<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, December 13, 2003

கூட்டலும் கழித்தலும்

 
இதுவரை சொந்தமாகவே ஒரு படம் கூட போட வில்லையே! ஏன்? என்று ஒரு அன்பர் வினா தொடுத்திருந்தார், தனி மடலில். அவரின் குறைய போக்க, என்னுடைய நயாகரா புனித யாத்திரையில் எடுத்த ஒரு காட்சி.

Canadian Niagara Falls from the Maid of the Mist rideமற்றவர்களின் படைப்புகளை தட்டுவது எளிதாகத்தான் உள்ளது. சுஜாதாவை இன்று தட்டச்சுவது படு சுலபமாக இருந்தது. புதுமைபித்தனை தட்டச்சுவதுதான், நான் எடுத்துக் கொண்ட மூவரிலேயே மிகவும் கடினம். கல்கியும் வழுக்கிக் கொண்டுதான் சென்றது. ஆனால், சுஜாதா அளவு சமகால வார்த்தைப் பிரயோகங்கள் வந்து விழாததால், அவ்வப்பொழுது வேகத்தடை வந்தது. மொத்தமாக 'ஆத்திசூடி' மாதிரி எவ்வளவு பிழைகள் என்று நாளை கூட்டி பார்த்த பிறகு சொல்கிறேன்.

'காதலா... காதலா'வில் நூர் மஹலை (சரியா?) ஒரு வாரத்துக்கு வாடகை எடுத்து ரம்பா & கோ லூட்டி அடித்தது மாதிரி வலைப்பூவில் ஒரு வாரம் பூ சுற்றியாகி விட்டது. நிறை குறைகளை அவசியம் சொல்லுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு எண்ணங்களும், என்னுடைய கிறுக்கல்களை, அடுத்த படிக்கு கொண்டு செல்ல உதவும். அனைவரும் நன்றி.

பாஸ்டன் பாலாஜி
ராத்திரியில் சில 'வினோத சப்தங்கள்'

 
அறுபது அமெரிக்க நாட்கள் (17)


சுஜாதா
தமிழன் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 25-31, 96


அமெரிக்காவில் நிரந்தரமாக வாழச் செல்லும் மாமிகளுக்கும், மாமாக்களுக்கும்
சில நல்வாக்குகள். உங்களுக்கு விசா கவலை இல்லை. மகனோ, மகளோ
சிட்டிசனாக இருந்து உங்களை க்ரீன் கார்டுக்கு ஸ்பான்சர் செய்திருப்பார்கள்.
மனு செய்து, வரும் நேரத்தில் வரட்டும் என்று அதிகம் பதட்டமில்லாமல்
காத்திருந்து, விசா வந்தபின் புறப்படுவீர்கள்.

முதலில் அந்த நாட்டுக்குப் போனதும் உங்கள் பிள்ளை/மருமகன் பல இடங்களுக்கு
அழைத்துச் செல்வார். டிஸ்னி வோர்ல்ட், டிஸ்னிலாண்ட், நயாகரா, பிட்ஸ்பர்க், க்ராண்ட்
கான்யன். அதெல்லாம் போய்த் தீர்ந்தபின், உங்களுக்கு அமெரிக்காவாக இருந்தாலும்,
இந்தியாவாக இருந்தாலும், வாழ்க்கை ஓரிரு அறைகளுக்குள் பழக வேண்டும்.

டி.வி. அறை, படுக்கை அறை எல்லாமே மர வீடுகளாதலால் ராத்திரி சில வினோத
சப்தங்கள் கேட்கும். பயப்பட வேண்டாம். மரப்பலகைகள் சோம்பல் முறிக்கும்
சப்தம்.

அமெரிக்காவில் டி.வி. பெரிசாக இருக்கும். தரைமட்டத்திலிருந்து பார்க்கலாம்.
எழுபது எண்பது சானல்கள் இருக்கும். பிடித்தமாக ஓரிரு நிகழ்ச்சிகள்
இருக்கும். உங்கள் மனைவிக்கு 'ப்ரைஸ் இஸ் ரைட்'; உங்களுக்கு 'ஜெனரல்
ஹாஸ்பிட்டல்'; இப்படி எதாவது பிடிக்கலாம். தினம் முழுவதும் பண்டங்களை
விற்பனை செய்யும் க்யுவிசி சானல் பார்க்கலாம். பத்திரிகை நியுஸ¤ம் ஒரே
மாதிரிதான் இருக்கும். 'ஹிந்து' மாதிரி, 'The Almighty alone is worthy of
obeisance' போன்ற பக்தி உபன்யாச சமாசாரங்கள் எல்லாம் தேதி போட்டு
அந்த ஊர் பேப்பரில் வராது.

டி.வி.யில் ஒரு ஆண், ஒரு பெண்; ஒருத்தொருக்கொருத்தர் சகஜமாக பேசிக்
கொண்டே ந்யூஸ் சொல்வார்கள். வானிலை இவர்களுக்கு ரொம்ப முக்கியம்.
போர்ட்டோரிக்காவில் புயல் வீசுமுன், அந்தப் புயலுக்கு பேர் வைத்து
விடுவார்கள்.

காலையிலும், மாலையிலும் வாக் போகலாம். ஆனால், கொஞ்சம் எச்சரிக்கையாகச்
செல்லுங்கள். அமெரிக்காவில் சாலையோரமாக யாருமே நடப்பதில்லை.
கார்கள் எல்லாமே 60 மைலுக்கு மேல் ஓடுவதால் சாலைகளைக்
குறுக்கிடுவதில் மிகுந்த கவனம் வேண்டும். எதற்கும் பைக்குள்
அட்ரஸ் வைத்துக் கொள்வது நல்லது.

சில நகரங்களில் பைக்குள் பத்து டாலராவது வைத்திருப்பது நல்லது.
யாராவது 'மக்' பண்ணும்போது, காசில்லையென்றால் மண்டையை
உடைத்து விடுவார்கள்.

முதல் வருஷங்களில் தனியாகப் போவதை தவிர்க்கவும். போஸ்ட் ஆபீஸ்,
லைப்ரரி, பார்க் என்று வெளியே சென்றால், நன்றாகப் போர்த்திக் கொண்டு
செல்லவும். திடீர் என்று குளிரும்; அல்லது மழை பெய்யும்.

அமெரிக்காவில் ஆரோக்யமாக இருப்பது சுலபம். உடம்புக்கு வந்துவிட்டால்
டாக்டர்கள் தீட்டி விடுவார்கள். போன கையோடு இன்ஷ¥ர் செய்து கொள்வது
நல்லது. டயபடிஸ், இருதயக் கோளாறு இருந்தால் ஆயிரம் கண்டிஷன் போடுவார்கள்.
இருந்தும் உங்கள் மகனை அல்லது மாப்பிள்ளையைப் பிடுங்கி எடுத்து
இன்ஷ¥ர் செய்து கொள்வது நல்லது. இங்கே வியாதி வருவது மிகவும்
பணச்செலவாகும் சங்கதி.

எல்லா இந்திய வீட்டிலும் வாஷிங் மெஷின், டிஷ் வாஷர், மைக்ரோவேவ்,
வாக்கும் க்ளீனர் நான்கும் கட்டாயமாக இருக்கும். அவைகளை இயக்குவது
எப்படி என்பது தெரிந்தே ஆக வேண்டும். சமையலுக்கு சில வீட்டில் கேஸ்
இருக்கும்; திறந்தாலே எரியும்.

நம் ஊர் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கும். அதுவும் சைனீஸ் ஸ்டோரில்
முளைக்கீரை, மாகாளிக் கிழங்கு எதுவும் கிடைக்கும். சில வீட்டில்
எலக்ட்ரிக் ரேஞ்; துணி துவைக்க கட்டி சோப்பு கிடைக்காது. சில
நகரங்களில் துணியை வராந்தாவில் உலர்த்த முடியாது. அக்கம் பக்கத்தில்
புகார் செய்வார்கள். அதேபோல், இஷ்டப்படி குப்பை போடவும் கூடாது.
நினைத்த இடத்தில் நம்பர் ஒன் போக முடியாது. கிளம்பும்போது அதையெல்லாம்
முடித்துக் கொண்டு போவது உத்தமம்.

ப்ளாஸ்டிக் தட்டுகளில் சாப்பிட்டுப் பழக வேண்டும். பீட்ஸா பிடித்தே ஆக வேண்டும்.
அதேபோல் மெக்ஸிக்கன் உணவுகளான பரீட்டோ, டோர்ட்டியோ; எட்டு நாள்
·ப்ரீஸரில் வைத்திருந்து, சுட வைத்து, ஆவி பறக்க இட்லி சாப்பிடவும்
பழக வேண்டும்.

அமெரிக்க நகரங்களில் இந்திய கலாச்சார விஷயங்களுக்குப் பஞ்சமே
இல்லை. நம் ஊர் அத்தனை சங்கீத வித்வான்களும், சிரிப்பு நாடகக்
குழுக்களும், கைக்காசை செலவழித்தாவது அங்கு வந்து கச்சேரி
பண்ணிவிட்டுப் போவார்கள்.

இந்த மாதிரி சங்கீத நாடக சந்தர்ப்பங்களில் நாற்பது மைல் தூரத்தில்
கட்டப்பட்ட முருகன் - பிள்ளையார் - மீனாட்சி - சீனிவாசர் ஆம்னி
பஸ் கோவிலில், அமெரிக்காவில் மற்ற கிழங்களை சந்திக்கும் வாய்ப்பு
வரும். அவர்களுடன் பேசிப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கை அச்சு,
உங்கள் வாழ்க்கை போலவே இருப்பதை அறிந்து திருப்திப் படலாம்.

'பாப்' சங்கீதம் உங்களுக்குப் பிடித்துப் போக சந்தர்ப்பம் இல்லை.
வேணுமென்றால் கண்ட்ரி ம்யூசிக், ஜாஸ் போன்றவை கேட்டுப் பார்க்கலாம்.
ஞாயிற்றுக் கிழமை காலை வேளைகளில் அனைத்து டி.வி. சானல்களிலும்
கிறித்துவ போதகர்கள் பேசுவார்கள். கேட்டுப் பார்க்கலாம். கடவுளைப்
பற்றிய சில விஷயங்கள் நமக்கும் பொதுவாக இருக்கும்.

உங்களுக்குப் புத்தகம் படிக்க ஆவலிருந்தால் அமெரிக்கா சொர்க்க பூமி.
சின்ன ஊரில் கூட அருமையான நூலகம் இருக்கும். பத்து புத்தகங்கள்
தள்ளிக் கொண்டு வரலாம். அதேபோல், 'பார்ன்ஸ் அண் நோபிள்' போன்ற
புத்தகக் கடைகளில் சந்தோஷமாக ஓசியில் படிக்க அனுமதிப்பார்கள்.
உட்கார நாற்காலி கூட எடுத்துப் போகலாம்.

