<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, November 15, 2003

படங்கள் சொல்லும் கதைகள்

 


வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத பல விடயங்களை படங்கள் பளிச்சென்று சொல்லிவிடும். யாரெல்லாம் புகைப்படங்கள் வழியே கதை சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம் கிளம்பியதில் என் போன்றே ஊர் சுற்றிகள் பலர் ஊர் ஊராக காமிராவும் கையுமாகத் திரிகிறார்கள் என்று தெரிந்தது. முறையாக அனுமதி வாங்காமல் உங்கள் பதிவுகளுக்குள் நுழைந்து படங்களைத் திருடியமைக்கு அடியேனை மன்னித்தருள்க. திருட்டு மாங்காய் ருசிக்கும் என்பார்கள் - உண்மை தான். படங்களுக்கு நன்றிகள் பல.


நம்மில் மிகச் சிறந்த ஊர்சுற்றி என்ற பட்டத்தை சுபாவுக்குத் தான் கொடுக்கவேண்டும். இத்தலி பற்றி இவர் குறித்தவை தமிழ் குறிப்புலகில் மிகப் பிரபலம். ஜெர்மனியையுமமலேசியாவையும் பற்றி மனிதர் என்னமாக எழுதுகிறார் தெரியுமா? மலேசிய ஜெர்மானிய சுற்றுலாத் துறைகள் நம் சுபாவுக்கு நிறையக் கடமை பட்டிருக்கு. இந்தக் குறிப்பின் முகப்பில் உள்ள படம் அவர் குறிப்பிலிருந்து சுடப்பட்டது தான்.

சிலந்தி பின்னிய வலைக்குப் போனபோது தெரிந்தது இந்தச் சிலந்தி பரண்மேல் அடைந்துகிடக்கும் சிலந்தியல்ல என்பது. ஐக்கிய நாடுகளில் அவர் பார்த்த ரசித்த காட்சிகளை பதிந்திருக்கிறார். லாஸ் வேகாஸ் நகரின் பெல்லாஜியோ சூதாட்ட அரங்கிற்கு வெளியே இருக்கும் நீரூற்று நடனத்திற்கு மயங்காதோர் யார்?


மதி தன் பால்யத்தின் கான்வென்ட் நினைவுகளை இலங்கைத் தமிழில் பகிர்ந்துகொள்வதோடு குட்டிப் பெண்களின் படத்தை இட்டது ரொம்பவும் இனிமை.
அவரது போட்டோ பதிவுகளை இங்கே காணலாம்.

அவர் வடித்த காமிராக் கவிதைகண்ணனின் வைகைக்கரைக் காற்றே அடுத்த பகுதி வெளியாகிவிட்டது. மீனாட்சியம்மன் கோவிலையும் அதன் சிற்ப வேலைப்பாடுகளையும் பற்றி இப்பகுதி பேசுகிறது - படங்களுடன் என்பது இன்னும் சிறப்பு.
>

இன்றைய ஸ்பெஷல் - கரீபியன்
இந்த வருடம் மே மாதம் கரீபியக் கடலை நோக்கி ஒரு பயணம் கொண்டோம். அது வரைக்கும் கரீபிய உணவுவகைகளின் பக்கம் போகாத யாம் பர்கர்க் கடவுளை நம்பித்தான் கிளம்பினோம். ஆனால் வீடு திரும்பும் வரையில் மருந்துக்குக் கூட பர்கரையும் பிட்ஸாவையும் தீண்டவில்லையே நாங்கள். எங்களுக்கு 7 நாட்களுக்கும் சோறு போட்டுக் காப்பாற்றிய கரீபியர்களின் உணவு பற்றிக் கூறாவிட்டால் கடைசிக்காலத்தில் போஜனம் கிடைக்காது.போர்ட்டோ ரீகோ என்ற அழகிய தீவின் எல்லா மூளைகளிலும் பர்கர் கடைகளுக்குப் போட்டியாக 'போலோ டிராபிகல்' என்னும் சங்கிலிக்கடை(முறைக்காதீர்!) இருக்கிறது. நம்மூர் 'வெஜிடபுள் ·பிரைட் ரைஸ்'ஸ¤க்கு அருகாமையில் வரும் ஒரு பதார்த்தம் நிறைவாக இருந்தது. கூடவே வாழைக்காய் வறுவலும் சொற்ப விலையில். புலால் ருசி கண்ட பூனைகள் எண்ணெயில் பொறித்த கோழிக்கால்கள் தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும். 'சூப்' கூட மாமிசபட்சிகளுக்கும் தாவரபட்சிகளுக்கும் தனித்தனியே இருக்கிறது.

