல. ஆனால், இந்த வலைப்பதிவுகளின் முக்கியப் பயனாக அதைக் குறிப்பிடுவது தான் சற்று நெருடலாக இருக்கிறது.

இரண்டொரு வாரங்களுக்கு முன்பு, பத்ரி, சில ஆங்கில வலைப்பூக்களைப் பற்றி இங்கோ அல்லது தன்னுடைய வலைப்பதிவிலோ எழுதியிருந்தார். ( சரியாக நினைவில்லை. ) அதிலே ராஜேஷ் ஜெயின் என்பவருடைய வலைப்பதிவு பற்றிக் குறிப்பிட்டிருந்தது. பத்ரி எத்தனையோ எழுதுகிறார். அதிலே இதுவும் ஒன்று என்பதாகத் தான் படித்து விட்டு, ஒருதரம் இங்கே சென்று பார்த்து விட்டு மறந்து விட்டேன்.

(பின்னர் நாளிதழ் ஒன்றில் இதனைப் பற்றிய ஒரு செய்தி ஒன்றைப் பார்த்தேன்).
வலைப்பதிவுகளின் சாத்தியங்கள் பற்றி, அவர் எழுதியிருக்கும் கட்டுரையைப்பார்த்ததும், . நாம் எப்போது இது போல தமிழில் செய்யப் போகிறோம் என்ற ஏக்கம் பிறந்தது. ஆனால், blogs are for personal use என்பதாகத்தான் வெங்கட் கருதுகிறாரென்று நினைக்கிற போது, அது எனக்கு சற்று நெருடலாகத் தான் இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். போன்ற செய்தியோடை வசதிகள் கொண்டு ஒரு பின்னல் ( network), தொழில் சார்ந்த, துறைகள் சார்ந்த தனித் தனி வலைப்பதிவுகள் உருவாக்க உதவி செய்வது, உருவாக்கி, பின் அவற்றையும் இணைப்பது ( a ring of niche weblogs), வலைப்பதிவுகளுக்கான நெறிமுறைகளை ( code of conduct) வகுப்பது போன்றவர்களை பிதாமகர்களிடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இந்த நேரத்தில் போய்.......

அன்புடன்
பிரகாஷ்

Thursday, February 19, 2004

மைலாப்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை

 
சில நடைபாதைக் குறிப்புகள்

எனக்கு சினிமா பாட்டு என்பது சினிமா இசைதான். பெரும்பாலான பாடல்களைக் கேட்ட மாத்திரத்திலேயே, இன்னர் இசை என்று கண்டு பிடிக்க முடிந்து விடுகிற எனக்கு, பாடல்வரிகளை க்கொண்டு அதை எழுதியவர் யார் என்று கண்டு பிடிக்க முடிந்ததில்லை. ( ஏற்கனவே அறிந்திருந்தால் ஒழிய) . ஆனால் வைரமுத்துவின் பாடல்களை மட்டும் எளிதில் அடையாளங்கண்டு கொள்ளலாம். :-)

இப்படிப்பட்ட ஒரு குறை என்னிடம் இருக்கிறது என்ப்து தெரியாமலேதான் கவிஞர் யுகபாரதி எனக்கு அறிமுகமானார். எனக்கு கவிதைகளில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை என்பது தெரிந்ததும் நண்பரானார். யுகாபரதியிடம் மன்மத ராசா தவிரவும் பேசுவதற்கென்று பல விஷயங்கள் இருக்கின்றன என்பது இரண்டு வாரங்களுக்கு முன்பு தெரிந்தது. வழக்கம் போலவே நண்பர்கள் அனைவரும் மைலாப்பூரில் ஒரு இடத்தில் கூடி, இலக்கியம் வம்பு, தமிழ் லினக்ஸ், அழகியசிங்கருடன் டிஸ்கஷன், கவிஞர் சிபிச்செல்வனுடன் பத்திரிக்கை உலகம், ராகவனின் சமீபத்திய விருது என்று பேசி முடித்து , யுகபாரதியுடன் வைரமுத்து பற்றிய ஆக்ரோஷமான விவாதம் ஒன்றில் ஈடுபட்டிருந்த போதுதான் வீடு திரும்ப வேண்டும் என்று நினைவு வந்தது.

" சார், நீங்க கோடம்பாக்கம் தானே? வாங்க போகலாம்...

" அப்ப நீங்க?