அதில் என்ன சிக்கல் என்றால் அடுத்த ப்ளாக்குக் கூட கார் வேண்டும்.
உங்களைக் காரில் அழைத்துப் போக மகன், மருமக்களில் யாரையாவது
நாட வேண்டி வரும். அவர்கள் எல்லாம் ரொம்ப பிசி.

(கட்டுரை வெட்டப்பட்டுள்ளது)

தனியாக இருக்கவும், அவ்வப்போது தனக்குள் பேசிக் கொள்ளவும்
பழகி விட்டால், நமக்கு எந்தவித கலாசார சம்பந்தமும் இல்லாத
டி.வி., பொது வாழ்வை, விளிம்பிலிருந்து வேடிக்கை பார்க்கவும்
பழகி விட்டால் அமெரிக்கா உங்களுக்குப் பழகிவிடும்.

மற்றபடி பொது ஆரோக்கியம், நல்ல உணவு, வகை வகையாக
ப்ரேக் ·பாஸ்ட் ஸீரியல்கள், ஐஸ்க்ரீம், பாதாம் போன்ற பலவகை
பருப்புகள், கொறிப்பதற்கு எத்தனையோ வறுவல்கள், கொட்டைகள்,
உறுதியாக உழைக்கும் உடைகள், சுத்தமான காற்று, தண்ணீர், பால்,
தயிர், மோர் இவைகளின் உபயத்தில் நீண்ட நாள் வாழ்வீர்கள். ஐந்து
நிமிஷத்துக்கு ஒருமுறை கொட்டாவி விட்டுக் கொண்டு.

(இளம்பெண்களுக்கான அறிவுரையுடன் இந்த கட்டுரைத் தொடரை
முடிக்கிறார்; யாராவது இளம்பெண்ணுக்குத் தேவையென்றால் சொல்லவும்.
அதை, ஸ்பெஷல் தட்டச்சில் அனுப்புகிறேன் :)


'தமிழையும் இங்கிலீஷில் கற்றுக் கொடுப்பார்கள்..!' - II

 

['பாஷைக்கு அடிமைகள்' என்ற கல்கியின் கட்டுரையில்
இருந்து சில பகுதிகள்.
-விகடன் 09.சனவரி.32]


பாஷைக்கு அடிமைப்படுவதில், தாய்மொழிக்கு அடிமைப்படுவதையாவது ஒருவாறு
சகித்துக் கொள்ளலாம். அன்னிய பாஷைக்கு அடிமைப்படுவதை எப்படி சகிக்க
முடியும்? உள்நாட்டில் உண்டாகும் கோழி முட்டையின்றி உயிர்வாழ முடியாதென்று
ஒருவன் பிரமை கொண்டிருந்தால், போனால் போகட்டும். ஆனால், அயல்நாட்டு
ஓவல்டினுக்கு இவ்வாறு ஒருவன் அடிமையாவதைப் பார்த்துக் கொண்டு எவ்வாறு
சகித்திருப்பது? தமிழுக்கு அடிமைப்பட்டவர்களைப் பார்த்து நாம் இரக்கப்படலாம்.
ஆனால், ஆங்கில மொழியின் அடிமைகளை நினைத்தால் அடிவயிற்றிலிருந்து
ஆத்திரந்தான் உண்டாகிறது.

சாதாரணமாய் நமது கல்விமுறையின் கீழ் மூன்றாம் வகுப்பிலிருந்தே இங்கிலீஷ்
பாஷை முக்கியமான பாடம் ஆகிறது. ஹைஸ்கூலுக்குப் போய்விட்டால் கணக்கு,
சரித்திரம், பூகோளம், ஸயன்ஸ் முதலிய எல்லாப் பாடங்களும் இங்கிலீஷிலேயே
கற்பிக்கப்பட வேண்டும். தமிழை மட்டும் தமிழிலேயே கற்பித்தாக வேண்டியிருக்கிறது.
முடியுமானால் அதைக்கூட இங்கிலீஷில் கற்றுக் கொடுத்து விடுவார்கள்! இதைப்
போல் சர்வ முட்டாள்தனமான முறை உலகிலே வேறெதுவும் இருக்க முடியாது.
குழந்தைகளும், சிறுவர்களும் தாய்மொழியிலன்றி வேறு மொழியின் மூலம்
உண்மையான அறிவுப் பயிற்சி பெறுவதென்பது இயலாத காரியம்.

ஒருவன் தனது சொந்த பாஷை பேசுவது தண்டிக்கதக்க குற்றமாகுமென்று
யாராவது எதிர்பார்க்க முடியுமா? தமிழ்நாட்டில் தமிழ் பேசுவது ஒரு குற்றம்;
அதற்கு தண்டனையுண்டு என்றால் வெளிநாட்டார் எவரும் நம்பமாட்டார்கள்.
உங்களில் கூட அநேகர் நம்பமாட்டீர்கள். ஆயினும், இந்த அபூர்வமான,
உலகிலே எங்கும் இல்லாத சட்டம் நமது நாட்டில், அதிலும் பள்ளிக்கூடங்களில்
இருந்து வருகிறது. பிள்ளைகள் ஒருவருக்கொருவர் தமிழ் பேசினால் வார்த்தைக்கு
இவ்வளவென்று அபராதம்! சென்னையில் "தேசிய பெண் பள்ளிக்கூடம்" என்று
சொல்லப்படும் ஒரு ஹைஸ்கூலில் இந்த அழகான முறை இப்போதும் அமுலில்
இருந்து வருகிறதென்று சமீபத்தில் கேள்விப்பட்டேன். ஆறாம் வகுப்புக்கு
மேற்பட்ட மாணவர்கள் யாரும் தமிழில் பேசக்கூடாது. பேசினால் வார்த்தைக்கு
ஒரு தம்பிடியோ, காலணாவோ அபராதம்! இப்படி வைத்தால்தான் இங்கிலீஷ்
பேசுவதற்குப் பழக்கம் ஆகுமாம்! இந்தப் பழக்கம் எதற்காக அவசியம் என்று
இதுவரையில் யாரும் சொன்னார்களில்லை.

நமது நாட்டில் எவ்வளவு பேரால் முடியுமோ அவ்வளவு பேரும் இங்கிலீஷ்
கற்றுக் கொள்ள வேண்டுமென்பது என் எண்ணம். ஆனால் ஆங்கில
பாஷா ஞானத்தின் பயனை முழுதும் அனுபவிக்க வேண்டுமானால், அதைக்
கட்டாயமாக்கக் கூடாது. கட்டாயபடுத்துதல் பெருங்குற்றமென்றும்
சொல்லலாம்.

படித்தவன் என்று ஒருவன் சொல்லிக் கொள்வதற்குக் குறைந்தது இரண்டு
பாஷையாவது தெரிந்திருக்க வேண்டும். நமது கல்வி ஸ்தாபனங்களில்
தாய் மொழியைத் தவிர, இங்கிலீஷ், ஹிந்தி, ஸம்ஸ்கிருதம், மற்றொரு
இந்திய பாஷை இவ்வளவும் கற்பிப்பதற்கு இடமிருக்க வேண்டுமென்று
கருதுகிறேன்.


(முற்றிற்று)
நன்றி: விகடன் பவழ விழா மலர் (2002)


மலர் சாகுபடி

 
மீண்டும் ஒரு வாரம் சென்று இருக்கிறது. அலுவலில் பயிற்சியளிக்கிறேன் என்று அலுவலகத்தின் பட்டக அறையிலிருந்து துரத்தி விட்டதால், ரொம்ப வலை மேயாமல், அளவாகப் (பூக்களை) அறுத்திருக்கிறேன்.

கார்த்திக் மாதிரி நம்மில் பலருக்கு சிந்தனை இருக்கும். அவருக்கு யாருடைய பதிலின் அவசியம் இல்லாததால், பின்னூட்டங்கள் என்னும் பகுதியையே தவிர்த்து விட்டார். ரொம்ப நாளாக இணையக் குழுக்களில் அலசப்படும் டாபிக் இது. வெகுசன சஞ்சிகைகளில் ஒரு வரி வாசகர் கடிதம் எதற்காக எழுதுகிறார்கள்? வலைப்பூவில் எதற்காக 'கமெண்ட்' (பின்னூட்டம்) கொடுக்கிறார்கள்? எழுதியவருக்கு இதைப் படிப்பதால் புளகாங்கிதமோ, தலைவலியோ; ஆனால், ஒரு கீபோர்டாவது தட்டியதே என்று ஓரத்தில் ஒரு மகிழ்ச்சியே. எழுதாதவருக்கும் பேருந்தில் போகிற போக்கில், திருட்டு விசிடியை இலவசமாக பார்த்த திருப்தி.

பின்னூட்டங்கள் அனைவரும் படிப்பதற்கு ஏதுவாக இல்லை என்பது எனது கருத்து. முதலில் எழுத்துகளுக்கு பைட் தடுப்பு; அப்புறம், சிலருக்கு கட்டம், சிலருக்கு 'தூதூஊஊ' என குழப்பங்கள். கண்ணன் சொல்லாவிட்டால் உரையாடல் வந்திருப்பதெல்லாம் பலருக்குத் தெரியவே தெரியாது. டெய்லி பண்டிட்' பில் க்விக்' முதல் பக்கத்திலேயே அனைவரின் மனவோட்டங்களையும் விரித்து விடுகிறார். ஹ்ம்ம்ம்... இன்னொரு மென்கல ஆசை!

கார்த்திக் வலைப்பூவில் மிக நேர்மையான பதிவுகள். முருகனின் கற்பனைக் கனவுகளைப் போலவே சிலவற்றைக் கண்டு, பகிர்ந்து கொண்டும் இருக்கிறார். அவருக்குத்தான் கருத்து உள்ளீடுகள் தேவையில்லையே; இருந்தாலும் நான் என்பதை 'னான்' என்று சீர்மைபடுத்துவதை ஒப்புக் கொள்ள மாட்டேன்.

சக பூக்காரர்கள், ஓ... புக் மாதிரி அனாதரவாக விட்டுவிடாமல் தொடர்ந்து எழுத வேண்டும். எட்டே பதிவுகள்தான் நம்முடைய கூட்டு முயற்சியில் வந்துள்ளது. இன்னும் நிறைய செய்ய ஆதாரமான ஏற்பாடுகள் தயார். கண்ணனுடன் சேர்ந்து அங்கும் கை கோர்த்து நிறைய மொழி மாற்றலாம்.

பல பூக்காரர்களின் தலைப்பில் இடம் பிடிப்பது 'கிறுக்கல்கள்'. பார்த்திபனின் நேர்த்தியான புத்தகத்தை போலவே, சக வலைஞர்களும், சுவையான, வெற்றிகரமான, புகழ் பெற்ற புத்தகங்களும் வெளியிட எனது வாழ்த்துகள்.

