<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Friday, October 03, 2003
 

திரு செ.பரிமேலழகர் அவர்கள் தனது வலைக்கிறுக்கல்களை rediff-க்கு மாற்றிப் புது வூடு புகுந்துள்ளார்.. (உங்கள் கமெண்ட்களை நீங்கள் எழுத வசதியாக..)

புது வீட்டில் அறிவியல் ஆயிரம் என்ற தலைப்பில் பூமிப்பந்து குறித்தும், தீர்த்த ரேகை, அட்ச ரேகை, நேரப் பகுதிகள் இப்படி எல்லாவற்றைப் பற்றியும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் எழுதியுள்ளார் (01 October).. சிறு வயதில் பள்ளியில் இருந்த பூமிப் பந்து ஒரு பக்கமாய் சாய்ந்து இருப்பதைப் பார்த்து, "யாரோ கீழே போட்டு அதனால் ஒரு பக்கம் நெளிந்து விட்டது போலும்..!!" என்று எண்ணிக் கொண்டதாக அவர் குறிப்பிடுவது ரொம்ப லொள்ளுத் தான் போங்க..

Thursday, October 02, 2003
 

சித்தூர்க்காரரின் சிந்தனை அலைகளில் காசி ஆறுமுகம் அவர்கள், தன் சமையல் அனுபவங்களை நகைச்சுவை மிளிர விவரித்துள்ளார்.. (30 September) "முடிந்தவரையில் ஆண்கள் அவ்வப்போது சமையலை ஒரு கை பாருங்கள், குடும்பத்துக்கே பொழுதுபோகும்." என்ற அவரது கமெண்ட் குறும்பு.!!

Wednesday, October 01, 2003
 

சுபா அவர்களின் Germany in Focus வலைப்பூவில் உலகப் புகழ் பெற்ற இசை அறிஞர் பீத்தோவன் பற்றிப் படங்களுடன் எழுதியிருக்கிறார்..(23 September) படிக்க வேண்டிய செய்தி..

Tuesday, September 30, 2003
 

சந்திரவதனா அவர்கள் மனஓசையில் பொட்டு என்ற தலைப்பில் கூறியிருக்கும் கருத்துக்கள் (24 September) ரொம்பவும் அருமை.. மூலிகையில் காய்ச்சிய கறுத்தப் பொட்டு, சாந்துப் போட்டு, குங்குமப் பொட்டு என்று ஒவ்வொன்றுக்கும் பயன்கள் சொல்லிக் கடைசியில் ஸ்டிக்கர் பொட்டில் பயன் ஏதும் காணாமல் அதைத் துறந்து இறுதியில் புரிந்து ஏற்றுக்கொள்ளும் நயம் பாராட்டத்தக்கது.

 

சென்ற வாரம் முதல் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் yahoo! மடற்குழுமங்கள் மீதான தடையின் பிண்ணனி பற்றியும், அதிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டுவன பற்றியும் பத்ரி அவர்களின் எண்ணங்கள் வலைப்பூவில் படிக்கலாம்.. (28 September)

தாய்லாந்தில் விடுமுறை சென்று வந்த அவரது அனுபவங்கள் பற்றி விரைவில் எதிர்பார்க்கலாம்..

நான் எங்கள் கல்லூரி சார்பில் இரு வாரங்கள் தாய்லாந்தில் கல்விச் சுற்றுலா போயிருந்தேன். அருமையான நாடு. அமைதி விரும்பிகளாய் மக்கள். சாலையில் போகும் போது பின்னால் வருபவர் ஹாரன் அடிக்குமாறு நடந்து கொள்வது மிகப் பெரிய அவமானமாகக் கருதப்படுகிறது.

தாய்லாந்துப் பெண்கள் ரொம்ப அழகு.. என்னுடன் வந்த சில மாணவர்கள், "மணந்தால் தாய்லாந்து தேவி, இலையேல் மரண தேவி..!!" என்று முடிவெல்லாம் எடுக்கும் அளவுக்கு..!! நானும் இன்னும் இரண்டு மாணவர்களும் பாங்காக்கில் MBK Mall-ல், ஒரு கடையில் விற்பனை செய்த பெண் ரொம்ப cute-ஆக இருக்கிறாள் என்பதற்காக கிட்டத்தட்ட 4000 Baht அளவுக்கு (சுமார் 5000 ரூபாய்) ஒரு மணிநேரத்தில் பொருள் வாங்கினோம் என்பதை நினைத்தால் இப்போதும் வெட்கச் சிரிப்பு தான்..!! ;-)