இன்னொரு நாள் பழைய 'சான் ஊவான்' நகரின் பழமை மாறாத சிறு வீதிகளில் உலாவிவிட்டு ஒரு கரீபிய உணவுக்கடைக்குள் நுழைந்தோம். வாழைக்காய் மசியலோடு 'மஹி மஹி' என்னும் ஒரு வட்டார மீன் வகையில் செய்யப்பட்ட குழம்பும் கொடுத்தார்கள். அங்கேயிருந்த ஜாஸ் இசைஞர் எங்களுக்காக தனியே பக்கத்தில் வந்து வாசித்துவிட்டுப் போனதும் ஓர் இனிய அனுபவம் - இணையோடு இருக்கையில். அங்கே கிடைக்கும் குளிர் பானங்களில் பெரும்பாலும் அந்த ஊரின் முக்கிய ஏற்றுமதியான 'ரம்' கலப்பார்கள். தேங்காய் மணத்துடன் கிடைக்கும் 'பினா கொலாட்டா' ரொம்பப் பிரபலம். அந்தப்பக்கம் போனால் "'ரம்' கலந்திருக்கா? அய்யய்யோ தெரியாதே" என்று "தெரியாமல்" சுவைத்துப்பார்க்கலாம்.

Thursday, November 13, 2003

பின்னூட்டங்கள் - கலகலக்கும் டீக்கடை பென்ச்

 


சிலர் வந்து போனாலே அவ்விடம் கலகலப்பாகிவிடும். ஆங்கிலத்தில் "sun shine" என்பார்களே - எப்பேர்ப்பட்ட இருக்கமான சூழலையும் இலேசாக்கிவிட்டுப் போவார்கள். சிலருக்குத் தான் அந்தக் கொடுப்பினை உண்டு. நம்முடைய தமிழ் வலைக்குறிப்புத் தேசத்தில் இப்படிச் சிலர் இருக்கிறார்கள். எந்தக் குறிப்புக்குப் போனாலும் இவர்களின் தடம் இல்லாமல் இல்லை. யாரைச் சொல்லுகிறேன் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். பரிமேலழகரும், காசியும் படித்து "கருத்துச்" சொல்லாத குறிப்புகளும் உண்டா? வலைக்குறிக்கும் அனுபவத்தை சுவைபட வைப்பது நண்பர்கள் எழுதும் 'பின்னூட்டங்கள்' என்பதில் எவ்விதச் சந்தேகமும் இருக்கமுடியாது. நண்பர்கள் அடிக்கும் கேலியும் கிண்டலும் நம் குறிப்புகளை உயிர்ப்பான தெருமுனை டீக்கடையாக்கிவிடுகிறது. வெறும் அரட்டை மட்டுமல்ல அது. ஆக்கபூர்வ கருத்தளிப்பும் அதில் உள்ளன. சிந்தனைகளின் ஒற்றைத்தன்மையை நீக்கிவிடுகின்றன. பல வேளைகளில் அவை புதிய குறிப்புகளுக்கான திரியாக மாறிப்போகின்றன. காசியும் பரியும் மதியும் கற்றுக்கொடுத்த இந்தப்பாடம் எனக்கு நிறைய நண்பர்களை பெற்றுத் தந்துள்ளது.விடாமல் நித்தம் பதியும் நபர்கள் மிகக் குறைவு. சந்திரவதனாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. ஒன்றல்ல ஆறு குறிப்புத்தளங்கள் கொண்டுள்ள இவர் தினமும் எழுதிவிடுகிறார். பேரக்குழந்தை பிறப்பு, மகனின் கல்யாணம் என்று நேரக்குறைவான வேளைகளிலும். நாட்டுப்புறத்தில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் என்கிற தலைப்பில் இவர் ஆறாம்திணையிலிருந்து வலையேற்றியிருக்கும் காடாம்புலியூரில் உபயோகிக்கப்படும் தட்டு முட்டுச் சாமான்கள் பற்றிய கட்டுரையில் பண்ரூட்டியின் பலாபழ வாசம் அதிகம். மனவோசையில் வைத்திய செலவுக்குப் போராடும் ஒரு குழந்தையின் கஷ்டத்தை பகிர்ந்துகொள்ள நம்மை அழைத்திருக்கிறார்.

அமலா சிங்(கமு)ம் (இப்படித்தான் கையெழுத்திடுகிறார் - ஏனென்று அவரைக் கேளுங்கள்) நித்தம் நித்தம் வலைப்பதிகிறார். தேவர் சாதியைப் பற்றி அவர் எழுதிய குறிப்புக்கு யாரோ ஒருவர் எழுதிய கட்டுரை காட்டமாக இருந்தது. அவருடன் நட்பாக வரலாறு, நம் நாட்டு அரசியல் பற்றி பேசி சண்டையிழுத்தாலே போதுமாம். பெரிய சண்டியர்(இது எந்த சாதியையும் குறிப்பிடாது என்று முன்னமே சொல்லிக்கொள்கிறேன். நமக்கேன் பொல்லாப்பு:)) போல. தமிழர் பற்றி போகிற போக்கில் கருத்து சொல்லியிருக்கிறீர்களேயென்று சட்டையை மடித்துவிட்டு குஸ்திக்கு கிளம்பினால் உங்கள் குறிப்புகளில் 'கருத்தளிப்புப்' பகுதியே இல்லை. :( பிழைத்துப் போங்கள்.

