<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, January 24, 2004

நான் தங்கமணியைப் பற்றிப் பேசப்போவதில்லை.

 
பேசிக்கொண்டிருக்கையிலேயே,
கூப்பிட்ட காற்றோடு
பறந்தோடிப் போய்விட்டது அந்தப் பூ
பூக்களும், குழந்தைகளும்
உட்கார்ந்து பேசுவதில்லை
---
இன்பமென்பது நுகர்வது என்றும், துன்பமென்பது இழப்பது என்றும் அர்த்தப் படுத்தியது யார்?
---
'இயல்பெனில்?'

"நான் நானாய் இருத்தல்; எனது புற வடிவங்களைத் தாண்டி, என்னைப் பற்றி எனக்குச் சொல்லப் பட்டவைகளை தவிர்த்து, என்னைப் பற்றிய என்னுடைய எல்லா கற்பிதங்களையும் எரித்து நான் நானாய் இருத்தல்"
---
நம்மிடம் ஏற்கனவே பயனற்ற உண்மைகள் ஏராளமாக உள்ளன. அவைகளைக் குறித்து நாம் பெருமைப்படலாம்; கனவு காணலாம் (கலாம் வந்தபிறகு இதுதான் ஃபேஷன்). வெளிநாட்டவர்களிடம் காட்டி நம் தலைப்பாகையில் இன்னொரு மயிலிறகை சொருகிக் கொண்டு (நிர்வாணமாய்) பீடு நடை போட்டுவரப் பயன்படலாம்.
---
கவிதையென்பது...
காலத்தை மேசைக்கு வெளியே
நிறுத்தி விட்டு உதிர்ந்த நம்முடைய சிரிப்பு
---
"நான் நடந்து கொண்டே இருக்கிறேன்."

அவ்வளவுதான். எதையும் அடைவதற்காக அல்ல; நடப்பதற்காகவே.

இந்தப் பயணம் எப்படி இருப்பினும் அதுவே உண்மையும், ஒப்பிடமுடியாததுவுமாக இருப்பதால், நான் இது குறித்த முடிவுகளை, தீர்மானங்களை, சார்புகளை ஏன் ஊகங்களைக் கூட முற்றிலுமாக புறக்கணிக்கிறேன்.

அவைகள் அத்தனையும் வாழ்வின் ஒளியின் முன் மறைந்து போன நிழற்தோற்றங்களாய்க் காணுகிறேன்.

 
நடுச்சாமக் கிறக்கத்தில்
நான்
என் அல்காரிதத்துடன்
புணர்ந்துகொண்டிருக்கும் தருணத்தில்...

புத்தகக் குவியலின் வலக்கோடியில்
துருத்தித் தலைநீட்டிய
அக் கவிதைத் தொகுதி
கண்ணை உறுத்தும்...

கைகள்
அர்த்தமாய்ப் பரபரக்க...

அல்காரிதத்தைக் கிடப்பிலிட்டு
கவிதைப் புத்தகத்தை
வாஞ்சையாய்க் கையிலெடுப்பேன்...

பயமுறுத்தும் அட்டைப்படமும்
புரியமாட்டாதிருக்கும்
கவிதை சாத்தியமும்
தரும் கிளர்ப்பில்
சிலிர்த்துப்
புத்தகம் பிரிப்பேன்...

முகவுரை படித்து
முதற் கவிதை
தன் வனப்பை
என்முன் வைக்கும்...

சில நொடிக் கழிச்சலில்...

புத்தகப் பக்கங்கள்
பறந்து கொண்டிருக்க...

அல்காரிதப் பேய்
கண்முன் விரிய...
விஸ்வரூப தரிசனம்...

யதாஸ்தானமாய்
அக் கவிதைத் தொகுதி
புத்தகக் குவியலில்
துருத்தி தலைநீட்டும்
தன் இயல்பில் ஒன்றும்...

நானும் அல்காரிதமும்
மறுபடி புணர...

எதுவும்
இயல்பினின்றும்
பிறழ்வதே இல்லை...

புணர்வெறியில் அல்காரிதமும் நானும்...
புத்த்கச் சமாதியில்
நிதம் அடக்கம் செய்யப்படும்
அந்தக் கவிதைத் தொகுதியும்...

