<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Friday, February 13, 2004

குன்றாத இளமையும்........

 
இன்று காலையில் மரத்தடி பக்கம் போன போது நண்பர் சித்ரன் அவர்களின் மின் மடல் கண்டேன்.
மனசு கனத்தது....இவருடைய நண்பரை போல் இருக்கும் எண்ணற்றவர்களுக்காக இந்த எழுத்து.......

"குன்றாத இளமையும்".....என்ற பாரதியின் வரிகள் எவ்வளவு ஆழமான ஓர் அர்த்தம் பொதிந்தவை. கடந்த காலங்களை தங்களது தோளில் சுமந்து கொண்டு இருக்கும் பலர், எங்கேனும் எப்போதெனும் ஓர் மனங்கவர் கவிதையை படித்தால் கூறும் முதல் வாக்கியம் " அதெல்லாம் அந்தக் காலம்....". என்னோட அப்பா college-ல படிக்கும் போது நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு கவிதை எழுதியதாக சொல்வார். என்னோட அண்ணாவும் கவிதைகள் எழுதியதை நான் பார்த்துள்ளேன். அவர்களை போல பலர் ஒரு கால கட்டத்தில் செயல்களின் திசை மாறி, உலகப் போக்கின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தங்களை தாங்களே அடையாளம் காணமல் போய் விடுகிறார்கள். இதில் நான் அவர்களுடைய குறைபாடாக பார்ப்பது தீவிரம் (கை நீட்டறது ஈசி??). "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நா பழக்கம்". நாம் ஏதேனும் எழுதுவதன் மூலம் மொழியை பழகிக் கொள்ள முயல்கின்றோம். கற்பது நிற்பது கல்லறையில். ஆகையால், செய்யும் அல்லது ஓரளவிற்கு செய்ய முடியும் என அவர்கள் நம்பிய எழுத்துப் பணியை தொடர்ந்திருக்கலாம். இவர்கள் ஓரளவு நல்ல பொருளாதாரம் சார்ந்த சமூக நிலையில் இருப்பவர்கள். இதன் மூலம் நான் கூற வந்தது, தீவிரம் என்பது காலத்தால் கரையாத ஓர் தனிமமாக பார்க்க வேண்டிய மனோபாவத்தின் தேவையை. இளமையில் விரும்பும்/பயிலும் கலையில் காலத்தை சேர்த்து தங்களை முதியோர் ஆக்கிக் கொள்ளும் இந்த சமூகத்தின் அவலம்தான் பாரதியை இவ்வாறு வேண்ட வைத்திருக்க கூடும்.

சரி, சித்ரனின் நண்பரை பற்றி கூறும் போது, எனக்கு தோன்றுவது கலைஞர்களை அடையாளம் காண நம் சமூகம் ஓர் ஜன்னலை திறக்காமல் இருப்பது. அது எப்படி பட்டதாக இருக்க வேண்டும் என்பது விவாதித்து அறிவு பூர்வமாக உருவாக்க பட வேண்டியது. உதாரணத்திற்கு நல்ல படைப்புகளுக்கு பரிசாக scholarships ஏற்பாடு செய்வது (குறைந்தது ஒரு வருடமாவது). இதன் மூலம் கலைஞர்களை அடையாளம் காண்பது மட்டும் அல்ல அவர்களது திறமையை சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். வலைப்பூவின் நோக்கம் பல எழுத்தாளர்களை ஊக்குவிப்பதும், உருவாக்குவதும் ஆகும் (சரிதானே மதி?!!). மதி அவர்களின் மற்றொரு முயற்சி புதிய படைப்பாளிகளை அடையாளம் காண மரத்தடியில் அறிவித்துள்ள போட்டி.

சே! ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன்.....சாரி மக்களே!!!

Wednesday, February 11, 2004

ஒரு புத்தகம் - 2

 
"டோட்டோ -சான்" ஜன்னலில் ஒரு சிறுமி
-டெட்சுகோ குரோயாநாகி
மூலம் ஜப்பானிய மொழி
தமிழில்: வள்ளி நாயகம் & சொ. பிரபாகரன்
National Book Trust,India
----------------------------------------

இப்புத்தகம் பற்றி நான் கூறு'வதை' விட, அதை எழுதியவரே கூறியதை படியுங்கள்......

"நான் டோமோயியை பற்றி எழுத இன்னும் ஏராளமாகச் செய்திகள் உள்ளன. ஆனால் டோட்டோ -சான்னை போன்ற ஒரு சிறுமி பெரியவர்களின் மிகச் சரியான வழிகாட்டுதலுடன் மற்றவர்களுடன் கூடிப்பழகும் வகையில் நல்ல பெண்ணாக எப்படி வளர்ந்தாள் என்பதை மற்றவர்களை உணரச் செய்தால் அதுவே போதுமானது என நினைக்கிறேன்......
.......குழந்தைகளின் சுய மரியாதையையும், தனித்தன்மையையும் வளர்க்கப் போதிய அளவிற்கு சுதந்திரமான பாடத்திட்டமும், குறைந்த அளவு மாணவர்களைக் கொண்ட வகுப்பும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார் (தலைமை ஆசிரியரான கோபயாஷி). கற்பது காலை வேளையில் நடைபெற்றது. மாலையில் உலாவச் செல்லுதல், தாவரங்கள் சேகரித்தல், படம் வரைதல், பாடுதல், தலைமையாசிரியரின் உரையைக் கேட்டல் ஆகிய வற்றில் செலவிடப்பட்டது. அவரது சிறப்பு முறையின் மீது அளவிடமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார். பின்னாளில் அது போன்ற பாடத்திட்டத்தை உடைய டோமோயி பள்ளியை உருவாக்கினார்.

டோமோயி தற்போது இல்லை. ஆனால் இந்தப் புத்தகத்தை படித்த பின் உங்கள் நினைவில் டோமோயி நிற்குமானால் அதுவே எனக்குப் பெருமகிழ்ச்சியாகும்."

இந்த புத்தகத்தை படித்தால் நிச்சயம் டோமோயி மனதில் நிற்கும்.

இந்த புத்தகத்திலிருந்து சில வரிகள்........