இன்றே கடைசி என போர்டு தொங்க விடுவதற்கு முன என்னுடைய தலை பத்து வலைபூக்கள்:

1. பத்ரியின் 'எண்ணங்கள்'
கல்லூரியில் ஒரு நண்பன் இருந்தான். வகுப்புக்கு செல்லவில்லையா? என்ன நடந்தது என்று எனக்கே புரிய வைப்பான். மூன்று நாளாய் டெல்லி வெளியூரா? யார் எவரோடு கோவிலில் சந்திக்கிறார்கள், யார் இப்ப திரும்பவும் சந்தையில் உள்ளார்கள் என்று மூன்றே நிமிடத்தில் புரிய வைப்பான். மேட்ச் நடந்தால் எங்கு அசாருதீன் வியூகம் அமைப்பதில் கோட்டை விடுகிறான் என்று பந்து போடுவதற்கு முன்பும், பின்பும் புட்டு புட்டு வைப்பான். இப்ப அவன் வலைபதிந்தால் கூட பத்ரியை அடிச்சுக்க முடியாது!

2. அருணா சீனிவாசனின் 'அலைகள்'
ஒரு தவம் போல், அன்றைக்குத் தோன்றும் சிந்தனைகளை, அன்றே பதிந்து விடுமாறு அட்வைஸ் கொடுத்து, அதன்படி ஒழுங்காக எழுதியும் வருகிறார்.

3. வெங்கட் - 'ஒரு நாடோடியின் வடதுருவ வலைகுறிப்புகள்'
வலையில் பதிந்தால் இப்படித்தான் எழுத வேண்டும், என்று என்னையும் எழுதத் தூண்டிய குறிப்புகள்.

4. ரமணீதரனின் ''
ஈழம் to இலக்கியம். உள்ளதை சொல்வேன்; நல்லதை செய்வேன் என்கிறார்! ஆரம்ப காலத்தில் படு உருப்படியாக கருத்துக்களை பதிந்து வந்தார். இப்பொழுது ஏனோ வெறும் சுட்டிகள் மட்டுமே இடுகிறார்.

அதிகாலை ரயிலுக்கோ, இந்தக் காலத்தில் அர்த்த ராத்திரி விமானத்துக்கோ கிளம்பினால், முந்தின நாளே ஊரில் இருப்பவர்களிடம் 'சொல்லிக் கொண்டு' விடுவேன். நாளைக்கு, நேரம் கிடைத்தால், போன தடவை இந்தியா போன போது இரண்டு நிமிடம் சகஜமாக அளவளாவிய இசைப்புயல், இரண்டு மணி நேரம் அரட்டை அடித்த மடலாடற்குழு நண்பர்கள் என ஏதாவது கிறுக்குகிறேன்.

என்ன விஷயத்தையும் ஒரு வரியில் சுவாரசியபடுத்திய பரி, வருத்தமூட்டும் பதிவுகளுக்கும் கோபப்படாத காசி, ஊக்கபடுத்திய மீனா, வம்பையும் வித்தியாசமாக எழுதும் பெயரிலி, டானிக் மாமி, எனது தாரக மந்திரத்தை கிட்டதட்ட கண்டுபிடித்த பிரசன்னா, பாதி ஆட்சியில் பதவி இறக்கி 'இம்பீச்' செய்து தங்களை காப்பாற்றாத மதி, அனவருக்கும் எனது நன்றி.

பாஸ்டன் பாலாஜி

Friday, December 12, 2003

Condemn & Act

 
சத்யேந்திர துபே கொலையை குறித்து தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்மடல் தட்டி விடுமாறு சொல்லி, அவர்களின் முகவரியையும் கொடுத்துள்ளார் பத்ரி. கொடுத்துள்ள படியை பிரதி எடுத்து, அனுப்பி விடுங்கள்.

Highway to Prosperity

பாஸ்டன் பாலாஜி


Missing in Action

 
இன்னும் காணவில்லை?!

ஜெயத்தில் நடித்தாலும், செயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் விளம்பரத்தில் மட்டுமே தென்படும்....

Jeyam's 'poiyaa... pO...'பாஸ்டன் பாலாஜிSoftware Dreams

 
இன்னிக்கு ஒரு ஆசை....

இன்றைய அவுட்லுக், யாஹ¥வைக் கொண்டு நமக்கு வரும் மடல்களை
நிரலிகள் கொண்டு வடிகட்டி பகுத்தெடுக்கலாம். என்னுடைய கனவு
நிரலி, மடற்குழுவில் இருந்து வரும் கடிதங்களுக்கு பதிலும் எழுதும்.
இதை முழுவதாக பயன்படுத்தும் முன் நாம் சில பாகுபாடுகளை செய்ய
வேண்டும். பத்து பேர் மட்டுமே எழுதுமே இந்த சங்கத்தில்,
நாம் மூன்று பகுதிகளாக அவர்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

முதல் பிரிவில் இருந்து மடல் வந்தால், 'ஆஹா... பேஷ்... பேஷ்... சுவையான படைப்பு'
என்று மடல் அனுப்பும். இது தனிமடலா, பொது மடலா என்பதை குத்துமதிப்பாக
கண்டுபிடிக்க ஒரு சிறப்பு மென்பொருள் இருக்கும்.

இரண்டாம் பிரிவில் உள்ளவர்களுக்கு, மூன்று பத்திகள் வடிவமைக்கும். நாம் ஏற்கனவே
சேமித்து வைத்திருக்கும் தகவல் கிடங்கில் இருந்தும், இணையத்தில் இருந்தும் அங்கொன்றும்,
இங்கொன்றுமாக எடுத்து, முதல் பத்தியில் அவர்கள் எழுதியதை ஆதரித்தோ, எதிர்த்தோ
சில வரிகள் எழுதும். அடுத்த பத்திய்¢ல் ஐம்பெரும்காப்பியத்திலும், இந்திப்படங்களிலும்,
ஸ்பானிஷ் இலக்கியத்திலும் ஒத்த சிந்தனைகள் வருவதை சொல்லும். கடைசி பத்தியில் அவர்கள்
தற்போது உபயோகிக்கும் வாசனை சோப், நகப்பூச்சு என ஏதாவது சொந்த விவரங்களை
உள்ளிட்டு அனுப்பும்.

மூன்றாம் பிரிவில் உள்ளவர்களை கண்டுக்காது.

பாஸ்டன் பாலாஜிபாரதியாரும் போலீஸாரும்

 
புதுமைப்பித்தன்

நம் தமிழ் நாட்டு கவிஞர் திலகமாகிய பாரதியாரை அறியாதார் யாரே?
அவரது வாழ்க்கையின் நுட்பத்தையறிந்தோர், அவருக்கும் போலீஸாருக்கும்
உள்ள நெருங்கிய நட்பை அறியாமலிரார். அவர் போலீஸ்காரர்களின் நட்பை
போற்றி தனது கற்பனா சக்தியின் கனிந்த பழங்களாகிய கவிதைகளில் ஓர்
உன்னத ஸ்தானம் கொடுத்திருக்கிறார் என்றால், நம்மை, வலிந்து பொருள்
கூறுவதாகக் கருத மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

கம்பன் சடையப்ப வள்ளலைப் போற்றிக் கெடுத்தான் என்பது எனது முடிவான
கொள்கை. மிகவும் புகழ்ந்ததினால் இறந்து போன சடையப்ப வள்ளலுக்கோ,
(சந்ததி இருந்தால்) பிறந்து, பிறந்து இறந்து கொண்டிருக்கும் அவர்
சந்ததியாருக்கோ, தமிழ் நாட்டாருக்கோ பிரயோஜனம் என்ன? இதை எல்லாம்
நன்கு ஆராய்ந்தே கம்பன் விழுந்த புகழ்ச்சி படுகுழியில் விழாது, ஓர் அற்புதமான
வேலையைச் செய்து தமிழ்க் கவிதைக்கும் அவரது கெழுதகை நண்பர்களாகிய
போலீஸாருக்கும் ஓர் அழியாப் புகழைத் தந்திருக்கிறார், நம் பாரதி.

வருங்காலத்திற்கு வேண்டப்படுவது யாது என்பதையறிந்து அதற்காக
அருங்காப்பியங்கள் செய்யுங் கவிஞன்தான் தீர்க்கதரிசி. சட்ட மறுப்புப் போர்
நமக்கு ஆறிய பழங்கஞ்சியாகி விட்டது. அது பாரதியின் மனோவுலகில்
எப்படி எப்படித் தோன்றிற்றோ? அப்பொழுது வேண்டப்படும் சட்டத்தின்
சலியாத வைரத்தூண்களாகிய போலீஸாருக்கு ஓர் அரிய அறிவுரை
எடுத்துரைப்பது மிக, மிக அற்புதமாக அமைந்து மிளிர்கிறது. என்னே
அவரது விழுமிய நட்பு!

இச்சிறந்த கைங்கரியத்துக்கு அவர் எடுத்தாளும் கவிதைப் பகுதி அவரது
அற்புத கவிதா சாதுரியத்தை திகழ்விக்கிறது என்றால் உயர்வு நவிற்சியல்ல.
அது என்ன? 'ஆத்திச்சூடி'.

சாதாரண கல்விக்கே இளமையில் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறதே; அதுவும்
சட்ட புத்தகங்களின் சலியாத காப்பாளிகளான போலீஸ்காரர்களாக, திடீரென்று
இருபதாவது வயதில் மாறிவிட முடியுமா? 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?'
இவற்றை எல்லாம் நமது நுண்ணறிவால் நன்கு ஆராய்ந்து தமது அறிவுரைக்கு
(அறவுரை என்றும் கூறலாம்) ஆத்திச்சூடியை எடுத்துக் கொண்டது உலக
வழக்கை எவ்வளவு கூர்ந்து கவனித்திருக்கிறார் என்பதை நன்கு விளக்குகிறது.

சுதந்திரப் போர் எப்படி நடக்குமென்று (மகாத்மா உள்பட) யார் கண்டார்கள்?
அக்காலத்திலேயே நமது கவிஞர் திலகம், தமிழ் நாட்டுக்குப் புத்துயிர் தந்த
பூமான், இப்பொழுது போலீஸாருடன் இணை பிரியாது உலாவும் லாதி (தடிக்கம்பு),
போலீஸாருக்கு வேண்டப்படும் இன்றியமையாத பொருள்களுள் ஒன்றென்பதைக்
கண்டு 'கோல்கைக் கொண்டு வாழ்' என்று எழுதியிருப்பது வியப்பினும்
வியப்பே. இதுதான் அவர் முதலில் எடுத்துச் சொல்லும் வார்த்தை. பிறகு 'நையப்புடை'
என்று உரைப்பது போலீஸாரின் அத்தியந்த நண்பர் என்பதை பளிங்கு போல்
எடுத்து காட்டுகிறது.