" நான் கோயம்பேடு, சின்மையாநகர் "

" நல்லதா போச்சு... கொஞ்ச தூரம் பேசிகிட்டே நடந்துட்டு ஆட்டோ பிடிச்சிட்டு போகலாமா "

" தாராளமா கவிஞரே! பேசிக்கிட்டே நடப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும் "

ராதாகிருஷ்ணன் சாலையில் பேசிக்கொண்டே துவங்கிய நடை பயணம், கோடம்பாக்கம் மேம்பாலத்தின் துவக்கம்
வரை நீண்டது

" சார், இப்படி பேசிக்கிட்டே நடந்து இவ்வளவு தூரம் வந்துட்டோமே? பேச்சு சுவாரஸ்யத்துலே ஞாபகமே வரலீங்க.
சாரி "

"பிரகாஷ் சார், இதெல்லாம் எனக்கு புதுசு இல்லே. எல்லாரும் சொல்றதுதான்னாலும், நானும், சென்னைக்கு வந்த புதுசுலே, கஷ்டத்துலே, நடந்தே பல இடங்களுக்கு போனவன் தான் . நான் சினிமா பாட்டெழுத வந்தது ரொம்ப எதேச்சயாய் நடந்த விஷயங்க. என்னுடைய சிக்கல் என் வீட்டில் இருந்தே துவங்குச்சு. அம்மா சாமி கும்புடுவாங்க, அப்பா பக்கா கம்யூனிஸ்ட். வீட்டுலே சோவியத் புஸ்தகம் எல்லாம் நிறையக் கிடக்கும். அதுவும் இல்லாம, எங்க தஞ்சாவூர் பக்கத்து இலக்கியவாதிங்க ரொம்ப பேர் இருக்காங்க. கோயில் பக்கத்துலே, தஞ்சை பிரகாஷ் இருப்பார். கிட்டதட்ட எனக்கு ஒரு ஹீரோ மாதிரின்னு வெச்சுக்கங்களேன். பல புஸ்தகங்களை காமிச்சுக் குடுத்தவர் அவர்தான். அவரைச் சுத்தி எப்பவும் ஒரு பத்து பேர் இருப்பான். நானும் இருப்பேன். அங்க இருந்தவங்களிலேயே சின்ன வயசுக்காரன் நான் தான். அங்க போனாலே அப்பா திட்டுவார். வீட்டுக்குத் தெரியாம போவேன்.

" ஒரு நெஜத்தை சொல்லட்டுங்களா? நான் சென்னைக்கு வரும் வரை, எனக்கு கணையாழின்னு ஒரு பத்திரிக்கை இருக்குன்னே தெரியாது. பிறகுதான் தெரிஞ்சுகிட்டேன். மொதல்ல வேலைக்கு சேந்தேன். அப்ப . கி.க வீட்டிலே இருப்பார். வந்திருக்கிறதை எல்லாம் அவருக்கு வாசித்து காமிப்பேன். அவர் சிலதை செலக்ட் செய்வார். எப்படி இருக்குன்னு என்கிட்டே கேப்பார். நல்லா இருக்கிறதை நல்லா இருக்கு, பிடிக்கலன்னா, பிடிக்கலைன்னும் சொல்லுவேன். அப்படியே கொஞ்ச நாளானதும், எடிட்டோரியல் பொறுப்புக்கு வந்தேன். அந்த சில வருஷங்கள் தான் எனக்கு தமிழ் இலக்கிய உலகத்தை முழுசா அறிமுகப் படுத்தியது. 1998 லேந்து, 2003 வரை அங்க இருந்தேன். "

" பெரிய எழுத்தாளர்களின் வினோதமான குணாதியசங்கள், அவங்களோட அன்பு, கோபம், எழுத்தாளர்களின் பலம், பலவீனம், பொறாமை, கணையாழி போன்ற பத்திரிக்கைகள் சந்திக்கவேண்டிய சிக்கல்கள், விருது கொடுப்பதின் பின்னால் இருக்கின்ற திரைமறைவு வேலைகள், என்று எல்லா எல்லைகளையும் , அந்த பொறுப்பிலே இருந்த போது கிட்ட நின்னு பார்த்தேன். "

"பிடிச்ச எழுத்தாளர்னா, அது புதுமைப்பித்தன் தான். சிறுகதைகளில் அவர் தொட்ட எல்லைகளை இன்னும் ஒருத்தர் தொடலைங்கறது என்னோட நம்பிக்கை. அது மாதிரி கவிதைகளிலே பாரதியார். "

" சும்மா வைரமுத்து பற்றி , குறை சொல்லணுமேங்கறதுக்காக, குறை சொல்லக் கூடாது. அவரோட சினிமா பாடல்கள் பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனக்கும் இருக்குது. ஆனால், அந்த கருத்துவேறுபாடுகளை முன்னிறுத்தி, அவரது படைப்புத்திறமையை ஒட்டு மொத்தமா சந்தேகிக்கக்கூடாது. உதாரணத்துக்கு, கள்ளிக்காட்டு இதிகாசத்தில் வரும் சில விஷயங்கள்,, அந்த மக்கள் வணங்கும் தெய்வங்கள், ஆகாரம், பயன்பாட்டில் இருக்கும் சில பிரயோகங்களில் இருக்கு நுட்பம் இதல்லாம், அந்த மண்ணிலே பொறந்து வளந்த வைரமுத்து தவிர, வேற யாராச்சும் இத்தனை அழகா பதிவு பண்ணமுடியுமா?