புதிய பள்ளி
புதிய பள்ளியின் கேட்டை (gate) பார்த்ததுமே, டோட்டோ -சான் நின்றுவிட்டாள். அவள் போய்க்கொண்டிருந்த பழைய பள்ளியின் கேட், பெரிய எழுத்துகளில் பள்ளியின் பெயர் எழுதப்பட்ட அழகிய தூண்களில் இருந்தது. ஆனல் இந்தப் புதிய பள்ளியின் கேட், இளந்தளிர்களும், இலைகளும் உடைய சிறிய கம்பத்தில் இருந்தது.
" இந்த கேட் வளர்ந்து கொண்டேயிருக்கும்" டோட்டோஸான் சொன்னாள். " ஒரு வேளை இது டெலிபோன் கம்பங்களை விடவும், உயரமாக வளர்ந்து கொண்டே போகும்.." அந்த இரண்டு 'கேட் கம்பங்களும்' உண்மையில் வேர்களுடன் கூடிய மரங்கள்தான். அவள் அதனருகில் போனதும், தனது தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்து பள்ளியின் பெயரைப் படிக்க ஆரம்பித்தாள்..ஏனென்றால் காற்றில் பள்ளியின் பெயர்ப் பலகை சிறிது வளைந்து படபடத்தது.
"டோ..மோ...யி... ஹா...கு ...ன்'
டோட்டோ -சான் அம்மாவிடம் 'டோமொயி' என்றால் என்ன எனக் கேட்கப்போன நேரத்தில், அவள் ஏதோ ஒன்றின் தெளிவற்ற காட்சியினால் பீடிக்கப்பட்டாள். அவள் தான் நிச்சயம் கனவுதான் காணவேண்டும் என நினைக்கும் படி அந்தக் காட்சி செய்துவிட்டது. அவள் அப்படியே உட்கார்ந்து விட்டாள். புதர்கள் வழியே இன்னும் நன்றாக பார்ப்பதற்காக உற்று நோக்கினாள். அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
" அம்மா, இது உண்மையிலேயே ரயில்தானே? அதோ, ஸ்கூல் மைதானத்தில்..!".
அந்தப் பள்ளி, தனது வகுப்பறைக்காக ஆறு கைவிடப்பட்ட ரெயில்வே கார்களை உபயோகித்தது. ஒரு வேளை கனவில் கண்ட ஒன்றாய்தான், அது டோட்டோ -சானுக்கு தெரிந்தது. ஹய்யா, ரயிலில் ஒரு ஸ்கூல்! ரயில்வே கார்களின் ஜன்னல்கள் காலை சூரிய வெளிச்சத்தில் மிளிர்ந்தன. அதையும்விட ரோஜா நிற கன்னத்தைய்டைய, புதர்கள் வழியே உற்று நோக்கும் அந்த சின்னஞ் சிறுமியின் கண்கள் இன்னும் அதிகமாக மிளிர்ந்தன.
.......
......
அம்மாவும், டோட்டோ -சான்னும் உள்ளே சென்றபோது, அலுவலகத்தில் இருந்த மனிதர் தனது நாற்காலியில் இருந்து எழுந்து நின்றார்......அவர், அதிகம் பயன்படுத்திய அறிகுறியுடன் கூடிய தனது 'திரி பீஸ் சூட்' டையே மிகவும் நேர்த்தியாக அணிந்திருந்தார்.
வேகமாக தலை வணங்கி, மிகவும் உற்சாகத்துடன் அவரை வினவினாள் டோட்டோ -சான், " நீங்கள் யார்? ஸ்கூல் மாஸ்டரா இல்லை ஸ்டேஷன் மாஸ்டரா?"
அம்மா சங்கடப்பட்டு போனாள். அம்மா அதை விளக்குவதற்கு நேரம் எடுத்துக் கொள்வதற்கு முன்னே, அவர் சிரித்துக் கொண்டே பதிலளித்தார், " நான் இந்த ஸ்கூலின் மாஸ்டர்."
டோட்டோ-சான் மிகவும் சந்தோசம் அடைந்தாள். " ஹோ... அப்படின்னா எனக்கு சந்தோசம்..." அவள் தொடர்ந்து சொன்னாள், " ஏன்னா. உங்ககிட்ட ஒரு சலுகை கேட்கப் போகிறேன். நான் உங்க ஸ்கூலுக்கு வர விரும்புகிறேன்..."
தலைமையாசிரியர் ஒரு நாற்காலியை கொடுத்து, அம்மா பக்கம் திரும்பினார். "வேண்டுமென்றால் நீங்க வீட்டுக்கு போகலாம். நான் இவளிடம் பேச விரும்புகின்றேன்."


கல்வி என்பது ஓர் அடிப்படையான தேவை. இன்றைய உலகில் வாழ்வதற்கான, (பிழைப்பதற்கான அல்ல)
வழிமுறையை பிறருக்கு, குறிப்பாக, குழந்தைகளுக்கு கொண்டு செல்ல இம்மாதிரியான பள்ளிகள் காலத்தின் கட்டாயம்.


அன்புடன்
-பாரி


புதிய பதிவுகள் -2

 
சந்திரவதனாவின் சுதந்திரம் பற்றிய கவிதையில் தெரியும் உண்மை அதிரச் செய்கின்றது. அவர் காட்டியுள்ள சுட்டியில் திரு. கண்ணன் அவர்களால் இடப்பட்ட "காதலா? கடமையா?" நாவல் எழுதிய சித்தி என்ற ஆச்சிம்மா பற்றிய குறிப்பு உள்ளது. இதை அனைவரும் பார்க்கவும். மூன்று வகுப்பு மட்டுமே படித்த இந்த முதிய பெண்மணி பலரின் மனதில் நம்பிக்கைகளை தோற்றுவிப்பார் என நம்புகின்றேன். அட! இவர் நாகூர் ரூமியின் உறவாமே!! :-) சந்திரவதனாவின் மாவீரர்கள் வீரப் பூவும் முக்கியமானது. இவரது இரசனையை இரசிக்க படித்தவை...குறிப்பாக எழில்நிலா கவிதை. மிக இயல்பாக, சூரிய ஒளியில் பளீரிட்டு அமைதியாய் இருக்கும் பூ போல இருக்கின்றது. தொல்கால சுடு மண் சிற்பங்கள் பற்றி இங்கே காண்க. இது அந்த பகுதியின் தொல் பொருள் ஆர்வத்தை தூண்டுகின்றது.

நெருப்புக் கோழியை பற்றி அழகான கட்டுரையை ஹரன் ப்ரசன்னா வழங்கியுள்ளார். பல சுவாரசியமான தகவல்கள் இதில் உண்டு. 250 கிலோ எடையை கூட இக்கோழிகளின் முட்டைகள் தாங்குமாம்! ஆம்லட் செய்தால் ஒரு குடும்பமே உண்ணலாம் என்கிறார். காமிரா பற்றியும் சிறு கணிணிகள் பற்றியும் அறிய கண்ணனின் வலை மொட்டிற்கு வாங்க!! சித்தூர்க்காரர் மறுபடியும் ஒரு தொடர் எழுதறார். அதை பற்றி 14-ம் தேதி பார்ப்போம். மீனாக்ஸின் முடிச்சை அவிழ்ப்பார் யாரோ?? :-). முத்துவின் கட்டுரை பயனுள்ளதாக அமையும். நம்ம பரி சார் தூய்மையெனப்படுவது பற்றி ஒரு விகடம் எழுதியிருக்கார். நேற்று காலையில் மஞ்சள் மலர்கள் உதிர்ந்த ஹெல்த் சென்டர் சாலையில் செல்லும் போது ஒரு எண்ணம் "இன்றைக்கு தூய்மை பணியார்கள் என் கவிதை தொலைத்து தன் கடமை செய்வர். அவர்களிலும் சிலருக்கு இரணம்'.