'நொந்து சாகும்' என்பதில் பாரதியார் தமது தலைசிறந்த சித்தாந்தத்தை எடுத்து
ஓதுகிறார் என்பதில் ஐயமில்லை. உலக அனுபவம் என்னே! என்னே! மேலும்
இதில்தான் கர்மயோகிக்குண்டான அடிப்படையான உண்மைப் பெருங்குணத்தை
எடுத்து இசைக்கிறார். கர்மயோகி முக்கியமாக மனதைக் கட்டுபடுத்த வேண்டும்.
சஞ்சலத்துக்கு இடங்கொடுக்கலாகாது. செய்யும் தொழில்களின் மனதை இளக
விடக்கூடாது. பாரதப் போரில் பார்த்தனுக்குப் பரந்தாமன் உபதேசித்த அருள்மொழி
இதுவே. போலீஸார் இம்மொழிகளைப் பொன்னே போல் போற்றி வருகிறார்கள்
என்பதைக் கூறவும் வேண்டுமோ.

இனி நமது கவிச்சக்ரவர்த்தியாம் பாரதி, அவர்களுக்கு இயற்கையாக இருக்க
வேண்டிய குணாதிசயங்களைக் கூறுவது மிக்க மாண்புடையவனக மிளிர்கின்றன.

1. தாழ்ந்து நடவேல்
2. தன்மை இழவேல்
3. ரௌத்திரம் பழகு
4. வெடிப்புறப் பேசு

இவற்றைப் பற்றி ஒரு விரிவுரை நிகழ்த்தலாம். விரிவஞ்சி விடுத்தேன்.

இதற்கடுத்த பகுதியாக அவர் கூறுவதை 'பொருள் இயல்' என்று வகுக்கலாம்.
உலகத்தின் மாந்தருக்கு அதிலும் போலீஸாருக்கு வேண்டப்படுவது யாது?
பொருள். 'பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை' என்று கற்றுணர்ந்த பெரியார்
கூறவில்லையா? 'கிம்பளம்' வசூலிக்கும் முறையை சூஷ்மமாக தொகுத்த
தனமை 'அர்த்த சாஸ்திரம்' எழுதிய விஷ்ணு குப்தனையும் மேல் நாட்டு
மாக்கியவல்லியையும் (Machiavelli) தோற்கடித்து விடுகிறது என்று கூறவும்
வேண்டுமோ? எழுதிப் பயனில்லை. மூலத்தைப் படித்தே இன்புற வேண்டும்.

1. பணத்தினைப் பெருக்கு
2. பெரிதினும் பெரிது கேள்
3. கவ்வியதை விடேல்

இவை யாவற்றிற்கும் சிகரமான தத்துவம்,

4. (பிறர்) துன்பம் மறந்திடு

என்று கூறுவதே. இவ்வளவு சூஷ்மார்த்தங்களும் மலிந்து கிடக்க இசைத்துக்
கொண்டு போவது பழைய 'ஆத்திச்சூடிக்' கிழவியை வென்று விடுகிறது என்று
கூறவும் வேண்டுமோ.

'பாயும் கடிநாய்ப் போலீசு' என்று இவர் எழுதுவது முரண்பாடன்றோ என்று சிலர்
ஆட்சேபிக்கலாம். முரண்பாடொன்றுமில்லை. ஸ்ரீராமபிரானை 'இக்கரியன்' என்று
விசுவாமித்திரர் கூறுவதாக கம்பன் பாடவில்லையா? எல்லாம் அன்பின் மிகுதி.

இவ்வாராய்ச்சியை ஊன்றிப் படித்த நண்பர்கள் 'இவ்வறிவுரையெல்லாம் நீர்
கூறிய மாதிரி வரவில்லையே' என்று வினா எழுப்பலாம். அதைப் பற்றி எனக்கு
அக்கறையில்லை.

புதுமைப்பித்தன்
காந்தி, 10 டிசம்பர் 1933


நன்றி: அன்னை இட்ட தீ (புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத/தொகுக்கப் படாத படைப்புகள்)
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்

பூப்பூவா பூத்திருக்கு

 
Best new kid on the block:
பாரியின் 'உருமி மேளம்'
விகடனின் 'கேரக்டர்'களை நினைவுபடுத்தும் தொடர் ஆரம்பித்துள்ளார். தொடர்வாரா என்று பார்க்கணும்!

Best old kid on the block:
சபா சாரின் நினைவுத்தடங்கள்
பின்னூட்டங்களுக்கு பதில் காணோம்!

Best veteran kid on the block:
வெண்ணிலாப்ரியர்
நிறைய எழுதுகிறார் :-) ஆனால், அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாய் கொடுத்தால், இன்னும் எளிதாக செரிக்கும். ஒரு பதிவு படித்து முடிப்பதற்குள் அலுவலகத்தில் வேலையே பார்ப்பதில்லையோ என்று பயமுறுத்தும் பெரிய போஸ்டிங்குகள்.

Absolutely Fabulous...
தமிழ் இலக்கிய விருந்து
மெய்யாலுமே தலை வாழை இலையில் பாயசம் முதல் கேக் வரை.


பாரதியை குறித்து நேற்றே வலைப்பதிய வேண்டும் என்று நினைத்து, புத்தக அலமாரியில் அவசரத்தில் தேடியதில் புதுமைபித்தன் பாரதியை குறித்து எழுதியது அகபட்டது. அதை தட்டச்ச சோம்பி, ஏற்கனவே அடித்து வைத்திருந்த கல்கி கட்டுரை கொடுத்து விட்டேன். இன்று அந்த கட்டுரையை பிராயசித்தமாகவும், பிரசன்னாவின் சினிமா வாசனை கொஞ்சம் தூக்கல் என்ற விமர்சனத்தை நீர்க்க செய்யவும் இடுகிறேன். (செய்த பாவம் எல்லாம் கரைந்து விட்டால் சொல்லவும். காணாமல் போனவர்கள் பாக்கி இருக்கிறார்கள் :-)

பாஸ்டன் பாலாஜிThursday, December 11, 2003

உங்கள் பதிவைக் கொடுங்க... பாலைக் கூறுவோம்

 
ஆண்... பெண்பால் சமாசாரத்தில் நேற்றைய செய்தித் தாளில் ஒரு துணுக்கு பார்த்தேன். (இதற்கு பதிலாக வந்த பின்னூட்டங்கள் இன்னும் டக்கர் ஜிங் என இருக்கிறது!) அந்த வக்கீலின் கருத்து படத்தின் படி பெண்களின் ஒரு நாளில் 7000 சொற்கள் புழங்குவதாகவும், ஆண்களுக்கோ ஈராயிரத்திலேயே சிந்திப்பு நின்று விடுவதாகவும் சொன்னது. தாய்க்குலம், இடது, வலது என இரு பக்க மூளையையும் உபயோகப்படுத்துவதாகவும், அழகிய பாலார் (நாங்கதான் :) பாதி மூளையிலேயே ஒப்பேத்துவதாகவும் இன்னொரு செய்தி தொடர்ந்தது.

பல பெரிய எடிட்டர்கள், ஆண்களாக இருப்பதற்கும், இந்த ஆராய்ச்சியின் முடிவுகளுக்கும் சம்பந்தம் உண்டா என்பதை அறியேன்! நம்மில் சிலராவது, குறைவாக சிந்தித்து, சுருங்க சொல்வதில் வல்லவர்கள் என்பதில் சந்தோஷமே ;;-)

பாஸ்டன் பாலாஜிவாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன்!

 
ரஜினி ராம்கியாவது ஏதாவது எழுதி இருப்பார் என்று பார்த்தால் அவரும் இணையக் குழுவில் மட்டுமே இற்றைப்பாடுகள் கொடுக்கிறார். வலைப்பதிவிலும் குறித்திருக்கலாம்...

Happy Birthday
தினம் ஒரு கவிதை

 
தினம் ஒரு கவிதை நம்மில் பலருக்கு அறிமுகமான குழு. சில நாட்களாகத் தூங்கி வந்தாலும், சீக்கிரமே தூசி தட்டி ஆரம்பிக்கப் போகிறார்கள். அங்கு வந்த இரண்டு பதிவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Kanchana Damodharan quoted in DOK Yahoo Groupஅதிரிச்சியில் அலற வைக்கத் தெரியுமா? பிடி கலைப் பரிசை...

 

Turner Prize 2003 Winner - Boring Cool People by Grayson Perry'தமிழையும் இங்கிலீஷில் கற்றுக் கொடுப்பார்கள்..!'

 

['பாஷைக்கு அடிமைகள்' என்ற கல்கியின் கட்டுரையில்
இருந்து சில பகுதிகள்.
-விகடன் 09.சனவரி.32]"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதா வதெங்குங் காணோம்" - பாரதியார்


"இந்தப் பாழாய்ப் போன தேசத்திலே ஏன் பிறந்தோம்!" என்று
ஒவ்வொரு சமயம் உங்களுக்குத் தோன்றுவதுண்டு. முக்கியமாக,
தமிழர்கள் அரசியலிலும், சமூக வாழ்விலும் அடிமை பூண்டிருப்பது
போதாதென்று, கேவலம் பாஷைகளுக்கும் அடிமைபட்டிருப்பதை
நினைக்கும்போது, மேற்சொன்னது போன்ற தேசபக்தி குறைவான
எண்ணங்கள் உண்டாகின்றன.

பாஷைக்கு அடிமைத்தனம் இங்கே பலவிதமாக உருக்
கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நமது படித்த வகுப்பாரில்
100-க்கு 90-பேர் ஆங்கிலத்தின் அடிமைகள். சிலர் வடமொழிக்கு
அடிமைகள். வேறு சிலர் தமிழுக்கும், செந்தமிழுக்கும், தனித்தமிழுக்கும்,
உயர்தனித்தமிழுக்கும், உயர்தனிச் செம்மொழியாகிய தமிழுக்கும்
அடிமைகள்.

"எனக்குத் தெரிந்த பாஷைகளுக்குள்ளே தமிழ் பாஷையைப் போல்
இனிமையானது எங்கும் இல்லை" என்று சொல்கிறார். பாரதியாருக்கு
எத்தனை பாஷை தெரிந்திருந்தது என்பது முதல் கேள்வி. அதிகமாய்ச்
சொன்னாலும், நான்கு, ஐந்து பாஷைகளுக்கு மேல் தெரிந்திருக்க
நியாயமில்லை. கதையில் கிணற்றுத் தவளை சொல்லிற்று:- "நான்
பார்த்திருக்கிறதுக்குள்ளே இந்த கிணற்றைவிடப் பெரிய சமுத்திரம்
எதுவும் கிடையாது" என்று!