Friday, January 23, 2004
 
மியாவ்!
நாளை உன்னை வரைந்துவிடுவேன்!
ஆனால் உன்னைப்போல மெலிதாகக் கத்த வருமோ வராதோ தெரியாது!

என்பிலதனை...

 
மனுஷ்ய புத்திரனின் "இடமும் இருப்பும்" கவிதைத் தொகுதியிலிருந்து...

முடிவெட்டுகிறவன் அன்பாயிருக்கிறான்
தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள்
அன்பாயிருக்கிறார்கள்
நர்ஸ் அன்பாயிருக்கிறாள்
சர்வர்கள் அன்பாயிருக்கிறார்கள்
கடைக்காரர்கள் அன்பாயிருக்கிறார்கள்
வேசி அன்பாயிருக்கிறாள்
சமூக சேவகர்கள் அன்பாயிருக்கிறார்கள்

அன்பைப் பற்றிய எழுத்துகள்
அன்பைப் பற்றிய உபன்யாசங்கள்
அன்பாயிருக்கின்றன

எனக்கு ஒரு புகாருமில்லை
அன்பினால் நனைந்திருக்கிறது
இவ்வுலகு

கத கேளு கத கேளு...

 
காசியண்ணன் தான் எழுதிவந்த "சில விளக்குகள் சில வழிகாட்டிகள்" தொடர்பதிவிற்கு முற்றும் போட்டிருக்கிறார். மிகவும் சுவாரசியமான முயற்சியாக இருந்தது இந்தத் தொடர்பதிவு. இதன் பின் நிற்கும் காரணம் என்னை இன்னும் கவர்ந்தது. நம் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை நாம் நம் சந்ததியினருக்குச் சொல்வதற்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. பாட்டிகள் கதை சொன்ன காலமெல்லாம் நினைவுகளாகவும் குரல்களாகவும் நம் மனதில் நிழலாடுகின்றன. கதை சொன்ன பாட்டிகளெல்லாம் கதையாகிவிட இனி வரப்போகும் தாத்தா பாட்டிகளுக்குத் தெரிந்த கதையெல்லாம் மெட்டி ஒலியும் அண்ணாமலையும்தான். இப்படியான நிலையில் இத்தகு பதிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எஞ்சியிருக்கும் வயசாளிகளைப் பிடித்து உறவுமுறைகளையெல்லாம் விவரிக்கக் கேட்டு பதித்துவைத்துக்கொள்வது அவசியமென்று தோன்றுகிறது. விளக்குகளும் வழிகாட்டிகளும் ஒவ்வொருவர் வாழ்விலும் நின்று ஒளிவீசிக்கொண்டுதான் இருக்கின்றனர். நான் படித்த பெ. சு. உயர்நிலைப்பள்ளியில் அறிவியலும் ஆங்கிலமும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் திரு. ஜெயராமன் போன்றவர்கள் ஒரு தலைமுறையையே ஆக்கபூர்வமாக வளர்க்கும் பெரும்பொறுப்பை ஏற்று சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். வரலாற்று நாயகர்களைவிட நாம் நம் வாழ்க்கை நாயகர்களைத்தானே நன்றாக நினைவில் நிறுத்திக்கொள்கிறோம். இவ்வாறான வலைப்பதிவு முயற்சிகள் ஒருபுறமிருக்க, காசி தன் செல்வங்களோடு சேர்ந்தமர்ந்து இவையெல்லாவற்றையும் நேரே பகிர்ந்துகொள்ளும் தருணங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளதாய் அமையும்!!

?