" ஒரு நிமிஷம் பாரதி, க.கா.இதிகாசத்துக்கு விருது கிடைச்சதிலே, என்னமோ கான்டிரவர்ஸின்னு...

( இடை மறித்து..) " நோ கமண்ட்ஸ் " என்கிறார் சிரித்துக் கொண்டே.

" சரி, மேலே சொல்லுங்க..."

" அவரோட பாடல்களிலேயும் ஒரு தனித்திறமை தெரியும். உன்னிப்பா பார்த்தீங்கன்னா, அவர் தேர்ந்தெடுக்கிற சொற்கள், பொருத்தமா உபயோகிக்கறது, ஓசைநயத்தை கவனிச்சு வரிகளை எழுதறது இதல்லாம் தான் அவரோட திரைப்பாடல்களின் வெற்றிக்கு அடிப்படை.."

" நான் கோயமுத்தூர்ல ஒரு மீட்டிங்குக்கு போயிருந்த போது, கேள்வி - பதில் செஷன்லே நான் கலந்துகிட்டேன். கொஞ்சம் அனுபவத்துலே, எனக்கு எந்த மாதிரி கேள்விகள் எல்லாம், வரும்னு ஒரு ஐடியா இருந்தது. எதிர்பார்த்த கேள்வி வந்தது. கனாக்கண்டேனடி தோழி பாட்டு எழுதிய நீங்க எப்படி மன்மதராசா பாட்டு எழுதினீங்கன்னு ஒருத்தர் கேட்டார். அதுக்கு நான், ரெண்டு பாட்டிலேயும் தப்பு இல்லீங்க. சினிமாவுக்கு பாட்டு எழுதும் போது, அந்த அந்த சூழ்நிலைக்கு ஏத்த மாதிரிதான் பாட்டு எழுதணும். எங்களுக்கு வேற சாய்ஸ் இல்லேங்கற மாதிரி சொன்னேன். இந்த கேள்விக்கு இது போலத்தான் பதில் சொல்ல முடியும்,."

" மன்மத ராசா பாட்டு இத்தனை வெற்றியடையும்னு நான் சத்தியமா நினைக்கலை. இது போன்ற வெற்றிகள், எனக்குள்ளே இருக்கிற கவிஞனுக்கு அச்சத்தைக் கொடுக்கின்றது. நான் எழுதிய பாடல்களின் பல படங்களை இது வரை நான் ஒருமுறை கூட பார்த்ததில்லை.. "

"நல்லா சினிமா பாட்டு எழுதணும்.. நல்ல கவிதை எழுதணும்...நிறைய படிக்கணும்... "

" இப்ப நல்லா சான்ஸ் வந்துட்டு இருக்கு, கில்லி, ஜி, மதுரை, கவிதை, சேட்டை, அர்ஜுனா, துள்ளல், சதுரங்கம், ஜனா, ஆனந்தப் புன்னகை, அழகியதீயே அப்படின்னு கிட்டதட்ட ஒரு இருபது படங்களுக்கு மேலே எழுதிட்டு இருக்கேன் "

" இன்னும் கல்யாணம் ஆகலீங்க... இன்னும் ரெண்டு வருஷம் ஆகும் ... "

அவரவர் வீடு வந்து பிரிந்த போது மணி பத்தரை.

அன்புடன்
பிரகாஷ், சென்னை

கொஞ்சம் சினிமா...

 
நான் தினமும் காபி குடிக்கும் இடம் கிளப் என்றால், அவ்வப்போது டீ அடிக்கும் இடம் teakada.com. நல்ல சுவாரஸ்யமான இடம். இது போல தமிழிலும் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒருமுறை பாலாஜி சொல்லி இருந்தார். யாராச்சும் சீக்கிரமா ஆரம்பிக்கப்பா. நானும் ஒரு கை கொடுக்கிறேன்,. இணையத்தில் சினிமா அடிக்கடி இடம் பெறுகிறது என்றால் அது பெரும்பாலும் விமர்சனமாக இருக்கும். அல்லது பிடித்த படங்களின் லிஸ்டாக இருக்கும். இந்த பிடித்த பத்து என்பது ஆறுமாசத்துக்கு ஒருமுறை இணையத்தில் வலம் வரும்.

எனக்கு பங்குபெறத் தோன்றினால், நானும் என்பங்குக்கு , உதிரிப்பூக்கள், மெட்டி, கண்சிவந்தால் மண்சிவக்கும், வீடு, சாவித்ரி, சில நேரங்களில் சில மனிதர்கள், என்று ஆரம்பித்து சில படங்களை எழுதுவேன். இவை நிஜமாகவே எனக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின படங்கள். இந்தப் படங்கள் அனைத்தையும், இரா.மு அண்ணன் சொல்கிறார் போல ஷாட்-பை-ஷாட்டாக அலசமுடியும். திடீரென்று மற்றொரு ஞானோதயம் நேற்று இரவு ஏற்பட்டது. நேரம் இருந்தால், ஒரு காட்சு விடாமல், எத்தனை முறை வேண்டுமானாலும், பார்க்க முடிகின்ற படங்கள் என்று சிலதை ஒதுக்கி வைத்திருந்திருக்கிறேன். அவையாவன,

1. நினைவில் நின்றவள்

2. திருவிளையாடல்

3. சபாபதி

4. பொம்மலாட்டம்

5. காதலிக்க நேரமில்லை.