அப்துல் கலாம், சுஜாதா, வினோபா கார்த்திக் போன்ற பெரிய சிந்தனாவாதிப் பாரம்பரியத்தை(!!) உருவாக்கிய எங்கள் கல்லூரியில்(MIT) தமிழ் கவிதைகள் பாடித் திரிந்த ஜோதிகாப் பிரியர் மீனாக்ஸை உங்களுக்கு நன்றாகவே தெரியுமில்லையா? முதலில் அவருக்கு நல்ல பெண்ணாகப் பார்த்து கட்டிவைக்க வேண்டும். மனிதர் கட்டிக்கொள்ளப் போறவளை நினைத்து கவிதையாக எழுதித்தள்ளுகிறார். (கவிதை மட்டும் எழுதிக்கொண்டிருக்காதீரும் மீனாக்ஸ் - என் போல கல்லூரியை 'சரியாகப்' பயன்படுத்தத் தெரியாத உம் போன்ற கவிஞர்களை POTA-வில் உள்ளே தள்ள வேண்டும்). இன்னமும் 'ஜோ' 'ஜோ' என்று உருகாதீர். 'சூ' 'சூ' என்று ஒரு நடிகர் விரட்டிவிடுவார். (அப்பாடா... வலைக்குறிப்பில் கிசு கிசு எழுதியாச்சு!!).

பிதாமகன் குறித்து மீனாக்ஸ் திரைவிமர்சனம் எழுதியிருக்கிறார். பார்க்கவேண்டிய படம் போலும். MK குமாரும் பிதாமகன் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

மரத்தடி ராயர் காபி கிளப்பில் இருக்கும் அன்பர்களுக்கு MK குமாரை தெரியாமலிருக்காது. விமர்சனத்தை இலக்கியமாக்கும் பொறுப்பு இவருக்கு. கடவு கதைத் தொகுப்பு பற்றியும் 155 வது கிலோபைட் பற்றியும் அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்.


இன்றைய ருசி: பெர்சியன்
ஆப்கானில் சண்டை தொடங்கிய காலம். நம்மூரில் POTA-ல் உள்ளே தள்ளுவதைப் போல இங்கு ஐக்கிய மாகாணத்தில் முல்லாக்களைப் போல தாடி வைத்திருந்தாலோ, கார் கதவை திறந்து வைத்துக் கொண்டு அரேபிய மொழியில் பேசினாலோ கைது செய்து 'குவாந்தனமோ பே' க்கு அனுப்பிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டுக்குப் பக்கத்தில் 'Persian Grill' என்று போர்டு மாட்டிய கடைக்குப் போக கொஞ்சம் யோசனையாக இருந்தது. காதலுக்கு மட்டுமா - நாக்குக்கும் கண்ணில்லையாதலால் துணிந்து உள்ளே நுழைந்துவிட்டோம். கடையதிபர் 'பிமால்' ஒரு பங்களா தேசத்துக்காரர். நாங்கள் இந்தியர்கள் என்றெதும் பாசத்தை பொழிந்துவிட்டார்.

முன் கொறிப்பிற்கு 'பிட்டா' ரொட்டிகள் ஒரு கூடையில் தரப்பட்டது. இது அந்தமில்லாக் (bottom-less) கூடை (தீரத் தீர வாங்கிக் கொள்ளலாம்) என்று சொன்னது வயிற்றில் பாலைவார்த்தது. இந்த ரொட்டிகள் தீயில் சுடப்பட்டவை. அதற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு கொடுத்தார்கள்(அவர்கள் சொன்ன பெயர் வாயில் ஒட்டவில்லை). பெயர்பலகையே 'grill' என்பதால் எல்லாமே தீயில் சுடப்பட்டவையாக இருந்ததில் ஆச்சரியமேதுமில்லை. குழம்புகள் மருந்துக்கும் இல்லை என்றாலும், எந்த ஆணையோடும் குங்குமப்பூ சேர்க்கப்பட்ட பாஸ்மதி சாதம் கிடைத்தது. வெறும் சாதம் மட்டுமெ வெகு சுவையாக இருந்தது. நாங்கள் வாங்கியது கோழிக்கால் 'கபாபு'கள். மஞ்சள் தடவப்பட்டு எழுமிச்சை சாற்றில் நனைக்கப்பட்டு பலவித மணம் பரப்பும் பொருட்கள் தூவி தீயில் வாட்டப் பட்டிருந்தது. அதன் மணம் நாசிகளை மீட்டிக் கொண்டிருக்க, சுவை உணர்விகள் மெல்லிய கசப்பும் பெர்சியச் சுவையில் தத்தளித்துக் கொண்டிந்தன.

எதெற்கென்று தெரியவில்லை. சிறு தட்டில் நறுக்கிய அரை பெல்லாரி வைத்தார்கள். கடைசி வரையில் அது அப்படியே இருந்தது. அக்பர் பெயரில் ஒரு குளிர்குழைவு (அட... ஐஸ் கிரீமுங்க) கண்ணில் தென்பட்டது. நம்ம அக்பரை கவுரவிக்கலாமே என்று வாங்கினோம். குங்குமப்பூ(இலவசமாக் கிடைக்குமோ பெர்சியாவில்? சகலத்திலும் இடுகிறார்கள்!) தூவி, பிஸ்தாப் பருப்புகளை துருவிப்போட்டு கொடுத்தார்கள். விலைச்சிட்டைப் பார்த்ததும் தான் இதயம் பலகீனப்பட்டது. இப்போ தேவலாம். தேறிவிட்டது.