தம்மாத்தூண்டு இருக்கும் தாய்லாந்தில் பாங்காக்கில் ஒன்று, பட்டாயா கடற்கரை நகரில் ஒன்று என மொத்தம் இரண்டு Hard Rock Cafe-க்கள் இருக்கின்றன.. பரந்து விரிந்த இந்தியாவில் ஒன்று கூட இல்லை என்பது எனக்கு வியப்பும் ஏமாற்றமும் அளித்த விஷயம்.. :-((

 

அமலா சிங் அவர்கள், எண்ண அலைகள் என்றொரு வலைப்பூ துவக்கி அதில் அரசியல், சமூக விஷயங்கள் குறித்த தனது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்.. வலைப்பூ உலகிற்கு அவரை வரவேற்போம்..

ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு தனது வாழ்த்தினைத் தெரிவித்திருக்கிறார்..(29 September) வளைகோல் பந்துக் குழுவினர் என்று கூறுகிறார்.. நான் இதுவரை கேள்விப்படாத புதுமையான பதமாக இருந்தது..

 

Aruna Srinivasan அவர்கள் தனது அலைகள் வலைப்பூவில் கொஞ்ச நாள் கழித்து நவராத்திரி ரவுண்ட்-அப் வந்த அனுபவங்களை எழுதியிருக்கிறார்.. (29 September) அலுக்காமல் வருஷா வருஷம் ஒரே மாதிரி சம்பாஷணைகள் என்ற சலிப்போடு.

ஒரு சிறுவனின், "அம்மா, இங்க நாம ஏன் டொனால்ட் டக்குக்கும் மோனோலிசா பொம்மைக்கும் சேர்த்து பூஜை செய்யறோம்..??" என்ற குறும்பான கேள்வியும், அதற்கு அவன் அம்மா சொல்லும், "உலகத்தில இருக்கிற எல்லா உயிர்களிலேயும், வஸ்துவிலேயும் கடவுள் இருக்கிறதா நம்பிக்கை.. அதான்..!!" என்ற சமாளிப்பான (தத்துவார்த்தமான??) பதிலும் அருமை..

Monday, September 29, 2003
 

Shangri-La என்ற வலைப்பூவில் எழுதி வரும் பவித்ரா அவர்கள் நல்ல சுவையான விஷயங்களை எழுதி வருகிறார்.. (பெயர்க் காரணம் இது வரை தன் வலைப்பூவில் சொன்ன மாதிரி எனக்கு நினைவில்லை..)

சென்ற வாரம் தனது வயலின் குருநாதர் அனுப்பிய கடிதத்தைப் பற்றி எழுதியிருந்தார்.. (24 September) "நீ என்னிக்காவது கச்சேரி செய்ய நேர்ந்தால் இராமசாமி அய்யங்காரின் சிஷ்யை என்று எல்லோருக்கும் தெரியவேண்டும்.." என்று அவர் எழுதியிருப்பதைப் படிக்கும் போது அவரது எதிர்பார்ப்பும், கனவும் வெளிப்படுகிறது. எப்பேர்ப்பட்ட குருவை நான் அடைந்திருந்தேன் என்பது வயலின் வகுப்பை நிறுத்திய பிறகு தான் எனக்கு உறைத்தது என்று பவித்ரா எழுதுவது நறுக்.

இதிலேயே கடிதங்களைப் பற்றிய தனது கருத்தினையும் அவர் கூறிச் செல்கிறார்..

நான் படிப்பதற்காக பெங்களூர் வந்தபோது, சென்னையில் வேலை பார்த்து வந்த என் தோழிக்குத் திருமணம் நிச்சயமானது.. அவளுக்கு கடிதம் எழுதுவதில் அலாதி பிரியம்.. email எல்லாம் அனுப்பாதே என்று சொல்லிவிட்டு, வாரா வாரம் எனக்கு அவளின் வருங்காலக் கணவர் குறித்தும், திருமண ஏற்பாடுகள் பற்றியும் கடிதம் எழுதுவாள்.. அதைப் படிக்கும் போதே அவளது மன ஓட்டத்தை அழகாகப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும்.. அவளது கற்பனைகள், கனவுகள், பயங்கள், இப்படி எல்லாமே..

