<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, September 27, 2003

(வலைப்) பூக்கள் எல்லாமே அழகு

 
இந்த வாரம் வலைப்பூவை மதி என்னிடம் தந்திருந்தார். பொறுப்பெடுத்து விட்டுச்.. சரியாகச் செய்வேனோ என்றொரு பயம் இருந்ததுதான். இப்போது கூட சரியாகச்........ செய்தேனோ..? அது பற்றி நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
ஆனால் ஒவ்வொரு பூவாக நுகர்ந்த போது உண்மையிலேயே சந்தோசமாகத்தான் இருந்தது.

ஒவ்வொருவரும் தத்தமது பாணியில் அசத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
மிகவும் நன்மை தரக் கூடிய விடயமென்னவென்றால் எல்லோரும் ஒரே விடயத்தை ஒரே பாணியில் எழுதிக் கொண்டிராமல் பல் வேறு விடயங்களைப் பல் வேறு கோணங்களில் இருந்து.. காகிதத் தாளை ஒத்த கணிணி விழியத் திரையின் வரவு பற்றிய செய்தியிலிருந்து...... நள பாகம் வரை... ரசிக்கும் படியாகவும், சிரிக்கும் படியாகவும், அதே நேரம் சிந்திக்கும் படியாகவும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இவற்றுள் நான் ரசித்த எல்லாவற்றையும் இங்கு எழுத எனது நேரம் ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் முடிந்தவரை வலைப்பூவின் அழகு பற்றிய என்னுள்ளான பாதிப்பை இங்கு பதிந்துள்ளேன்.

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் எழுத்துக்கள் பற்றிய எனது ரசனையுடன் உங்களைச் சந்திக்கும் வரை மதிக்கு நன்றி கூறிக் கொண்டு விடை பெறுகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா

 
கௌரவப் பிச்சைக்காரர்கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அமெரிக்காவில்
பரிமேலழகர் ஒரு கௌரவப் பிச்சைக்காரரைச் சந்தித்திருக்கிறார்.

இவரது வலைப் பதிவில் இன்னொரு புயல் பற்றிய சுவாரஸ்யமான தகவல். புயல் அடிப்பது சுவாரஸ்யமா என நீங்கள் யோசிக்கலாம்.
சுவாரஸ்யம் புயல் அல்ல. புயலுக்குப் பெயர் வைக்கிறார்களாம். அதுதான் சுவாரஸ்யம்.

புயலுக்கும் பேர் உண்டு
அமெரிக்காவில் இருப்பவர்கள் வானிலை அறிக்கை பார்க்காமல் எந்த வெளிவேலையையும்(outdoor activities) செய்ய கொஞ்சம் யோசிப்பார்கள். முக்கியமாக பனிக்காலங்களில், எத்தனை இன்ச்சுக்கு பனி விழும், காரை எடுக்கலாமா இல்லை பஸ்ஸில் போகலாமா போன்ற முடிவுகள் உள்ளூர் டீவி சேனலைப் பார்த்தே எடுக்கப்படும்.

இந்த அறிக்கைகளில் சில சமயங்களில் hurricane "claudette", hurricane "ana" என்று சூறாவளி காற்று பற்றி சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெயராக இருக்கும். சூறாவளிக்கெல்லாம் யார் பெயர் சூட்டு விழா நடத்தியது என்று நினைத்துக்கொள்வேன். பெரும்பாலுல் இவை கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளையே சூறையாடும். கடற்கரையை விட்டு ரொம்பதூரம் தள்ளியிருப்பதால் இதைப்பற்றி அவ்வளவாக கண்டுகொண்டதில்லை. சமீபத்தில் தென்கொரியாவைத் தாக்கிய புயலின் உக்கிரம் மிககொடூரமாக இருந்தது. அந்த புயலின் பெயர் ரூசா(rusa) என்றார்கள்.

சரி இந்த பெயரை யார்தான் வைக்கிறார்கள் என்று பார்த்துவிடலாம் என்று அண்ணன் கூகிளை நாடினேன். அவர் சொன்ன அபரிமிதமான தகவல்களின் சுருக்கம் இதுதான்.
உலக வானிலை ஆய்வாளர்கள் சங்கம் (World Meteorological Organization) தான் இந்தப் பெயர்களை தேர்வு செய்கிறது. ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு பட்டியல் தயார் செய்து பெரிய புயலுக்கு ஒவ்வொரு பெயராய் இடுகிறார்கள்.