ரவி மிகவும் பயனுள்ள ஒரு தகவல் கொடுத்துள்ளார். சமூக அறிவியல் கட்டுரைகளுக்கான தளம் என்று இதை குறிப்பிடுகிறார். மேலும் இணையத்தமிழ் குறித்த இவரது கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஷங்கர் சுவடுகள்ல சில விஷயங்கள யதார்த்தமான முறையில் சொல்றார். சிந்திக்க தூண்டும் அவரது எழுத்து. சுந்தர் தனது பதிவில் மக்கள் இசை பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த வருடம் தமிழ்ப் பேரவையின் விழாவில் நாங்கள் இரசித்தது "தப்பாட்டம்".

தங்கமணி மற்றும் செல்வராஜ் அவர்களின் பதிவுகள் பற்றி நாளை சற்றே விரிவாக....

-பாரி

ஒரு புத்தகம்

 
ரூட்ஸ்- அலெக்ஸ் ஹேலி - ஆங்கிலம்

இது அலெக்ஸ் ஹேலியின் ஓர் ஆய்வு படைப்பு. கி.பி 1750ந் இளவேனிற் காலத்தில் துவங்கும் இந்த புதினம், ஆய்வாளரின் இந்த புதின பதிவுடன் (கி.பி 1974) முடிகின்றது. அதற்குள்தான் எத்தனை நிகழ்வுகள், எத்தனை அவலங்கள், எத்தனை நம்பிக்கைகள், எத்தனை உயிர்ப்பின் முயற்சிகள் (உயிர்ப்பு-வினைச்சொல்| சுதந்திர மாக உயிர் வாழ என பொருள் கொள்க).

ஒமொரோ-பின்டேகின்டெ-வின் முதல் குழந்தையாக பிறக்கும் குன்டா-கின்டெ இக்கதையின் முற்பகுதி நாயகன். குன்டா பிறந்து முதல் வாலிப வயதை அடையும் வரை நடக்கும் நிகழ்வுகளை கூறும் நேரத்திலே அக்கிராமத்தை (ஜுஃப்ஃபுரெ, மேற்கு ஆஃப்ரிக்கா) பற்றியும், அம்மக்களின் வாழ்வியலை பற்றியும் ஓர் இயல்பான பிம்பத்தை உருவாக்கிறார். நமக்கு அந்த கிராமத்தை நேரில் பார்த்த அனுபவம் தோன்றுகின்றது. அவர்கள் வாழ்க்கை நம்பிக்கை மற்றும் நேர்மையின் தளத்தில் அமைந்துள்ளது.

குன்டா பிறந்த பின் அவன் பெயரை மூன்று முறை அவன் காதில் ஓதுவது, பிறந்த குழந்தையை ஆகாயத்தை (சொர்க்கம்) நோக்கி காட்டி பிரமாண்டத்தை உணர்த்துவது, குழந்தைக்கான தாலாட்டு, மூதாதையர்கள் மேல் அவர்களின் மரியாதை, ந்-யொ-பொடோ கிழவியி குழந்தைகளுக்கு கதை சொல்வது, யாய்சா என்ற கிழவியின் எறும்பு அறுவை சிகிச்சை அனைத்தையும் மிக அழகாக காட்சி படுத்தியிருக்கின்றார்.
குன்டாவின் தாள முடியா சோகம் (அவனது பாட்டி இறந்தபின்) ஒமொரோ-வை அவனிடம் பேச வைக்கின்றது. " குன்டா! ஒவ்வொரு கிராமத்திலும் மூன்று வகையானவர்கள் வாழ்கின்றனர். முதல் வகை நீ எப்போதும் பார்ப்பது.... இங்கும் அங்கும் திரிந்து, உண்டு உறங்கி எழும் மனிதர்கள். இரண்டாம் வகை நமது முன்னோர்கள், நமது யாய்சா கிழவி கூட சமீபத்தில் அவர்களிடம் சேர்ந்து கொண்டார். மூன்றாவது வகை மக்கள், இனி பிறக்கப் போகும் வகையினர்". இதைக் கேட்ட குன்டாவிற்கு ஒரு வகையான சமாதானம் உண்டாகின்றது. சற்றே சிந்தித்து பார்த்தால் தெரியும், இது மட்டும்தான் நிதர்சனம் நியூயார்க்-ஆக இருந்தாலும் சரி, நாவரசன்கோட்டையாக இருந்தாலும் சரி.

குன்டா முதன் முறையாக டுன்டிக்கோ அணிவது, அவனுக்கு கவட்டை கொடுத்து அவன் தந்தை கூறுவது, இரண்டாவது கஃபூ-வில் சேர்வது, பள்ளி செல்வது, ஆடு மேய்ப்பது என்று அவன் வாழ்க்கை செல்கின்றது. அப்போது ஓர் நாள் அவன் தந்தை அவனை தனது சகோதரர்கள் உருவாக்கிய புதிய கிராமத்திற்கு அழைத்து செல்கின்றார். அது அவனுக்கு ஓர் பெரிய அனுபவமாக அமைகின்றது. பின்னாட்களில் அவனது தம்பி லாமின்னை அவன் அவ்வாறு தங்கம் எடுக்க அழைத்து செல்கின்றான். இதன் மூலம் கிராமத்தில் அவனுக்கு மரியாதை கூடுகின்றது. இதில் அந்த கிராம வாழ்க்கை அழகாக சொல்லப்படுகின்றது. வாலிபர்களுக்கான பயிற்சி முறைகள், திருமண முறைகள், என பல செய்திகள் ஆச்சரியமான நியாங்களுடன் சொல்லப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட தருணத்தில் அவன் கடத்தி செல்ல படுகின்றான். அவன் மேற்கொள்ளும் கப்பல் பயணம் மிகக் கொடுமை. பின்பு அமெரிக்கா வந்து, ஓர் பெண்ணை பெற்றெடுத்து, அவள் மற்ற ஒருவனுக்கு விற்கப்பட்டு, அவன் மூலமாகவே அவளுக்கு பிறக்கும் குழந்தைதான் சிக்கன் ஜார்ஜ். இவர்தான் இறுதி பகுதியின் நாயகன். இவர் தன்னளவில் சுதந்திரமாக திரிந்தாலும், சண்டை கோழிகள் வளர்ப்பதிலும், அதை சார்ந்த போட்டிகளில், தனது மாசா-விற்கு உறுதுணையாக விளங்கினாலும், சுதந்திரம் என்பது இவர் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. கடைசியில் தனது மாசாவிடமிருந்து அவனுக்கு நிகராக தந்திரம் செய்து விடுதலை பெற்று பின்பு தனது குடும்பத்தினரை சேர்ந்து, நிகழும் புரட்சியால் அனைவருக்கும் விடுதலை கிட்டும் போது அவனது உணர்வு, மெய்ஞானம் அடைந்தவன் போல் காணப்படுகிறது. அது உண்மைதானே?