 
"புதுமைப்பித்தன் கதைகள்" தொகுதியிலிருந்து...
அதுவரை மனிதன் காலடிச் சுவடே படாத பிரதேசங்கள் வழியாகக் குருவும் சிஷ்யனுமாக இருவர் சென்று கொண்டிருக்கின்றனர். இருவரும் நடந்து கொள்ளும் மாதிரியைத் தவிர மற்றபடி வித்தியாசம் தெரியவில்லை; இருவரும் ஒரே வயதினர்; ஒரே விதமான நரை திரை; ரொம்ப நெருங்கிக் கவனித்தால் ஒருவர், சொல்லளவில், சிறிது இளையவர் மாதிரித் தெரியும். ஆனால், முகத்தில் சிந்தனையின் அசைவு ஏற்படும் பொழுதெல்லாம் மூப்பு தானே வெளிப்படும்.
இருவரும் இமய சிகரப் பிரதேசங்களில் உள்ள பனிப்பாலைவனம் வழியாகச் செல்லுகின்றனர். உயிரைக் கருவறுக்கும் குளிர். தூரத்திலே எட்டாத இலட்சியம் போல நிற்கிறது கைலயங்கிரி.
கால்கள் அப்பொழுதுதான் விழுந்த பனிச் சகதிகளில் அழுந்துகின்றன; சில இடங்களில் பனிப்பாறைகளில் வழுக்குகின்றன.
பார்வையின் கோணம் கதிக்க விழத்தக்க ஒரு திருப்பத்தில் வந்து நின்றார் குரு.
"அதோ தெரிகிறது பார்த்தாயா கைலயங்கிரி, உயர்ந்து நிமிர்ந்து கம்பீரமாக வானைக் கிழித்துக் கொண்டு! சிகரத் திலகம் போல அதன் உச்சியில் வான் தகட்டில் தெரிகிறதே ஒரு நட்சத்திரம் - பிரகாசமாக - அதைப் போலத்தான் இலட்சியம், தெய்வம்!" என்று சுட்டிக் காட்டினார். குரு, கண்களில் சத்தியத்தைக் கரைகண்ட வெறி ததும்பி வழிகிறது.
"பிரபோ! நிமிர்ந்து நின்று என்ன பயன்? உயிரற்றுக் கிடக்கிறதே! பிரகாசமாக இருந்தால் மட்டும் போதுமா? ஒருவன் எட்டிப் பிடிப்பதற்காக அது இருந்தென்ன அல்லது கண்ணுக்குத் தெரியாமல் போய் என்ன?"
"ஒருவன் தொட்டால் உலகம் தொட்ட மாதிரி!"
"உலகம் அவனை இழந்துவிடுவதனாலா?"
"இல்லை, உலகத்தை அவன் இழப்பதனால்..."
இருவரும் தலைநிமிர்ந்து நின்று சிகரத்தைப் பார்த்தபடி யோசனையிலாழ்கின்றனர்.
"இல்லை, நான் சொன்னது பிசகு!" என்று தலை குனிகிறார் குரு.

Thursday, January 22, 2004

பழைய குருடி

 
வெளித்தேடலில்
தொலைந்த
சுயம்
திரும்பக் கிடைத்தும்...

 
இந்த உலகத்துக்கு எவ்வளவோ செய்ததாக நாம் கூறிக்கொண்டிருக்கையிலேயே வேலியோரத்தில் சிறிய மஞ்சள் பூக்கள் சத்தமில்லாமல் பூத்து உதிர்கின்றன.
"நான் நடந்து கொண்டே இருக்கிறேன்."
- இவரைப்பற்றி நாளைக்கு எழுதுகிறேன். ஏனென்றால் இவர் பதிவுகளை இன்னும் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. இப்படிக் கிறங்கடிக்கும் எழுத்துக்களை முழுமையாகப் படிக்காமல் இவரைப்பற்றி எழுத மனசு வரமாட்டேனென்கிறது. யாரென்று தெரியவேண்டுமா?! மியாவ்!

நெல்லூர் நெல்லூர் சோளிங்நெல்லூர்...

