<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, November 01, 2003

வலைப்பூக்களில் உலகப்பார்வை

 அனைவருக்கும் (முக்கியமாக அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு) எனது பேய்த்திருநாள் (Halloween) வாழ்த்துக்கள். நம் ஊரில் நவராத்திரியின்போது குழந்தைகள் வீடு வீடாகச்சென்று சுண்டல் வாங்குவதுபோல் இங்கு விதம்விதமாக வேடமிட்டு ஒரு பையுடன் 'Trick or treat' என்று இனிப்புகளை வாங்கக்கிளம்பிவிடுகிறார்கள். இன்று என் அலுவலகத்தில் நடந்த பார்ட்டியில் பெரியவர்களும்கூட வேடமிட்டு வந்திருந்தனர். ஒரு குண்டான ரிசப்சனிஸ்ட் முயலைப்போல் வேடமிட்டது பார்க்க வேடிக்கையாயிருந்தது.

இன்று அலுவலகத்திலிருந்து கிளம்பியபின் மலேசியா சென்று பினாங்கு Botanical gardenஐ பார்த்துவிட்டு ஜெர்மனியில் செய்தித்தாள் படித்துவிட்டு இதோ அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டிருக்கிறேன். எல்லாம் திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் தமிழர்கள் எழுதும் வலைப்பதிவுகளின் மகிமை.

உங்களுக்குத் தெரியுமா?
ரோமில் Colosseum கட்டிமுடிக்கப்பட்டதும் அதற்காக சிறப்பாக ஏற்படுத்தப்பட்டிருந்த விழாவில் ஏறக்குறைய 9000 காட்டு விலங்குகள் பலி கொடுக்கப்பட்டதாம்.
வியட்நாமில் ஒரு டாலருக்கு 15000 சொச்சம் டொங் (!!) தருகிறார்கள். இதை வைத்து ஒரு நேரச் சாப்பாடு, ஒரு சில கிலோமீட்டர் டாக்சி சார்ஜ் கொடுத்துவிட முடிகிறது ;-)
கனடாவில் குடிமகன் கடவுச்சீட்டுக்கென (passport) புகைப்படம் எடுக்கையில் எக்காரணத்தை முன்னிட்டும் புன்னகைத்துவிடக்கூடாதாம்.

மேற்கண்டவையெல்லாம் நம் வலைப்பதிவர்கள் தரும் விவரங்கள். இதில் முன்னணி வகிப்பவர் சுபா. என்ன அழகாக புகைப்படங்களோடு ஜெர்மனியையும் மலேசியாவையும் நம் கண்முன் நிறுத்துகிறார்!! இவர் தந்த உற்சாகத்தில் நானும் அமெரிக்காவில் நான் ரசித்த தலைப்பத்து இடங்களைப்பற்றியும் அவ்விடங்களின் வரலாற்றைப்பற்றியும் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

Friday, October 31, 2003

வலைப்பூக்களில் மலரும் நினைவுகள்/கருத்துக்கள்

 
நேற்று நேரமின்மை காரணமாக எழுதமுடியவில்லை. இன்று வலைப்பூக்களில் மலரும் கருத்துகள்/நினைவுகள் இரண்டையும் பார்க்கலாம். கருத்து என்றவுடன் பத்ரியின் "எண்ணங்கள்" தான் முதலில் தோன்றுகிறது. நிறைய படிப்பார் போலும், பலரது எழுத்துக்களைப்பற்றி தன் கருத்துகளை வெளியிடுகிறார். உதாரணத்துக்கு, அண்மையில் ஒரு பஞ்சாயத்து விவகாரம் பற்றிய ஒரு கட்டுரையை அலசியுள்ளார். மனிதர் தீபாவளி பண்டிகையே தனக்கு பிடிக்கவில்லை என்கிறார். பட்டாசுகள் காசைக்கரியாக்குவதை நானும் வெறுக்கிறேன். அவற்றால் ஏற்படும் விபத்துகளும் நிச்சயம் தவிர்க்கப்படவேண்டியவை. ஆனால், என்னைப்பொருத்தவரை அந்த நாள் உறவினர்கள் கூடுவதற்கான நாள். அதுதான் அந்நாளின் தனித்துவம். உறவினர்களை விட்டு பிரிந்து இருந்தால் இந்த உண்மை புரியும்.