பாரதியாருக்குத் தெரிந்திருந்த சில பாஷைகளுக்குள்ளே தமிழ்
அவருக்கு இனிமை மிக்கதாகத் தோன்றியிருக்கலாம். ஆனால்
அதைக் கூட நான் ஒப்புக் கொள்ளவில்லை. எல்லா பாஷையிலும்
இனிமையும் இருக்கிறது; கடுமையும் இருக்கிறது. கம்பனைச்
சுவையறிந்து படிப்பவர்கள் படிக்கக் கேட்கும்போது, தமிழ் மிக்க
இனிய மொழி யென்று தோன்றுகிறது. "ஐயையோ! ஏன் தமிழ்
படிக்கிறோம்?" என்று தவிக்கச் செய்யும்படியான தமிழ் நடை
வேண்டுமா? "தமிழ் வசனம்" என்னும் தலைப்பில் வரும் உதாரண
நடைகளைப் படித்து வாருங்கள். அவைகளில் சில, தமிழ் என்றால்
பல் உடைபடுதல், தமிழ் என்றால் தலைவலி என்று உங்களைப்
பொருள் கொள்ளச் செய்யும். எல்லா பாஷைகளும் இப்படித்தான்.
எழுதுகிறவர் இனிமையாக எழுதினால், எல்லா பாஷையும்
இனிமையாகத்தான் இருக்கும். ஷெல்லியின் கவிகளைப் படிக்கும்போது
ஆங்கிலம் மிக்க இனிய பாஷையாகத் தோன்றுகிறது. வங்காளி மொழியில்
தாகூரின் கீதங்களைக் கேட்கும்போது, "இதைவிட இனிய மொழியும்
உலகில் உண்டோ?" என்று வியப்புறுகிறோம். ஹிந்தி பாஷையில்
பண்டித மாளவியா அல்லது பாபு இராஜேந்திர பிரஸாத் பிரசங்கம்
செய்யக் கேட்டால் "தேசீய பாஷையென்னும் கௌரவத்திற்குத்
தகுந்தது இதுதான்" என்று தோன்றும்.

ஆனால், பாரதியார் கவி, கவிகளுக்கு மிகைப் படுத்தும் உரிமையுண்டு.
மேலும் அவர் பெரும்பாலும் எதிரிகளை மனதில் வைத்துக் கொண்டு
பாடியவர். அவருடைய கவிகள் பல இம்மாதிரி எதிராளிகளுக்குப் பதில்
என்றே தோன்றுகிறது. சங்கச்செய்யுள் எதையாவது வாசித்துவிட்டு
"தமிழ் என்ன பாஷ? கடமுடவென்று கர்ண கொடூரமாயிருக்கிறது!"
என்று எவனாவது ஒரு மூடன் சொல்லியிருப்பான். இது காதில் விழுந்ததோ,
இல்லையோ, "யாமறிந்த மொழிகளிலே..." என்று பாரதி தொடங்கி விட்டார்.
அதற்குப் பிறகு குறைந்தது 10,000 பேர் தமிழின் இனிமையை நீரூபிப்பதற்காகவே
மேற்படி வரியை எடுத்தாண்டிருப்பார்களென்று தோன்றுகிறது. நான்
பத்தாயிரத்தோராவது பேர்வழி.

தமிழின் மேன்மையை நிரூபிப்பதற்கு இக்காலத்தில் இன்னும் பலவிதமாகவும்
முயற்சி செய்கிறார்கள். சமீபத்தில் ஓர் ஆங்கிலத் தமிழ்ப் புலவர் அநாகரிக
எஸ்கிமோ பாஷை முதல் உலக நாகரிக பாஷையாகக் கருதப்படும் பிரெஞ்சு
பாஷை வரையில் எல்லாவற்றிலும் தமிழ்ச்சொற்கள் கலந்திருக்கின்றனவென்றும்,
ஆகையால் எல்லா பாஷைகளும் தமிழிலிருந்தே தோன்றின வென்றும் நிரூபிக்க
முயன்றிருக்கிறார். இதே ஆதாரத்தைக் கொண்டு எஸ்கிமோ சாதியாரும் தங்களுடைய
பாஷைதான் உலகத்துக்கேத் தாய் பாஷையென்று நிரூபிக்கக் கூடுமல்லவா? கொஞ்சம்
கர்நாடகமான வேறு சிலர் பரமசிவன் அருளி, முருகக் கடவுளும் அகத்திய முனியும்
வளர்த்த மொழியாதலால் தமிழ் மகிமை வாய்ந்தது என்கிறார்கள். வேறு மொழியின்
துணையின்றித் தனியே இயங்கக் கூடிய பாஷை தமிழ் என்பதை நிரூபிப்பதற்காக
இன்னும் சிலர் இல்லாத அவஸ்தையெல்லாம் படுகிறார்கள். இவையெல்லாம் எதற்காக
என்பதுதான் தெரியவில்லை. மூக்கைத் தொடுவதற்கு இப்படி தலையை சுற்றிக்
கொண்டு கஷ்டப்படுவானேன்?

தமிழ் நாட்டார் தமிழ் ஏன் கற்க வேண்டும் என்பதற்கு இந்தக் காரணங்களெல்லாம்
தேவையென்று எனக்குத் தோன்றவில்லை. அதற்கு மிகத் தெளிவான காரணம்
ஒன்றிருக்கிறது. அது, நமது தாய்மொழி தமிழ் என்பதுதான். கல்வி பயிற்சியின்
உத்தம இலட்சியம் அறிவு வளர்ச்சியாயின். ஒருவன் தன் தாய்மொழியின் மூலமாக
வன்றி எளிதாகக் கல்வி கற்க முடியாது. அவ்வாறின்றி இம்மொழி உயர்ந்தது,
அம்மொழி தாழ்ந்தது என்று வாதமிடப் புகுதல் உண்மைக் கல்விப் பயிற்சிக்கு
விரோதமாவதோடு மக்களை பாஷைகளுக்கு அடிமைப் படுத்துவதுமாகும். நாம்
உணவு அருந்துவதற்கு சரியான காரணம் ஒன்றே ஒன்றுதான். வயிறு பசிக்கிறது
என்பதுதான். "ஏன் சாப்பிடுகிறாய்?" என்ற கேள்விக்கு, ஒருவன், "இந்த அரிசி
மிகவும் மேலான அரிசி. இதற்கு சீரகச்சம்பா என்று பெயர். குருவை, ஒட்டடையன்,
சிகப்புச்சம்பா, வெள்ளைச் சம்பா, வாடஞ்சம்பா, கொத்தமல்லிச் சம்பா
முதலியவைகளை விட இது உயர்ந்தது. உலக ஆரம்பத்தில் முதன் முதல்
சிவபெருமானுக்குப் பார்வதிதேவி சமைத்துப் போட்ட அரிசி இதுதான். பார்ப்பதற்கு
அழகாகயிருக்கிறது. ஆகையால் சாப்பிடுகிறேன்" என்று சொல்வானாயின் அவனை
சுத்தப் பைத்தியம் என்று சொல்ல மாட்டோமா? பைத்தியக்காரத்தனம் என்பது
மட்டுமல்ல; அதில் அபாயமும் இருக்கிறது. பசிக்காகச் சாப்பிடாமல் ருசிக்காகச்
சாப்பிடுபவன், நாவுக்கு அடிமையாகி உடல் சுகத்தைக் கெடுத்துக் கொள்வான்.
அது போலவே, பாஷைக்கு அதிக முக்கியம்கொடுப்பதினால் அறிவு வளர்ச்சி
தடைப்படுகிறது.

(மீதிப் பகுதியை நாளை தட்டச்சிடுகிறேன்....)


நன்றி: விகடன் பவழ விழா மலர் (2002)

5,6,7 (கோட் சூட், கால் மேல் கால் போடாமல் ஒரு தலை பத்து)

 
5. காசியின் சிந்தனைச் சிதறல்கள்
நண்பர் என்று சொல்லிவிட்டார் :) அதனால் மட்டுமில்லை... இற்றைப்பாடு என்று விளக்கம் வேண்டும் மொழியில் இருந்தாலும்,
உருப்படியான நாலு விஷயம் தெரிந்து கொள்ளக் கூடிய வலைப்பதிவு.

6. நா.கண்ணனின் மடல்
வினோபா சொல்வது போல் பொறாமையாய் இருக்கிறது :)

7. சுபாவின் உலக உலா
இவர் வலைப்பூவில் நினைவலைகளையும் பலநாடுகளையும் கொண்டு வருகிறார். வடிவமைப்பை அவசியம் குறிப்பிட வேண்டும். இனிமையான பதிவுகள்.

பாஸ்டன் பாலாஜி


Wednesday, December 10, 2003

கொள்ளிடத்தில் ஆரம்பித்து ஷாங்ரிலா வரை...

 
இந்தியர்கள் ஆங்கிலத்தில் தரும் வலைப்பதிவுகளை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. செய்நேர்த்தி, புத்தம் புது பதிவுகள், உலகப்பயணங்கள், ஏமாற்றாத இற்றைப்பாடுகள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக குறிப்பெடுக்கிறார்கள். ஒரு நாளைக்கு 8000 புது வலைப்பூக்கள் தோன்றுவதாக க்ருபா சொல்கிறார். தமிழில் ஒரு நாளைக்குத் தோன்றும் புதுப் பதிவுகளே பத்துக்குள் அடங்கி விடும். இதை பல்கி பெருக்க ஏதாவது செய்ய வேண்டும்.

நமக்கு வாழ்க்கை வரலாறு படிப்பது என்றும் பிடித்த விஷயம். கொள்ளிடத்துக்காரார் வாசன் சொல்வது போல் லீ ஐயகோகாவாக இருக்கட்டும், டீ கடை நாயரின் தினசரி கணக்கு வழக்காக இருக்கட்டும், வாசிப்பதற்கு ரெடி.

ஜெகன் போன்றோர் தமிழில் சில வார்த்தை எழுதினாலே ஊக்குவிக்க ஒரு படையே காத்திருக்கிறது. ஆனால், பரந்த வாசிப்பை பெறவோ, எளிதாக இருப்பதினாலோ, தமிழ் தெரியாததாலோ, அனேக தமிழர் ஆங்கிலத்தையே தேர்ந்தெடுக்கின்றனர்.

பவித்ராவின் இன்றைய பதிவு மனதை தைக்கும் எழுத்து. அவர் சொல்வது மாதிரியே இணையத்தின் மூலம் அறிமுகமான நட்புகள் ஏராளம். அனேகமாக, கல்லூரித் தோழர்கள் மாதிரியே, இந்தத் தொடர்பும் நீங்காது தொடரும் என்றே எண்ணுகிறேன்.

வாசனின் உதயமூர்த்தியின் கூற்றுகள் பதிவும் என்னை இன்று மிகவும் பாதித்தது. அந்த நூலைப் பற்றிய மேலதிக விவரங்களையும், பதிப்பாளார் தகவல்களையும் தந்தால் வாங்கி வைத்துக் கொள்ள உதவும்.