கடிதம் என்பது தொலைபேசியை விட தாமதமாக இருந்தாலும், சுவையானது, சுகமானது என்பதை மறுக்க முடியாது.

 

சித்தூர்க்காரர் காசி ஆறுமுகம் அவர்களின் பிரதான கவலை, குற்றாலம் போல் நயாகராவில் குளிக்க முடியாமல் இருப்பது என்று போன வாரம் சந்திரவதனா அவர்கள் எழுதியிருப்பதைப் படித்திருப்பீர்கள்.. அவரது சிந்தனைச் சிதறல் என்ற வலைப்பூவில் நனைந்து, அரிச்சந்திரன் மகன் என்ற தலைப்பில் அவர் நகைச்சுவை பொங்கப் பொங்க எழுதியிருப்பதை (புலம்பியிருப்பதை?? ;-) படிக்கும் போது அவரது பிரதான கவலை, மகனின் game-க்கு உண்டான cartridge திரும்பக் கிடைக்குமா என்பதுவாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது (26 September). Comments பகுதியில் கடைசியாய் மதி அவர்கள் விசாரித்தவரை இன்னும் கிடைத்தபாடில்லை போலிருக்கிறது.. சித்தூர்க்காரரின் கவலை தீர்ந்ததா தெரியவில்லையே..!!

திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் என்று ஒரு பகுதியும் அருமையாக எழுதுகிறார்.. நான் IIM Bangalore-ல் படித்த போது என் நூலகத்தில் இந்த தலைப்பில் ஒருவர் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்ற நூல் ஒன்று இருந்தது ஞாபகம் வந்தது..

 

திரு. மெய்யப்பன் அவர்கள், எனது பார்வை என்ற வலைப்பூவில் தனது பார்வையை ஆழமாகவும், அகலமாகவும் பதித்து வருகிறார்.. இந்த வாரம், பாவ நகரமான லாஸ்வேகஸ் மற்றும் அரிசோனாவில் Grand Canyon சென்று வந்த அனுபவங்களை விவரித்துள்ளார். (26 September)

என்னுடன் படித்து இப்போது அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர்கள் லாஸ்வேகஸ் பற்றி அளித்த build-up கொஞ்சமும் குறையாமல் இவரும் விவரித்துள்ளார். "சோப்பிற்குப் பதில் ஊறுகாயைத் தேய்த்துக் குளிக்கும் அளவிற்குக் குடிப்பது..", "ரவிவர்மா லட்சுமியின் இடக்கையிலிருந்து கொட்டோ கொட்டென்று கொட்டும் தங்கக் காசுகள் போல எப்போதும் கிணுகிணுவென்ற ஓசையுடன் slot machine-கள்" என்று இவரது வர்ணனைகள் ரொம்ப நேர்த்தி.

Grand Canyon-க்கு இணையாக அல்லது அதைப் போல தமிழகத்தில் குற்றால மலையில் அருவிக்கு மேலே ஒரு இடம் தேறுமா என்று வினா எழுப்புகிறார்.. நான் ரெண்டு இடத்திற்கும் போனதில்லை. :-(

கடைசி பாராவில் நச்சென்று க்ளைமாக்ஸ் வைத்திருக்கிறார்.. படித்துப் பாருங்கள்.. உங்களுக்குப் பிடிக்கும்..

 

தமிழ்க்குடில் என்ற வலைப்பூவில் பொ. கருணாகரமூர்த்தி அவர்கள் அற்புதமாக எழுதி வருகிறார்.. இலங்கையிலும் ஜெர்மனியிலும் நடந்த/நடக்கும் நிகழ்வுகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்..

இடை என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் சம்பவம் (26 September) ஒரு நல்ல சிறுகதை வடிவில் மனதைத் தொட்டது..

"இப்போது என்மேல் ஒரு நயாகராவே கொட்டியது.. என்னுள் ஓங்கிய தீயின் நீண்ட கங்குகள் ஒடுங்கி இல்லாமற் போயின.." என்பது போன்ற அருமையான வார்த்தைப் பிரயோகங்கள் அவரது எழுத்தின் சிறப்பம்சம்.