கண்ணனின் வைகைக்கரை நினைவலைகள் எவ்வளவு பிரபலம் என்பதை அவர் கொடுத்துள்ள Statistics காட்டுகிறது. இன்று கொஞ்சம் கோக்குமாக்கான படங்களுடன் நந்துவின் கதை தொடர்கிறது. எப்படி பழைய நினைவுகளை இவ்வளவு நேர்த்தியாக வார்த்தைவடிவில் கொண்டுவருகிறாரோ! இதில் எனக்கு பிடித்த நபர் 'கிச்சு கிச்சு மாமா'. நானும் என் அத்தை பையன் சிறுவயதாக இருக்கும்போது எதாவது சீண்டிக்கொண்டே இருப்பேன். அவன் கூச்சலிட்டு ஊரைக்கூட்டுவான். இன்னொரு வாண்டை சுலபமாக ஏமாற்றலாம். நான் பதினேழாம் கிளாஸ் வரை படித்திருக்கிறேன் என்றால் அது ஆச்சரியமாக வாய்பிளக்கும்.

புதிதாக இரண்டு வலைப்பூக்கள். ஒன்று இட்லிவடை, மற்றது மீனாக்ஸின் புதிய கவிதை மொழிபெயர்ப்பு. இட்லிவடை - எழுதுபவர் தனது பெயரை இட்லி என்று வெளியிட்டிருந்தாலும், இட்லி வந்து வலைப்பதிக்கமுடியாது என்று கண்டுபிடித்து அதை எழுதுபவர் யாராக இருக்கலாம் என்றும் ஊகித்துள்ளேன். சரியா என்று தெரியவில்லை. எப்படியோ, நகைச்சுவையுடன் கூடிய வலைப்பூவாக இது வளரும் என்று நம்புவோம்.

Wednesday, October 29, 2003

வலைப்பூக்களில் அறிவியல்/தொழில்நுட்பம்

 
எந்த சமாச்சாரமாக இருந்தாலும் அதில் அறிவியல்/தொழில்நுட்பம் சம்பந்தமான விஷயம் இருந்தால் உடனே ஒட்டுதல் வந்துவிடுகிறது. என்ன செய்வது? தினந்தோறும் மணிக்கணக்காக முழுகியிருப்பது அதில்தானே. மறுபடியும் வெங்கட், தொழில்நுட்பம் சார்ந்த வலைக்குறிப்புகள் எழுதுவதிலும் மன்னனாக இருக்கிறார். அநாயாசமாக அவர் உபயோகிக்கும் புத்தம்புது தமிழ் கலைச்சொற்களை அவை உபயோகிக்கப்படும் வாக்கியங்கள் இல்லாமல் புரிந்துகொள்வதுகூட முடியுமா என்று தெரியவில்லை. உதாரணத்துக்கு - எரிதம், பதிகணினி, மீத்தரவு இப்படி பல. நல்லவேளை ப்ராக்கெட்டில் ஆங்கில வார்த்தை என்னவென்று சொல்லிவிடுகிறார். தமிழில் தொழில்நுட்பம் வளரவேண்டும் என்று விரும்புபவர்கள் எல்லாம் இவருடைய வலைக்குறிப்புகளைப் படித்தால் மகிழ்ச்சியுறுவர். இவருடைய "சாது மிரண்டால்" அதிகம் தொழில்நுட்பம் தெரியாத ஒரு சாதாரண இணையப்பயனர் ஒரு எத்தனின் முகமூடியைக் கிழித்த கதை. இன்று கனடாவை அப்பழுக்கில்லாத நாடாக கருதும் அளவுக்கு அமெரிக்காவில் தொழில்நுட்பத்தை உபயோகித்து அப்படி என்ன நடக்கிறது என்று எழுதியுள்ளார். நீங்களே படியுங்களேன்.

நீங்கள் அறிவியல் விரும்பியா? குருவிகள் வலைப்பூவில் ராக்கெட், செயற்கைக் கோள் பற்றியெல்லாம் படிக்கலாம். சித்தூர்க்காரர் கணினியில் ஒலிப்பதிவு செய்வது பற்றி விளக்கியதை படித்துவிட்டீர்களா? உங்கள் குரல் மாறுவதற்குமுன் நல்ல ஒரு பாட்டாகப்பாடி ஒலிப்பதிவு செய்துகொள்ளுங்கள் :) சுரதா தானிறங்கி எழுத்துரு (dynamic fontங்கோ) உருவாக்குவது பற்றியும், வலைப்பூ உருவாக்குவது பற்றியும் படங்களோடு மிகச்சிறப்பாக விளக்கிவிட்டு மாயமாய் மறைந்துவிட்டார்.