6. காக்கிச்சட்டை

7. தில்லுமுல்லு

8. மௌனராகம்

9. காசேதான் கடவுளடா

10. பணக்காரக்குடும்பம்.

முன் சொன்ன அந்த சொபிஸ்டிகேட்டட் பட வரிசைக்குக் இந்த லிஸ்ட்டுக்கும் சம்மந்தமே இல்லை. முதல் லிஸ்டில் இருக்கிற படங்களை விடவும், இரண்டாவது லிஸ்ட்டு படங்களைத்தான், நேரங்காலமில்லாமல், சிடியில் அடிக்கடி பார்த்துத் தள்ளி இருக்கிறேன். அப்படி இருந்தும், யாராவது பிடித்த படம் என்று கேட்டால் தன்னிசையாக முதல் லிஸ்ட்டு தான் நினைவுக்கு வருகிறது.

am i an hypocrite?

அன்புடன்
பிரகாஷ்

Wednesday, February 18, 2004

சில எண்ணங்கள்....

 
பின் நவீனத்துவமும், பின்ன ஈனத்துவமும்.

ஜெயமோகனாருக்கு, பெயரிலியும் லேசுபட்டவரில்லை என்று தான் தோன்றுகிறது. போஸ்டு மாடர்னிஷம் பத்தி முன்னவர் சொல்வது லேசில் விளங்கிக் கொள்ள முடியாது ( என்னால்) என்றாலும் எழுதியவருக்கு விளங்கும். ஆனால் பின்னவர் சொல்வது அவருக்காவது விளங்க வேணுமே என்பது தான் என் கவலை. (அய்யம்பெருமாள் கோனார் வழியிலே போகணுமா நான்னு அடுத்த போஸ்டிங்கிலே எதிர்பார்க்கிறேன் :-) )

ஜெயமோகனார், அவருடைய தகப்பன்சாமி, இன்ன பிற எழுத்தாள விமர்சன திலகங்களும் (லிஸ்ட்டும் வேணும் என்றால், திண்ணை இல் இருந்து உருவித் தருகிறேன்) மொத்தமாக ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள். பத்தி பத்தியாக மேல்நாட்டு எழுத்தாளன் பெயரை எல்லாம் எடுத்துக்காட்டி, அந்த இசம், இந்த ரசம் எல்லாவற்றையும் போட்டு உழப்பி எடுக்கும் அத்தனை மகானுபாவர்களையும் நின்னமேனிக்கு கேள்வி கேட்கும் ஒரு கட்டுரையை கடந்த நாலுமாசமாக எழுதி வருகிறேன். ('ஒரு வாசகனின் அலறல்' என்பது அப்போது வைத்த தலைப்பு. மாற்றி விட எண்ணம்). இணையத்தில் வெளியானால் அடுத்த நாளில் இருந்து நான் ரிடையர் ஹர்ட் ஆக வேண்டி இருக்கும் :-)

0

முகமூடிகள் பற்றி ராகாகியில் சில விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த முகமூடிகளை சமீபத்தில் அடிக்கடி பார்க்க முடிகிறது. முன்னேற்றம் என்ன என்றால், இப்போது முகமூடிகளெல்லாம், ஆமாம், நான் முகமூடி தான் என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டே வருகின்றனர். கொஞ்ச நாளைக்கு முன்னால் எனக்கு ஒரு மடல் வந்தது. " ஹை... கண்டு பிடிச்சுட்டேன்... நீங்கதானே அதுன்னு....? அடப்பாவியளா.... "

நானே, நெட்டுல படிக்கற நேரத்தை ஜாஸ்தி பண்ணிட்டு, எழுதற நேரத்தை கொறச்சுகிட்டு இருக்கிறேன். எதை எழுதினாலும், அது அடல்ஸ் ஒன்லி ஜோக்கா இருக்கட்டும், ஆசாரக்கோவை விளக்கமா இருக்கட்டும், அது என் கிரெடிட்டோட வருவதைத்தான் விரும்புகிறேன். என்னை போய் முகமூடி என்று சந்தேகப்பட ஒருத்தனுக்கு, சாரி, ஒருத்தருக்கு எப்படித்தான் தோன்றியதோ தெரியல்லை.

இப்படி சொல்லும் போது, நான் முகமூடி என்கிற இணையக் கலாசாரத்த்தை எதிர்த்துக் கொடி பிடிக்கிறவன் அல்ல. அவரவருக்கு அவரவரர் நியாயம். எது ரைட்டு எது ராங்கு என்று சொல்ல நான் என்ன எம்சிஆரா?