 
காலை வழக்கம்போலத் தாமதமாக எழுந்து எங்கள் நிறுவனப் பேருந்தைத் தவறவிட்டு பழைய பல்லவனைப்பிடித்து அடையாறு டெப்போவில் காத்திருந்தால் சோழங்கநல்லூர் (அந்த குக்கிரமத்தில் தானே எங்கள் அலுவலகம் இருக்கிறது) செல்லும் பேருந்து எளிதில் வராது. அப்படிப்பட்ட ஒரு நாளில் இப்போது சென்னையில் மிகப்பிரபலமாகிவிட்ட வாடகை வேன்களில் ஒன்று என்முன் வந்து நிற்கிறது. "பெருங்குடி, பி.டி.சி., தொரப்பாக், காரப்பாக், நெல்லூர் நெல்லூர் சொளிங்நெல்லூர்...". மேலிரண்டு பொத்தான்களைத் தொலைத்த அழுக்குச் சட்டையோடு அந்தச் சிறுவனின் பழகிய குரல். அனைத்து இருக்கைகளும் நிரம்பி மக்கள் இடுக்கி நின்றுகொண்டிருக்கும் வேனிலிருந்து தகரக்கதவைப் பிடித்துத் தொங்கியவாறே "சீட்டு காலி பார்! நெல்லூர் நெல்லூர்...ஓடியா ஓடியா! வண்டி கெளம்புது பார்! நெல்லூர் நெல்லூர் சோளிங்நெல்லூர்...போலாம் போ". கலைந்த தலை. எதையும் மதிக்காத மதிக்கத்தெரியாத அலுப்புத்தட்டிய பார்வையோடு "சில்றை எடு..சீக்கிரம்". இவனுக்கு இருக்கும் பல பொழுதுபோக்குகளில் சில: பொதிமூட்டையாய் மக்களை அடைத்துச் செல்லும் இன்னொரு வேனின் இன்னொரு சிறுவனைப் பார்த்து அசிங்கமாகத் திட்டி சந்தோஷப்பட்டுக்கொள்வது. கை அறுக்கும் கதவைப் பிடித்துத் தொங்கி போகும் வழியில் எதிர்ப்படும் மரக்கிளையைப் பிடித்துப் பிடுங்குவது, எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிற பழகிய பாதையை எப்போதும் போல வெறித்துப் பார்ப்பது, ஆங்! மறந்துவிட்டேனே...நெல்லூர் நெல்லூர் சோளிங்நெல்லூர்... அடையாறிலிருந்து சோழங்கநல்லூருக்கு எப்போதும் போக்குவரத்து இருக்கிறது. அதனால் எப்போதும் தகர வேன்கள் தேவைப்படுகின்றன. இந்த மாதிரி சிறுவர்களும். நான் பணிபுரியும் நிறுவன வாயிலில் நான் இறங்கிக்கொண்டவுடன் புதிய குறிக்கோள்களை நோக்கிப் புறப்படுகிறான் நம் சிறுவன். "நாவலூர், கேளம்பாக்...கேளம்பாக்...கேளம்பாக்...போலாம் போ!"

Wednesday, January 21, 2004

காலம்

 
நாளையின்
எதிர்பார்ப்பில்
கழிகிறதென்றன்
இன்றைய
இரவு...
நேற்றைப்போலவே...