டமடம.. டமடம..டமடம்..இதனால் வலைப்பதிவர்கள் சகலமானோருக்கும் அறிவிப்பது என்னவென்றால்... சுபா அவர்களின் "Malaysia in focus" புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அவர்மூலம் ஐரோப்பாவை ரசித்த எல்லாரும் இங்குசென்று மலேசியாவையும் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!! அப்பாடா, பத்ரியின் வலைப்பதிவு இன்று கொஞ்சம் காட்டம் குறைவாக இருக்கிறது. ஜெயலலிதாவின் குட்டிக் கதைகள் இன்று முதல் ஆரம்பம். கதைமூலம் அரசியல் பதிலடியாம், நல்ல காமெடி.


இப்படிக்கு,
சிலந்தி

Tuesday, October 28, 2003

வலைப்பூக்களில் நகைச்சுவை/பொழுதுபோக்கு

 
நம் வலைப்பூக்களில் கூட சில சமயம் நகைச்சுவை பூப்பதுண்டு. வெங்கட்டின் நகைச்சுவை வலைக்குறிப்புகள் (பதிவுன்னு சொன்னா ஒத்துக்கமாட்டார்) கட்டாயம் படிக்கவேண்டியவை. மனிதர் ஐப்பானில் இருந்தபோது விழுந்து விழுந்து சிரிக்க அவருக்கு நிறைய வாய்ப்பு கிடைத்துள்ளது. போனவுடன் "The office secretary is your help. Please use her freely." என்று தாராள மனப்பான்மை பொங்கக்கூறினார்களாம். "ஜப்பான் ஆங்கிலம்" மற்றும் "ஐப்பானிய கழிவறைகள்" தவறவிடக்கூடாதவை. மற்ற வலைப்பூக்களில் அவ்வளவாக நகைச்சுவை பார்க்கமுடியவில்லை. நகைச்சுவைக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. அதனால், நகைச்சுவையாக எழுத முடிந்தவர்கள் தங்கள் திறமைகளை தாராளமாகக் காட்டலாம். நகைச்சுவை என்றதும் நான் இன்று பத்தாவது முறையாகப்பார்த்த "மைக்கேல் மதன காமராஐன்" தான் நினைவுக்கு வருகிறது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. சில நச் காட்சிகள் - ஊர்வசியின் பாட்டி வலமிருந்து இடப்பக்கம் போகும்போது வெத்தலைப்பெட்டி மாயமாக மறைவது, குஷ்பூ தலையணைகளை தனக்கு பதிலாக படுக்கையில் வைத்துவிட்டு தப்பித்துப்போனபின் வெண்ணிற ஆடை மூர்த்தி அதைக்கண்டுபிடிக்கும் காட்சி (அவர் முகத்தைப் பார்க்கவேண்டுமே!!)

இதுதவிர நம் குந்தவைப்பிராட்டியின் வலைப்பூவில் சில பொழுதுபோக்கு அம்சங்கள் தலைகாட்டும். கொஞ்ச நாள் முன்னர் "பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கித் தேய்..." என்றெல்லாம் கூறி பயமுறுத்தினார். (பாம்புக்கடிஎன்ற கதையில்). இப்போது விடுகதைகள் விடுக்கிறார். இளவரசியே, உங்களுடைய விடுகதைகள் கொஞ்சம் சுலபமாக உள்ளன. நன்கு மண்டையைப்பிய்த்துக்கொள்ளும்படி ஏதாவது விடுகதைப்புத்தகத்திலிருந்து ஒன்றிரண்டு எடுத்து விடுங்களேன். இவர் சிவகாமியின் சபதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார். நல்ல முயற்சி! இன்னும் படிக்கவில்லை. புத்த பிட்ஷுவை ஆங்கில வர்ணனையோடு கற்பனை செய்துபார்த்தால் எப்படித்தோன்றுமோ?

மீனாக்ஸின் திரை விமர்சனம் ஒன்று வலையேறியுள்ளது. இவருடைய "காக்க.. காக்க.." விமர்சனத்தைப் படித்துவிட்டு படத்தை ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஏமாற்றவில்லை. இன்று "திருமலை" படத்தை விமர்சித்துள்ளார். ஜோவிடம் குறை ஏதேனும் இருந்தாலும் இவர் கண்களுக்குத் தெரியாதாம் பாவம்!! நல்லவேளை, அவரிடம் குறை எதுவும் இல்லை, எல்லாமே நிறைதான், மீனாக்ஸ் ;-) இவர் தனது பெங்களூர் வாழ்க்கையைப்பற்றி எழுதும்போதெல்லாம் எனக்கு நான் பெங்களூரில் இருந்த பொன்னான பேச்சிலர் நாட்கள் நினைவுக்கு வரும்.