Wednesday, November 12, 2003
 
(c)Hii

Tuesday, November 11, 2003

சாளரங்களின் வழியே ஒரு பயணம்...

 
சாளரங்கள் எப்போதும் என் மனதைக் கொள்ளைகொண்டுவிடும். அவை வழி மெல்லியதாய் தென்றல் வரும். இருட்டைத் துலக்கி வெளிச்சம் வரும். மழை பெய்தால் சாரலடிக்கும். கூடவே கவிதை வரும். முயன்றால் காதலும் வரும். கதவுகளுக்கு இல்லாத ஓர் அந்தரங்கம் அந்நியோன்யம் ஜன்னல்களுக்கு உண்டு. பெரியதோ சின்னதோ, அகலமோ குட்டையோ, மரத்தினாலதோ, கண்ணாடிகளைக் கொண்டதோ அல்லது வெறும் காற்றாலோ கனவுகளாலானதோ - சாளரம் ஒரு கவிதை உரு. அவை கதைகள் சொல்லும், கலாச்சாரங்கள் பேசும். ஜன்னல்களைப் பேசாத நாவல்களுண்டா? காலத்தின் சித்திரங்களாக உருவகிக்காத திரைப்படங்கள் நிழற்படங்கள் தானுண்டா? எழுத்துலகவாதிகளுக்கு அவையோர் போதிமரம். சாளரங்கள் இருப்பின் நன்றாய்த் திறந்து வையுங்கள். ஜன்னல்களில்லா வீட்டை கனவிலும் என்னால் சிந்திக்க இயலாது.

நிற்க.

நம் வலைக்குறிப்புகள் நமது வீடுகள். நம் எண்ணங்கள் சுதந்திரமாகத் திரியும் படுக்கையறை. இங்கும் சாளரங்கள் உள்ளன. அவை வழிச் சென்றால் ஒவ்வொருவரின் உலகத்திற்கும் துருப்புச் சீட்டுகளின்றி தன்னிச்சையாய் உலாவி வரலாம். இன்று இந்தச் சாளரங்களின் (Links) வழி மட்டும் பயணித்து வரலாம் எனப் புறப்பட்டேன். Parallel Universe என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அது போல் வெவ்வேறு உலகங்களுக்கு என்னை இழுத்துச் சென்றன.

அவைகளில் சிலவற்றை அகர வரிசையில் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

அருணாவிற்கு நிறைய வலைப்பூ நட்புகள். கிங்ஸ்லீ என்பவரின் வலைக்குறிப்புக்குச் சென்றேன். ஆங்கிலத்தில் அதிகம் பதியும் இவர் அத்தி பூத்தாற்போல தமிழிலும் பதிவதுண்டு. மடை திறந்தாற்போல் அலை அலையாக பல சுட்டிகள் கிடைத்தன.ஒவ்வொன்றும் புதுப்புது உலகிற்கு நம்மை இட்டுச் செல்கின்றன. கடவுள் மறுப்போர் குழாமிலிருந்து இடதுசாரியைக் கூறுபோடும் பலதரப்பட்ட சரடுகள் கிட்டுகின்றன. அங்கு நான் கண்ட ஒரு தொழில் நுட்ப குறிப்பு Forbes.Com இணையகத்தில் சிறந்த குறிப்புக்ளில் ஒன்றாக கருதப்படுகிறது.

பத்ரி வழிக்கிடைத்தன - சத்யாவின் கல்விக்குறிப்புகள். கட்டாயம் படிக்கவேண்டும்

கண்ணனின் பக்கத்தில் உலாவுகையில் சிட்டி அவர்களின் ஆங்கிலப்பதிவும் படிக்கக்கிடைத்தது பேரின்பம். சிட்டி அவர்களின் குறிப்புகளால் சி.சு.செல்லப்பா, புதுமைப்பித்தன், சொக்கலிங்கம், வ.ரா போன்றோர் பற்றிய நேரடி அறிமுகம் கிடைக்கிறது.

அறிவியல் செய்திகளுக்காக இருக்கும் குருவிகள் வழியாகக் கிடைத்தது nature.com சுட்டி.


மதியின் இந்தவார குறிப்பில் 'மன்ற மையத்தை'ப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மதியின் குறிப்பில் அப்போதைக்கு அவர் படிக்கும் புத்தகத்தை பற்றி ஒரு சாளரம் விரிவது தனிச்சிறப்பு.

நவன் நிறைய ஆங்கிலத்தில் பதிந்தாலும் அவ்வப்பொது தமிழ் எட்டிப்பார்க்கிறது. இவரின் குறிப்புகளிலும் நிறைய ஜன்னல்கள் உள்ளன.

சுபாவின் ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் ஜெர்மானிய மொழி நம்மை ஏகத்திற்கு திட்டுவதால் அந்தப் பக்கம் போகவில்லை.