இயல்பின் எழில்

 
வலைப்பூக்களில் ஒருசிலவற்றைப் படிக்கும்போதும் சரி படித்து முடித்தபிறகும் சரி ஒரு இறுக்கத்தை உணர்வீர்கள். உதாரணம் பத்ரி. தீவிரமான விஷயங்கள் அதிதீவிரமான நடையில். மேலும் ஒருசில பூக்களை அதிக சிரமமில்லாமல் வேகமாக மேய்ந்துவிட்டுப்போய்விடலாம். ஓரிரு நிமிடங்களில் படித்துவிட்டு ஒரு பின்னூட்டத்தையும் இட்டுவிட்டுப் போய்விடும் வசதி இவற்றில் இருக்கிறது. மண்டையைப் பிரித்துப்போடும் புதிர்ப்பூவைப்பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம். இன்னும் ஒருசில பூக்கள் இருக்கின்றன. இலேசான அணுகுமுறையுடன் மிருதுவான நடையுடன். ஊதுவத்தியின் மணமும் புகையும் போல. <அ க்ரெf="க்ட்ட்ப்://சுன்டரவடிவெல்.ப்லொக்ச்பொட்.cஒம்">சுந்தரவடிவேலின் பக்கம் இந்த வகை. இதைப்பாருங்கள்: "மண் சாலையின் அழகே அழகுதான். ஊர்ல பேருந்துல போயிக்கிட்டு இருக்கப்ப பக்கவாட்டுல வந்து சேருமே ஒரு சின்ன ரோடு. அந்த மாதிரி". பனி என்று தலைப்பிட்ட அழகான இந்தப்பதிவின் இறுதியில் "பனியில் எல்லாம் அமைதியாய், ஏதோ ஒரு தியானத்தில் இருப்பது மாதிரி இருக்கும். காற்றின் மடியிலேறிப் பனித் துருவல்கள் பயணிக்கும். போக்கிடம் தெரியாப்ப்பயணம். எங்கேனும் முட்டி ஒட்டிக்கொள்ளும் வரை. ஒட்டிக் கொண்ட பின்னரும் காற்று வந்து ஊதிக் கிளப்பும். யாருக்குத் தெரியும் பயணங்களின் பாதைகளை".
ரசனை, தத்துவம், கோபம், கவிதை என்று பல பரிமாணங்களில் ரசிக்கவைக்கிறார் சுந்தரவடிவேல். ஆனால் அறிவியல் பற்றி எழுதும் பதிவுகள் கொஞ்சம் அன்னியப்பட்டுத் தெரிகின்றன. இது என் பிரமையாகத்தான் இருக்கவேண்டும். மாட்டுப்பொங்கல் பற்றி இயல்பான நடையில் வாசமான எழுத்துக்களில் எழுதும் இவர் இப்படி முடிக்கிறார்: "இந்த நினைப்பெல்லாம் கனவுமாதிரி சுத்துது. அந்நினைவுகளின் மையத்தில் இருக்கதெல்லாம் அந்த மங்கிய ராவெளிச்சத்தில் தாம்பூலத் தட்டை அடித்துக் கொண்டு ஓடினதும், இந்த மாதிரி ஒரு மாட்டுப் பொங்கல் ராவில் ஓடும்போது கிணத்துக்குள் விழுந்து செத்த ஸ்டீபன் வாத்தியார் மகன் ஸ்டான்லியும்தான். அவனுக்கு என் வயது". சுலபமாக மனதைத்தொடுவது கஷ்டம். இவர் அதைச் செய்கிறார்.


Tuesday, January 20, 2004
 
"உலகத் தமிழர்களுக்கு முதல் வணக்கம். நல்வரவு. மார்கழித் திங்கள் நிறைமதி நாளில் என்னுடைய வலைப்பூவைத் தொடங்கி உள்ளேன். மணம் வீசும் மாலையை தொடுத்து வழங்கிட முயற்சி செய்கிறேன்" என்று படு சம்பிரதாயமாக ஆரம்பித்த பாலா அதே பாதையில் கொஞ்சூண்டு எழுதிவிட்டு சிறு ஓய்விலிருக்கிறார். திரும்ப வந்து இன்னும் நிறைய எழுதவேண்டும். இவ்வளவு ஃபார்மலாக இல்லாமல் இன்னும் கொஞ்சம் ஜாலியாக எழுதலாமே பாலா?
நடிகர் என்ற அடைமொழியையெல்லாம் என்றோ தாண்டி ஒரு குட்டி தெய்வம் கணக்காய் நம் தங்கத்தமிழகத்தை வளையவந்துகொண்டிருக்கும் சூப்பர்ஸ்டாருக்கு வலைப்பூ இல்லாவிட்டால் எப்படி?! அந்தக் குறை (?!) தீர்க்கிறார் ரஜினிராம்கி. ரஜினியின் ஸ்பரிசத்தால் தனக்கேற்பட்ட அளவிலா ஆனந்தத்தைப் புல்லரிப்போடு விவரிக்கும் அவர் நம் பத்ரி விரிவாக எழுதியிருந்த இலக்கியவிழாவிற்குப் போன கதையை எழுதியிருக்கிறார். அதிலிருந்து:
#"பாபா, உப பாண்ட(வ) புகழ் ராமகிருட்டிணனை நேரில் பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை."
- அய்யா! எதைக்கொண்டுபோய் எதோடு சேர்த்திருக்கிறீர்கள்?!
#"மகேந்திரன்...இலக்கியவாதிகளெல்லாம் சினிமாவை ஒதுக்குவதாக குறைபட்டுக் கொண்டவர் கூடிய விரைவில் சிறப்பான இலக்கிய படைப்பை படைக்க வல்லவர்கள் சினிமாக்காரர்களா அல்லது எழுத்தாளர்களா என்கிற போட்டி வரும் என்றார்."
- மகேந்திரன் நல்ல இயக்குனர். ஆனால் நகைச்சுவைத் திரைப்படங்கள் ஏதும் எடுக்கவில்லையென்று அவருக்கு ஒரு குறை இருந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. முதலில் நம் சினிமாப்புலிகள் "சின்னவீட்டையும் பெரியவீட்டையும்" விட்டு வெளியே வரட்டும். இலக்கியப்பணியெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.
ராம்கி நிறைய எழுதுகிறார். குறிப்பாக, தொடர்ந்து எழுதுகிறார். தொடரட்டும் உங்கள் பணி.