பெயரிடும் வரலாறு கொஞ்சம் சுவராஸ்யமானது. ஒரு காலத்தில் பெண்களின் பெயர்களை மட்டுமே வைத்தார்களாம் ("ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே..." என்று அப்போதே யாரோ பாடியிருக்கிறார்கள் :-) ) பிறகுதான் மாற்றினார்களாம்.

புயல் காற்றை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கிறார்கள்.
Hurricanes - Atlantic and Eastern Pacific
Typhoons - Western North Pacific and Philippines
Cyclones - Indian and south Pacific

ஒரு புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டால், அந்த பெயர் ராசியில்லை என்று கடாசி விடுகிறார்களாம்.

இதெல்லாம் சரி, நாகப்பட்டினத்தில் கரையை கடப்பதாக பாவ்லா காட்டிவிட்டு, ஆந்திராவையும் ஒரிஸ்ஸாவையும் பதம் பார்க்கும் புயலுக்கு பெயர் கிடையாதா? நம்மவர்கள் புயலுக்கு பெயர் வைப்பதில்லையாம். நல்லதா போச்சு! தெலுங்கு பேர் வை, ஒரியா பேர் வை என்று (அரசியல்) சண்டைக்கு வழி இல்லாமல் பண்ணிவிட்டார்கள்.

குறிப்பு: இந்த வாரம் இசபெல் (Isabel) என்ற பெண்புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை தாக்க இருக்கிறதாம்.

சந்திரவதனா

கனவுகள், கவலைகள்

 
ஜோதிகாவின் பார்வை அம்புகள் உங்கள் கனவுகளில் மட்டுந்தானா..?
வாரத்துக்கு ஒன்றாக நான்கு திரைப்படங்களை விமர்ச்சித்திருக்கும் மீனாக்ஷிசங்கரின் கனவுகளையும் அவை விட்டு வைக்கவில்லை.

காசி ஆறுமுகம் நயாகரா அருவியில் குளிக்க முடியவில்லையே என்று கவலைப் படுவதைப் பார்த்தோம். ரமணிக்கு தனது அம்மாவுடன் சுலபமாகத் தொடர்பு கொள்ளும் படியாக அம்மாவுக்கு ஏற்ற இணையம் இல்லையே என்ற கவலை.

Friday, September 26, 2003

குத்தாலம் மாதிரி குளிக்க முடியுமா?

 
மனிதர்களுக்கு எத்தனையோ விதமான கவலைகள். சித்தூர்க்காரன் காசி ஆறுமுகத்துக்கு குற்றாலம் அருவியில் போல் நாயகரா நீர் வீழ்ச்சியில் குளிக்க முடியவில்லையே என்ற கவலை.

வங்கிக் கொள்ளையைக் காணும் வரை, தான் பணிபுரியும் அமெரிக்க நிறுவனத்துக்கு ஒரு கம்பவுண்ட் சுவர் கூட இல்லாததை பார்த்து வியந்ததை

இப்படிச் சொல்கிறார். World's imaging capital என்று ரோச்சஸ்டருக்குப் பெயருண்டு. ஒளிப்பிம்பவியலை (imaging) பின்னணியாகக் கொண்ட மூன்று உலகளாவிய பெரும் நிறுவனக்கள் இங்கு இயங்குவது தான் காரணம். அவை நான் பணிபுரியும்

Xerox Corporation - அலுவலகங்களில் உபயோகப்படுத்தும் பலவித வணிகக் கருவிகள் தயாரிப்பில் உள்ள நிறுவனம்
Kodak Corporation - புகைப்படக் காமிராக்கள், படச்சுருள்கள் போன்றவை இவர்கள் தயாரிப்பு
Baush and Lamb - கண்ணோடு உள்ளணியும் கண்ணாடிகள் (contact lenses) இவர்களின் தனிச்சிறப்பு.