பாஸ்டன் பாலாஜிஓட்டுப்போடுங்கம்மா! ஓட்டு!!

 
மறுபடியும் நாந்தான். பாலாஜி ஷமிக்கணும்.

நம்ம ஊர்ல தேர்தல் நடந்தாத்தான் நாம ஓட்டுப்போட போறதில்லை (எல்லாருமில்லை). இங்கே வலையுலகில் ஒரு தேர்தல் நடக்கிறது. போய் ஓட்டுப் போடுவோமா? http://indibloggies.blogspot.com/. பல விதமான பிரிவுகள் இருக்கின்றன. பிடித்த வலைக்குறிப்புகளை பலர் முன்மொழிந்திருக்கிறார்கள்., என்னை ஈர்த்தது பிராந்திய மொழி வலைக்குறிப்பாளர்கள் பிரிவுதான். தமிழ் வலைக்குறிப்புகள் இரண்டுதான் களத்தில் இருக்கின்றன. ஒன்று பத்ரி, மற்றது வெங்கட். இதைத்தவிர நமது பவித்ராவின் ஆங்கில வலைக்குறிப்பும் 'புது வலைக்குறிப்பு' பிரிவில் இடம் பெற்றிருக்கிறது. இதுபோக நான் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் பல வலைக்குறிப்புகள் இருக்கின்றன - குமரகுருவின் வலைக்குறிப்பு, குரு aka Lazygeekஇன் வலைப்பதிவு, மகேஷின் பில்டர் காப்பி என்று...

அந்த வலைகுறிப்புகளிடையே தேர்தல் வைத்து, வெற்றி பெற்ற வலைக்குறிப்புகளை மார்கழி 25 வாக்கில் அறிவிவ்ப்பார்களாம். தேர்தல் இன்றிலிருந்து பத்து நாட்கள் நடக்கும். ஒரு எட்டு போய் ஓட்டுப்போட்டுட்டு வாங்க. சரியா?

நாட்டுக்கொரு சேதி சொல்ல...

காணாமல் போகிறார்கள்

 
'ஸ்ரீரங்கத்து ஜிகிடி' என்று செல்லமாக திருடா...திருடியில் அழைக்கப்படும் இவருக்காவது அடுத்த படம் உண்டா. இவரும் ஒரு படத் தாரகைதானா? கலக்கலாக குத்துகிறார் (பார்க்க... 'மன்மத ராசா'). தமிழ் தெரியாத வட நாடு இறக்குமதி. தமிழுக்குப் பொருத்தமான குஷ்பு டைப் உடல்வாகு. அட, நடிக்கத் தெரிந்ததுதான் தவறு போல?!

Chaaya Singhபாஸ்டன் பாலாஜி
ஜின்னா பியர் வராத வரைக்கும் சரிதான்?!

 
Christmas sales of Adolf Hitler wine have reached a record high thanks to publicity generated by attempts to ban it in both Brussels and Berlin. /AP


Tuesday, December 09, 2003

காவியாஞ்சலி (தொலைகாட்சி நெடுந்தொடர் இல்லை)

 
மதுரை திட்டத்தில் இருக்கும் அனைத்து காவியங்களில் இருந்தும் நாம் தேடும் புது சொல்லுக்கு நிகரான பழஞ்சொல் இருக்கும் வரிகளை எடுத்து விளாசும் ஒரு நிரலி தேவை. நாம் கொடுக்கும் வார்த்தைகள், ஆங்கிலமாக இருக்கலாம், தமிங்கிலமாக இருக்கலாம், அகராதியில் கூட இல்லாத அக்மார்க் தமிழ்ச் சொல்லாகவும் இருந்து விடலாம். இந்த தொடர்களைப் புரிந்து கொண்டு, அதற்கு ஒத்த அந்தக் கால செய்யுள் சொற்களை கொடுத்து, நாம் தேர்ந்தெடுத்த சிலவற்றில் இருந்து நாலடியார் முதல் நாலாயிர பிரபந்தம் வரை எல்லாவற்றிற்கும் சுட்டி கொடுக்க வேண்டும்.

இதை வைத்துக் கொண்டு, 'லாஜிக்' என்று தேடி பல செய்யுள்களை கண்டுபிடிக்கலாம். பின் அதை வைத்து மக்களை சதாய்க்கலாம். இன்னும் பல பலன்கள் இருக்கு. அதில் ஒன்றை பின் வரும் நிரலி ஆசையில் தெரியப்படுத்துகிறேன்.

பாஸ்டன் பாலாஜி
சிறுபத்திரிகை ஸ்பெஷல்

 
நம்ப வைக்கும் உணர்வுகளின் கற்பனைத் தொகுப்போடு வலைப்பூவை ஆரம்பிக்கிறார் தங்கமணி. நாளிதழ் ஹிந்துவைப் குறித்த இவரது கருத்துக்களை படித்தால் ஜெ.ஜெ. நிச்சயம் மகிழ்வார். ஒரே ஒரு பத்திரிகையை மட்டும் எதிர்த்தால் போதுமா? தங்கமணி சொல்லும் விளம்பர யுத்திகள் உபயோகமானது. அவற்றை நேர்மறையாக செய்வது மேலும் பயன் தரும். யாராவது புலிக்கு மணி கட்டுவீர்களா?

கவிதைக்கு ஒரு பிரசன்னா என்றால், இந்த கட்டுரைகளில் தங்கமணி 'வந்தேன்...வந்தேன்...' என போட்டி கட்டுகிறார். இரண்டு பேரின் பல படைப்புகளும், எனக்குப் புரிவதற்கு வாசிப்பு அறிவு பத்தாது!

பாஸ்டன் பாலாஜி
திட்றாங்க.... திட்றாங்க...

 
சுந்தர வடிவேலுவின் வலைப்பூக்கள் பனியால் மூடப்பட்ட சாலை மாதிரி ஒழுங்காகவேத் தெரியவில்லை. இருந்தவற்றை எடுத்து 'சொல்லேட்டில்' (wordpad) இட்ட பிறகே படிக்க முடிகிறது. அமெரிக்க வடகிழக்கில் விழுந்த பனியின் சுவாரசியங்களை சொல்லி அப்பாவியாக ஆரம்பிக்கிறது. பின்னர் நெறிபடுத்தப்படாத தீவிரவாதம் (தீவிரவாதத்தில் அப்படி என்று ஒன்று இருக்கிறதா? காஷ்மீர் வகை பாகிஸ்தானால் கட்டுபடுத்துவதால் அது ஓகேயா?), ஆடும் தலைகள், எருமை மாடுகள் என்று, 'இந்தா... பிடிச்சுக்கோ' என துக்ளக்காக எதையும், எல்லாவற்றையும் மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்.

துபேக்கு நிகழ்ந்தது போன்ற அசிங்கங்களும் சுந்தரவடிவேலுவின் தட்டச்சிலிருந்து தப்பிக்கக் கூடாது. அப்படியே, பத்ரி சொல்வது போல், கொடுமை என்று மட்டும் கத்தி மட்டும் விட்டு விடாமல், நடைமுறைபடுத்தக்கூடிய தீர்வுகளையும் பதிந்தால் பலரின் மனம் அங்கலாய்ப்பதோடு, சிந்திக்கவும் செய்யும்.

வலைப்போக்கரின் கருத்துக்களும், அவற்றுக்கு மதிப்பளித்த சுந்தர் பாலாவின் பதில்களையும் பார்த்து விடுங்கள்

பாஸ்டன் பாலாஜி


இயற்கை & மருதநாயகம் (ஆங்கிலப் பதிப்பு)

 
விடுமுறை விட்ட மதி மீண்டும் பட அறிமுகங்களை ஆரம்பித்து விட்டார். Archives என்று பொத்தாம் பொதுவாகக் கொடுக்காமல், வெங்கட், பாலாஜி (பாலாஜி எத்தனை பாலாஜியடி...), போன்ற பலர் கொடுப்பது போல், படத்தலைப்பின் பேரில் கோப்புகளை இட்டால் என் போன்றவர்களுக்கு அசை போட்டு படிக்க எளிதாக இருக்கும்.

இந்தப் படம் சரியான சமயத்தில் வந்துள்ளது. அமெரிக்கர்களின் ப்ரெஞ்சு மேலான கடுப்பு, ப்ரிட்டிஷ் ஆதரவு என்னும் கருத்துகளை கொண்டு வருகிறது. டாம் க்ருஸ் நடித்த 'சாமுராய்' படம் பார்த்துட்டீங்களா? அமெரிக்க விமர்சகர்களுக்கு அவர் கமல் மாதிரி. நன்றாக நடிப்பார்; ஆனால், கதாபத்திரமாகவே மாறமாட்டார் என்று குற்றஞ்சாட்டுவார்கள். பல சஞ்சிகைகள், சாமுராயின் சரித்திர மருதநாயகத்தில் போர் வீரன் தெரியவில்லை; ஆனால், ரஸல் க்ரோவின் படத்தில், கப்பல் காப்டன் மட்டுமே உலாவுகிறார் என்று ஆஸ்கருக்கு உசுப்பேற்றி விட்டுக் கொண்டிருக்கிறது.

பாஸ்டன் பாலாஜிகாணாமல் போனவர் II

 
துறுதுறு குழந்தை முகம். லைலாவை விட இளிக்காத சிரிப்பு. தமிழ் ஹீரோயினுக்குத் தேவையான நடிப்பு. ரங்கீலாவில் கிண்டலாக சொவது போல் 'சிர்ஃப் தோ பால்' தலைமுடி கற்றை. இருந்தும் இன்னும் காணோம்!

Samurai Anitha (& Vikaram)நிரலி வேணும்.... எனக்கு வேணும்...

 
சில ஆசை வைச்சிருக்கேன். எளிதில் நிறைவேற்றப்படக்கூடியவைதான். இந்த மாதிரி பயனுள்ள கருவிகள் மட்டும் கிடைத்தால் இணையத்தில் எழுதுவது, பதிலளிப்பது, படிப்பது அனைத்தும் அடுப்பை பற்றவைப்பதைவிட எளியதாய் ஆகிவிடும். இன்னிக்கு முதல் ஆசை.

நான் சி/சி++ இன்ன பிற மொழிகளில் மென்பொருள் எழுதியவுடன் ஒரு நிரலி தானியங்கியாக அதை மேய்ந்து, எங்கு ஒழுங்காக எழுத வேண்டும், எவ்வாறு சீர் செய்யலாம், எதை இன்னும் கொஞ்சம் மினுக்கிட வேண்டும், ஏன் மற்றவர்களுக்கு என்னுடைய குறியீடுகளும், குறிப்புரைகளும் புரியாமல் போகலாம் என்று பரிந்துரைக்கும். சரி செய்வதும், மாற்றி அமைப்பதும் என்னுடைய (மேலாளரை பொறுத்தது என்று
படித்தருள்க) விருப்பமே.