இது போன்ற அனாதை மடல்களை எழுதுபவர்கள் யார் எவர் என்று கண்டு கொள்வது அத்தனை கஷ்டமான காரியமில்லை. பிரபலமாக இருக்கும் நாலைந்து குழுக்களின் அனைத்து மடல்களையும் வாசித்தவர் யாரும், கொஞ்சம் மூளையை உபயோகித்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். சில வார்த்தைப் பிரயோகங்கள், வலிந்து மாற்றி எழுதினாலும், அவ்வப்போது காட்டிக் கொடுக்கும் நடை, மற்ற சில தடயங்கள் போன்றவற்றை வைத்து கண்டு பிடிப்பது எளிது. corporate espionage, business intelligence போன்ற விஷயங்களில் வேலை செய்தவன் என்கிற முறையில், இந்த துப்புத் துலக்கல் ரொம்ப சுவாரசியமானதும் கூட. ஆனால் அப்படிச் செய்வதனால் ஆய பயன் என்னா?

ஒண்ணும் இல்லை.


0

கிரிக்கெட் பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை ஒன்றை ஒரு வணிக நாளிதழில் பார்த்தேன். அந்தக் கட்டுரையின் நோக்கம், கிரிக்கட்டில் புழங்கும் பணம் பற்றியது. அதில் இருந்து, சில தகவல்கள்.

* சச்சின் டெந்துல்கரின் ஆண்டு விளம்பர வருவாய் - 20 கோடி ரூபாய். கங்கூலியின் ஆ.வி.வ - 80 லட்சம் ரூபாய்.

* இந்தியாவிலேயே அதிகமான விளம்பர வருவாய் கொண்டவர் அமிதாப்பச்சன் - ஆண்டு விளம்பர வருமானம் - 35 கோடி ரூபாய்.

* பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு ஆட்டக்காரருக்கு , டெஸ்ட்டில் விளையாட சம்பளம் - 15,000 ரூபாய்கள்.
ஒரு நாள் போட்டியில் - 10,000 ரூபாய்

* உலகக் கோப்பை போட்டி நடக்கும் போது, முக்கிய விளம்பரதாரரின் ( பெப்சி) brand recall rate 47% ( டேங்கப்பா). ஆனால் போட்டி முடிந்த சில நாட்களில் அதே விளம்பரதாரரின் brand recall rate வெறும் 2% மட்டுமே ( much ado about nothing? :-) )

* இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( BCCI ) தான் உலகிலேயே மிக பணக்கார கிரிக்கெட் வாரியம். போன வருடம் அதன் வருமானம் 30 கோடி ரூபாய். நிகர லாபம் 25 கோடி ரூபாய் ( இதே BCCI, 1993-94 இல் 80 லட்ச ரூபாய்க் கடனில் சிக்கித் தவித்தது. )

அன்புடன்
பிரகாஷ்


நானும் வலைப்பூக்களும்

 
இணையக்குழுக்கள் போலவே நானும் வலைப்பூக்களுக்கு கொஞ்ச லேட்தான். எல்லாரும், வலைப்பதிவு ஆரம்பித்துக் கலக்கிக் கொண்டிருக்க, நான், இப்பவா அப்பவா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பஞ்சாங்கம் கிடைக்கவில்லை, நல்ல நாள் பார்க்க என்பதும் ஒரு முக்கியமான காரணம்.

அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரைப் பார்க்கும் போதெல்லாம் கை துறு துறுவென்று இருக்கும். இலவசமாக பட்டா தரும் அத்தனை மனைகளிலும் ஒரு பிளாட்டுக்கு துண்டு போட்டு வைத்திருந்தேன். சரி துவங்கலாம் என்று இருந்த போதுதான், இஸ்ட்டாப்ப்ப் என்று ஒரு குரல். உலகமே யூனிகோடு என்று ஆகிக் கொண்டிருக்கிறது இந்த நேரத்திலே டிஸ்கியா? கொஞ்சம் பொறும், நான் வந்து யூனிகொடில் ஒன்று சமைத்துத் தருகிறேன், நீர் போஸ்ட் செய்யும் என்று ஒரு ஆதரவுக்குரல்.

ரஜினிபடம், ஜாங்கிரி, முட்டை தோசை, oneacross.com, நினைவில் நின்றவள் திரைப்படம், கவுண்டமணி செந்தில் காமடி, பார்க்கர் பேனா போன்ற பிடித்த விஷயங்களுடன் யூனிகோடையும் சேர்த்துக் கொள்வது என்று அன்றைக்கே முடிவு செய்தேன்., என்றைக்கு? யூனிகோடு பாடம் படித்த அன்றைக்கே. ஆனால் கொஞ்ச நாளிலேயே, இந்த யூனிகோடை, கமல்படம், லட்டு, ரவா உப்புமா, எஸ்.எஸ்,சந்திரன் காமடி, வாழைப்பழம், போன்றவை இருந்த லிஸ்ட்டில் சேர்த்து விட்டேன்.