சித்தூர்க்காரர் "NRI பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்" என்கிறார். NRI என்பவர் பறவையைப்போலவே தான் காசி. கூட்டிலிருந்து சுதந்திரம் விரும்பி, வானத்தை எட்டிவிடலாம் என்ற நினைப்போடு பறந்து திரிந்தாலும் என்றென்றும் கூட்டில் இருந்த சுகத்தை மறக்கமுடியாது. மதி தனது பதிவில் Kill Bill என்று கத்தியோடு கூடிய ஒரு புகைப்படம் மட்டும் காட்டுகிறார். படத்தின் விமர்சனத்தை நாமெல்லாம் கற்பனை செய்துகொள்ளவேண்டுமோ என்னவோ?

இப்படிக்கு,
சிலந்தி

Monday, October 27, 2003

வலைப்பூக்களில் அறுசுவை

 
தீபாவளியை விடுமுறையோடு அமர்க்களமாக கொண்டாடிய அதிர்ஷ்ட்டக்காரர்களுக்கும், என்னைப்போன்று மலரும் நினைவுகளுடன் (அலுவலகத்துக்கு சென்றதால்) கற்பனையில் கொண்டாடிய உலகத்தமிழ் மக்களுக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

எப்போதாவது சில நாள் ஒவ்வொரு இழையாக வலை பின்னிக்கொண்டிருந்த இந்த சிலந்தியை கூப்பிட்டு, மற்றவர்கள் வலைகளையெல்லாம் சேர்த்து இந்த வலைப்பூவை பின்னச்சொல்லிவிட்டார்.. நமது மதி. ஒரு பின்னு பின்னிடலாம்னு இருக்கேன். அடடா, பயப்படாதீங்க.. ரசிக்கும்படியாக எழுத முயற்சி செய்கிறேன் என்று சொன்னேன் :)

ஒரு மாற்றத்துக்கு இந்த வாரத்தில் புதுப்பிக்கப்படும் சில வலைப்பூக்களை பற்றி மட்டும் எழுதாமல், அனைத்து வலைப்பூக்களிலும் இதுவரை நான் ரசித்த ஆறு சுவைகளை வரும் ஆறு நாட்களில் உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன். அவை:
வலைப்பூக்களில் நகைச்சுவை/பொழுதுபோக்கு
வலைப்பூக்களில் அறிவியல்/தொழில்நுட்பம்
வலைப்பூக்களில் மலரும் நினைவுகள்
வலைப்பூக்களில் மலரும் கருத்துக்கள்
வலைப்பூக்களில் உலகப்பார்வை
வலைப்பூக்களில் கவிதைகள்

ஒவ்வொரு தலைப்பிலும் நான் ரசித்த சில பதிவுகளின் சுட்டிகளை கொடுக்கப்போகிறேன். ஏற்கனவே படித்திருந்தால்... ஹி..ஹி.. சிலந்திதானே.. மன்னித்துவிடுங்களேன். இதைத்தவிர அரசியல் விமர்சனங்கள், இலக்கியம், கதைகள் போன்ற சுவைகளும் உண்டு. ஆனால், இந்த சிலந்தியின் சின்ன மூளைக்கு அவையெல்லாம் கொஞ்சம் தூரமான விஷயங்கள். அதனால் விட்டுவிடுகிறேன். என்ன நாளைக்கு மறுபடி சந்திப்போமா?

இப்படிக்கு,
சிலந்தி


Sunday, October 26, 2003
 
இவ்வார வலைப்பூ நிர்வாகி - வெங்கட்ரமணி. இணையத்தில் சிலந்திவலை பின்னும் இவர் என்ன செய்யப்போகிறார்? உங்களைப்போலவே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

கடந்த வாரம் நன்றாக கார்டு தொழில் பார்த்ததற்கு நன்றி காசி.

ஒவர் டு ஸ்பைடர்மேன்!!!

 
BritishRailways(C)Freefoto.com


MP3, Real Audio கிழக்கே போகும் ரயில் - கேளுங்கள் ஜானகி குரலை!
This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com