அற்புதமாக வேலை செய்யக்கூடிய மென்பொருள்; எந்தவித பழுதும் இல்லாமல், கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்றுகிறது என்று சான்று பெற்ற மென்பொருள்; கண்ணில் ஆலிவ் ஆயில் விட்டு சோதனை செய்யப்பட்டு, தரக் கட்டுப்பாடு இலாக்காவிடமிருந்து வெளிவந்த மென்பொருளுக்கு இந்த கடைசி கட்ட சுய கட்டுபாடு சோதனை.

இதே மாதிரி அனைவர் எழுதும் கதைகளுக்கும், கவிதைகளுக்கும் (முக்கியமாக துளிப்பா/புதுகவிதைகளுக்கு) ஒரு நிரலி வடிவமைக்கப்பட வேண்டும். கதை ஓட்டம் எவ்வாறு உள்ளது, எங்கு லாஜிக் இடிக்கிறது, எவ்வாறு வாசகனின் அறிவை மட்டம் தட்டாமல் இருப்பது, கலி வெண்பாவில் சீர் எப்படி சரி செய்ய வேண்டும் என்று அது பரிந்துரைக்கலாம்?

பாஸ்டன் பாலாஜி


எப்டி எழுதணும்? மனம் போன போக்கில்! அறிவு சொல்லும் பாதையில�

 
காசியின் பதிலில் இருக்கும் நியாயங்களும், வாதமும் எனக்குக் கொஞ்சம் தெளிவை ஏற்படுத்தினாலும், எனக்கு இன்னும் உள்ளங்கை நெல்லிக்கனி ஆகவில்லை.
(ஈரடி பனி மலையை சுத்தம் செய்த பின் எடுத்துக் கொண்ட சோம பானத்தின் விளைவோ... நானறியேன்!)

ஒரு வரியை நான் கொடுத்தது, சும்மா ஒரு காட்டாகத்தான். அவரின் மொத்த கட்டுரையையும் ஒரு சராசரி தமிழன் படித்து புரிந்து கொள்வான் என்பது எல்லாம் 'பிதாமகன்' பட வெட்டியான் மாதிரி நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனை. சிறு பத்திரிகை வாசகன் வேண்டுமானால் படிக்க முடியும். சிலருக்கு நிறைய வலைப்பூக்கள் ஒழுங்காகத் தெரிவதில்லை. இன்னும் சிலருக்கு எங்கு, எது, எப்படி உள்ளது என்றும் தெரிவதில்லை. இந்த கட்டுரையை எளிமையாக்கினால், ஏழு எழுத்துரு, ஆறு கோப்புகள் தாண்டி வரும் 'உலகத்தமிழர்' ஒரு buzzword கற்றாவது பயனடைவர். அம்புட்டுதேன்.

ஆங்கிலத்தில் ஒரு நாளைக்குப் புதிதாக முன்னூறு புதிய வலைப்பூக்கள் ஆரம்பிக்கின்றன. (ஏவ்வளவு தொடர்ந்து பூக்கிறது என்று எனக்கு புள்ளி விவரம் கிடைக்கவில்லை :-) தமிழில் மொத்தமே ஒரு நூறுக்குள் அடங்கி
விடும். இதை படிப்பவர்கள் எண்ணிக்கை?

சரி. மீண்டும் நான் கேட்ட கேள்வி. அமெரிக்கப் பேத்தியின் ஒரு அறுபது வயசு தாத்தா, ஐரோப்பிய தமிழனின் ஐம்பது வயசு அப்பா, குமுதம்/விகடன் கூட புரட்டி மட்டுமே பார்க்கும் பதினெட்டு வயசு தங்கை, ஏற்கனவே புருஷனுக்கு ரேடியா ஷாக், அமேசான் ஆசை பட்டியல் அறிந்த மனைவி, ஆகிய இணையத் தமிழர், கணினி அறிவு நிரம்பியவரே. அவருக்கு இந்த கட்டுரை இந்த அவசர உலகின் கடகட வாசிப்பில் புரிந்து, மேலும் படிக்கும் ஆர்வத்தையும் தூண்டுமா?

என்னால் தங்கள் நேரம் செலவு ஆவது எனக்கு நிச்சயம் வருத்தம் அளிக்கக் கூடிய ஒன்று :(

ஏதோ Taarof கேட்டீங்களேன்னு கொடுத்தேன் :-) தங்களின் பயனுள்ள ஆக்கங்களை, மேலும் இடையூறு இல்லாமல் தொடருங்க சார்!

தலை பத்து 8, 9 & 10

எது எப்படி போனா என்ன... 'கிழவியைத் தூக்கி மனையில் உட்காத்து' என்பது
போல 'தலை பத்து' தொடர்கிறது.

8. செல்வராஜ் - என் எண்ண கிறுக்கல்கள்
வழக்கம் போல் பாதுகாப்புக்காக கிறுக்கல்கள் என்றாலும் solid writings.
9. வினோபா கார்த்திக்கின் பரிசல்
நாலு மாசமாய் சில்லென்று பூத்து வருகிறார்.
10. பரிமேலழகரின் வலை கிறுக்கல்கள்
குழப்பமில்லாத வடிவமைப்பு; தெளிவான செய்தி கருத்து; சொந்த அனுபவங்கள்.


பாஸ்டன் பாலாஜி


Monday, December 08, 2003

மீண்டும் 'காசி' அல்ல... பாஸ்டன்+பெங்களூர்

 
பெங்களூரில் நான் இருந்த நாட்களில், திடீரென்று நண்பனோ உறவினரோ வருவார்.
தூங்கிக் கொண்டிருந்தாலும் கதவை தட்டி, காப்பி போட்டு, பைக்கில் கூட்டிக் கொண்டு
எம்.ஜி. ரோட், கே.ஆர். சர்கிள், அல்சூர் லேக் என்று உலா வந்து, நைட் வாட்ச்மேனில்
'ஆலிஸ்... ஆலிஸ்... ஹ¥ தி @#$% இஸ் ஆலிஸ்' என்று கத்தி விட்டு, ரெக்சிலோ,
ப்ளாசாவிலோ டிக்கெட் கிடைக்காமல், லிடோவிலோ, பல்லவியிலோ ஹிந்திப் படம்
பார்க்கும் வாரயிறுதிகளை ஏனோ நினைவு படுத்துகிறது இந்தப் பதிவு.

அமெரிக்கா வந்த பிறகு அதே மக்களின் குணம் மாறிப் போனது. என்னைக் கூப்பிட்டால்
'இந்த வாரம் வலைப்பூ வேலை; அடுத்த வாரம் ·ப்ரீ' என்பேன். நான் இன்னொருவனைக்
கூப்பிட்டால், 'இல்லை.. இந்த வாரயிறுதிக்கு நான் ஆன் கால்' என்பார்கள். அப்படி, இப்படி
பேசி, கடைசியாக, இரண்டு மாதம் கழித்து ஒரு நாளைத் தேர்வு செய்து, அதற்கு அவுட்லுக்கில்
நேரப்பதிவு செய்து, வரும் பாதை போட்டு கொடுத்து, டி-டே அன்று காலையில் ஒரு தரைபேசி,
கிளம்பும் முன் ஒரு செல்பேசி, கிளம்பிய பின் பாதி வழியில் ஒரு அறிவிப்பு என்றுதான் சந்திப்பு
திட்டம் போடுகிறோம்.

இலங்கைத் தமிழரிடம் இந்த முன்கூட்டி அறிவித்து விட்டு வரும் பழக்கம் இல்லை என்று
கேள்விப்பட்டுள்ளேன். இந்தியா மதிரியே, திடீர் என்று ஆஜர். வீட்டில் உள்ளதை பகிர்ந்து
கொள்வது, இல்லை திடீர் உப்புமா கிண்டுவது, கொஞ்சமே குப்பை ஆங்காங்கே தென்பட்டாலும்
கண்டு கொள்ளாதது, வீட்டை தலகீழாய் எல்லாம் திருப்பிப் போடாமல் உள்ளது உள்ளபடியே
விடுவது என்று இருப்பார்கள் என்று சொன்னார்கள். அப்படியா?

பாஸ்டன் பாலாஜிஎந்தூரு போனாலும்... அது நம்மூரு போல வருமா?

 
Two football fans settle in their seats, which they cleared, while others survey the snowy seats in Gillette Stadium about an hour before the game between the New England Patriots and the Miami Dolphins in Foxboro, Mass. (AP)


பாஸ்டன் பாலாஜிசாத்தானின் போதகன்

 
காசி புரிந்த மொழியில் (தமிழ்தானுங்க :) புதிய விஷயங்களை கொடுத்தாலும் ஆங்காங்கே வரும் வார்த்தைகளுக்கு க்ரியாவோ, உலகத் தமிழ் ஆராய்ச்சி புத்தகமோ தேவைப்படுது.

அவருடைய பதிவில் இருந்து ஒரு வரி....
>>----------
மேலும், நான் அறிந்த வரை, தொலைதொடர்புத் துறையின் கடைத்தள தொழில்நுட்பப் பணியாளர்களின் அக்கறையின்மை கம்பிவழித் தொடர்பில் இறுதிக்காதப் பிழைகள் பெருகுவதற்கு ஒரு முக்கியக் காரணம். அவர்களை மாற்றுவது என்ற கடினமான காரியத்தைவிட, வைஃபை, மற்றும் CDMA செல்பேசிகள் மூலம் இந்தக் குறிப்பிட்ட குறைபாட்டை சரி செய்வது எளிது என்று நினைக்கிறேன்.
>>----------

கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு பற்றி விரிவாக எழுதியுள்ளார். இதனால் எவ்வளவு
தமிழருக்குப் பயன்? அவரின் உழைப்பும், தமிழில் விஞ்ஞான் தகவல்களை பதிவதும்
மிகவும் பாராட்டதக்கது. ஆனால், ஒருவர் wi-fi வேண்டும் என்றவுடன் கூகிலில்
தேடிக் கண்டுபிடிப்பார் அல்லது நேரடியாக அந்தக் கருவியுடன் வந்திருக்கும்
கையேட்டைப் பார்த்து தெரிந்து கொள்வார். எவர் கஷ்டப்பட்டு இங்கு வந்து
படிப்பார்?

நானும் அவர் எழுதியது குறிப்பிடத் தகுந்தது, பாராட்டப்பட வேண்டியது என்று
ஊக்குவித்து மட்டும் சென்றிருக்கலாம். ஆனால், மனதில் குதித்த சந்தேகத்தை
இங்கு தெளிவு செய்யலாமே என்றுதான்....

 
பாலாஜி, இடையில் குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும்.

சில நாட்களுக்கு முன்பு இங்கு நடந்த விவாதத்தின் தொடர்ச்சியாக இன்று ஒரு மடல் வந்தது. அதை http://groups.yahoo.com/group/tamil_discussion/message/29 படிக்கலாம்.