எழுதுனமா, போஸ்ட் பண்ணமா என்று இல்லாம, அதில் இருந்த நச்சு ( விஷம் அல்ல ) வேலைகளும், அதற்கு ஆன நேரமும் தான் காரணம்.

"ஓப்பன் ஆபீஸ் போட்டுகோ, எல்லாம் சரியாயிடும்... "

என்று சொன்னார்கள். வாஸ்தவம். போட்டால், என் சோனியான கணிணி, கார்டியாக் பேஷண்ட் போல ஆகி விடுகிறதே. மிஷனை அப்கிரேடு செய்யும் வரை பொறுமை காக்க வேண்டியதுதான்.

கொஞ்சம் ஏதாவது ஈசியான வழிமுறை இருந்தா சொல்லேன் என்று தமிழ்தொழில்நுட்பர் கிருபா ஷங்கரிடம் ஒருமுறை கேட்டேன், அவர் ஒரு முறை என் வீட்டுக்கு வந்திருந்த போது. அப்படி எதுவும் இல்லைங்க, இனிமே எதுனா செஞ்சாத்தான் உண்டு என்றார். சரி இன்னும் ஒரு ஹெல்ப், இப்ப யாஹூ க்ருப்ஸ்லே போஸ்ட் பண்றம் இல்லையா? அது போல, மெயில் வழியாவே, ப்ளாகை அப்டேட் செய்யறதுக்கு ஏதாவது டூல் இருக்கா என்று கேட்டேன். இவன் என்னடா வாழைப்பழ முழுச்சோம்பேறியா இருப்பான் போலிருக்கே என்கிற மாதிரி பார்த்தார். கொஞ்சம் ஆடித்தான் போனார். தோ வரேன் என்று டிவிஸ் சாம்ப்பை உருட்டிக் கொண்டே போனவரை இது வரை காணோம். வாரத்துக்கு மூணு தரம் போன் செய்கிறவரை மூணு வாரமா தேடிக்கிட்டு இருக்கேன். :-)

இலக்கியத்துக்கு ரெண்டு கட்சி தேவைப் படுது, ஒண்ணு, எழுதறவங்க, இன்னொண்ணு படிக்கிறவங்க. திட்டறவங்களையெல்லாம் கணக்குலே சேக்க முடியாது. அவங்க சுயேட்ச்சை. வலைப்பதிவுகளைப் பொறுத்தவரை, நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு ரெண்டாவது கட்சிதான்.

அன்புடன்
பிரகாஷ்

தடங்கலுக்கு வருந்துகிறேன்

 
முதல் நாள் வேலைக்கு சேர்ந்து, இரண்டாம் நாள் மட்டம் போட்டு விட்டு, மூன்றாம் நாள் மன்னிப்பு கேட்கிறாயே, நீ என்ன அரசாங்க உத்தியோகஸ்தனா என்று யாராவது என்னைக் கேட்கப்போகிறீர்களா? கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டேன்.

ஒரு நாள் முழுக்க கணிணிப் பக்கம் தலையைக் காட்ட முடியாதபடிக்கு சூழ்நிலை. அதான் வேற ஒண்ணு இல்லை. இனி இந்த வாரத்தில் இந்த தடங்கல் மீண்டும் வராது.

பீட் பாக்ஸ் பக்கம் வந்த நண்பர்களுக்கு நன்றி.

அன்புடன்

பிரகாஷ்

Monday, February 16, 2004
 ராயல் சல்யூட் to all of you ! ( on the rocks ....)

கல்யாணந்தான் கட்டிகினு திரிசா பிராட்டியாரோடு ஓடிப்போலாமா என்று அரைமயக்கத்தில், கணித்திரை முன்னால் யோசித்துக் கொண்டிருந்த போதுதான், மதியின் மின் கடுதாசு. காலி·ப்ளவர் பக்கோடாவைக் கடித்துக் கொண்டே, ஓப்பன் சீஸேம் என்றதும், '·ப்ரீயா? இந்த வாரம் எடிட்டர் போஸ்ட் காலி. வந்து எடுத்துக் கொள்கிறீரா என்று ஒரு ஓபன் எண்டட் ஆ·பர் வந்தது.

வஸ்தாதுகள் எல்லாம் அலங்கரித்த நாற்காலி. இதிலே நானா?

இன்னொரு குழப்பம்.

வலைப்பதிவே செய்யாத ஒரு வலைப்பதிவாளனுக்கு, வலைப்பூ ஆ·பர் வந்தா, வலைப்பதிவே செய்யாத அந்த வலைப்பதிவாளன், எந்த வலைப்பதிவைப் பத்தி தன்னோட புது வலைப்பூவிலே எழுதுவான்?

சரி. எடிட்டர் அவதாரம் எடுத்தாச்சு, இனிமே எதுக்கு இந்தக் கொழப்பக் கேள்வி எல்லாம்?