இந்த நூல் பற்றி எழுதும் போது அடிமை முறையின் விளைவுகள் என் கண் முன் விரிகின்றது. எந்த ஒரு சமூகம் தன்னில் இருக்கும் தனி ஒரு உயிருக்குகூட முழு சுதந்திரம் கொடுத்து, உலக வாழ்வுக்கும், அதன் அடிப்படையான அறிவு விரிவாக்கலுக்கும், தேர்ந்த ரசனைக்கும், ஆழமான இயற்கை நேசிப்பிற்கும் ஊக்கம் கொடுக்கின்றதோ அந்த சமூகம் இலட்சிய சமூகமாகும். பாரதியின் வாக்கியமான "தனி மனிதனுக்கு உணவில்லையேல்...." என்ற வரியின் விரிவான புரிதல் நினைவு கூறத்தக்கது. இத்தகைய சமூகத்திற்கு விரிவான பார்வையும், தெளிந்த முன்னேற்ற நோக்கமும், நிபந்தனையற்ற தியாக உணர்வும் இருத்தல் இயல்பு. பாரதியாரும், கார்ல் மார்க்ஸும், தந்தை பெரியாரும், இத்தகைய ஒரு சமுதாயத்தை நோக்கி நம் அனைவரையும் இட்டு செல்ல, தங்கள் உழைப்பை விதைத்தனர்.அவர்கள் கருத்துக்களை விவாதித்து, புரிந்து, சுரண்டல்களை எதிர்த்து நம் சமூகமும் விடுதலை அடைய நம்மால் ஆன முயற்சியை தொடருவோம்.

Tuesday, February 10, 2004

ஓரு பூ

 

புதிய பதிவுகள்

 
முதலில் புதிதாக துவங்கியிருக்கும் வலைப்பூக்கள்.....
அருண் .
சலசலக்கும் நதியில்....என அழகியல் கவிதை படிக்கும் இவர், அக்கினி சாட்சியாய்.... என்று அவலத்தையும் படம் பிடிக்கிறார்.ஊடக அனுபவங்கள் உண்டு என்றாலும் தனது தற்போதைய ஆர்வம் குறும்படம் எடுப்பது என தெரிவிக்கிறார். திவா அவர்களின் வலைக்குறிப்பு குப்பைகளை சாடினாலும் குன்று மணிகளை அடையாளம் காட்டுகின்றது. இவரது எழுத்து வரும் நாட்களில் கவனிக்கப் பட வேண்டியது. இவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!! சுந்தரராஜன் சார் பூங்கொத்தை கண்ணில் காட்டுங்கள் சீக்கிரம்.
சரி இப்பொழுது மற்றவைகள்.....
அருணா ஒரு எக்குத்"தப்பான"(வாசிக்க-"சரியான") :-) கேள்வி மூலம் மீண்டும் களம் புகுந்துள்ளார். இன்னைக்கு என் நண்பன் பாபு 'இட்லி-வடை' வாங்கித் தந்தான். அப்பொழுது இந்த இட்லி-வடை க(வி)தை போட்டி நினைவுக்கு வந்தது. பார்த்து வேர்த்து விறுவிறுப்படையுங்கள்!! பெயரிலி idea-LEE-யா மாறி ஒரு லிஸ்ட் போட்டிருக்கார். பறக்கறவங்க படிக்கிறது படிச்சிட்டு புழுங்கறது. பொறாமை படவைக்கிறார் பவித்ரா. அவரோட வலைப்பூ மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அழகு செய்வது அவர் எழுதும் பயணங்கள், புகைப்படங்கள். பட்டைய கிளப்புறாங்க. படிச்சாலே மனசு அங்கே போகணும்னு குதிக்குது. இவங்களோட மறுபக்கத்தை இங்கே பாருங்க. நகைச்சுவைக்கு பெயர் போன கல்கி- இதை பார்த்தா சொல்வார் "பழனிக்கே பஞ்சாமிர்தமா?"ன்னு. நல்லா இருக்கு. கார்த்திக்கின் ஈழத்தமிழர்களும் தமிழர்களே நல்லா இருக்கு. இது போன்ற முயற்சிகளை தொடருங்கள் கார்த்திக்.
சந்திரவதனாவின் ஓர் சிறப்பான முயற்சி..... கவிஞர் தீட்சண்யனின் கவிதைகளை இங்கே பதிகின்றார். கருத்தாழமிக்க வார்த்தை ஜாலங்கள்.
வாமதேவன் பதிவுகளில் ரூமியின் தமிழாக்கப்பட்ட கவிதைகளை தந்துள்ளார். பதிவுகளில் காணப்படும் படங்கள் மிக அருமை.
சில வார்த்தைகள்.....

 
சென்ற வாரம் திரு. பத்ரி அவர்களின் கருத்துக்களும், அதன் எதிர் வினைகளும், விளைவுகளும் ஓர் ஆரோக்கியமான தமிழ் வளர்ச்சிக்கு இட்டு செல்ல பாதை வகுத்துள்ளது. அதை பற்றி எனது கருத்துக்களை கூறும் முன் சிறிது "ground work" செய்து கொள்கின்றேன். அடுத்த சில நாட்களில் அதை பற்றி எழுதுகின்றேன்.

இந்த வார குமுதத்தில் "ழ" கணிணி பற்றி ஓர் கட்டுரை. திரு. வெங்கடரமணனை பற்றி அதில் குறிப்பிட பட்டிருந்தது.

இன்று நாம் சில வலைப் பூக்களை நுகரலாம்.

அன்புடன்
பாரி

Monday, February 09, 2004

Miles to go before we preen

 

Sorry Balaji-Paari for intruding.

பிறமொழிகளில் வலைப்பதிவுகள் ஒரு இயக்கமாக இயங்குவதுபோல தமிழிலும் வலைப்பதிவுகள் கூட்டாக இணைந்து இயங்கவேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. தமிழ்வலைப்பதிவுகள் குறித்து வெங்கட் தமிழ்வலைப்பதிவுகள் குழுமத்தில் எழுதியது போல.

இப்பொழுது ஏறக்குறைய 80 வலைப்பதிவுகள் இருக்கின்றன. இன்னமும் பல உருவாகலாம். வலைப்பதிவுகள் எத்தனை சுலபமானது என்பது தெரியாததாலேயே, பலர் இதில் இறங்கவில்லை என்பதே நான் அனுபவரீதியாக அறிந்தது. அதற்காகத்தான் தமிழ் வலைப்பதிவுகளுக்காக ஒரு faq (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) பதிவு உருவாக்க சிலர் முயன்றோம். இதுவரை சிலரே இதில் ஈடுபட்டுள்ளார்கள். இது முழுமையானால், புதிதாக வந்து சந்தேகம் கேட்பவர்களை இங்கே அனுப்பலாம். தமிழில் வலைப்பதிவுகள் உருவாக்குவது ஒன்றும் பெரிய வித்தையில்லை என்பதையும் காட்டலாம்.

நான் என்னால் முடிந்த அளவு, bloggerஇல் எப்படி வலைபதியலாம் என்பதை Tamilblogs-tips&tricksஇல் காட்டியிருக்கிறேன்.

கடந்த ஆறுமாதங்களில் தமிழில் வலைப்பதிவுகள் பெரிதும் முன்னேறி இருக்கின்றன. இன்னமும் நிறைய தொழில்நுட்ப ரீதியாக செய்யவேண்டியது இருக்கிறது. இதற்குத்தேவையான உதவி கிடைப்பதில்லை. தலைவர்களும் ஸ்பான்ஸர்களும் வரும் அளவுக்கு தன்னலமற்ற தொண்டர்களும் ஆர்வலர்களும் கிடைப்பதில்லை.