வெங்கட் அவர்களின் குறிப்பிலிருந்து பிறக்கிறது தமிழ் லினக்ஸ் உலகம்.

நானும் இனி நிறையச் சாளரங்களைத் திறக்க வேண்டும். நீங்களும் திறவுங்கள். நம்மில் பலரின் சாளரங்கள் மீண்டும் நம்மிடமே கொண்டுவிடுகின்றன. தமிழ் குறிப்புகளுக்கு இன்னும் சாளரங்கள் தேவை.காசி அவர்கள் வலைப்பூக் குழுமத்தில் Blog-ற்கு சரியான தமிழ் பதம் கோரி ஓட்டெடுப்பு நடத்துகிறார். இதுவரையில் வெகுசிலரே ஓட்டுப் போட்டுள்ளனர். மீதமுள்ளோர் கண்டிப்பாகப் ஓட்டுப் போட்டுவிடுங்கள். அந்த வலைக்குழுமத்தில் இன்னும் உறுப்பினராகவில்லையென்றால் முதலில் அதைச் செய்யுங்கள்.

புதியவர்கள் பட்டியலில் கார்த்திக்கை சேர்க்க மறந்தாச்சு. நடு நடுவில் வரும் 'ந' எழுத மனிதர் அரும்பாடு படுகிறார். கார்த்திக், எ-கலப்பை கொண்டு எழுதினால், 'w' எழுத்தை தட்டினால் 'ந்' வரும்.

இன்றைய சுவை: மலேசியா.
பிலடெல்பியா நகரை மத்தியில் வெட்டிப் போகும் மார்க்கெட் சாலையிலிருந்து பத்தாம் வீதிவழியே சைனா டவுன் நுழைவாயிலைக் கடந்தவுடன் வலக்கைப்புறமாக பத்துக் கடைகள் தள்ளி வீற்றிருக்கும் மலேசிய உணவுக்கடை 'பெனாங்'(Penang). எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் எளிதாகக கண்டுகொள்ள முடியாதபடிக்கு அவர்கள் அமைத்திருக்கும் பெயர் பலகையை யார் முதலில் கண்டுபிடித்து எங்களுக்கு காண்பித்தார்களோ அவர்களுக்கு பூரணச் சேமம் உண்டாகட்டும். இங்கிருக்கும் பெரும்பாலான இந்தியக் கடைகளில் கிடைக்காத நாம் தொலைத்திருக்கும் தமிழ்ச்சுவை இங்கு அபரிமிதமாகக் கிடைக்கிறது. சைனாக்கடைகளில் அடிக்கும் நாற்றத்தை மட்டும் மூக்கு பழகும் வரை பொறுத்துக்கொண்டால் அப்புறம் நம் ராஜாங்கம் தான்.

முதலில் தரப்படும் 'ரோட்டி கனாய்' எங்களின் அபிமான முன் கொறிப்பு. கிட்டத்தட்ட விருதுநகர் வீச்சுப் பரோட்டா சுவையில் இருக்கும் இதனோடு வரும் கோழிக் குருமாவில் நானும் என் நாக்கும் சொக்கிப்போவோம். முட்டைப்பிரியர்கள் 'ரோட்டி டெனுரா' எனப்படும் முட்டை பரோட்டாவை வெளுப்பார்கள். புலால் உண்ணாதோர் இணையாக மண் சட்டியில் கிடைக்கும் காய்கறிக் குழம்பு பெற்றுக்கொள்ளலாம். நடு உணவிற்கு பல விதப் சாதங்கள் கிடைக்கும். ஏதோவொன்றுடன் 'அயிரை மீன்' தருவார்கள் - பெயர் மறந்து விட்டது. 'இந்திய' அடைமொழியுடன் கூடிய மீன் குழம்பு-சாத இணைக்கு முழு நீள மீன் வறுவல் சரியான துணை. மீன் வறுவலில் உப்பு குறைவு. தூவிக்கொள்ள வேண்டும். விலைசிட்டு வருமுன் கண்டிப்பாக 'லிட்சி' பழத்தில் ஊறிய பானம் வாங்கிப் பருகிவிடவேண்டும்.

பி.கு: நியூ ஜெர்சியிலும் போஸ்டனிலும் பெனாங்கிற்கு கிளைகள் உள்ளதாகத் தகவல்.

 
(c)Brasil

 
கல்கோனாவும் குச்சி ஐஸும் சப்பிக்கொண்டு திருவிழாப் பாக்க வந்த என்னை கூப்பிட்டு வலைப்பூ வாத்தியார் வேலை பார்க்கச் சொல்லிவிட்டார் மதி. கை காலெல்லாம் உதறல் எடுக்குது நமக்கு.