இந்த ஒரு வாரம் எதைப் பத்தி வேணாலும் எழுதுவேன். புது வலைப்பதிவுகளைப் பத்தியும் இருக்கலாம். (சக்ரமண்டோ சுந்தர்ராஜன், நம்ம அஜித் பாலகிருஷ்ணன் உபயத்துலே ஒண்ணு ஆரம்பிச்சுருக்காராம். {அஜித்து, நம்ம ரிடி·ப் தளத்தோட பொறுப்பாளி} போய்ப்ப்பாத்தேன் அட்டகாசமா இருக்கு.) அல்லது கில்மா மேட்டராவும் இருக்கலாம். அது என் மூடையும், உங்க கெட்ட நேரத்தையும் பொறுத்தது.

சீரியசாய் வலைப் பதிவு பண்ணிகிட்டு இருக்கிற, வெங்கட், பத்ரி, காசி, ரவிஸ்ரீனிவாஸ், பா.ராகவன், பாலாஜி, 'ஆழ்வார்' கண்ணன், போன்ற மெயின் மற்றும் உபதேவதைகள் இந்த ஒரு வாரத்துக்கு இந்தப் பக்கம் தலையைக் காட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அப்படியே வந்தாலும், ·பீட்பாக்ஸ் பக்கம் போய், இது ரொம்ப மோசம், வலைப்பூவின் தரம் கெட்டுப் போச்சு என்று வண்டி வண்டியாய் உபதேசம் செய்யவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அப்படி வந்தால் முடிச்சவிக்கவா டைப்பில் வெண்பா ஏதாவது வந்து உடனடியாய் பதில் தாக்குதல் நடக்கும். ( ஹ, வெண்பாவா, நீயா... என்று யாரோ கெக்கலிப்பது கேட்கிறது. probably peyarili. அந்தக் கவலையெல்லாம் வேண்டாம். அண்ணாநகர்க்காரரிடம் இருந்து கேட்டு வாங்கியாவது போடுவேன்).

வலைப்பூக்களைப் பற்றி நிறையப் பேர் நிறையப் பேசியிருக்கிறார்கள். எப்படி இருக்க வேண்டும் ஒரு வலைப்பூ என்பதைப் பற்றி பலரும் பல உருப்படியான கருத்துக்களைப் பேசியிருக்கிறார்கள். நான் அப்படிச் செய்யப் போவதில்லை. எப்படி இருக்க வேண்டும் என்பதை விடவும் ஒரு வலைப் பதிவு எப்படி இருக்கக் கூடாது என்பதைப் பற்றி எனக்கு சில கருத்துக்கள் இருக்கின்றன. உதாரணம் காட்டினால் நண்பர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது.

வெங்கட்டின் வலைபதிவு, காசியின் தொழில்நுட்ப சங்கதிகள், மதியின் ஆங்கில சினிமா, பெயரிலியின் அட்டகாசங்கள், வே.சபாநாயகத்தின் வலைப்பதிவுகள் என்று நல்ல சில விஷயங்களையும் அவ்வப்போது ஊறுகாய் மாதிரி எடுத்துக் காட்ட உத்தேசம். ஆனால் கொஞ்சம் தான்.

வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்.


பிரகாஷ்

Sunday, February 15, 2004
 

(c)Dr.Kannan

 

இவ்வார வலைப்பூ ஆசிரியர் சென்னை வாசி. அதிரடியாக காப்பிக்கிளப்பில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நுழைந்த இவர், பழகுவதற்கு இனிமையானவர். எண்ணிலடங்கா நண்பர்குழாம் இவருக்கு. சென்னைக்குச் செல்லும் யாகூ குழு நண்பர்கள் அவசியம் சந்திக்கும் நபர் இவர்.


நா ரொம்ப சாதாரண, நீங்க எங்கெயும் கண்டுபிடிச்சுறக் கூடிய ஒரு economy class வாசகன். அஞ்சாம்ப்பு படிக்கறச்சே அம்புலிமாமால தொடங்கி அப்புறமா வெகுசன பத்திரிகைங்க மூலமா நல்ல எழுத்தாளர்களோட பரிச்சயம்னு, வாசக வாழ்க்கைய தொடங்கினவன். எங்க 'பெரிய வாத்தியார்' காமிச்சு குடுத்த பல பொஸ்தவங்கள படிச்சிருக்கேங்க.


என்று தன்னைப்பற்றிச் சொல்லும் இவருக்கு இப்போது பல வாசகர்கள். மரத்தடிப்பக்கம் 'திருத்துறைப்பூண்டி சாந்தி' என்ற பெயரைச் சொல்ல ஆரம்பித்தாலே மக்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். கூடவே 'வாழைப்பழச் சப்பாத்தி' என்றும் சொல்லிப்பாருங்கள், யாராய்ச்சும் நைட்ரஸ் ஆக்ஸைட் சுவாசிச்சாங்களோன்னு நினைப்பீர்கள். எல்லாம் நளபாகம் செய்த வேலை.