இவர்களில் பெரியண்ணன் Xerox தான். ஆனால் இப்போது உடம்பு இளைக்க உடற்பயிற்சி செய்து இளைத்துப் போன பெரியவர். எங்கள் வளாகத்தில் மட்டும் 8000 பேர் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒரு காம்பவுண்ட் சுவர் கிடையாது என் பது என் இந்திய மனத்துக்கு ரொம்ப வித்தியாசமாகப்பட்டது. காரை நிறுத்திவிட்டு நேராக Electronic செக்யூரிட்டிக்கு வணக்கம் சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் என் அறையில் இருப்பேன். எப்படி இவ்வளவு எளிதாய் நடத்துகிறார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவ்வப்போது 'செக்யூரிட்டி' என்று பறையடித்துக் கொண்டு கார்கள் கடக்கும், உள்ளே புன்முறுவலுடன் 'கார்ட்' இருப்பார். அவ்வளவு தான். ஏதோ இலட்சிய நகரம் போல் எல்லாம் இருந்தது. சென்ற மாதம் 12ந்தேதி காலை 10 மணிக்கு அந்த வங்கிக்கொள்ளையன துப்பாக்கியைத் தூக்கும் வரை.


இவரின் சிந்தனைகள் கணினி, மெல்லிசை, திருக்குறள், அரசியல், உடற்கூறு... என்று பல்வேறு கோணங்களில் விரிந்திருக்கின்றன.

இசையுடன் பாடப்பட்ட பாசுரங்கள் எங்காவது இணையத்தில் கிடைத்தால், தெரிந்தவர்கள் சுட்டினால், ரொம்ப மகிழ்வாராம்.

சந்திரவதனா

கதைசொல்லுங்கள்

 
கதைசொல்லுங்கள்......... அருமையானதொரு முயற்சி. ஆனால் அங்கிலத்தில் பூத்துள்ளது. விரைவில் தமிழில் பூக்கும் என்று நம்புகிறேன்.

சந்திரவதனா


புதிய வலைப்பூக்கள்

 
இவ்வாரம் கருணுகாரமூர்த்தியும், முல்லையும் தமக்கென வலைப்பக்கங்களைத் தயாரித்துள்ளார்கள்.

முல்லையின் குறிஞ்சியில் அஜீவனின் இரு குறும்படங்கள் பற்றியதான அவரது பார்வைகள் பதியப் பட்டுள்ளன.

கருணாகரமூர்த்தியின் தமிழ்குடிலில் இரு சிறுகதைகள் பதிவாகியுள்ளன. கருணாகரமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு எழுத்தாளர் என்பது யாவரும் அறிந்ததே. அதை வலைப்பூக்களில் பதிவாகியுள்ள அவரது இரு சிறுகதைகளிலும் காண முடிகிறது.
என் இனமே என் சனமே....... யில் தாயகத்துக்குச் சென்று திரும்பிய அவரின் பார்வையிலான தாயக வாசமும், பழைய இளமைக்கால இனிய நினைவுகளும், இன்னும் கூட மாறாத சாதியத் தீயின் பிரதி பலிப்பைப் பார்த்து நொந்த அவர் மனமும் தெரிகிறது.
அவரது அவர்க்கென்று ஓர் குடில் அருமையானதொரு சிறுகதை. வாசித்து முடித்த பின்னும் மனதோடு நிற்கும் கதை. போரும், இடப்பெயர்வும், அதனால் காயப்பட்ட தன்மானங்களும்......... என்று அகதியாகிப் போன ஆத்மாக்களின்... உணர்வுகளை தனக்கே உரிய பாணியில் தத்ரூபமாகத் தந்துள்ளார்.

சந்திரவதனா

Boys

 
Boys படத்துக்கான விமர்சனங்களே படத்தைப் பார் பார் என்று தூண்டுபவையாக அமைந்திருந்தன. சினிமா என்றாலே எட்டுக்காத தூரம் ஓடுபவர்கள் கூட Boys படத்தை, கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

படத்துக்கான எதிர் விமர்சனங்கள கூட ஒரு அதி விவேக விளம்பர உத்திதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இங்கே பாலாஜி Boys படத்தின் மீதான தனது பார்வையை வித்தியாசமான நடையில் தந்துள்ளார். தொடங்கியதும் வாசித்து முடித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது.