அய்யாசாமியும் ஒரு பாக்கெட் அலுவாவும்

 
"அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும்" எம். ஜி. சுரேஷ் எழுதின நாவல். "நவீன மனிதன் இடமற்ற இடத்தில்(Non place) வாழ நேர்ந்தவன். அனுதினமும் மொழி, தேசம், இனம் போன்ற அடையாளங்களைத் தொலைத்து வருபவன். தவிரவும் புலம் பெயர்தலால் கலாச்சார அதிர்ச்சிகளுக்கு ஆளானவன். நிச்சயமற்ற இருத்தலின் விளைவாக சமனிலை குலைந்து போனவன்...அதன் விளைவாக தன் ஆன்மாவுடனேயே தான் மோதிக்கொள்ளும் மல்யுத்தம் சாத்தியமாகிறது. இந்த யுத்தம் சம்பந்தமற்றதை இணைக்கிறது (Fuses). சம்பந்தமுள்ளதைக் குழப்புகிறது (Confuses). கால வித்தியாசங்களைக் கடந்து எல்லாக்காலங்களுக்குமாக வியாபிக்கிறது (Diffuses). எனவே, இவனைப்பற்றிப் பின்னப்படும் ஒரு கதை பல கதைகளாகத் தன்னைப் பெருக்கிகொள்வது (Autofiction) தவிர்க்க முடியாததாகிவிடுகிறது." - நாவலின் பின்னட்டையில். மிகத் தீவிரமான பூர்வபீடிகையுடன் தொடங்கினாலும் இதை இலேசான நாவலாகத்தான் என்னால் வாசிக்க முடிந்தது. கதையில் நான்கைந்து அலெக்ஸ்கள். நேரற்ற (non-linear) முறையில் கதை சொல்லப்படுகிறது. உத்தியளவில் நிறைவைத் தரும் புதுமைகள். ஒரு கட்டத்தில் நாவலின் பக்கம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மேலே ஒரு கதை. கீழே ஒரு கதை.
உத்தி வேண்டுமென்றால் சுஜாதா சிறுகதைகளைப் படிக்கலாம். ஒரு கதை இருக்கிறது. தொடக்கத்தில் தொடங்காது. இரண்டாம் பக்கத்தில் கீழிருந்து ஐந்தாம் வரியில்தான் தொடங்கும். ஒரு சுழல்போல வரும். இதையெல்லாம் அவர் எழுபது-எண்பதுகளேயே செய்துவிட்டார். உத்தியைத்தவிர அலெக்ஸாண்டர் வேறொன்றையும் அழுத்தமாகத் தராததால் இது வெறும் சித்துவிளையாட்டுதான். ஜாலியாகப் படிக்கலாம். படித்துவிட்டு சன் தொலைக்காட்சியில் "அண்ணாமலை" பார்க்கப் போய்விடலாம்.

Monday, January 19, 2004

என்ன பெயரிட்டு அழைப்பேன்?!