தமிழ் வலைப்பதிவுகள் இப்போது இலவச சேவைகளைப்பயன்படுத்துகிறார்கள். சிலர், தத்தம் சொந்த இடங்களில் வலைபதிகிறார்கள். பெரும்பாலான தமிழர்கள், இலவச சேவைகளையே தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். இதில் வெங்கட் சொன்னமாதிரி, தமிழ் வலைப்பதிவர்கள் ஒருங்கிணைந்து வலைப்பதிவு சேவை ஒன்றை உருவாக்கலாம். இது வலைபதிவர்கள் தத்தம் சுதந்திரத்தையும் காத்துக்கொண்டமாதிரியும் இருக்கும். பிற வலைபதிவர்களோடு கைகோர்த்து ஒரு இயக்கமாகவும் இயங்கலாம்.

blogspotஇல் வலைபதிபவர்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சினை கருத்துப்பெட்டி. தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் ASP Blogcommentsஐ எப்படி நிறுவுவது என்றும், தமிழை அதில் எப்படிப்பயன்படுத்துவது என்றும் கண்டறிந்தால் பெரிய உதவியாக இருக்கும்.

இன்னொரு விஷயம். தமிழ் வலைபதிவர்களுக்கு வலைப்பதிவின் அருமையும் பெருமையும் ஏற்கனவே தெரிந்தவிடயம். கொல்லன் பட்டறையில் ஊசி விற்காமல், தமிழ் வலைப்பதிவு பற்றித் தெரியாதவர்களிடம் நாம் பேசவேண்டும். இதையே நான் மரத்தடி நண்பர்களிடமும், பிற குழு நண்பர்களிடமும் செய்தேன். செய்கிறேன். இங்கே, நான் உதவிய பல வலைபதிவாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளில் என் பெயரோ, சுட்டியோ இல்லை. அதை நான் விரும்பியதும் இல்லை. சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது என்று நான் நினைப்பவர்களை அணுகி, வலைப்பதிவுகள் பற்றிச் சொல்லி, இங்கு அழைத்து வந்திருக்கிறேன்.

இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு மீனா. காரைக்குடிக்காரரான இவர், அவருடைய சமூகத்தின் பழக்கவழக்கங்கள், செட்டியார்களுடைய வரலாறு, உணவுப்பழக்கங்கள் (செட்டிநாட்டு உணவை உருசிக்காதவர் இங்கிருக்க மாட்டீர்கள்), அவருடைய குடும்பத்துப்பெரியவர்கள் உறவினர்கள் பற்றி, பழங்காலத்தில் செட்டிநாட்டுக்காரர்கள் பயணம் செய்த நாடுகள், அனுபவங்கள் பற்றி, சிங்கையில் செட்டியார்களின் வரலாறு, இப்போது எப்படி இருக்கிறது என்று எத்தனையோ சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அவரிடம் பேசி, அவரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடிய சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்த்தி, blogspotஇலோ, blogdriveஇலோ ஒரு வலைப்பதிவை ஏற்படுத்திக்கொடுக்கலாம். ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் எழுத, அதுவும் இங்கே இணையத்தில் எழுதத்தொடங்கிய எனக்குத் தெரியும் அந்த முதலாவது அடிதான் தேவையென்று. அதற்குப்பிறகு தமிழுக்கு ஒரு அருமையான வலைப்பதிவு கிடைக்கலாம். தனியாக வலைப்பதிவு அமைக்கத் தயங்குபவர்களை http://yarl.net/ போன்ற கூட்டு வலைப்பதிவிற்கு அனுப்பி வைக்கலாம். இங்கே அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக ஒன்றும் செய்யத் தேவையில்லை.


சபாநாயகம் ஐயாவுடையதைப் போல. அவரை மரத்தடியில் கண்டபோது, வலைப்பதிவுகள் பற்றிச் சொல்லி, அவருடைய சின்ன வயது அனுபவங்களையும், அப்போதைய வாழ்க்கை முறைபற்றியும் இளைய தலைமுறையுடன் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக்கேட்டபோது, அவர்தான் 'கணையாழி' இதழைத் தொகுத்த சபாநாயகம் என்று நான் அறிந்திருக்கவில்லை. வரலாற்றின்மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தால், அவரிடம் கேட்டேன். நான் எதிர்ப்பார்த்திருந்தது - நாற்பது ஐம்பதாண்டு காலத்திற்கு முன்பு தஞ்சை, சிதம்பரம் பகுதியில் தமிழர் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும் என்பது. கிடைத்தது எதிர்பார்க்காத தமிழ் இலக்கிய வரலாறு.

ஒவ்வொரு முறை அவர் எழுதும்போதும், இன்னம் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள் ஐயா என்ற கோரிக்கையை தனியாகவும், மரத்தடியிலும், அவருடைய வலைப்பதிவிலும் சந்தித்து வருகிறார் அவர். கூடிய விரைவில் அதை நிறைவு செய்வார் என்று நம்புவோம்.

அதைப்போல வலைப்பதிவுகள் உலகிற்கு செம்மை சேர்க்கக்கூடியவர்கள் என்று நான் கருதும் பலர் யாகூ குழுக்களில் இருக்கிறார்கள். நாக. கணேசன் (தமிழ் வலைப்பதிவுகள் பற்றி எழுதி வரும் இவர் வீட்டு நூலகம் பற்றி நான்கூடக்கேள்விப்பட்டு இருக்கிறேன்.), சுஜாதா (பல சுவாரசியமான விஷயங்களை இவருடைய மடல்களில் படிக்கிறேன்). சிங்கை எழுத்தாளர் கமலா அரவிந்த். இவரிடம் பல மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவுகள் பற்றிப்பேசி, ஒன்றை உருவாக்கியும் இருக்கிறேன். அவருடைய நேரமின்மையாலும், என்னுடைய சோம்பல்தனத்தாலும் பிறகு தொடரவில்லை. ஆயினும் அவர் இதுவரை எழுதியவற்றை, அவர் விரும்பிய வண்ணம் ஒரு வலைப்பதிவில் தொகுத்து வைத்திருக்கிறேன்.


வலையில் பூக்கலாம் வாங்க !!

 
என்னது இது! என்று தோன்றுகிறதா?. ஆம்!! ஒவ்வொருவரிடமும் உள்ள ஓர் புதினத்தை வெளி கொணர ஓர் தருணம் வந்தே விட்டது. ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற் புரட்சி எவ்வாறு அச்சுக் கூடங்களையும் காகிதக் கற்றைகளையும் பரவலாக உருவாக்கி மேலும் அதனால் பல பத்திரிக்கைகளும், இலக்கியங்களும் தோன்றியதோ அத்தகைய ஓர் புரட்சி, மிகவும் அமைதியான ஆரவாரத்துடன், கணினி யுகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது. இன்றைய தகவல் தொழில் நுட்ப யுகத்தில் ஊடகம் என்ற நோக்கில் கணினியின் வீச்சு பிரமிக்கத்தக்கது. ஒலி, சலனப் படங்கள், செய்திகள் என்ற பல்வேறு வகையான ஊடகங்களின் பயன்களை இன்று ஓர் கணினியின் மூலம் சற்றே எளிதாக அடைய முடிகின்றது.