இன்னாங்கடா, நம்ம பசங்க எல்லாரும் இந்தப் படத்தைப் பாரு, செம கைமா சீன் எல்லாம் வைச்சிருக்கான், அப்புறமா அதை வெட்டி எடிட் பண்ணிடுவாங்க, அதுக்குள்ள பாத்துடுன்னு சொன்னதினாலே, போன வாரம் தியேட்டர் போயி பாய்ஸ் படத்தை பாத்துப்புட்டேன். ரெண்டாவது வாரத்திலேயும் ஏறக்குறைய ஹவுஸ்·புல்லா ஓடிக்கிட்டிருக்கு. ஊரிலெ இருக்கற அல்ப கேஸெல்லாம் நம்மளை மாதிரியே வந்து இந்தப் படத்திலே என்ன தான் கீது, கண்டுக்குவோம்ன்னு கெளம்பி வந்துட்டானுங்க போலிருக்குது.............. நீங்களும் வாசித்துப் பாருங்கள்..

சந்திரவதனா

Wednesday, September 24, 2003
 
வலைப்பூக்களின் அறிமுகம் உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய ஒரு சமாச்சாரமாகவே உள்ளது. பல விடயங்களை உடனுக்குடன் பலரின் பார்வைக்குக் கொண்டு வர முடிகிறது. சந்தோசங்கள், உணர்வுகள், நினைவுகள், அறிந்தவைகள்.. படித்தவைகள்... என்று பல விடயங்கள் இங்கே பகிரப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

எல்லாவற்றையும் ஒவ்வொருநாளும் எல்லோராலும் பார்க்கவும், கிரகிக்கவும் முடியாது போனாலும் அவ்வப்போது ஒரு சிலவற்றையாவது பார்க்கவும், ரசிக்கவும், அதனால் பயனடையவும் முடிகிறது.

இங்கு அறிமுகப் படுத்தப் பட்ட வலைப்பூக்களில் தினமும் எழுதாவிடினும் அவ்வப்போது யாராவது ஏதாவது சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவைகளில் குறிப்பிடும் படியாகச் சிலர் கூடுதலான விடயங்களைத் தருகிறார்கள்.

வெங்கட்ராமன் அவர்கள் இல்லையில்லை வெங்கட்ரமணன் அவர்கள் கூகிள் பற்றிய சில நல்ல தகவல்களைத் தந்ததைத் தொடர்ந்து என்னைத் தேடிய இரகசியப் பொலிஸ் என்ற தலைப்பில் தனது விடலைப்பருவ நினைவுகளிலொன்றைச் சுவையான முறையில் பகிர்ந்துள்ளார்.

சுபா - யேர்மனியின் சில நகரங்களைக் தான் கண்டு களிப்பது மட்டுமல்லாது அதன் அழகு பற்றியும் கலாச்சாரம் பற்றியும் எம்மோடும் பகிர்ந்து கொள்கிறார்.

இன்னொரு விடயம் என்னைக் கவர்ந்திருந்தது. அது ஹைக்கூ கவிதைகள் சம்பந்தமான பக்கம். ஹைக்கூ கவிதைகளுக்குரிய வரைவிலக்கணங்கள் கொஞ்சம் சிக்கலானவையே. எப்படித்தான் முயன்றாலும் என்னால் இது ஹைக்கூதானா இல்லையா என்று கண்டு பிடிக்க முடிவதில்லை. ஆனாலும் நறுக்கென கருத்தினைச் சொல்லும் ஹைக்கூ வடிவிலமைந்த எந்தக் கவிதையாயினும் எனக்குப் பிடிக்கும். கவிதையை ரசிக்கத் தெரிந்த மற்றவர்களுக்கும் இது பிடிக்கும் என்பதுதான் எனது எண்ணம். மாலன்.நாராயணன் தனது பக்கத்தை ஹைக்கூ கவிதைகளால் அலங்கரித்துள்ளார். அவைகளைச் சுவைப்பது மட்டுமல்லாது விரும்பியவர்கள் தமது ஹைக்கூ கவிதைகளை அங்கு பிரசுரிப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். நல்ல எண்ணம்.