 
வலைப்பூக்களை மேய்ந்துகொண்டிருக்கிறேன். பிரசன்னா கலாசலாக (இந்த வார்த்தையைத் தூய தமிழாக அங்கீகரிக்கவேண்டுமென்பது என் தாழ்மையான கருத்து :-)) எழுதிக்கொண்டிருக்கிறார். அடுத்து காசி அண்ணன். இருங்க, பொள்ளாச்சி வரைக்கும் போயிட்டு வந்துடறேன். அடுத்து என் பக்கம். யாராவது பாவப்பட்ட ஜென்மம் வந்து போயிருக்குதோ? (டேய்! நீ வந்துபோறியா மொதல்ல! பேச வண்ட்டான்! - காசி). அடுத்து மதி. ஆகா! இவுங்கதான் நம்ம தோஸ்த். அப்பப்ப ஆப்செண்ட் ஆயிடுறாங்க. அடுத்து பெ...ஒரு நிமிடம்! அய்யோ! நான் இன்னும் தயாராகவில்லையே! ஓடிப்போகிறேன். என் அன்னை கலக்கி வைத்திருக்கும் சத்துமாவு கஞ்சி ஒரு குவளை, ஊறவைத்த கொண்டைக்கடலை, தேக புஷ்டிக்கு டாபர் சவன்பிராஷ், வைட்டமின் ஏ-இசட் காம்ப்ளெக்ஸ், பார்லே-ஜீ புலிப் பிஸ்கோத்து, மீனெண்ணெய் மாத்திரை, பச்சைக்கீரை ரெண்டு கட்டு (பாபாய் மாதிரி) இவை எல்லாம் சாப்பிட்டு, கொஞ்சம் தண்டால், பஸ்கி எடுத்துவிட்டு வந்து தெம்பேற்றிக் கொண்டு அமர்கிறேன். திறந்திடு சீசே! பெயரிலியின் பினாத்தல்கள். என் கணிப்பொறியின் முன்னால் பல்வித ஆசனங்கள் செய்து வலமிருந்து இடம், இடமிருந்து வலம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்று பல கோணங்களில் படித்துப்பார்க்கிறேன். நான் சிரசாசனம் செய்து படிக்க முயன்றுகொண்டிருக்கும்போது என் அம்மா வந்து என்னை ஆசுவாசப்படுத்துகிறார்கள். மொத்தமாகப் பங்சராகிப்போய் தூங்கப்போகிறேன். என்றாவது ஒரு நாள் புரிந்துவிடும்.
"வேலைப்புடிப்பதே என் வேலை" அப்படியென்று தலைப்பிட்டு, கவிதை பற்றியும் எழுதியிருக்கிறார். கண்டிப்பாகப் படியுங்கள். "பெயரிலியின் பினாத்தல்களைப்படித்துப் பயன்பெறுவது எப்படி" என்று மணிமேகலைப் பிரசுரம் புத்தகம் போடுவதற்கு முன்னால் எனக்கு தோன்றும் யோசனைகள் சிலவற்றைப் பார்ப்போம்:
1. உடம்பைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள்
2. மனதைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள்
3. நிறைய ஜிலேபிகளையும் இடியாப்ப சேவைகளையும் கண்முன்னே நிறுத்திக்கொள்ளுங்கள்
4. நிறைய விவரங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் "புள்ளி"விவரங்களை மட்டும் எதிர்பார்க்காதீர்கள். அதையெல்லாம் வைத்துக்கொள்வதென்று வைத்துக்கொள்ளாத சாம்வெல் பெக்கெட் வகையறா நம்ம அக்கா
5. எப்போதும் ஒரு வார்த்தை படித்துவிட்டு அடுத்த நாலு வார்த்தைகளை விட்டுவிட்டு ஐந்தாவது வார்த்தையை மட்டும் படித்து வந்தால் ஏதாவது புரிய வாய்ப்புள்ளது
6. கஜினி முகம்மது மாதிரி திரும்பத் திரும்பப் பலவகைகளில் அலகிட்டு வாய்பாடு எழுதிப்பாருங்கள்
7. மொத்தத்தில் பெயரிலியில் பினாத்தல்களில் "ஆரம்பம், முடிவு, அமைப்பு பொன்ற சம்பிரதாய விஷயங்களைத் தேடுபவர்கள் காக்காக் கடையில் ஒரு பிளேட் ரத்தப்பொரியல் சாப்பிட்டுவிட்டு 'அது மார்க்கமில்லாதது... அபாதா. அது வரம்பில்லாதது... அனந்தோகாரா...' என்று நூறு தடவை சொல்லிப்பார்க்களாம்" (மேற்கோள்கட்கு இடைப்பட்ட வரிகள் சுஜாதாவின் "கணையாழியின் கடைசிப்பக்கங்களி"லிருந்து சுடப்பட்டது, வந்தனம்).