வாசகர் வட்டத்தில் பிரபலமான திரு. மாலன் முதல் ஓர் சராசரி வாசகன் வரை இக்கணினியின் மூலம் இணைந்து தமிழ் தொண்டாற்ற ஓர் மையமாக "இணையம்" (internet) உருவெடுத்துள்ளது. இங்கே அனைவரும் படைப்பாளிகள் ஆக முடியும். சமீப காலமாக, "weblogs" எனப்படும் வலைப்பூக்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. ஓர் கணக்கெடுப்பின்படி நூற்றுக் கணக்கான "weblogs" ஆங்கிலத்தில் தினமும் தோன்றிய வண்ணம் உள்ளது. "weblog" என்றால் என்ன? உங்கள் கருத்துக்கள் மற்றும் படைப்புகளை நீங்களே இணையத்தில் வெளியிட உருவான ஓர் வசதிதான் இந்த "weblog". இந்த "weblog"-ஐ சிலாகித்து பல கட்டுரைகள் வந்துள்ளது (google-லில் இட்டால் பல தகவல்கள் கிடைக்கும்).

இத்தகைய "weblog"-ஐ ஆரம்பிப்பதற்கு பல இணைய தளங்கள் உள்ளன. மின்னல் வாசகர்கள் மகிழும் வகையில் ஓர் செய்தி. நாமும் இந்த "weblog"-ஐ தமிழிலேயே துவங்கலாம். rediff.com இதற்கு தேவையான இலவச சேவையை வழங்குகின்றவர்களில் பிரபலமானவர்கள். இவர்களை தவிர blogger.com இணையதளமும் இலவச சேவையை வழங்குகின்றது. "weblog"-ஐ துவங்க நீங்கள் முதலில் செய்யவேண்டியது மேற் சொன்ன இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்பு அங்குள்ள செட்டிங்-ஸில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும். இதை பற்றி விரிவாக காண, aayutham.blogspot.com பார்வையிடவும். தமிழில் உள்ள நெப்லொக்-களில் சிலவற்றை tamilblogs.blogspot.com- பெயர் வாரியாக list செய்து உள்ளது. அவற்றிலிருந்தும் நீங்கள் பல தகவல்களை அறியலாம்.

இன்றைய தேதியில் சிறப்பாக செயல்படும் சில Tamil bloggers பற்றி இங்கு காண்போம். தமிழகத்தை தாயகமாக கொண்ட திரு. காசி அவர்கள் தன் வாழ்க்கை அனுபவங்களை kasiblogs.blogspot.com-ல் பதிவு செய்துள்ளார். அவரது வாழ்க்கை பயணம் பல தமிழ் கூறும் நெஞ்சங்களை நிமிர்ந்தெழச் செய்யும். இருப்பது வெளி நாடானாலும், தாயகத் பெருமையை தமிழ் மூலம் பிரபலமாக்கும் திரு நா. கண்ணன் (nkannan.rediffblogs.com) (இந்த மின்னல் இதழில் அவரது சிறப்புக் கட்டுரையை காண்க) அவர்களது சீரிய பணி உலகத் தமிழர்களின் நம்பிக்கையை காக்கும். "வலைப்பூ" என்ற இணைய இதழை நடத்தி வரும் சந்திரமதி அவர்களின் முயற்சி பல தேர்ந்த பத்திரிக்கை ஆசிரியர்களை உருவாக்கும். திரு. தங்கமணியின் (அதாங்க! உங்க கைகளில் தவழும் "மின்னல்"-இன் ஆசிரியர்) வலைப்பூ (ntmani.blogspot.com) ஓர் தேர்ந்த படைப்பாளியை நமக்கு அடையாளம் காட்டுகின்றது. சரி மரபுக் கவிதை புனைய ஆசையா?. அதற்கும் இருக்கின்றது ஒர் வலைப்பூ. venba.blogspot.com - தான் அது. இவ்வளவு சொல்லிவிட்டு, நம் IISc-யில் Ph.D முடித்த திரு. வெங்கடரமணன் பற்றி சொல்லாமல் விட்டால் சரியாக இருக்காது. அவர் தன் ஆராய்ச்சியுடன் சேர்த்து, தமிழுக்காக linux-ல் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவரை பற்றி மேலும் அறிய http://www.tamillinux.org/venkat/myblog/.

மேலே குறிப்பிட பட்டவர்களில் பெருபான்மையானவர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்களாகவோ, மென் பொருள் நிபுணர்களாகவோதான் இருக்கின்றனர். இவர்களை முன்னோடிகளாகக் கொண்டு நாமும் நமது முயற்சியை, நமக்குள் இருக்கும் படைப்பாளியை வெளிக் கொணருவோம். அறிவியல் முதல் ஆன்மீகம் வரை அனைத்தையும் எழுத நம்மையும் நம் விரல்களையும் தயார் செய்வோம். பல பூக்களை இணையத்தில் மலரச் செய்வோம். இணையத்தை இலக்கிய மணம் கமழும் இடமாக்குவோம்.

___________________________________________________________________________
மேற்கண்ட கட்டுரை IISc, தமிழ்ப் பேரவையின் இலக்கிய இதழான மின்னலில் வெளி வந்தது. இக்கட்டுரையை எழுத தூண்டிய தங்கமணிக்கு நன்றிகள்.!! இக்கட்டுரை IISc மக்களுக்காக எழுதப்பட்டாலும், இதன் நோக்கம் பலரை வலையில் விழ (எழுத) வைக்கும் முயற்சியே. திரு. பத்ரி கூறியதை நினைவில் கொண்டு இக்கட்டுரையை மறு வெளியீடு செய்கிறேன். இக்கட்டுரையை வேறு எங்கேனும் (பிரபலமான ஊடகங்களில்) வெளியிடுவதை பற்றி comments pls.

அன்புடன்

பாரி.

வணக்கம்!

 
அனைவருக்கும் பாரி-யின் வணக்கங்கள்!!

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!"

என்ற பாரதிதாசனின் வரியை நினைவு கூர்ந்து, உங்களை சந்திக்க விளைகின்றேன்!!!

மற்ற வலைப் பதிவுகள் பற்றிய ஓர் பார்வை, படித்த சில புத்தகங்கள் பற்றி, வலைப் பூக்கள் நிறைய பூக்க வேண்டிய அவசியமும் அதற்கான வழிகளும், சமூகவியலை பற்றி non-textual ideas, ஆங்காங்கே எனது (நண்பர்களின்) ஓவியங்களும், தங்கமணி கிளிக் செய்தவைகளும்...
இவற்றையெல்லாம் பதிய விருப்பம்.

இந்த வாரம் வலைப்பூ ஆசிரியராக இருக்க வாய்ப்பு தந்த மதி அவர்களுக்கு நன்றி!!