வாத்தியார் என்றால் கேள்வி கேட்கவேண்டும். சரி... ஒரு பொது அறிவுக்கேள்வி. "எண்ணங்கள்" என்ற பெயரைக் கொண்ட வலைக்குறிப்புகள் எத்தனை சொல்லுங்கள் பார்க்கலாம்? சரியா சொன்னவங்க வகுப்பில் பேசினாலும் 'இம்பொஷிசன்' எழுத வேண்டாம். :))

புதியாய் பூத்த வலைக்குறிப்பூ(மன்னிக்க... வலைப்பூ வாசம் விடமாட்டேங்கறது! ஐய்யோ... வெங்கட் தலைமையில் ஒரு பெரிய கூட்டமே குண்டாந்தடியுடன் ஓடிவருகிறது)க்களைக் குறித்து எழுதலாம் என்று 'எண்ணம்'.

எண்ணங்கள்
ஹரி அவர்களே வருக. (இந்த ஹரி என்கிற பெயர் சற்றுப் பெரிய மனிதத் தோரனையாக இருப்பதால், ராகிங் எதுவும் செய்யாமல், சலாம் போட்டு வரவேற்றுவிடுகிறேன். பிற்காலத்தில் உதவும்.)

'இணையத்தமிழுக்கு' பல் முளைக்காத காலத்தில், பதினோரு வருடங்களுக்கு முன்னரே 'பல்லடம்' எழுத்துருவைக் கொண்டு கணினியில் தமிழ் தட்டிப் பார்த்திருக்கிறார் இவர். (பார்த்தீர்களா? என் ஆருடம் வீண் போகவில்லை). பிள்ளையார் சுழியே பெருஞ்சுழியாய் இருக்குதப்பா! சுரதாவிடம் யுனிகோடு வித்தையெல்லாம் கற்று வந்திருக்கிறார். அவரின் பதினோரு வருட கடுந்தவம் பற்றி இனிவரும் குறிப்புகளில் படித்து அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறது.


சுவடுகள்

'பிரியமான நான்' என அழகாகக் கையெழுத்திடும் ஷங்கர் ஒரு ஆல் ரவுன்டர் போலும். கிரிக்கெட், சினிமா, மாட்ரிக்ஸ், சு.ரா.வின் புளியமரம் வரையில் சகலத்தையும் வலைப்பதிகிறார். சுஜாதாவிடம் நிறைய பற்று இருக்கிறது. ஷங்கர் அல்லவோ? ;). கணையாழியின் கடைசிப்பக்கங்களை இக்கால வலைக்குறிப்புகளுடன் ஒப்பிட்டிருப்பது சிந்திக்க வைத்தது. அது உண்மை. மிகையல்ல.

நல்ல நாவல் ஒன்றைப் படித்துவிட்டு ஒரு தினுசாய் அலைவது இவருடைய பழக்கமாம். இலக்கிய வானில் தான் நுழைந்தது பற்றி அவர் எழுதிய வரிகளைக் கேளுங்கள்.

"படிக்க எவ்வளவோ இருக்கிறது. கதவு இலேசாகத் திறந்து உள்வந்த கிரணங்களில், சிதறிய சாறலில் நனைந்து கொண்டிருக்கிறேன். கதவை சற்று விசாலமாகத் திறந்துவைக்க வேண்டும்."

இவருக்குள்ளேயே ஒரு இலக்கியவாதி கிடக்கிறான். பொறுத்திருந்து பார்ப்போம்.


செல்வராஜின் எண்ணக் கிறுக்கல்கள்
இங்கே இருந்த செல்வராஜ்
'ஓரிசு' பண்ணாத இந்தப் புதிய வலைக்குறிப்புக்கு குடிபோய் விட்டார்.

ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான வலைக்குறிப்பு இவரினுடையது. ஏன் வேண்டும் வலைக்குறிப்பு என்பது பற்றி இவரின் எண்ணங்களைப் படிக்கையில் பரண் மேல் கண்டெடுத்த பழைய நோட்டுப்புத்தகம் நினைவுக்கு வந்தது. கூடவே அவை கிளப்பும் பால்யக் காலத்து ஞாபகங்களின் நெடியும்.
(கொசுறு: நண்பர் காசியைப் போலவே இவரும் ஒரு கொங்குத் தமிழ் மைந்தர்.)ஒவ்வோரு வலைப்பூவும் ஒரு சுவை. அதைக் குறிக்கும் விதமாக (இந்தச் சாக்கு பரவாயில்லையா?) திரைகடல் ஓடி திரவியம் தேட வந்திருக்கும் பிலடெல்பியா பக்கத்தில் நான் சுவைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறென்.கலிபோர்னியா பிட்ஸாக் கிச்சன்: எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் KoP (King of Prussia) mall தான் ஐக்கிய மாகாணத்தில் இரண்டாவது பெரிய mall என்று சொல்லக் கேள்வி. Mall-ஐச் சுற்றிக் கால் கடுத்து பசி மயக்கம் வந்த போது கண்ணில் அகப்பட்டது இந்தப் பிட்ஸாக்கடை. "பெயரே வித்தியாசமாக இருக்கே" என்று உள்ளே நுழைந்தோம். அங்கு பிட்ஸாக்கள் பலவிதம். தாய்(Thai) சிக்கன், BBQ சிக்கன், சிசிலியன், ஹவாயன், வெஜிடபுள்-ஜப்பானிய கத்தரி என அவை ஒ..வ்..வொ..ன்..று..ம் ஒருவிதம். செங்கல் அடுப்பில் சுடப்பட்ட மெல்லிய அதன் ரொட்டிகளும் கூட (பொதுவாக பிட்ஸாவின் காய்ந்த அல்லது கருகிய ரொட்டிப்பகுதியை கிடாசிவிடுவேன்) சுவையாய் இருந்தன. நாங்கள் வாங்கியது: BBQ சிக்கன் மற்றும் ஜப்பானிய கத்தரியோடு கூடிய காய்கறி பிட்ஸா. இதுவரையில் நான் சுவைத்த வெஜ்ஜி பிட்ஸாக்களில் இல்லாத பல்வேறு மனங்களும் சுவைகளும் நிரம்பியிருந்தது. இவர்கள் விரவும் தக்காளிச்சாறு அக் மார்க் இத்தாலிய ரகமல்ல. சில இந்திய மரபினருக்கு இத்தாலியர்களின் 'மரினரா' தக்காளிச் சாற்றைக் காட்டினாலே ஓட்டம் எடுப்பார்கள். அந்த புண்ணியகோடிகள் இதனை முயன்று பார்க்கலாம். இப்பிட்ஸாக் கடையை தமிழர்கள் இனி எங்கெங்கு காணினும் விடாமல் படையெடுக்கவும். உங்கள் ஐம்புலனும் முக்தியுறும். இது சத்தியம்.