நான் யார்?

 
இந்த bb நிறைய நல்ல விஷயம் செய்து
வருகிறார். நான் அவரல்ல. தூள்.காம், தினம் ஒரு
திரைப்பாடல்
என்று சுவையாக தொகுக்கிறார். இன்று அவர் எடுத்துக் கொண்ட பாடல்,
என்னில் ரீங்காரமிடும் பாடல். பள்ளிக்காலங்களில் திருட்டுத்தனமாக 'ஸ்டில்' மட்டுமே
பார்த்து திருப்திபட்டுக் கொண்ட படம்/பாடல். இந்தக் கால சிறார்களுக்குத்தான்
எவ்வளவு வாய்ப்புகள். மிட்நைட் மசாலா, இணையம், பெப்சி உங்கள் சாய்ஸ்
என்று இந்தப் பாடலை அலுக்கும் வரை காண்பித்திருப்பார்கள்.

'சின்ன வீடா வரட்டுமா' என்ற மற்றுமொரு ரீங்காரமிடும் பாடல் வரும்
ஒற்றன் படத்தில் அர்ஜுன் ஏழு வேடம் தரிக்கிறாராம்.
'எல்லாம் இன்ப மயத்தில்' கமல் பத்தோ, பதினொன்றோ கட்டுவார்.
சிவாஜியும் (நவக்கிரகம்?) ஒன்பது விதமாக வந்திருக்கிறார்.
ம.கோ.ரா. ரொம்ப கஷடப்படாமல் ஒன்பது கதாநாயகியோடு
(நவராத்திரி?) மட்டும் நடித்தார்.

எனக்கு திரைப்படத்தில் விதவிதமாக வர முடியாவிட்டாலும்,
புகைபடத்திலாவது விதவிதமாக முகத்தை மாற்றிக் கொள்ள
முயன்றிருக்கிறேன்.

இதோ ஒன்று...
Me... Myself... Balaji...பாஸ்டன் பாலாஜி


(தமிழில்) காணாமல் போகும் உருப்படியான கலைஞர்கள்

 
பாரியின் வருத்தம் அனைவராலும் கேட்கப்படுவது.
ஸ்னேஹாவுக்கு என்ன ஆச்சு? சிறப்பு நிகழ்ச்சியில் வராங்க... 'பக்.. பக்.. பக்.. ஓ... மாடப்புறா'
என்று கொஞ்சும் சொந்தக் குரலில், தமிழில் பாடறாங்க. அப்புறம் ஸ்ரீகாந்த்துடன்
நிம்மதியாக ஊர் சுற்ற முடியவில்லை என்று வருந்தி விட்டு, அந்த தொல்லைகள்
இல்லாத தெலுங்கு பக்கம் போயிடறாங்க. மியாவ், வினோத் இன்ன பிற நிருபர்கள்
அனைவரும் தமிழ் திரையுலகிற்கு வாக்களிக்க வேண்டும். டயானாவை 'பபாராசி'
துரத்தியது போல், இனி ஜோதிகாவை, பூமிகாவை, ஷமிதாவை, இன்ன பிறரை துரத்த
மாட்டோம் என்று.

இப்படி எல்லாம் கஷ்டப்படுத்தாமலே சிலர் காணாமல் போகிறார்கள். அவர்களில்
என்னைக் கவர்ந்த சிலரை சொல்கிறேன்.

ஒரு சுமாரான ஹிட் படத்தில் co-கதாநாயகன். இன்னொரு படத்திலும் நல்ல பெயர்.
இருந்தும் தனுஷ், சிம்பு மழையில் காணாமல் போகும் நல்ல நடிகர் இவர்.

Maunam Pesiyathe Nandhaரொம்ப சினிமா வாசனை அடிக்குது என்று ஒரு ஏவுகணை வருவதற்குள் அடுத்த
படம் போட்டு விடுகிறேன்.

பாஸ்டன் பாலாஜி


Sunday, December 07, 2003

தமிழ்ப்பூக்களின் தலை பத்து

 
தமிழில் வலைப்பதிவு செய்பவர்களின் வலைப்பூக்களை, தலை பத்து
வலைகுறிப்புகளாக இந்த வலைச்சுவடில், ப்ளாஃக் செய்ய எண்ணம்.
(அய், எல்லாவிதமான பெயர்களையும் ஒரே வரியில் கொண்டு வந்தாச்சு :>

பட்டியல் நிச்சயமாக பாரபட்சமானது. கவிதைகள், கதைகள், மட்டுமே
குறிக்கப்படும் பக்கங்களை ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளவில்லை.
நான் தொடர்ந்து சென்று வரும் பக்கங்களை மட்டுமே கருத்தில் கொண்டு
இதைத் தயார் செய்துள்ளேன். ஒருவர் ஒன்பது மொட்டுக்கள் வைத்திருந்தால்
ஒன்று மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

இன்று ஆறுதல் பரிசு பெறுபவர்கள் விவரம்....

1. அமலா சிங் - எண்ண அலைகள்
படு எளிமை. மற்றவர்களின் கருத்துக்களை பதிக்கவும் இடம் கொடுக்கணும்!
2. இட்லி வடை
காசி சொல்வது போல் கொஞ்சமாய் 'ஊசிப் போனதால்'.
3. குருவிகளின் விஞ்ஞான செய்திகள்
அமர்க்களம் + தனித்தன்மை. கொடுக்கறவங்க ஊரு பேரு இங்கும் தெரியவில்லை.

பாஸ்டன் பாலாஜி
கும்பிடறேனுங்க!

 
முதலில் தமிழில் ஏன் ப்ளாஃக் இல்லை என்று கேள்வி கேட்டு, வலைப்பூக்களை பட்டை கிளப்ப விட்ட மாலனுக்கு நன்றி. அடுத்த ஒரு வாரம் எதை பற்றியும், எல்லா பூக்களையும் விற்க ப்ளாஃக்-ஸ்டாண்ட் வேலை. நான் குமுதத்தின் 'வாரம் ஒரு ஆசிரியரின்' மிகப் பெரிய விசிறி. ஒரு நல்ல எதிர்பார்ப்பையும், பழஞ்சாதம் முதல் அறுநூறு டாலர் வைன் வரை பலவற்றையும் சுவைக்க அது ஒரு வாய்ப்பாக இருந்தது. இங்கு மதி செய்யும் பொறுப்பாசிரியர் அசைன்மெண்ட், அதே மாதிரி ஒரு வெரைட்டியைத் தருகிறது.

தினம் பதினைந்து நிமிடம் பள்ளிக்கூடத்துக்கு நடை. போகிற வழியில் நிறைய குட்டி குட்டி கடைகள். பெட்டிக்கடையில் அன்றைய புது பத்திரிகைகளைத் தொங்க விட்டிருப்பார்கள். அட்டையில் இந்த வாரம் யார், என்ன ஸ்கூப் என்று ஆசையுடன் பராக்கு பார்த்துக் கொண்டே செல்வோம். (ஏழாவது வகுப்பு மட்டும்; அதற்கு பின் இந்தத் தேவை ஏற்படவில்லை ;;) அவ்வாறே, யார் யார் என்ன புது இதழ் கொண்டு வந்திருக்காங்க என்று பார்த்து விட்டு எழுத எண்ணம். ஏற்கனவே பதிக்கப்பட்ட வலைப்பூக்களை, இங்கும், எங்கும், பலரும் கண்டுகொண்டு விட்டார்கள். இந்த வாரம் வரும் புதிய வலைக்குறிப்புகளை டார்கெட் செய்ய எண்ணம். சரியா? தவறா?

அப்படியே என்னுடைய புலம்பல்கள் கொஞ்சம், தமிழ் வலைபூக்களுக்கு ஒரு தலை பத்து பட்டியல், அன்றாடம் கவர்ந்த தலைப்பு செய்திகள் (மிஸ். அயர்லாந்து பரிசை தட்டி சென்று விட்டார்; சைனாவில் போட்டி நடந்ததால், அவருக்கு மூன்றாம் இடம்; இல்லாவிட்டால், நகப்பூச்சுகளும், முகப்பவுடர்களும் மிஸ். சைனாவை கடைசி சுற்றுக்கு வரவிட்டிருக்குமா போன்ற அதி முக்கிய விஷயங்கள்), தோன்றும் சந்தேகங்கள், தமிழரின் உயிர்நாடியான கோலிவுட், நத்தார் தின அனுபவங்கள், அடுத்த நத்தார் தினத்துக்குள் முகுந்த், சுரதா போன்றவர்கள் கொடுக்கவல்ல தமிழ் நிரலிகளுக்கான் ஆசை பட்டியல் என நிறைய பதிய ஆசை.

வேலையும், குடும்பமும், இணையக்குழுக்களும், அரட்டைகளும், புத்தகங்களும், தூக்கமும், இணையமும் போக மிச்ச நேரத்தில் எவ்வளவு முடியும் என்று பார்ப்போம்.

பாஸ்டன் பாலாஜி


 
ஒரு ஸ்னேகமான வரவேற்பு :)

Vanakkam... Vanakkamungo


 

அடுத்து வருபவரை, நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். நன்றாகப் பூச்சுற்றக்கூடியவர். ஆதாரம் - தமிழோவியம், மானசரோவர். இது தவிர, 'ராயர்காப்பிகிளப்', மரத்தடி இணையக்குழுக்களிலும் நிறைய எழுதிவருபவர். உங்களுடன் இந்த வாரம் பாஸ்டன் பாலாஜி.

தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி'னு ஒரு கணக்கு சொல்வாங்க இல்ல. அது, இவரளவில் உண்மை. இவருடைய தாயாருடைய எழுத்தை நாம் சிறுவயதில் படித்திருக்கிறோம். அம்புலிமாமா, பால மித்ரா, ரட்னபாலா போன்ற சிறுவர் இதழ்களில் இவருடைய தாயார் எழுதி இருக்கிறார். அதுபற்றி பாலாஜியே விவரமாக சொல்வார் என்று நம்புகிறேன்.

உங்களுடன் - பாஸ்டன் பாலாஜி.

 
Altea, Spain. hmmmm.. veLila pani peiyuthunga. koncha naalaikku ippidi photothaan varum.

 
இதுவரை யாருமே செய்யாத ஒரு சாதனையைச் செய்துவிட்டு டாக்டர்.கண்ணன் விடைபெற்றிருக்கிறார். அவருடைய ஒரு பதிவிற்கு நாற்பது பின்னூட்டம் வந்தது. கவனியுங்கள் ஒரே ஒரு பதிவிற்கு மட்டும். மொத்தம் 12 பதிவுகளை இட்டு, 107 பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறார்.

நன்றி டாக்டர்.கண்ணன்.

 
(c)Jasmeen

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com