அன்புடன்

பாரி

Sunday, February 08, 2004
 

Notre Dame Basillica, Montreal, Canada


 

இவ்வார வலைப்பூ ஆசிரியராக வருபவர் - **நம்மிடையே இருக்கும் நம்மவர்**. இந்த பெண்களூர், சாரி சாரி பெங்களூர்க்காரர் விஞ்ஞானத்தை வளர்ப்பவர்/கற்பவர். எங்க போனாலும் பெயர்க்குழப்பம்டா சாமி என்று பழனி முருகனை துணைக்கு அழைப்பவர்.

சமீபத்தில் இவருடைய வலைப்பதிவில் படித்து ரசித்தது

யாரும் கவலை படாத, காற்றிலே மிதந்து செல்லும், உச்சி மரக்கிளையில் இருந்து உதிர்ந்த காய்ந்த சருகை போல் உணர்கிறேன்.
சுதந்திரம்....
புவியின் ஈர்ப்பு மட்டும் இல்லையேல், உடைத்தெறிந்து பறக்கும் உயிர் பறவை உடலை விட்டு.
நீரினுள் கலந்த உப்பாக பிரபஞ்ச கடலினில் கலக்க நினைக்கிறேன். கரையாத கல்லாய் புவியின் ஈர்ப்பினால் உள்ளே மூழ்கி கொண்டிருக்கின்றேன். தரை தட்டுவேனோ, அதை பிளப்பேனோ....
நிகழும் இந்த லீலைகள், நாளைய காவியத்தின், முன்னுரைகள்............


தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், இரா.முருகன், கார்த்திகேசு ஆகியோரின் எழுத்து பிடித்திருக்கிறது என்று சொல்லும் இவருக்கு தமிழில் பிடித்தது தமிழ் இலக்கியமும், சமூகவியலும். அத்தோடு 'வரைவதும் (ஓவியம்), வளையவருவதும் (ஊர் சுத்துறதுங்கோ!)' பிடித்த பொழுதுபோக்குகள்.

இந்தவாரம் உங்களுடன் பாலாஜி-பாரி

 

View outside my window, Montreal Canada


My take on what happened here last week (pls check tomorrow)

 
நானும் என்னுடைய கருத்தை இங்கு அளிக்க எண்ணியிருந்தேன். இன்றும் நேரமில்லாமல் போய்விட்டதால் நாளைக்கு.

வலைப்பூ, உயிர்ப்பூ, தமிழ் மரபு அறக்கட்டளை இத்யாதி

 
பின்னூட்டங்கள் பகுதியில் இதைப்பற்றி அதிகமாகச் சொல்ல முடியாததால் என்னுடைய ஆசிரியர் தகுதியை சற்றே "தவறாகப்" பயன்படுத்தி இங்கேயே என் கருத்துகளைப் பதிவு செய்கிறேன்.

எனக்குப் புரிந்தவைகளை சுருகக்மாக இங்கே எழுதுகிறேன்.

(அ) மதுரைத் திட்டம் என்பது ஏற்கனவே அச்சில் வந்தவற்றை டிஜிட்டலாக்கி அதன் மூலம் அவைகளை அழியாமல் காப்பது. இவை படங்கள் அல்ல, தமிழ் எழுத்துகள் - ஏதோ ஒரு குறியீட்டில் உள்ளவை. பிற்காலத்தின் அனைத்துத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு குறியீடு (யூனிகோட்?) வந்தால் அதற்கு மாற்றிக்கொள்ள முடியும். [By the way, இப்பொழுதிருக்கும் மதுரைத் திட்ட டிஸ்கி தேடல் மனதுக்கு திருப்தியாக இல்லை. நிறைய சரியாக வருவதில்லை.] ஆரம்பத்தில் பழைய நூல்கள் என்று ஆரம்பித்தாலும் இப்பொழுது புது புத்தகங்களும் (அதாவது கடந்த 20 வருடங்களுக்குள் பதிப்பான, மீள்பதிப்பு காணாத புத்தகங்களும்) இந்த முறையில் டிஜிட்டலாக்கப்படுகின்றன.

(ஆ) தமிழ் மரபு அறக்கட்டளை (மற்றும்) முதுசொம் காப்பகம்: அச்சிலேயே வராது ஆங்காங்கே ஓலைச்சுவடிகளாக இருப்பதை இலக்கப் பதிவுகளாக்கி, முதலில் படங்களாக அவற்றினைக் காப்பது. பின்னர் அவற்றினை எழுத்துகளாக மாற்றியே ஆக வேண்டும். வெறும் படங்களாக இருப்பதில் அதிக பிரயோசனமில்லை. எனக்கு இங்குதான் சில குழப்பங்கள் வருகின்றன. கண்ணன் விளக்க வேண்டும். ஓலைச்சுவடிகளில் மட்டுமின்றி அச்சுப்புத்தகங்களிலும் த.ம.அ கவனம் செலுத்துகிறதென்றால் த.ம.அ வுக்கும் ம.தி க்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் ஒன்று சேர்ந்து ஆர்வலர்களை சரியான திசையில் செலுத்தக்கூடுமல்லவா?

மதுரைத் திட்டம் முழுக்க முழுக்க ஆர்வலர்களைக் கொண்டு கல்யாணசுந்தரத்தினால் வழிநடத்தப்படுகிறது. தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு அறக்கட்டளை அமைப்பாக நிறுவப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை தன் நோக்கத்தைக் குவியப்படுத்தி இன்னென்னதில்தான் இப்பொழுதைக்கு ஈடுபடுவேன், இவையே எங்கள் மைல்கற்கள், இன்னென்னவற்றை இன்னென்ன நாட்களுக்குள் அடைய முற்படுவோம், அதற்கு இத்தனை செலவாகும், இத்தனை ஆட்கள் தேவைப்படுகின்றன என்றதொரு சரியான குறிக்கோளாக நிறுவி வெளியிட வேண்டும். அவ்வாறு இல்லையேல் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

(இ) உயிர்ப்பூ என்பது மேலிரண்டிலிருந்தும் சற்றே மாறுபட்டு, நேரிடையாக டிஜிட்டல் வடிவிலேயே பதிவுகளைத் தருவது. இதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் அது சிட்டியின் வாழ்க்கைப் பதிவுகள். சபாநாயகம் அவர்களின் நினைவுத்தடங்களும் இந்த வகையில் வருவதே. எனக்கு இரண்டிலும் நிறைய வருத்தங்கள் உண்டு. சிட்டியின் குறிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வருகிறது. இதைத் தமிழ்ப்படுத்த வேண்டும். மேலும் தள வடிவமைப்பு மிகவும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். சபாநாயகத்தின் நினைவுத்தடங்களிலும் நிறைய 'editing' வேலை உள்ளது. இரண்டும் நமக்கு தமிழ் இலக்கிய, சமூக வாழ்வின் கடந்த 80 ஆண்டு கால வரலாற்றினை அளிக்கும்போது அவற்றை ஒழுங்குபடுத்துவதும், இன்னமும் அதிகமாக சேர்ப்பதும் முக்கியம் என்று தோன்றுகிறது.