World's best blogs

Monday, November 10, 2003

வினோபா கார்த்திக்.

 
இந்த வார வலைப்பூ ஆசிரியர் வினோபா கார்த்திக். இவருடைய வலைப்பூக்களில் பலவிதமான அருமையான விஷயங்களை எழுதி இருக்கிறார். எனக்கு அவற்றில் மிகவும் பிடித்தது, இவர் அருந்ததி ராயின் உரையை மொழி பெயர்த்துப்போட்டிருப்பதே. நீங்கள் படித்திருக்கிறீர்களா? அதேபோல த பியானிஸ்டுக்கும் சுவையான விமர்சனம் எழுதி இருக்கிறார்.

கிருபாவைத்தொடர்ந்து கலக்கவரும் வினோபா என்ன செய்யப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

-மதி

 
summaathaan!

நன்றி க்ருபா!

 இப்போது க்ருபா ஷங்கரைப்பற்றி உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள். ஜோக்கடித்துக்கொண்டே, சீரியஸாகவும் விஷயங்களைச்சொல்லக்கூடியவர். இவர் வலைக்குறிப்பு ஒன்றை உருவாக்கும் நாளை உங்களைப்போன்றே நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

-மதி


ஜேபி-சான் சொல்கிறார்...

 


அன்பர்களே,

'கடலை மிட்டாய்' என்றொரு எழுத்துரு மென்பொருள் இருக்கிறது. சற்றுமுன்னர் முகுந்தராஜ் அதனைக் கணினியில் போட்டுவிட்டார்.

கிருபா ஷங்கர் உருவாக்கியது.

கடலை மிட்டாய் என்பது TSCII/Roman Script Converter.

கடலை மிட்டாயில் இரண்டு சவுக்கங்கள் இருக்கின்றன. ஒரு சவுக்கம் தமிழுக்குரியது. இன்னொன்று ஆங்கிலம்.

ஒரு சவுக்கத்தில் தமிழில் டைப் செய்தால் இன்னொன்றில் அதற்குரிய ஆங்கில transliteration வருகிறது. அதுபோலவே ஆங்கிலச் சவுக்கத்தில் ஆங்கிலத்தில் அடித்தால் மற்றொன்றில் தமிழில்
வருகிறது.

சுலபமாக இயங்குகிறது. சும்மா முக்கி முழித்து வெட்டி ஒட்டும் சமாச்சாரமெல்லாம் இல்லை.
பச்சைக்கொம்பர்களும் எளிதாகச் செய்யலாம்.

தமிழ் பழம்பாடல்களை ஆங்கிலத்தில் transliteration செய்வதற்கு மணிக்கணக்கில் செலவிடவேண்டியதில்லை. தமிழ்ல் எழுத எழுத அதுபாட்டுக்கு ஒரு பக்கம் நடக்கிறது. உடனுக்குடன் சரிபார்த்துக் கொள்ளமுடிகிறது. நான் அனுதினமும் படுக்கையிலிருந்து எழுமுன் முதலில் அரை ஞாபகம் வரும்போதே சொல்லிக்கொள்ளும் அப்பரின் 'படைக்கலமாக உன்
நாமத்தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்' பாடலின் முதல் அடியை டைப் செய்து பார்த்தேன். மிகச் சரியாக வந்திருந்திருந்தது. இதனை உருவாக்கிய கிருபா ஷங்கருக்குப் பாராட்டுக்கள்.
மேற்படி மென்பொருளை 'பொன்னியின் செல்வன்' யாஹ¥க்குழுவின்·பைல்ஸ் பகுதியிலிருந்து கீழிறக்கம் செய்துகொள்ளலாம்.