 

திரு வாசன் அவர்களின் கொள்ளிடம் என்ற வலைப்பூ சென்ற வாரம் மலர்ந்துள்ளது.. காவிரிக்கு எப்படிக் கொள்ளிடம் என்ற துணை நதி, வடிகால் ஆகிறதோ, அதைப் போல் தன் எண்ணங்களுக்கு இந்தக் கொள்ளிடம் வடிகாலாக விளங்கும் என்று அழகாக பெயர்க்காரணம் கொடுக்கிறார். இயல்பான வர்ணனையோடு எழுதும் அவரது முதல் பதிவு, புது மெக்சிகோ மாகாணத்தின் சிறப்பு மிக்க ஹேட்ச் சில்லி என்னும் நீண்ட மிளகாய் பற்றி..

அங்குள்ள பெரும்பான்மையோர் மிளகாய்ப் பிரியர்கள் என்ற தகவலோடு, வியர்க்க வியர்க்க அவர்களில் பலர் மிளகாயை அரைக்கும் போது கிளம்பும் வாசனையை அழகாக விவரிக்கிறார்.. படிக்கும் போது என் கணிணித் திரையிலிருந்து கொஞ்சம் மிளகாய் நெடி அடித்தது உண்மையே..!! ;-)

இங்கு பெங்களூரில் நண்பர்களோடு நான் தங்கியிருக்கும் வீட்டில் எங்கள் பேச்சிலர் சமையலில் சர்வம் "பொடி" மயம் தான்.. சாம்பார், ரசம், மிளகாய், மசாலா, புளி, இஞ்சி என்று எதற்கெடுத்தாலும் MTR Brand பொடிகள் தான்.. ஆனால் சமீபத்தில் காய்கறிக் கடையில் சில்லறை இல்லையென்று கடைக்காரர் கொடுத்த மிளகாயை வாங்கி வந்து, குழம்பில் கொஞ்சமாகப் போட்ட போது, அடாடா.. கார சாரமாய், நன்றாய் இருந்தது..!!

கொள்ளிடம் பல்கிப் பெருகி தீரா நதியாய் ஓடட்டும்..

வணக்கங்களோடு..

 
பேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய பெரியோர்களே, தாய்மார்களே.. உலகமெங்கும் ஆங்காங்கே குழுமியிருக்கின்ற வலைத்தளப் பெருங்குடி மக்களே.. உங்கள் அனைவருக்கும் எனது பணிவன்பு கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

சென்ற வாரம் சந்திரவதனா அவர்கள் மிக சிறப்பாக இந்த வலைப்பூங்காவில் பூக்களைத் தொடுத்துக் கொடுத்திருந்தார்.. (என்னைப் பற்றியும் ஒரு வரி எழுதியிருந்தார்.. ஹி.. ஹி..)

டெண்டுல்கரின் செஞ்சுரிக்குப் பிறகு விளையாட வந்த சிறுவன் போல என் நிலைமை ஆகிவிட்டது..

H. D. Thoreau என்ற மேல்நாட்டு அறிஞர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா??

The world is but a canvas to the imagination.

எனவே, இந்த ஒரு வாரம், "வலைப்பூ" என் கற்பனைக்கு ஒரு திரையாக விளங்கும்.. சில நேரங்களில் நான் தீட்டுவது ரவிவர்மா ஓவியம் போல இருக்கலாம்.. சில நேரங்களில் நான் தீட்டுவது யானை வரைந்த கிறுக்கல் போல இருக்கலாம்.. இரண்டையும் பார்த்துத் தொலைக்க வேண்டியது உங்கள் தலையெழுத்து என்பதைத் தவிர நான் வேறு என்ன சொல்ல??

போவோமா ஊர்கோலம்??
வலைப்பூக்கள் எங்கெங்கும்..!!


Sunday, September 28, 2003
 

இவ்வார வலைப்பூ ஆசிரியர்: மீனாக்ஸ்


நன்றி சந்திரவதனா!

 
சந்திரவதனா, மிகவும் நன்றி. அருமையாக இவ்வார வலைப்பூவை நிர்வகித்திருக்கிறீர்கள். பொதுவாக வலைப்பதிவுகள் தொகுப்பிற்கு செல்லும் நான், இவ்வாரம் முழுவதும் இங்குதான் முதலில் வந்து நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று பார்த்தேன். மிகவும் சுவையாக எழுதி இருந்தீர்கள்.

நன்றியுடன்,
மதி

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com