அந்தக் காலப் புலவர்களின் குறும்புகளைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சிலேடை, மடக்கு... என்று கலந்து அவர்கள் செய்யும் இலக்கியக் கிண்டல்கள் படு சுவாரஸ்யமானவை. அவைகளில் ஒன்றான இதை ஒரு ஊர்ல ஒரு தமிழ்ப் புலவர் இருந்தாராம். அவருக்குத் தன்னைப் போல தமிழ் படிச்சவங்க இந்த
ஊருலேயே யாருமேயில்லைன்னு ஒரு நெனைப்பு. அகப்பட்டவங்களையெல்லாம் நிறுத்தி, புரிஞ்சுக்க முடியாத வார்த்தையெல்லாம் போட்டு அவங்களைக் கேள்வி கேட்டு, அவங்க முழிக்கிறதைப் பாக்கறதுலே ஒரு அல்ப சந்தோ?ம். ஊர்க்காரங்களுக்கெல்லாம் எரிச்சல்னா எரிச்சல். ஆனா என்ன செய்ய? தமிழ்ப் புலவராப்
போயிட்டாரே? அவரைப் பகைச்சுக்கவும் யாருக்கும் இடமில்ல.

இப்படி இருக்கையிலே, ஒரு நா அந்தப் புலவர் ஆத்துக்கு நடந்து போயிட்டிருந்தாரு. தடியை
வீசிகிட்டு,வானத்தைப் பாத்துக் கனா கண்டுட்டே போனவரு காலுலே முள்ளு குத்திடிச்சு."ஆ?¡, நம்ம கால்லே எப்படி முள்ளு குத்தலாம்'னு கொஞ்ச நேரம் 'தை, தை'ன்னு குதிச்சாரு. காலை அப்படி ஒதர்றாரு, இப்படி குலுக்கறாரு, ஒண்ணும் பேரலை. 'சரி, இதுக்கு வைத்தியர் கிட்டத்தான் போகணும்'னு நெனைச்சாரு. நொண்டிக்கிட்டே வைத்தியர் கிட்டே வந்து சேர்ந்தாரு. வைத்தியரும் 'என்னங்க வி?யம்'ன்னு மரியாதையாக் கேட்டாரு.

நம்ம புலவருக்கு உடனே கிறுக்குப் புடிச்சிருச்சு. 'இந்த வைத்தியனுக்கு நம்ம அறிவும் புலமையும் இருக்க வாய்ப்பேயில்லை. இவருகிட்டே கொஞ்சம் வெளையாடிப் பார்ப்பம்'னு நெனைச்சாரு. அப்ப அவர் கேட்டபோது:

"முக்காலை ஊன்றி, மூவிரண்டு போகலையிலே, ஐந்து தலை நாகம் ஒன்று, இக்காலில் தீண்டிடவே,
மருந்தொன்று உரைப்பீர்."

வைத்தியரும் ஒண்ணும் லேசுபட்ட ஆளில்லை. புலவரளவு இல்லைன்னாலும் கொஞ்சம் வி?யம்
தெரிஞ்சவர். புலவர் என்ன சொல்ல வர்றார்; எதுக்கு இப்படி கேள்வி கேக்கறார்னு அவருக்குப் புரிஞ்சு போச்சு.கொஞ்ச நேரம் யோசிச்சாரு. புலவரோட குணம் அவருக்கு நல்லாத் தெரியும் (அந்த
ஊர்க்காரர்தானே?). வந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கிட்டு, புலவருக்கு நல்ல நெத்தியடியா ஒண்ணு குடுப்போம்னு முடிவு பண்ணாரு.அப்ப அவர் சொன்னதுதான் இந்த பதில்:

"பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கித் தேய்..."

புலவருக்கு என்னமோ மாதிரி ஆகிடுச்சு. 'பத்தினியின் காலை வாங்கித் தேய்க்கவாவது?! அப்படித் தேய்ச்சா அவதான் சும்மா இருப்பாளா? என்ன ஓய், உமக்கு என்ன கிறுக்கா?' அப்படின்னு கத்து கத்துன்னு கத்தினாரு. வைத்தியர் அமைதியா பதில் சொன்னாரு.