மேலும் இவையெல்லாம் ஆங்காங்கு கிடைக்கும் பல இலவச, அதனால் தரங்குறைந்த இணையத்தளங்களில் இருப்பது கவலைக்குறிய விஷயம். எப்பொழுதுவேண்டுமானாலும் இவை காணாமல் போகலாம். சரியான படங்களைச் சேர்க்கும் வசதியில்லாததால் இவற்றுள் சேர்க்கப்பட்டுள்ள படங்கள் (சிட்டி....) அவ்வளவு சரியாக இல்லை. வடிவ நேர்த்தி, நான் முன்னமே சொன்னது போல், குறைவுதான். இதற்கெல்லாம் சரியான தன்னார்வலர்கள் தேவை.

இதுவும் பரவலாகாததன் காரணம், யார் எழுத வேண்டும், எதை எழுத வேண்டும் என்ற குவியம் இல்லாததே. கண்ணன் எனக்கு இதுபற்றி ஒரு அஞ்சல் அனுப்பியுள்ளார். நான் அதனைக் கூர்ந்து படித்து, பின்னர் அவருக்கு பதில் எழுத வேண்டும்.

(ஈ) சாதாரண வலைப்பதிவுகள் நிச்சயமாக மேற்கண்ட எதிலும் சேராதது. இவை எண்ணிக்கையில் மிக அதிகமாகும். காளான்கள் போலவும், புற்றீசல் போலவும் வளர்ந்து, பரவி, பல உடனடியாக செத்து, சில இடம் மாறி என்று தனியொரு உலகம் இவை. வலைப்பூ என்பது மேற்படி வலைப்பதிவுகளுக்கு ஒரு guide போலவும், புதுப்புது வலைப்பதிவுகளை இனம் காணவும் என்ற எண்ணத்தில் உருவானது என்று நினைக்கிறேன். (நான்தான் முரட்டுத்தனமாக அந்த வேலையை இந்த வாரம் செய்யப்போவதில்லை என்று முடிவு செய்தேன்.) அப்படிப் பார்க்கையில் வலைப்பூ, மேற்சொன்ன மற்றவைகளைப் போலல்ல. இப்பொழுது வலைப்பூ தடுமாறுவதன் காரணம் தமிழில் வலைப்பதிவுகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதே. இன்று நாமக்கல்லிலிருந்து ஒரு புது நண்பர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தமிழகம் முழுதும் அவரைப் போன்றவர்கள் வலைப்பதிவுகளை ஆரம்பிக்கும் போது இந்தக் கவலை இருக்காது! மற்ற நாடுகளில் உள்ள தமிழ் பேசுபவர்களும்தான்.

மற்றுமொரு வேண்டுகோள்:

எல்லோரும் ஒருவரோடொருவர் தீவிரமாக சண்டை போடவும். சண்டை போடும்போதுதான் புதுக்கருத்துகள் தோன்றுகின்றன:-) மேலும் தீவிரம் வலுக்கிறது. பின் சற்று ஆற அமர சிந்திக்கும்போது சிந்தனைகள் தெளிவடைகிறது.

இத்துடன் என் இந்த வார வேலைகள் முடிவடைகின்றன. இன்னும் ஒரு மணிநேரத்தில் வேற்றூர் செல்லக் கிளம்ப வேண்டும். இன்னமும் நிறையப் பதிவு செய்ய ஆசையிருந்தது. ஆனால் நேரம் அதிகமாகக் கிடைக்கவில்லை. மீண்டும் வலைப்பூ வழியே உங்களை சில வாரங்கள் கழித்து சந்திப்பேன். அதற்குள் இன்னம் ஆயிரக்கணக்கான தமிழ் வலைப்பதிவுகள் பிறந்திருக்கும் என்று நம்புவோம். அவற்றில் பல உயரியதாக இருக்கும் என்றும் நம்புவோம்.

வலைப்பதிவு வட்டங்கள்

 
மார்டினா ஜவானோ வின் அட்வர்பிளாக் இணைய/வயர்லெஸ் விளம்பரங்கள், ஒருங்கிணைந்த விற்பனைமுறைகள் ஆகியவை பற்றிய ஒரு வலைப்பதிவு.

இது வெறுமனே மண்டையில் தோன்றும் அனைத்து எண்ணங்களையும் பதிவு செய்யும் ஒரு வலைப்பதிவாக இல்லாமல், விளம்பரத் துறையைப் பற்றி, அந்தத் துறையில் அல்லது அதற்கு அருகாமையில் வேலை செய்யும் ஒருவரின் பதிவுகளாக அமைந்துள்ளது. என் அலுவலக வேலைகளுக்கு இந்த வலைப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தப் பதிவு மட்டுமல்ல, இந்தப் பதிவின் வழியே மார்டினா சுட்டும் மற்ற வலைப்பதிவுகளும் விளம்பரத் துறை பற்றி இருப்பதால், இந்த வலைப்பதிவு வட்டம் முழுவதுமே பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கிறது.

ஆக, வலைப்பதிவுகள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. கல்லூரிப் பேராசிரியர்கள்/மற்ற அகடெமிக் துறையாளர்கள் எழுதும் குறிப்புகள் (theory) மட்டுமல்ல. Practical ஆக, ஒரு துறையில் வேலை பார்ப்பவர் தன் தினசரி அலுவல்களில் பார்ப்பதை, கவனிப்பதைப் பதிப்பதன் மூலம் அதே துறையில் வேலை செய்பவர்களுக்கு ஒரு அரிய resource ஆக மாறுகிறார்.

வலைப்பதிவுகள் நிகழும் முன்னர் மாணவர்கள்/பேராசிரியர்களது எண்ணங்கள் மட்டுமே பொதுக்களத்திற்கு வந்துகொண்டிருந்தன. நிறுவனங்களில் பணிபுரிபவர்களது எண்ணங்கள் அவர்களிடத்திலேயே தங்கிப் போய் அதனால் முழு சமூகத்திற்கும் நன்மைகள் கிட்டாது இருந்தது. இப்பொழுது வலைப்பதிவுகள் மூலம் இந்தத் தடை தகர்க்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு நிறுவனத்தின் ரகசியங்கள் வெளியே வந்துவிடுமோ என்ற கவலை தேவையில்லை. ஒன்றோடொன்று போட்டி போடும் நிறுவனங்களும் பல தகவல்களைப் பறிமாறிக்கொள்ளும்போது இருவருக்குமே நன்மை ஏற்படுகிறது. மேலும், ஒரு நிறுவனத்திடம், அங்கு வேலை பார்க்கும் அனைவரும் தங்கள் மூளைகளை முழுதாக அடமானம் வைத்துவிடவில்லை. Confidential, proprietary எனக் குறிப்பிட்டவைகளைத் தவிர மற்ற கல்வியினை வெளிப்படுத்தும் சுதந்திரம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

மேலும் ஒருவர் வலைப்பதிவு மூலம் தனக்கென ஒரு தனி brand ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியும். இதனால் அந்தத் தனி நபரின் வேலைவாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கும்.

விளம்பரம் பற்றிய ஒரு வலைப்பதிவு வட்டம்:
1. Adverblog - Martina Zavagno
2. Adrants - Steve Hall
3. B2Blog - David Jung
4. Brand autopsy - Paul Williams & John Moore
5. Weblog - Dana VanDen Heuvel
etc.

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com