குழுக்கள் தவிர இவர், திசைகள், தமிழோவியம், மானசரோவர் என்று சிறகு விரித்துக்கொண்டிருக்கிரார்.

இவ்வார வலைப்பூ ஆசிரியர் ஐகாரஸ் பிரகாஷ்


 

(c)Dr.Kannan


புதிய பதிவுகள் - 3

 
தங்கமணி தனது பதிவில் ஹிண்டு வின் ஒருதலைபட்சமான தலையங்கத்தை சுட்டிக்காட்டி சாடியுள்ளார். ஊடகங்களை தமிழ் வளர்க்க எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கலந்தாலோசிக்கும் அதே வேளையில், ஊடகங்களை மறைமுகமாக கட்டுபடுத்தும் சுரண்டல் கும்பல்களிடமிருந்தும் காக்கும் கடமையும் உள்ளது. சமீபத்தில் ஹிண்டு நிருபர்கள் கைது சம்பந்தமாக தோன்றிய சலசலப்பில் சில பூடக விஷயங்கள் அம்பலமாயின. ஓர் பத்திரிக்கை என்ற அந்தஸ்து தவிர மேலும் பல இழைகள் தனக்கு இருப்பதாக காட்டிக்கொள்ளும் முயற்சியில் ஹிண்டு வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆட்சியாளர்களிடம் (ஆளும்/எதிர்) தனக்கு இருக்கும் செல்வாக்கை காட்டி பெருமிதப்பட்டது. சென்னையில் தேள் கொட்ட, கொழும்பில் நெறி கட்டிய செய்தியும் அவர்களை யார் என்று காட்டியது. இதன் பின்னால் உள்ள நீண்ட கால அரசியல் கவனிக்கத்தக்கது. திரு. பத்ரி முன்பு கூறியதை போல, ஹிண்டு-வின் ஒரு தலைப்பட்ச நிலைப் பாட்டை வெளிச்சம் இட்டு காட்ட ஓர் சீரிய முயற்சியின் தேவையை தங்கமணியின் வலைக்குறிப்பு மேலும் வலுப்படுத்துகிறது.

காசி அவர்களின் புது வீடு களை கட்டுகிறது. இதில் பல குறிப்பிடத் தகுந்த விஷயங்கள் இருந்தாலும், எனக்கு பிடித்தது, எழுதிய குறிப்புகளை வகைப்படுத்தும் முறை. சீக்கிரம் கற்றுக் கொண்டு நியூக்ளியஸ்-க்குள் புக வேண்டும். மேலும், அவரது மகளின் ஓவியங்கள் மனதை கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக தென்னையின் கீழ் உள்ள இரண்டுப் பூக்கள். இவரது தொடர் பற்றி அறிய செய்முறை பயிற்சி அவசியமோ எனத் தோன்றுகின்றது. செல்வராஜ் அவர்கள் உருவாக்கிய பின்னூட்டத்திற்கானfaq பலருக்கு உறுதுணையாக இருக்கும்.

நான் மேலும் எழுத விரும்பியது, பத்ரி மற்றும் ரவி ச்ரிநிவாஸ் அவர்கள் குறிப்பிட்ட வலைக்குறிப்புகள் பற்றி. ஆனால், வேறு சில வேலைகளால் அதற்கான நேரத்தை ஒதுக்க இயலவில்லை. விரைவில் அதனைப் பற்றி எனது வலைக்குறிப்பில் எழுத முயற்சிக்கின்றேன்.

இந்த ஒரு வாரம், எனக்கு பல நல்ல அனுபவங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக பலரின் நட்பு. இதற்காக மதி அவர்களுக்கு மீண்டும் நன்றிகளை தெரிவித்துவிட்டு உங்கள் அனைவரிடமும் இருந்து பிரியா விடை பெற்றுக் கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்
பாரி.

காதல் பேட்டை வஸ்தாது காதல் கோட்டை கட்டியது

 
(திண்ணையில் பல மாதங்களுக்கு முன் வெளியான ப்ரியா என்பவர் எழுதிய கவிதை. இவரிடம் அனுமதி பெற்று வெளியிடதான் விருப்பம். ஆனால் லிங்க் கிடைக்கவில்லை.)


இன்னாமே....எங்கின பார்த்துக்கினாலும் இன்னாமா உதார் வுடாறானுவோ.....வாலண்டின் டே-ங்கிறானுவோ, சும்மா கலர் கலரா பிலிம் காட்றானுவோ...இன்னாத்துக்கு இம்பூட்டு ஆட்டம்....எங்கண்ணம்மா உசிரோட கீற வரைக்கும்....எனக்கு தினமும் காதலர் தினம் தான்...அது சொல்து,


இன்னாபா, பார்த்துகினு காதலு, பார்த்துக்காம காதலு, கேட்டுக்கினு காதலு, கம்பூட்டர் காதலுந்னு அடுக்கிகினே போறானுவோ ....எதுனாச்சும் எங்கண்ணமா காதல் போலகீதாபா?

-காதல் பேட்டை வஸ்தாது

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com