'கிறுக்கு எனக்கில்லை, உமக்குத்தான். நீங்க ' கோல் ஊனிக்கிட்டு ஆத்துக்குப் போகையிலே நெருஞ்சி முள்ளு குத்திடுச்சுன்னு' பெரிய பெரிய வார்த்தையெல்லாம் போட்டுக் கேட்டிங்க. அதுக்குத்தான் பதில் சொன்னேன். பத்து ரதன் யார்? தசரதன். அவனுடைய புத்திரன் இராமன்; அவனுடைய மித்திரன் சுக்ரீவன், அவனுடைய சத்துரு வாலி, வாலியோட பத்தினி தாரை. தாரையோட காலை வாங்கினா தரை. முள்ளு பட்ட காலைத் தரையில தேய்'ன்னு சொன்னேன். இதுகூட புரிஞ்சிக்க முடியாம என்ன புலவரு நீங்க?"

அப்டின்னு ஒரு போடு போட்டாரு.

பாவம் நம்ம புலவர். தலை தொங்கிப் போச்சு அவருக்கு. அன்னைக்கு வாங்கின குட்டுலேர்ந்து அவரு எழுந்திரிக்க பல நாள் ஆச்சு.
பவித்ரா சிறீநீவாசனின் வலைப்பதிவில் காண முடிந்தது.

இவைகளின் நடுவே சில பிரச்சனைகளும் உள்ளன. நேற்று பல மணி நேரமாக
Blogs ஐத் திறக்க முடியாதிருந்தது. இன்று Archive எதையும் காண முடியவில்லை.

சந்திரவதனா

Sunday, September 21, 2003
 
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமென வலைப்பூக்கள் தினம் தினம் புதிது புதிதாக பூக்கின்றன. பூக்கள் போலவே ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அழகு.
பல விடயங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. சில வலைப்பூக்களை வாசிக்கும் போது, உலகத்தின் எங்கோ ஒரு மூலையை ஆறுதலாக வீட்டில் இருந்து அறிந்து கொள்ள முடிந்த திருப்தி ஏற்படுகிறது.

என்.கண்ணனின் k`s world மூலம் கொரியா பற்றிய பல்வேறு கோணங்களைக் கண்டறிய முடிந்தது. குறிப்பாக மேமிப் புயல் பற்றி புயலுக்குள் இருந்தே எழுதிய அற்புதம் இன்றைய கணினி உலகத்தின் வெற்றிப் படிகளின் அத்தாட்சிகளுள் ஒன்று.

இளங்கோ நேற்றுத்தான் தனக்காக ஒரு வலையை தனது அர்த்தம் நிறைந்த கவிதைகளால் பின்னத் தொடங்கியிருக்கிறார்.

காலோரம் அலை புரண்டு கெஞ்சும்
எனினும்
வானோரத் தாரகைக்கே ஏங்கும் நெஞ்சம்

என்று அழகாக எழுதிய பின் மாலன் அவர்களின் எழுத்துக்கள் எதையும் வாசிக்க முடியவில்லை.

றமணிதரனின் Eelam Literature & Arts Archives வலைப்பூவை இன்றுதான் கவனித்தேன். இணையத்தளங்களில் கதை, கவிதை, சினிமா........ பேட்டி.. என்று ஆங்காங்கு சிதறுண்டிருக்கும் கலை இலக்கியப் படைப்புகளையெல்லாம் தேடி எடுத்து இந்தப் பக்கத்தில் அவைகளுக்கு இணைப்பும் கொடுத்திருக்கிறார். நல்லதொரு முயற்சி.

சில வலைப்பூக்களை நேரடியாக வாசிக்க முடியவில்லை. எழுத்துக்களை சுரதாவின் செயலிக்குக் கொண்டு போய் மாற்றித்தான் வாசிக்க முடிகிறது. யூனிக்கோட் நடைமுறைப் படுத்தப் பட்ட பின்னும் இந்த சிக்கல்கள் தொடர்வதற்கான காரணம் என் வரையில் கேள்விக் குறியே..!

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com