கடலை மிட்டாய் என்பது எங்கள் மருத்துவக்கல்லூரி parlance-இல் வேறு ஒன்றைக் குறிக்கும்.
கிருபா ஷங்கர் ஏன் அந்தப் பெயரை வைத்தார் என்பது தெரியவில்லை.

அன்புடன்

ஜெயபாரதி

ஆள்மாறாட்டம்-2

 

ம்ம்ம்ம்... வலைப்பூ இன்னும் எதுவும் நான் முளைக்கவிடவில்லை என்பது ஓரளவு உண்மைதான். http://www.kiruba.com பற்றி அறிந்ததே இன்று மாலைதான்...என்ன இதில் ஒன்று என்றால் அவரும் கிருபா சங்கர், நானும் க்ருபா ஷங்கர். ஹ¥ஊஊஊம்... அவர் வைத்திருக்கும் வலைப்பூ 2/3
வருடங்களைக்கண்ட ஒன்று... அதில் இருக்கும் ஆங்கிலச்சொல் வீச்சுக்கும் எனக்கும் சுட்டுப்போட்டாலும் ஜென்மஜென்மத்திற்கும் தொடர்பு ஏற்படாது...ஆமென்! ;-)

அந்த ஆங்கில வலைப்பூவைப் பார்வையிட்டதும், முதல் வேலையாக கிருபா சங்கரை இரவே தொடர்புகொள்ள முயன்றேன் (அவர் இருப்பது விருகம்பாக்கம், நம்ப பேட்டை சைதாப்பேட்டை). நம்ப அருணா ஸ்ரீனிவாஸனின் ஆங்கில வலைப்பூவுக்கு ஒரு இணைப்புச்சுட்டி குடுத்துருக்கார்...

தொலைபேசியை எடுத்ததுமே, "க்ருபா இருக்காரா? நானா...நானும் க்ருபாதான் பேசறேன்" என்று எதிர்பார்த்தவாறே குழப்(ம்)பிவிட்டு, என்னுடைய தொலைபேசி எண்ணையும் கொடுத்தேன். இன்ப அதிர்ச்சியாக ஒரு மணிநேத்தில் விருகம்பாக்கம் கிருபாவிடமிருந்து சைதாப்பேட்டை க்ருபாவுக்கு
தொலைபேசி அழைப்பு.

"ஹலோ...க்ருபா ஷங்கர்?" என்று குரல் கேட்டதுமே புரிந்தது யார் எதிர்முனையில் என்று.

"ஆஹா..க்ருபாவா" என்று நானும்,

"க்ருபா ஹியர்..." என்று அவரும் சொல்ல...ஒரே அமர்க்களம்.

"ம்ம்ம்... அப்போ நீங்கதான் அந்த திசைகள்ல எழுதின 'கத்திரிக்காய், கனகதாரா, யூனிக்கோட்' க்ருபா ஷங்கரா?" என்று விருகம்பாக்கம் கிருபா கேட்டதும் எனக்கு சைதாப்பேட்டை முழுதும் சீரியல்செட் போட்ட
செரிபெல்லமாகிப்போனது. இவருக்கு எப்படி அது தெரியும்...!!!!!

"ஆமாம்...." என்று இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் சொன்னேன். இவரும் அதைப் படித்தாரா என்ன....!

அப்பறம் அதைப்படித்தவர்கள் இவரிடம் விசாரித்ததைச் சொன்னார். "இண்டிய எக்ஸ்ப்ரச்சில் இருந்தும்..." என்று ஆரம்பித்ததுமே "அருணா ஸ்ரீனிவாசனா?" என்றேன். அப்பறம் அண்ணா பல்கலை.யில் அவர்களின் அறிமுகம் நடந்ததையும் சொன்னார். பிறகு பெயரைக்குறிக்க ஆங்கிலத்தில் இருவரும் போடும்
எழுத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம்.

வயதைக் கேட்காமல் விடுவதில்லை என்று இருந்தேன்... எப்படி கேட்பது.

கடைசியில் தொலைபேசி வைக்கும் சமயம் கேட்டேவிட்டேன்.

"நீங்க பூமிக்கு வந்து எத்தனை வர்ஷம் ஆச்சு?"

அவர் கொஞ்சமும் சீரியஸ் ஆகாமல் சொன்னார்...

"30 வர்ஷம் ஆச்சு... நீங்க வந்து எத்தனை வர்ஷம் ஆச்சு?" என்றார் அதே குறும்புடன்.

"அது ஆச்சு 25 வர்ஷம்." என்றதும் கிட்டத்திட்ட 10-15 நிமிடங்கள் ஆகியிருக்கும்.

இவரின் வெப்லாகைப் பார்த்தால் நிச்சயம் கல்லூரிமுடித்து இரண்டாம் ஆண்டிப்பணியிலுள்ள இளைஞனின் துளிர்ப்பும் கூடவே தெரியும். அதையே என்னோடதுன்னு சொல்லி போகஸ் வலைப்பூ வெச்சுக்கறதை விட்டுட்டு நான் வேற ஒன்னைக் கட்டி எழுதறதாவது....!!!

க்ருபா


This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com