வந்தனம்! வந்தனம்!!

 
ராசாதீ ராசம் மவென் ராச வீரப் பிரதாபென்
ராசாதீ ராசன் வந்தேனே...வந்தேனய்யா...
வந்தனோம் தந்தேனய்யா...
அட வந்து நின்னு...சபைக்கி...வந்தனோம் தந்தேனய்யா...

உங்கள் அன்புத் தோழன், உங்கள் தங்கத் தம்பி, உங்கள் செல்லப் பிள்ளை, உங்கள் இந்தவாரத் தொல்லை வண்ட்டேன் வண்ட்டேன். வேலியில போற ஓணானை எடுத்து வலைப்பூவுல வுட்டாங்க மதியக்கா. அதனால என்னால முடிஞ்ச இம்சையெல்லாம் பண்ணிட்டு ஓடிப்போயிடுறேன்.

இப்பத்தான் பெரிய பெரிய மேட்டரெல்லாம் எளுதீட்டுத் தண்ணியக்குடிக்கப் போயிருக்காரு பெரசன்னரு (சே! நம்ம பெயரிலிக்கா வலைப்புய்ப்பம் படிச்சி படிச்சி ப்ரசன்னா பேரு இப்பிடித்தேன் வருது). அதுக்கப்புறம் போயும் போயும் என்னீயப் புடிச்சி எழுதச்சொல்லியிருக்காங்களே. ஆனாலும் மதியக்காவுக்கு ரொம்பத்தான் இது (எது?). "இன்றைய என் கவிதை" எல்லாம் போடறத்துக்கு நமக்கு சமாச்சாரம் கெடையாது. "இன்றைய என் கரடி" நல்லா வுடுவேன். பட்ச்சிக்குங்கோவ்.

இருந்தாலும் குட்டிப்பயல் நான் அடங்கமாட்டேன். நெறைய ஆட்டம் போடுவேன். எல்லாரும் வழக்கம்போல நல்லா பெரீய பெரீய மனசெல்லாம் பண்ணி என்னிய மன்னிச்சுப்போடணும். என்ன நாஞ் சொல்றது?

Sunday, January 18, 2004
 


(c)prabhu


 
நன்றி பிரசன்னா!

இந்த வாரம் வலைப்பூ ஆசிரியராக சுவடுகள் சங்கர் சென்னையிலிருந்து வருகிறார். வலைப்பதிவாளர்களிலேயே வயது குறைந்தவர் (என்று நினைக்கும்/சொல்லிக்கொள்ளும் ) சங்கர் என்ன செய்ய இருக்கிறார் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.


கம்ப இராமாயணத்திலிருந்து காசி தியேட்டர் வரை...
தொல்காப்பியத்திலிருந்து தோட்டா தரணி கலை வரை...
சு.ரா., சுஜாதா என யாரையும் விட்டு வைக்காமல்
சகட்டு மேனிக்கு என் உணர்வுகளைப்
பகிர்ந்து கொள்ளப் போகிறேன் இங்கு...
விதி யாரை விட்டது...!

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்...


என்று சொல்லியபடி வலைபதியத் தொடங்கியவர், தன் வலைப்பதிவில் இம்மாதம் மூன்றாம் திகதி எழுதிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

வாருங்கள் சங்கர்!

 


prasanna


 
மீண்டும் சந்திப்போம்


இனிய நண்பர்களுக்கு,

எதிர்பாராமல் ஏற்பட்ட வேலைப்பளுவினால் என்னால் தொடர்ந்து எழுதமுடியாமல் போனதற்காக வருந்துகிறேன். இதுவரை எனது உள்ளிடுகைகளைப் படித்து, கருத்துச் சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


அன்புடன்
ஹரன்பிரசன்னா

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com